சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 15, 2018

இருவேறு உலகம் – 70

               
தய்க்கு அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீள முடியவில்லை. மூன்று விஷயங்கள் அவனை நிறைய யோசிக்க வைத்தன. முதலாவதும், பிரதானமானதும் ப்ரேக் இல்லாத லாரி மூலம் ஏற்படவிருந்தது தற்செயலான விபத்தல்ல, ஒரு கொலை முயற்சி என்ற உண்மை. அந்த சமயத்தில் காரில் குடும்பமே இருந்தது. கடைசி நேரத்தில் லாரி நின்றிருக்கவில்லை என்றால் அவர்கள் யாருமே இன்றிருக்க வாய்ப்பில்லை. க்ரிஷ் தான் குறி என்றாலும் அனைவருமே ஜாக்கிரதையாக இருங்கள் என்கிறார் செந்தில்நாதன். க்ரிஷ் மீது நடக்க இருந்தது கொலை முயற்சி என்பது தெரிந்தும் விசாரணையைத் தொடரச் சொல்லாமல் அவரை இடமாற்றம் செய்திருக்கிறார்கள் என்பது இரண்டாவது நிகழ்வு. அது பொதுவாக அவரைப் போன்ற ஒரு திறமையான போலீஸ் அதிகாரிக்குத் தரப்படும் பதவியல்ல என்பது ஒரு குழந்தைக்கும் தெரியும். விசாரணையைத் தொடர விடாமல் செய்தது க்ரிஷுக்குச் செய்யும் அநியாயமும் கூட. மூன்றாவதாக செந்தில்நாதன் நேரடியாக அவர் செல்போனில் இருந்து பேசாமல் வேறு யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து அவனுடைய அடியாளுக்குப் போன் செய்து பேசியது. இதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்க முடியும். அவர்களுடைய போன்கள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன. இது அதிர்ச்சியோடு அவனுக்குக் கோபத்தையும் ஏற்படுத்தியது.

அண்ணன் உர்ரென்று அமர்ந்திருப்பதை க்ரிஷ் கவனித்தான். உதய் இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் இருக்கிறான்…. அண்ணன் அருகில் வந்து நின்ற க்ரிஷ் “உதய் நீ இப்படி உம்முன்னு உட்கார்ந்திருந்தா கொஞ்சம் கூட நல்லாவே இல்லை. வீடே என்னமோ மாதிரி இருக்கு. அரசியல் கவலையை எல்லாம் நீ வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது” என்று சொன்னான்.

தம்பியை இழுத்துத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்ட உதய் “இப்ப கவலை அரசியல் கவலை இல்லை. உன்னைப் பத்தின கவலை தான்”

“என்னது?”

செந்தில்நாதன் சொன்னதை உதய் தம்பியிடம் மெல்லச் சொன்னான். கேட்டு தம்பி அதிர்ச்சியடையாதது அவன் முன்கூட்டியே அறிந்திருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. தம்பியின் காதைத் திருகியபடியே சொன்னான். “இப்பவும் அமுக்கமா இருந்தா விட மாட்டேன். இந்த ஆராய்ச்சில யாரைடா நீ எதிர்த்துகிட்டே. உன்னை ஒருத்தன் கொல்லத்துடிக்கற மாதிரி என்னடா பண்ணிட்டே”

”நான் ஒன்னுமே பண்ணலை. நான் என்னவோ பண்ணிடுவேனோன்னு தான் எதிரி பயப்படற மாதிரி தெரியுது….”

“யாருடா அந்த எதிரி?”

“சத்தியமா தெரியலை…”

உதய் தம்பியை முறைத்தான். க்ரிஷ் சொன்னான். “நான் பொய் சொல்லலடா. உண்மையா தான் சொல்றேன்… என்னை விடு. நீங்க எல்லாம் பத்திரமா இருங்க அது போதும்.”

உதய் அவனை அணைத்துக் கொண்டான். “உனக்கெதாவது ஆச்சுன்னா நாங்க இருந்து என்னடா பண்ணுவோம்….”

தூரத்தில் இருந்து மகன்களைப் பார்த்த பத்மாவதி, அவர்கள் பேசுவது என்ன என்றறியாமல், கணவனிடம் அவர்களைக் காட்டிச் சொன்னாள். “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நம்ம குழந்தைகள் இதே ஒற்றுமையோட கடைசி வரைக்கும் இருக்கணும்….”

க்ரிஷ் அண்ணனிடமிருந்து பலவந்தமாக விடுபட்டான். “ஆளை விடு. ரொம்ப பாசமழை பொழியாதே… எனக்கு மாஸ்டரைப் போய் பார்க்கணும் அவர் ஹரித்வார்ல இருந்து வந்துட்டார்னு கேள்விப்பட்டேன்…...”

உதய் அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னான். “இனிமே தனியா எங்கயாவது போனாய்னா கொன்னுடுவேன். எங்க போனாலும் நம்ம பசங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டு போ….”

அண்ணனின் அடியாட்களுடன் செல்வதை மறுக்க முற்பட்ட க்ரிஷ் அண்ணன் முகத்தில் தெரிந்த உறுதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி சம்மதித்தான்.


சுரேஷ் மாஸ்டரிடம் சொன்னான். “க்ரிஷ் வர்றதா போன் பண்ணினான்…..”

“அவனை நாளைக்கு வரச் சொல்லேன்…..” மாஸ்டர் சொன்னார்.

“அவன் வரட்டுமான்னு கேட்கலை. வர்றேன்னு தகவல் தான் சொன்னான். அவ்வளவு தான்”

மாஸ்டர் புன்னகைத்தார். “இந்தப் பையன் கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துக்கறான்னு நினைக்கிறேன். நீ ஒன்னு பண்ணு. அவன் வந்தா நான் தியானத்தில் இருக்கறதா சொல்லு. என்னைப் பார்க்க அனுமதிக்காதே….. என்ன பண்றான்னு பார்ப்போம்….”

பத்து நிமிடத்தில் க்ரிஷ் வந்து சேர்ந்தான். சுரேஷ் தான் வரவேற்பறையில் இருந்தான். “மாஸ்டர் தியானத்துல இருக்கார். தியானம் எப்ப முடியும்னு தெரியல…..”

க்ரிஷ் மற்றவர்கள் போல் முகம் சுளிக்கவில்லை. மாறாக முக மலர்ச்சி மாறாமல் அமைதியாகச் சொன்னான். “பரவாயில்லை காத்திருக்கேன்……”

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் சுரேஷிடம் கேட்டான். “உங்களுக்கும் மாஸ்டர் தான் குருவா?”

சுரேஷ் சொன்னான். “சில விஷயங்களை அவர் கிட்ட இருந்து கத்துருக்கேன். அவ்வளவு தான். நீங்க நினைக்கிற விதத்துல பாரம்பரிய குரு சிஷ்ய முறைப்படி நான் அவரோட சிஷ்யன்னு சொல்ல முடியாது. அதுக்கு எனக்கு தகுதியும் கிடையாது”

“நான் காத்திருக்கிற நேரத்துல நீங்க எனக்கு அந்தச் சில விஷயங்களைச் சொல்லித் தாங்களேன்…..” க்ரிஷ் கேட்டான்.

ஒரு ஜீனியஸ் இப்படிக் கேட்டது கிண்டல் செய்வது போல் சுரேஷுக்குத் தோன்றியது. ஆனால் க்ரிஷ் முகத்தில் உண்மையான ஆர்வம் தெரிந்தது அவனைத் திகைக்க வைத்தது. அவன் ஜீனியஸ் எப்படி ஆனான் என்பது புரிந்தது…..


ர்ம மனிதன் தன் மனதில் சில முக்கியமான தகவல்களை மனதில் அசைபோட்டுக்  கொண்டிருந்தான். சில தகவல்கள் திருப்தியைத் தந்தன. சில தகவல்கள் அதிருப்தியைத் தந்தன. சில தகவல்கள் கிடைக்காமல் அவஸ்தையைத் தந்தன. ஆனாலும் புத்திசாலித்தனமான மனிதன் தகவல்களைச் சரியான வகையில் மனதில் ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும், அப்போது தான் தக்க சமயத்தில் குழம்பாமல் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது அறிவுக்கு எட்டும் என்பதில் அவனுக்கு அசையாத நம்பிக்கை உண்டு.

முதல் தகவல் திருப்தி தந்த தகவல். ஏலியன் க்ரிஷ் மனதில் உள்ளதை யாராலும் பார்க்க முடியாதபடி செய்துள்ளானே ஒழிய அபூர்வ சக்திகளை அவன் மனதில் புகுத்திவிடவில்லை. அதை மாணிக்கத்தின் பதவியேற்பு விழாவில் மர்ம மனிதன் உணர்ந்தான். அப்படி அபூர்வ சக்தியைப் புகுத்தி இருந்தால் அத்தனை நேரம் அவன் அரங்கத்தில் அமர்ந்திருந்த போது க்ரிஷ் சிறிதாவது உணர்ந்து அவன் பக்கம் பார்த்திருக்க வேண்டும். மர்ம மனிதனை அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாமல், அவன் பக்கமாகத் திரும்பிக்கூடப் பார்க்காமல் க்ரிஷ் இருந்தது திருப்தியைத் தந்தது. இனி க்ரிஷ் இது போன்ற சில்லறை சக்திகளைப் பெறுவதற்குக் கூட காலம் நிறைய ஆகும். அதை அவன் பெற ஆரம்பிப்பதற்குள்ளேயே எல்லாம் முடிந்து விடும். ஆனால் க்ரிஷின் மனதை மறைத்தது போல அவனை யாரும் கொன்றுவிடாத பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பது அதிருப்தி தந்த உபதகவல்.

அதிருப்தி தந்த இன்னொரு தகவல் மாஸ்டரிடம் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள். இப்போதெல்லாம் மாஸ்டர் மனதை ரகசியமாக அவனால் எட்டிப் பார்க்க முடியவில்லை. அவன் சக்தி அலைகள் எப்போது நெருங்கினாலும் அதை அவர் உணர்ந்து விடுகிறார். முன்பு போல தன்னை மறந்து அவர் இருப்பதில்லை. எப்போதுமே எச்சரிக்கையுடன் இருப்பது மட்டுமல்ல, அவர் தன் யோகப் பயிற்சிகளை முறைப்படி செய்து உணர்வு நிலைகளை மேலும் கூர்மைப்படுத்தியும் வருகிறார். யோகசக்திகள் ஒரு முறை அடைந்து விட்டால் பின் எப்போதும் கடைசி வரை அப்படியே தங்கி விடும் என்பது உண்மையல்ல. கருவிகளைப் போலத் தான் அவை. காலப்போக்கில் கூர்மையை அவை இழந்து விடும். அவற்றைத் திரும்பத் திரும்ப கூர்மைப்படுத்தினால் தான் அவை உச்ச நிலையிலேயே இருக்கும். கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் அவை கரைந்து காணாமலேயே போய் விடும். நெறிமுறை தவறாத வாழ்க்கை வாழ்பவர் என்பதால் அவரிடம் கரைந்து காணாமல் போகும் நிலை வராது. ஆனால் கூர்மைப்படுத்தும் பயிற்சிகளில் அவர் பெரிதாகக் கவனம் செலுத்தாதது மர்ம மனிதனுக்கு மிக அபூர்வமாகவாவது அவர் எண்ணங்களை அறிய உதவியது. ஹரித்வாரில் இருந்து மாஸ்டர் கூடுதல் உறுதி   வைரக்கியத்துடன்  தான் வந்தார். அவர் ராஜினாமா செய்யாமல் அந்த நீதிபதிக்கிழவி கெடுத்ததைப் போல் அவருடைய கூடுதல் மன உறுதியும் அவனுக்கு எதிராகவே இருந்தது. ஆனாலும் எதிலும் அவனை விட அவர் கை ஓங்கி விடவில்லை என்பது அவனைத் திருப்திப்படுத்திய உபதகவல்.

எந்தத் தகவலும் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டது வாரணாசி பாழடைந்த காளி கோவிலில் எடுத்து வந்த குறியீட்டு வரைபடம். அந்த வரைபடம் அவனைக் குழப்பியது. வாரணாசி போய் காளி சிலைக்குப் பின் உள்ள சுவரில் ஒளித்து வைத்திருந்த அந்த ரகசியக்குறியீட்டு வரைபடம் கிடைக்காமல் மாஸ்டர் குழம்புவார், அதைப் பற்றித் தங்கள் இயக்கத்தின் அந்தக் கூட்டத்திலாவது சொல்வார் என்றெல்லாம் மர்ம மனிதன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் மாஸ்டர் அப்படி ஒரு வரைபடம் பற்றியே கூட்டத்திலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி யாரிடமும் வாயைத் திறக்கவில்லை. ஏன்? அந்தக் குறியீடு உண்மையில் என்ன சொல்ல வருகிறது? க்ரிஷையும் மாஸ்டரையும் கையாளும் அவன் அதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று உள்மனம் எச்சரிக்கை விடுக்க அவன் அது பற்றி பல விதங்களில் யோசிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்

7 comments:

  1. Very interesting at all angles and thoughtful also.

    ReplyDelete
  2. இந்த வார தொடர் அட்டகாசம்..ஐயா..
    அண்ணனின் பாசம் அட்டகாசம்...
    மர்மமனிதன் மனதில் தகவல்களை அடுக்கும் விதம் பற்றி...சொன்னது... யோகசக்திகளை கூர்மைபடுத்துதல் பற்றி சொன்னது...
    மிகவும் பயனுள்ள தகவல்...
    மர்ம மனிதன் மனதில் தகவல் அடுக்கும் விதம் ஒரு அருமையான உதாரணம்...
    க்ரிஷ் சுரேஷிடம் கற்றுக் கொள்ளுதல்....சூப்பர்...
    மாஸ்டர் வச்ச சோதனைல க்ரிஷ் என்ன செய்வான்.?

    ReplyDelete
  3. Very nice and interesting as usual

    ReplyDelete
  4. //அவனை யாரும் கொன்றுவிடாத பாதுகாப்பை ஏற்படுத்தியிருப்பது//

    இப்படி ஏலியன் க்ரிஷ்க்கு சொன்னதாக ஞாபகம் இல்லையே... 🤔

    ReplyDelete
    Replies
    1. க்ரிஷ் லாரியில் சிக்காமல் பிழைத்தது ஏலியனால் தான் என்பதால் அப்படி ஒரு பாதுகாப்பை ஏலியன் நிரந்தரமாக ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று மர்ம மனிதன் அனுமானிக்கிறான்.

      Delete
  5. செந்தில் நாதன் கூறிய செய்திகளை சரியான முறையில் அனுமானிக்கிறான் உதய் ...
    மர்ம மனிதன், குழப்பத்தில் ....அவனின், இரு எதிரிகளையும் அவனால் நெருங்க முடியவில்லை......இதுவே அவர்களது பலம் என்று தோன்றுகிறது....மர்மமனிதனின் பலவீனம்.....நடக்கும் நிகழ்வுகள் அவனுக்கு சாதகமாக இல்லை.....

    ReplyDelete
  6. Can you make your books available in Amazon.in ?

    ReplyDelete