சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 22, 2018

சத்ரபதி – 4



ரு ஆத்மார்த்தமான பிரார்த்தனையின் முடிவில் ஆரம்பித்த பிரசவ வேதனையை ஜீஜாபாய், ஷிவாய் தேவி தனக்கு அருள் பாலித்ததன் அடையாளமாகவே உணர்ந்தாள். அவளுக்கு மெய் சிலிர்த்தது. அந்தச் சன்னிதியில் தேவி அப்படியே ஆகட்டும் என்றே சொல்லி விட்டது போல் உணர்ந்த அந்தக் கணத்திலிருந்து சில மணி நேரங்களில் குழந்தை பிறந்தது வரை அவள் மனம் பிரசவ வேதனையை மீறி பிரார்த்தனையிலேயே தங்கியது. தாதிமார்களும், ஸ்ரீனிவாசராவ் மனைவியும் அவளுடைய பிரசவத்தைப் பார்த்துக் கொண்டார்கள். அவள் மனமோ “மகன்….. வீரமும் உயர்குணங்களும் கொண்டவன்….. பேரரசன்…” என்ற வார்த்தைகளும், பிரார்த்தனையுமாகவே நிறைந்திருந்தது. குழந்தை பிறந்து “மகன் பிறந்திருக்கிறான்” என்று ஸ்ரீனிவாசராவின் மனைவி மகிழ்ச்சியுடன் தெரிவித்த போது ஜீஜாபாய் எல்லையில்லாத மகிழ்ச்சியை உணர்ந்தாள். பிரார்த்தனையின் முதல் பகுதியை ஷிவாய் தேவி நிறைவேற்றி விட்டாள். இனி மற்றவையும் நடந்தே தீரும்…… என் மகன் ஷிவாய் தேவியின் பூரண அருள் பெற்றவன்..…. ”சிவாஜி” அந்தக் கணத்தில் தீர்மானித்த பெயரை ஜீஜாபாய் சத்தமாக உச்சரித்தாள்.

ஷிவ்னேரிக் கோட்டை விழாக்கோலம் பூண்டது. ஷாஹாஜியின் வீரர்களும், லாக்கோஜிராவ் விட்டுச் சென்ற வீரர்களும், ஷிவ்னேரி மக்களும் சிவாஜியின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மகிழ்ச்சிச் செய்தியை ஷாஹாஜிக்குத் தெரிவிக்க ஒரு வீரன் குதிரையில் பறந்தான்.


காலம் வேகமாக நகர்ந்தது. குழந்தை சிவாஜியின் வரவில் ஜீஜாபாய் அனைத்துக் கவலைகளும் மறந்தாள். குழந்தையுடன் விளையாடினாள். அவனிடம் மனம் விட்டுப் பேசினாள். பிரார்த்தனை செய்யும் போதும் அவனை மடியில் வைத்துக் கொண்டு அவன் பிஞ்சுக் கைகளைத் தன் கைகளோடு இணைத்துக் கூப்பிப் பிரார்த்தித்தாள். எல்லா மந்திரங்களையும் அவள் சொல்லும் போது தாலாட்டு போல கேட்டுக் கொண்டே குழந்தை தூங்கிப் போவதும் உண்டு. அந்தக் குழந்தை அதிகம் கேட்ட சத்தம் தாயின் மந்திரங்களும் பிரார்த்தனைகளுமாய் இருந்தது.

சில நாட்களில் பீஜாப்பூரில் ஷாஹாஜி துகாபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட செய்தி ஜீஜாபாய்க்கு வந்து சேர்ந்தது. பல தாரத் திருமணம் அக்காலத்தில் புதிதல்ல என்றாலும் ஜீஜாபாய்க்கு அதை ஜீரணிக்கக் கஷ்டமாய் இருந்தது. அவள் தந்தை அவள் தாயைத் தவிர இன்னொரு திருமணம் செய்து கொண்டதில்லை. அதே போல ஷாஹாஜியின் தந்தை மாலோஜிக்கும் ஒரே மனைவி தான். இத்தனைக்கும் திருமணமாகிப் பல வருடங்கள் மாலோஜியின் மனைவி கருத்தரிக்கவில்லை. மாலோஜி கோயில்கள், புண்ணிய தீர்த்த நீராடல்கள், தான தர்மங்கள், மகான்களின் சமாதிகள் என்று பல வழிகளைத் தேடினாரேயொழியத் தன் வாழ்வில் இன்னொரு பெண்ணைத் தேடிக் கொள்ளவில்லை. கடைசியில் தான் ஷாஹாஜி பிறந்தார் என்பதையும் அவள் அறிவாள்…. ஜீஜாபாய் சோகமாய் தன் குழந்தையிடம் சொன்னாள். “இனி எனக்கு நீ, உனக்கு நான் என்று ஆகி விட்டது மகனே. உன் தந்தைக்கு இன்னொரு மனைவி கிடைத்து விட்டாள். உன் அண்ணனுக்கு இன்னொரு தாய் கிடைத்து விட்டாள்…..”

சில காலம் கழித்து அடுத்த சோகச் செய்தி ஜீஜாபாயை வந்தடைந்தது. அவள் தந்தை லாக்கோஜி ஜாதவ்ராவும், அவள் சகோதரனும் தவ்லதாபாத் கோட்டையில் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தியை ஸ்ரீனிவாசராவ் தான் அவளுக்குச் சொன்னார். “அகமதுநகர் தற்போதைய சுல்தான் முர்தசா இரண்டாம் நிஜாம் ஷா ஏதோ பேச்சு வார்த்தைக்கு உங்கள் தந்தையாரையும் சகோதரரையும் கூப்பிட்டிருக்கிறார்….. அவர்களும் நம்பிப் போயிருக்கிறார்கள்….. பேசிக் கொண்டிருக்கையில் திடீர் என்று எழுந்து சுல்தான் போய் விட்டாராம். பலர் சேர்ந்து இரண்டு பேரையும் வாள்களால் தாக்கி இருக்கிறார்கள். கூடுமானவரை அவர்கள் இரண்டு பேரும் வீரமாகப் போராடியிருக்கிறார்கள். பலரைக் கொன்றும் காயப்படுத்தியுமிருக்கிறார்கள். ஆனால் கடைசியில்…….”


ஜீஜாபாய்க்குக் கடைசியாக இதே இடத்தில் தந்தையுடன் இருந்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. கடைசியில் உன் கையால் தண்ணீர் கொடு என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் போனது நினைவுக்கு வந்தது. அவருடன் பேசிய பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. கண்கள் கண்ணீரால் குளமாயின. “என் தாய்…?”

“அவர் இதைக் கேள்விப்பட்டவுடனேயே சிறுபடையுடன் சிந்துகேத் அரண்மனையிலிருந்து தப்பிப் போய் விட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது….”

ஸ்ரீனிவாசராவ் போய் விட்டார். ஜீஜாபாய் தன் குழந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். தந்தையும், சகோதரனும் போர்க்களத்தில் இறந்திருந்தால் அவள் வேதனைப்பட்டிருக்க மாட்டாள். ஒவ்வொரு வீரனும், அவனது குடும்பமும் அதைப் பெருமையாகவே நினைப்பார்கள். ஆனால் வஞ்சகம், அதுவும் ஒரு அரசனாலேயே கோழைத்தனமாக இழைக்கப்படும் போது, மன்னிக்க முடியாததாகி விடுகிறது. அவள் மனம் தன் தாய் எப்படி இதைத் தாங்குவாள் என்றும் இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றும் கவலையில் மூழ்கியது!


ரு நாள் இரவு ஷாஹாஜி ரகசியமாய் மாறுவேடத்தில் ஷிவ்னேரி கோட்டைக்கு வந்தார். எந்த வேடத்திலும் கணவனை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்த ஜீஜாபாய் ஒரு வார்த்தையும் பேசாமல் தங்கள் குழந்தையை அவரிடம் நீட்டினாள். பெருமிதத்தோடு குழந்தையை வாங்கி முத்தமிட்டு ஷாஹாஜி ஆராய்ந்ததை ஜீஜாபாய் பார்த்துக் கொண்டிருந்தாள். மகனைக் கவனித்ததில் பத்தில் ஒரு மடங்கு கூட அவர் மனைவியைக் கவனிக்கவில்லை. எப்படி இருக்கிறாய் என்று கேட்கவில்லை……

ஜீஜாபாய் கேட்டாள். “சாம்பாஜி எப்படியிருக்கிறான்?”          

மகனைக் கொஞ்சிக் கொண்டே ஷாஹாஜி சொன்னார். “நலமாயிருக்கிறான். துகாபாய் அவனைப் பாசமாய் பார்த்துக் கொள்கிறாள்”

அவர் மகனோடு, தன் இரண்டாம் மனைவியைப் பற்றியும் சொல்லியாகிவிட்டது….! ஜீஜாபாய் பெருமூச்சு விட்டாள்.

மகன் உறங்க ஆரம்பித்தபிறகு தான் அவனை அவர் அவளிடம் தந்தார். அவனைத் தொட்டிலில் வைத்து விட்டு அவள் வந்த பிறகு அவளிடம் சொன்னார். “சிறிது காலம் பொறுத்துக் கொள். அகமதுநகரிலும், பீஜாப்பூரிலும் அரசியல் குழப்பமாகவே இருக்கிறது. நம் நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன். எப்படியும் சில மாதங்களில் எல்லாம் சரியாகி விடும்…….”

”என்ன ஆனாலும் சரி, எவ்வளவு லாபகரமாக இருந்தாலும் சரி, என் தந்தையையும், சகோதரனையும் வஞ்சகமாகக் கொன்றவனுடன் மட்டும் எந்த சம்பந்தமும், ஒப்பந்தமும் வேண்டாம்…..”  தீர்மானமாகச் சொன்ன ஜீஜாபாயைச் சிறு வியப்போடு ஷாஹாஜி பார்த்தார். அவள் தன் பிறந்த வீட்டாரைப் பற்றி அவரிடம் பல ஆண்டுகளாகப் பேசியதில்லை. அவரும் அவளிடம் அவர்களைப் பற்றிப் பேசியதில்லை. முதல் முறையாக அவள் அவரிடம் பேசுகிறாள்…..

கணவனின் பார்வையை நேராகவே ஜீஜாபாய் சந்தித்தாள். ஷாஹாஜி மெல்லச் சொன்னார். “நானும் அப்படி முன்பே தீர்மானித்தாகி விட்டது. இப்போது இருக்கும் சுல்தான் முந்தைய சுல்தானின் கால்தூசுக்கும் சமம் ஆகாதவன். அரசனுக்கு வேண்டிய தகுதிகள் எதுவும் இல்லாதவன். எப்போது என்ன செய்வான் என்பதை எதை வைத்தும் தீர்மானிக்க முடியாதவனிடம் வைக்கும் எந்த சம்பந்தமும் அபாயத்திலேயே முடியும் என்பதை நானும் அறிவேன்…..”

இருவரும் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்கள். பிறகு ஷாஹாஜி மனைவிக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு தகவலைச் சொன்னார். “உன் தாயார் முகலாயப் பேரரசருக்குக் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தெரிகிறது. உன் தந்தையின் அனைத்து அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளையும் உன் சித்தப்பாவுக்கு மாற்றித்தர அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்! அதிகாரத்திற்காக உடன்பிறந்தவர்களின் உயிரையும் எடுக்கும் இந்தக் காலத்தில் கணவரின் தம்பிக்கு மாற்றித்தர அவர் கேட்டது பேரரசருக்குப் பேராச்சரியமாய் இருந்ததாம். அந்த வியப்பை அவர் அரசவையிலேயே அனைவருடனும் பகிர்ந்து கொண்டதாய் தகவல் வந்திருக்கிறது. அதனால் உன் தாயார் விருப்பப்படியே அங்கிருந்து ஆணை வரும் என்று தெரிகிறது. பேரரசரின் ஆணை வந்த பிறகு அதை மீற இந்த சுல்தானுக்குத் தைரியம் வராது…..”

சதிகாரனிடம் மல்லுக்கு நிற்காமல் அமைதியாக அவனுக்கும் மேல் இருப்பவனிடம் தாயார் போன விதம் ஜீஜாபாயைப் பெருமை கொள்ள வைத்தது. அவளுடைய சித்தப்பாவும் அண்ணியைத் தாய் ஸ்தானத்தில் வைத்துப் பூஜிப்பவர். மகன் இறந்தான், மகள் உறவு அறுந்து விட்டது என்றாலும் தாயிற்கு மற்ற உறவு உறுதுணையாக இருப்பது பெரும் ஆசுவாசமாக ஜீஜாபாய்க்கு இருந்தது. உறவுகளிடம் என்றும் எச்சரிக்கையுடனும், சந்தேகத்துடனும் இருக்கும் முகலாயச் சக்கரவர்த்திக்கு இது போன்ற ஆத்மார்த்த உறவுகள் ஆச்சரியப்படுத்துவது சகஜமே என்று நினைத்துக் கொண்டாள்.
                                      
தம்பதிக்கிடையே மறுபடி மௌனம் தொடர்ந்தது. இம்முறை அது நீளவும் செய்தது.

கடைசியில் “நம் பிள்ளையைப் பத்திரமாய் பார்த்துக் கொள் ஜீஜா….” என்று சொல்லி விட்டுக் கிளம்பிய ஷாஹாஜி தங்கக்காசுகள் நிறைந்த ஒரு பட்டுத்துணிப்பையை ஜீஜாபாயிடம் தந்து விட்டுப் போனார்.

அவர் போய் நீண்ட நேரம் ஜீஜாபாய் உறங்கவில்லை. பல சிந்தனைகளின் முடிவில் ’இந்த அரசியல் சிக்கல்கள் சீக்கிரமாகத் தீர்ந்து ஒரு பாதுகாப்பான சூழலில் என் மகன் வளர வேண்டும்’ என்று அவள் ஆசைப்பட்டாள். விதி வேறொன்றை விதித்து விட்டிருக்கிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை!.

(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. ஜீஜாபாயின் உணர்வுகளை நுணுக்கமாகவும் அழகாகவும் வெளிக்காட்டியிருக்கிறீர்கள் சார். அருமை.

    ReplyDelete
  2. சூப்பர். ஜீஜாபாய் கணவர் சந்திப்பில் வெளிப்படும் கேரக்டரைசேஷன் அதிநுட்பம். (இருவேறு உலகம் படித்து முடித்து விட்டேன். பல தடவை படிக்கலாம். அத்தனை விஷயங்கள் உள்ளே புகுத்தியிருக்கிறீர்கள். கடைசி அத்தியாயங்களில் ஆங்கில நாவலை மிஞ்சும் வேகம். நிஜமாகவே உங்கள் மாஸ்டர்பீஸ் கணேசன் சார்)

    ReplyDelete
  3. படிக்கும் போதே...ஜீஜா...மேல் பரிதாபம் ஏற்படுகிறது...ஐயா...
    பாவம் ஜீஜா...
    இது போதாதுன்னு...விதி இன்னொன்றையும்...விதைத்திருக்கிறதா..?

    ReplyDelete
  4. சத்ரபதி சிவாஜியின், உதயம்......அவனின் குழந்தைப் பருவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ......தந்தையின் அன்பு அவனுக்கு கிட்டுமா. ...?

    ReplyDelete