சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 25, 2018

இருவேறு உலகம் – 67

 
மாணிக்கத்திடம் மனோகர் வார்த்தைகளை வீணடிக்கவில்லை. “உங்க மாமா பேரம் இன்னும் முடியல. அவர் சில கோடிகளை மிச்சம் பண்ணப் பாக்கறார். இன்னும் தாமதமானா கடைசில எதுவுமே மிஞ்சாதுன்னு சொல்லி வைங்க. இன்னும் அரைநாள்ல பேரம் முடியாட்டி ராஜதுரை இறந்தாலும் நீங்க முதலமைச்சராக முடியாம போயிடும்….”

வார்த்தைகள் இடிகளாக விழ அதிகமாக அமைதியிழக்காத மாணிக்கம் பதறிப்போனார். “நான் இப்பவே பேசறேன்…… சார்”

அவன் பதில் எதுவும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்து விட்டான். அந்த ஏ. சி வராந்தாவிலும் சில வினாடிகளில் உடல் முழுவதும் வியர்த்து விட மாணிக்கம் தன் அமைதியைத் திரும்பவும் வரவழைக்க சிறிது சிரமப்பட்டார். சங்கரமணிக்கு வரவு எத்தனை இருந்தாலும் செலவு செய்ய மனம் வரவே வராது. குறைந்தபட்ச செலவிலேயே எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ள முயலும் புத்தியை அவரால் மாற்றிக் கொள்ள முடிந்ததில்லை.

மாமனை மனதில் திட்டிக் கொண்டே எழுந்த மாணிக்கம் சற்று தள்ளிப் போய் ஆளில்லாத இடத்தில் நின்று கொண்டு மாமனுக்குப் போன் செய்து மனோகரின் தகவலை அப்படியே சொன்னார். “…. மாமா கோடிகளை மிச்சம் பண்ணப் போய் என் அரசியல் வாழ்க்கைய முடிச்சுடாதீங்க”

சங்கரமணி கஞ்சனே ஒழிய முட்டாள் அல்ல. “ரெண்டு மணி நேரத்துல வியாபாரம் முடிஞ்சுடும்னு சொல்லிடு” என்று ரத்தினச்சுருக்கமாய் சொன்னார். மாணிக்கத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

திரும்பவும் பழைய இடத்துக்கு அவர் வந்த போது க்ரிஷ் கேட்டான். “என்ன அங்கிள், உடம்பு சரியில்லையா?”

மாணிக்கம் சமாளித்தார். “அண்ணனுக்கு இப்படியானவுடனே நானும், உங்கப்பாவும் பதட்டமா தான் இருக்கோம்”

க்ரிஷ் மெலிதாய் ஒரு புன்னகை பூத்து விட்டு நகர்ந்தான். சொந்தக் காரியம் அல்லாமல் வேறெதற்கும் பதட்டப்படாதவர் இவர் என்பதை அவன் அறிவான். அண்ணன் அருகில் போய் அவன் அமர்ந்து கொண்டான். உதய் மொபைல் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க க்ரிஷ் அங்கிருக்கும் சூழ்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அங்கு இருந்த அமைச்சர்களில் அவன் தந்தையைத் தவிர வேறு யாரும் உண்மையான கவலையில் இல்லை. ஒருவேளை ராஜதுரை சாதாரண மனிதராய் இருந்திருந்தால் இங்கே கூடியிருக்கும் கூட்டத்தில் நேசிக்கும் ஆட்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.

ராஜதுரை மிக நல்ல மனிதர். அவன் விமர்சனத்திற்குப் பின்பு கூட அவர் அவன் மீது கோபித்துக் கொண்டதில்லை. கமலக்கண்ணன் தான் அவனைத் திட்டித் தீர்த்தாரேயொழிய  ராஜதுரையோ தவறாக எதுவும் அவன் செய்து விடவில்லை என்பது போலத் தான் நடந்து கொண்டார். அவன் காணாமல் போன போது கூட அவனுக்காக அவர் தனிப்பட்ட அக்கறை காட்டினதாக கமலக்கண்ணன் சொல்லியிருந்தார். அப்படிப்பட்டவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது அவனுக்கும் மனக்கஷ்டமாக இருந்தது. அவர் நலமடைந்தால் அவரிடம் அவன் நேரடியாக நன்றி சொல்ல வேண்டும்…..

திடீரென்று உடுக்கை சத்தம் கேட்டது. திகைத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரிடமும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகில் அமர்ந்திருந்த உதய் கூட மொபைல் போனில் இருந்த பார்வையைத் திருப்பவில்லை. அப்போது தான் அந்த உடுக்கைச் சத்தம் அவனுக்கு மட்டும் தான் கேட்கிறது என்பது புரிந்தது.  இதயத்துடிப்பு வேகமானது. கூர்ந்து கவனித்த போது உடுக்கை சத்தம் மங்களகரமாக இல்லை. மயான உடுக்கைச் சத்தமாகத் தோன்றியது. தீவிர சிகிச்சைப் பிரிவின் உள்ளே இருந்தவரின் மரணத்தை அறிவிக்கும் சத்தமாகத் தோன்றியது. அவன் அதிர்ந்து போனான். அவன் அண்ணனின் தொடையை அழுத்தினான்.

உதய் தம்பியைப் பார்த்தான். “என்னடா?”

க்ரிஷ் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவர் செத்துட்டார்டா”

உதய் தம்பியை அதிர்ச்சியுடன் பார்த்தான். “என்னடா சொல்றே?”

க்ரிஷ் பதிலேதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மாணிக்கம் க்ரிஷையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் முகமாற்றத்தின் காரணமும், உதயின் அதிர்ச்சியின் காரணமும் அவருக்குப் புரியவில்லை. அவர் அலைபேசி அடித்தது. மனோகர்!. வேகமாக போனை எடுத்துப் பேசினார். “ஹலோ”

“ராஜதுரை இறந்துட்டார் முதலமைச்சரே” என்று ஒற்றை வாக்கியத்தில் அவன் பேச்சை முடித்துக் கொண்டான். அவன் சொன்ன செய்தி மனதில் சரியாகப் பதிய சில வினாடிகள் தேவைப்பட்டன. முழுவதுமாய் பதிந்த போது சங்கரமணியின் போன்கால் வந்தது. “இப்ப தான்  நமக்குத் தேவையான ஆள்கள் கூட பேரம் முடிஞ்சுது. அவனுக்குப் போன் செஞ்சு இதைச் சொல்லிடு”

மாணிக்கம் பேச்சிழந்து சிலையாகச் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பேரம் முடிந்த செய்தியைச் சங்கரமணி சொல்வதற்கு முன்பே மனோகருக்குத் தெரிந்திருக்கிறது. அவன் அன்றே சொன்னது போல பேரம் முடிந்தவுடனேயே ராஜதுரை கதையை முடித்து விட்டான். ஆனால் அவன் அதைச் சொல்வதற்கு முன்பே க்ரிஷ் அதைத் தெரிந்து கொண்டு விட்டு தான் அதிர்ச்சியடைந்து முகம் மாறியிருக்கிறான். எல்லாம் சில வினாடிகளுக்கு முன் தான் நடந்து முடிந்தது என்றாலும் சங்கரமணி சொன்னதற்குச் சில வினாடிகள் முன்பே மனோகர் பேரம் முடிந்ததை அறிந்ததும், மனோகர் தெரிவிப்பதற்குச் சில வினாடிகள் முன்பே க்ரிஷ் ராஜதுரையின் மரணத்தை அறிந்ததும், வெற்றியடைந்த சந்தோஷத்தை மீறி அவரைத் தலைசுற்ற வைத்தது. என்ன நடக்கிறது?


டியாட்களும் தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களும் வந்து எல்லாத் தகவல்களையும் சொன்ன போது உதய் ஆத்திரப்பட்டான். சோகமே வடிவாக அமர்ந்திருந்த தந்தையிடம் வந்து சொன்னான். “உங்க நண்பர் மாணிக்கம் ஆஸ்பத்திரில சோகமா உட்கார்ந்துட்டே மாமாவை அனுப்பி எம்.எல்.ஏக்களை விலை பேசி தன் பக்கம் இழுத்திருக்கார்.  அவரை முதல் அமைச்சராக்க அவங்க சம்மதிச்சிருக்காங்க….”

கமலக்கண்ணன் திகைப்புடன் மகனைப் பார்த்தார். ஆனால் கேள்விப்பட்ட செய்தி ராஜதுரை மரணத்தை விட அதிகமாக அவரை பாதித்து விடவில்லை. விரக்தியுடன் சொன்னார். “அண்ணனே போயிட்டாரு. அதுக்கப்பறம் என்ன ஆனா என்னடா. இந்த மந்திரி பதவியே வேணும்னாலும் அவங்க எடுத்துக்கட்டும்”

உதய் ஆத்திரம் அதிகமாகியது. தந்தையிடம் காட்டமாகச் சொன்னான். “உங்க சின்ன மகனுக்கு அந்த புத்தி எங்க இருந்து வந்ததுன்னு பல தடவை யோசிச்சிருக்கேன். இப்ப புரியுது, எல்லாம் உங்க கிட்ட இருந்து தான்….”

பத்மாவதி மூத்த மகனை அதட்டினாள். “அவரே மனசொடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கார். இந்த நேரத்துல என்னடா அரசியலும் குத்தல் பேச்சும்…..”

தற்போதைய அரசியல் நிலவரமும், அதன் முக்கியத்துவமும் தெரியாமல் பேசும் தாயை முறைத்து மெல்ல முணுமுணுத்தான். “அருமையான கூட்டணி”

“என்னடா சொல்றே. சத்தமா சொல்லு” என்ற பத்மாவதிக்கு அவன் பதில் சொல்லும் முன் அவர்கள் வீட்டு முன் மாணிக்கத்தின் கார் வந்து நின்றது. அவன் வாயை மூடிக் கொண்டான். மாணிக்கம் எதுவுமே தவறாக நடந்து விடவில்லை என்பது போலவே உள்ளே வந்தார். கமலக்கண்ணன் அருகே வந்தமர்ந்தவர் “கண்ணா நாம உடைஞ்சு போய் உட்காரதுல அர்த்தமில்ல. எல்லாரும் ஒரு நாள் போய்த்தான் ஆகணும். நடக்க வேண்டியதைப் பார்த்தாகணும்….”

கமலக்கண்ணன் வெறித்த பார்வை பார்த்தார். மாணிக்கம் தொடர்ந்து சாதாரண விஷயம் போல் சொன்னார். “நம்ம எம் எல் ஏக்கள் எல்லாம் வந்து என்னை முதலமைச்சராகணும்னு கட்டாயப்படுத்தறாங்க. நான் எதுக்கும் உன்னையும் ஒரு வார்த்தை கேட்காமல் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்…..”

உதய் மனதிற்குள் கோபமான வார்த்தைகளில் வெடித்தான்.

கமலக்கண்ணன் சொன்னார். “நான் என்ன சொல்றதுக்கு இருக்கு. தாராளமா ஒத்துக்கோ”

மாணிக்கம் முகத்தில் நிம்மதி வெளிப்படையாகத் தெரிந்தது. “அண்ணனுக்கு நீ வலதுகையா இருந்தே. எனக்கும் அப்படியே இருக்கணும். உன் ஆதரவு இருக்கற நம்பிக்கைல தான் ஒத்துக்கப் போறேன்”

கமலக்கண்ணன் தலையசைத்தார். மாணிக்கம் எழுந்து உதய் அருகே வந்தார். “டெல்லில நம்ம கட்சியை நீ தான் வழக்கம் போல வளர்த்தணும் உதய். பாராளுமன்றத்தைப் பொறுத்த வரை நான் உன்னைத் தான் நம்பி இருக்கேன்”

உதய் பேசினால் பச்சையாக எதாவது சொல்லி விடுவோம் என்று பயந்து தலையசைத்தான்.

மாணிக்கம் பத்மாவதியிடமும், க்ரிஷிடமும் தலையசைத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.

நடப்பது அரசியல் ஆட்டம் என்றாலும் காய்களை நகர்த்துவது எதிரி தான் என்பதை க்ரிஷால் உணர முடிந்தது. எல்லாம் எதற்காக என்பது தெளிவாகப் புரியா விட்டாலும் நல்லதற்காக இல்லை என்பது மட்டும் விளங்கியது.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Seeing the scene by your writing and feeling the tension. Superb.

    ReplyDelete
  2. உடுக்கை சத்தம் கேட்டல்-புதுமையான தகவல்.
    ராஜதுரை இறந்தது உண்மையிலியே துக்கத்தை..உண்டாக்கியது.
    கமலக்கண்ணன் உண்மையான தொண்டர்.

    ReplyDelete
  3. அரசியல் விளையாட்டு எப்படி எல்லாம் நடக்கின்றது.......உங்கள் எழுத்துக்களில்
    கண்முன்னே காட்சிகள் தோன்றுகின்றன......அந்த பெயரில்லா எதிரியை
    அறிய ஆவல்.....

    ReplyDelete
  4. interesting episode

    ReplyDelete