என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 9, 2017

இருவேறு உலகம் – 56


ந்தக் கொலை முயற்சியிலும் செந்தில்நாதனுக்கு முதலில் சந்தேகம் வந்தது சங்கரமணி மேல் தான். அந்தக் கிழவர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஏதாவது கெட்டது நடக்கிறது என்றால் அவர் பங்கு அதில் ஏதாவது இல்லாமல் இருக்காது என்று செந்தில்நாதன் நம்பினார். க்ரிஷ் காணாமல் போன மலையருகே அவரை அந்த இரவு பார்த்ததாக ஒருவர் சொன்ன போது ஏற்பட்ட சந்தேகம் அவரை விட்டு இன்னமும் நீங்கவில்லை. சங்கரமணியைப் பார்த்துப் பேசிய போது சந்தேகம் வலுப்பெற்றதால் சங்கரமணி யாரிடம் எல்லாம் போனில் பேசினார் என்ற தகவல்களை க்ரிஷ் காணாமல் போவதற்கு முந்தைய ஒரு வாரத்தில் இருந்து தற்சமயம் வரை சேகரித்துத்தரக் கேட்டிருந்தார். அதை இன்று தருவதாகச் சொல்லி இருந்தார்கள்….

அதில் ஏதாவது புதிய துப்பு கிடைக்குமா என்று எண்ணியபடியே ஒரு எண்ணிற்குப் போன் செய்தார். “அந்த சகுனி போன்கால்ஸ் பத்தி கேட்டிருந்தேனே ரெடியா?”

“ரெடி சார்…. ”

“அதுல எதாவது வில்லங்கமான கால்ஸ் இருக்கா”

”அவர் போன் செஞ்சு அதிகம் பேசின ஒரு ஆள் பாம்பு கடிச்சு செத்துப் போயிருக்கான். அவன் செத்துப் போன பிறகும் அவன் போன்ல இருந்து சகுனிக்குக் கால்ஸ் போயிருக்கு”

அடுத்த அரை மணி நேரத்தில் வாடகைக் கொலையாளியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் செந்தில்நாதன் கையில் இருந்தது. கடுமையான விஷம் உள்ள பாம்பு அந்த மனிதனைக் கடித்திருந்த இடம் செந்தில்நாதனைத் திகைப்படைய வைத்தது. க்ரிஷ் காலில் பாம்புக்கடி தழும்பு இருந்த அதே இடத்தில் தான் அந்த மனிதனையும் பாம்பு கடித்திருந்தது. கடிபட்டு மூன்று நிமிடங்களுக்குள் அவன் இறந்திருக்க வேண்டும் என்று  போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் குறிப்பிட்டிருந்தார்….

ஆர்வத்தோடு கடைசி இரண்டு நாட்களில் யாரிடம் எல்லாம் சங்கரமணி பேசியிருக்கிறார் என்று செந்தில்நாதன் தனக்குக் கிடைத்திருந்த பட்டியலில் ஆராய்ந்தார். சங்கரமணி நாலைந்து பேர்களிடம் தான் பேசியிருந்தார். அதிலும் அவர் அதிக நேரம் பேசி இருந்த நபர் அவர் மகள் தான். மற்றவர்களிடம் ஓரிரு நிமிடங்கள் தான் பேசியிருப்பார். அவர்களும் அதிகாரிகளும், காண்ட்ராக்டர்களும் தான். வசூல் சம்பந்தப்பட்ட விஷயமாகத் தான் இருக்கும்…… அப்படியானால் இந்த லாரி மூலமான கொலை முயற்சிக்குக் காரணம் இந்தக் கிழவராக இருக்க முடியாது……. வேறு யாரோ! ஆனால் இரண்டு பாம்புக்கடிகளுக்கும் இடையே ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. ஒருவன் இறந்திருக்கிறான்…. ஒருவன் அதிசயமாய் உயிர்பிழைத்திருக்கிறான்……

நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சரிடம் பேச செந்தில்நாதன்  முடிவு செய்தார்.


ஸ்ரோவின் ISTRAC ஆராய்ச்சி மையத்தில் டைரக்டர், உமாநாயக், வினோத் மூவரும் மிக ஆர்வத்துடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களைப் பெரிய திரையில் பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அந்தக் கரிய பறவை சில புகைப்படங்களில் வந்திருந்தது. அதிகாலை நேரமானதால் இந்தப் படங்களில் அந்தப் பறவை மலையை நெருங்கும் வரை தெளிவாகத் தெரிந்தது. ஆனால் புகைப்படங்கள் அந்தப் பறவை மலையை நெருங்கிய பின் முழுக்கருப்புப் படங்களாக மாறின….. அந்த அமாவாசை இரவுப் புகைப்படங்களைப் போலவே தான்….. கருமை விலகிய பின் தெரிந்த புகைப்படத்தில் க்ரிஷ் மலையில் படுத்திருந்தான். அவன் மெல்ல எழுந்திருப்பதும் அடுத்தடுத்த புகைப்படங்களில் தெரிந்தது. பின் சில படங்களில் க்ரிஷ் மட்டுமே தெரிந்தான். பின் மறுபடி சில படங்கள் கருமை…. மறுபடி தெளிவாகத் தெரிந்த படங்களில் இரண்டில் மட்டுமே அந்தக் கரிய பறவை தெரிந்தது. அந்தப் பறவையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு க்ரிஷ் செல்போனை எடுத்துப் பேசுவது தெரிந்தது.

டைரக்டர் புகைப்பட ஓட்டத்தை நிறுத்தும்படி கையால் சைகை செய்ய வினோத் நிறுத்தினான்.

“திரும்ப க்ரிஷ் தெரிய ஆரம்பிச்ச பிறகு வந்த படங்களைப் போடு. அவன் முகத்தை ஃபோகஸ் பண்ணு…..” என்று டைரக்டர் சொல்ல வினோத் அப்படியே செய்தான்.

பெரிய திரையில் க்ரிஷ் முகம் தெளிவாகத் தெரிந்தது. முதல் படத்தில் அவன் முகத்தில் லேசாய் சுருக்கம். சுற்றும் முற்றும் எதையோ தேடிப்பார்ப்பது போல் தெரிந்தது. அடுத்த படத்தில் அவன் முகத்தில். புன்னகை. அடுத்த படத்தில்  சிரிப்பு. அடுத்த படத்தில் துக்கம். அடுத்த படத்தில் இனம் தெரியாத ஒரு சிந்தனை….. அவ்வளவு தான்….. மீண்டும் கருமைப்படங்கள். பின் பறவையையே அவன் பார்த்துக் கொண்டு இருக்கிற காட்சி…..

டைரக்டர் உமாநாயக்கிடம் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய்?”

“க்ரிஷ் மனதில் எதோ எண்ண ஓட்டங்கள் ஓடுகிறது போல் தெரிகிறது…”

“எண்ண ஓட்டங்கள் உடனடி உடனடியாய் இப்படியா மாறும்?” டைரக்டர் கேட்டார்.

உமாநாயக் யோசித்தாள். எண்ண ஓட்டங்கள் ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு இந்தப் படங்களில் தெரிந்த வேகத்திற்கு மாறாது என்பதை அவள் அறிவாள். யாரிடமாவது பேசும் போது தான் அவர்கள் சொன்னதற்கு ஏற்ற மாதிரி மாறும். க்ரிஷ் அருகில் யாருமே இல்லை. அந்தக் கரிய பறவை கூட இல்லை. ஆனாலும் அவன் முகம் அப்படி மாறுகின்றது என்றால் அவன் மனதிற்குள் யாரிடமோ பேசுவது போலத் தான் தெரிகிறது….. அவள் அதை வாய் விட்டுச் சொன்னாள்.

டைரக்டர் அவளுடைய அறிவுக்கூர்மையை மெச்சியது போல் பாராட்டும் பாவனையில் பார்த்து விட்டுச் சொன்னார். ”சரியாய் சொன்னாய். அவன் உதடு அசையா விட்டாலும் முகபாவனை அதைத் தான் காண்பிக்குது……..”


மா நாயக் மாஸ்டருக்குப் போன் செய்து தாங்கள் கண்ட புகைப்படங்களைப் பற்றிச் சொன்னாள். ”மாஸ்டர் க்ரிஷ் மனசுக்குள்ளேயே பேசினது ஏலியன் கூடத் தான்னு தெளிவா தெரியுது. எங்க டிபார்ட்மெண்டே பரபரப்புல இருக்கு. ஏதோ ஒரு தோற்றத்துல தான் ஏலியனை இத்தனை நாட்கள் கற்பனை செய்தே பார்த்திருக்கோம். இப்ப தோற்றமே இல்லாமல் கூட ஏலியன் கூட மானசீகமாக தொடர்பு வச்சுக்க முடியும்கிற சிந்தனையே விஞ்ஞானத்துக்கு புதுசா இருக்கு. டெல்லிக்கு ஃபோட்டோஸ் அனுப்பி வெச்சிருக்கோம்…. வேற சில சைக்காலஜிஸ்ட்கள் கருத்தையும் கேட்கப் போறாங்க போலத் தெரியுது…..”

மாஸ்டர் கண்களை மூடிக் கொண்டு யோசித்து விட்டுக் கேட்டார்.  “க்ரிஷ் விஷயத்துல உங்க அடுத்த நடவடிக்கை என்ன?”

“சாதாரண மனுஷனா இருந்திருந்தா இன்னேரம் அவனை பெங்களூருக்கோ, புனேக்கோ, டெல்லிக்கோ வரவழைச்சுப் பேசியிருப்போம்…. அவன் நடந்தது எதுவுமே நினைவுல இல்லைன்னு சொன்னதா தகவல் வந்திருக்கு. அப்படிச் சொல்லியே உறுதியா அவன் நின்னான்னா பலவந்தமா அவன் கிட்ட இருந்து உண்மைய வரவழைக்கிறது கஷ்டம்னு டிபார்ட்மெண்ட் நினைக்குது. ஏன்னா அரசியல் அதிகாரம் இருக்கற குடும்பத்து ஆள் அவன்….. அவன் குற்றவாளியும் இல்லை….”

மாஸ்டர் சொன்னார். “அவன் அண்ணா போன் செஞ்சான். நாளைக்கு தம்பியைக் கூட்டிகிட்டு வந்து என்னைப் பார்க்கிறதா சொன்னான்…..”

“அப்படி வர்றப்ப உங்களால அவன் மனசைப் படிக்க முடியுமே மாஸ்டர். அப்ப தான் எல்லா விவரங்களும் நமக்குக் கிடைக்கும்னு நினைக்கிறேன்….” அவள் உற்சாகப் பரபரப்புடன் சொன்னாள். அவள் பரபரப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கே பரபரப்பாய் தான் இருக்கிறது. நாளை வருவதாகச் சொன்ன உதய் இன்றே தம்பியைக் கூட்டிக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூட அவருக்கே தோன்றி இருந்தது. காத்திருக்கும் கலையில் விற்பன்னராய் இருந்த அவருக்கே அப்படித் தோன்றும் போது, அவளுக்கும், இந்த ஆராய்ச்சியில் ரகசியமாய் இறங்கி இருக்கும் அந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்துப் புன்னகைத்தார். காலம் நீள ஆரம்பித்தது…..


ர்ம மனிதன் தான் இருந்த இடத்தில் இருந்தே புதுடெல்லி உயரதிகாரி மீது கவனத்தைக் குவித்துக் கொண்டிருந்தான். சில நாட்களுக்கு முன்பே சர்ச்சில் அவன் மனதில் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவும் சக்தியை ஏற்படுத்தி விட்டிருந்ததால் சிறிதும் சிரமமில்லாமல் அவன் மனதை மர்ம மனிதனால் ஊடுருவ முடிந்தது.

புதுடெல்லி உயரதிகாரி ஏதோ ஒரு சங்கடத்தை மானசீகமாக உணர்ந்தான். அவனுடன் வயதான இஸ்ரோ விஞ்ஞானிகள் இருவரும், நாட்டின் மிகச் சிறந்த மனோதத்துவப் பேராசிரியர் ஒருவரும் இருந்தார்கள். மனோ தத்துவப் பேராசிரியர் அந்த விஞ்ஞானிகளிடம் எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். எல்லாம் புரிகிற மாதிரியும் இருந்தது. புரிந்த வேகத்திலேயே யாரோ அந்தத் தகவல்களை அபகரித்துக் கொண்டது போலவும் இருந்தது. தனக்கு சித்தப்பிரமை ஏதாவது பிடித்துக் கொண்டு விட்டதா என்ற பயமும் அவனுக்குள் லேசாக எழுந்தது. கஷ்டப்பட்டு மனோதத்துவப் பேராசிரியர் சொல்வதைக் கவனிக்க முயன்றான்….

“இந்த ஃபோட்டோஸ்க்கு நடுவுல இருக்க முடிந்த காலம் நீங்க சொல்கிற அளவுக்கு சில வினாடிகளாய் தான் இருக்கும்கிறதை என்னால் நம்ப முடியல. அப்படி இருக்கிறது உண்மைன்னா அவன் மனசுலயும் மூளைலயும் நேரடியா அந்தத் தகவல்கள் பதியுதுன்னு அர்த்தம். எதையும் கேட்டு. கேட்டதை ப்ராசஸ் பண்ணி பிறகு புரிஞ்சுக்கிற வழக்கமான கம்யூனிகேசன்ஸ் இதுல இருந்திருந்தா அதுக்கு கூடுதலாகவே காலம் தேவைப்படும்….”

இஸ்ரோ விஞ்ஞானிகள் இருவரும் பிரமிப்பின் உச்சத்தில் யோசித்தார்கள். புதுடெல்லி அதிகாரி குழம்பினான். அவன் மூலமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மர்ம மனிதனுக்கு தெளிவாகவே எல்லாம் புரிந்தது. அவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

 1. Very interesting in all aspects. Eagerly waiting for Master - Krish meet.

  ReplyDelete
 2. சுஜாதாNovember 9, 2017 at 5:56 PM

  பரபரப்பு தாங்க முடியல. சீக்கிரம் புத்தகமா கொண்டு வந்தீர்கள் என்றால் புண்ணியமா போகும் கணேசன் சார்.

  ReplyDelete
 3. அந்த டைரக்டர் தான் மர்ம மனிதனா .....?கிரிஷிடம் மற்றவர்களிடம ஆழ்மனசக்தி மூலம் பேசும் திறன் உள்ளதை அறிந்துக் கொள்கிறான் ....
  மாஸ்டர்- கிரிஷ் சந்திப்பு க்காக ஆவலுடன்.....

  ReplyDelete
 4. புதுப்புது தகவலா கொடுக்கிறீர்கள்...நன்றி

  ReplyDelete
 5. மாஸ்டர்...க்ரிஷ் சந்திப்பு...எப்படி இருக்குமோ...?

  ReplyDelete