சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 18, 2017

’சவ சாதனா’ செய்த அகோரியின் திகில் கதை!


அமானுஷ்ய ஆன்மிகம் - 16

ராபர்ட் ஈ ஸ்வொபோதா (Robert E Svoboda) என்ற எழுத்தாளர் அகோரிகள் குறித்த பேரார்வம் கொண்டவர். அவர் நீண்ட தேடலின் முடிவில் ஒரு சக்தி வாய்ந்த அகோரியைக் கண்டடைந்தார். அந்த அகோரி மற்ற அகோரிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றமும், வாழும் சூழலும் உடையவராக இருந்தார். சாதாரண மனிதர்களின் தோற்றம், சாதாரண மனிதர்களைப் போலவே மனைவி குடும்பம், குழந்தைகள் எல்லாம் கொண்டவராக இருந்தார். அதனால் ஒருசிலரைத் தவிர வெளி உலகத்திற்கு அவர் அகோரி என்பதே தெரியாமல் இருந்தது. ராபர்ட்டின் ஆத்மார்த்தமான தேடலால் மட்டுமே அந்த அகோரியை அறிய முடிந்தது. பிரபலமானால் பொது மக்களின் தொடர் வரவாலும், எண்ணற்ற கோரிக்கைகள் மற்றும் கேள்விகளாலும் தன் சுதந்திரத்தை இழந்து விட வேண்டியிருக்கும் என்பதால் மறைவிலேயே தன் அகோர சடங்குகளையும், அபூர்வ சித்திகளையும் வைத்திருந்தார் அந்த அகோரி. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்ட எழுத்தாளர் ராபர்ட் ஈ ஸ்வொபோதா அவர் குறித்து நூல்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தன் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல் எழுத அனுமதியளித்தார் அந்த அகோரி குரு. அவர் விருப்பப்படியே அந்த அகோரி குருவின் பெயரையோ, இருப்பிடத்தையோ வெளிப்படுத்தாமல் ராபர்ட் ஈ ஸ்வொபோதா மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் எழுதினார். அவை 1) Aghora I- At the left hand of God,  2)Aghora II - Kundalini  3) Aghora III - The Law of Karma. இந்த மூன்று நூல்களும் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன. தன் அகோரி குருவுக்கு தூய்மையான ஆனந்தம்  என்னும் பொருள் கொண்ட விமலானந்தா என்ற புனைப் பெயரிட்டு விவரித்த சில சுவாரசிய சம்பவங்களைப் பார்ப்போம்.


மும்பையில் ஒரு செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த அகோரி விமலானந்தாவுக்கு சிறுவயதில் இருந்தே அபூர்வசக்திகள் படைத்த மகான்கள் மேல் ஈர்ப்பு இருந்தது. அதனால் அந்த மகான்கள் பற்றி படிப்பதிலும், அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமகாலத்து மனிதர்களில் அப்படி சக்தி படைத்தவர்கள் யாராவது இருந்தால், நண்பர்களுடன் சேர்ந்து சென்று அவர்களைச் சந்தித்து வருவதிலும் அவர் ஆர்வமாய் இருந்தார். ஆனால் கண்மூடித்தனமாக யாரையும் துதிப்பதோ, பின்பற்றுவதோ அவரால் சிறிதும் சகிக்க முடியாததாக  இருந்தது.

இளைஞராக இருந்த போது ஒரு முறை ஜீனசந்திர சூரி என்ற வயதான மனிதர் அபூர்வசக்திகள் படைத்தவர் என்றும், எப்போதுமே பயணத்தில் இருக்கும் அந்த மனிதர் மும்பை வந்துள்ளார் என்றும் கேள்விப்பட்டார். உடனே அவர் தன் நண்பர்களுடன் சென்று அந்த மனிதரைச் சந்தித்தார். ஜீனசந்திர சூரி ஒரு கூட்டமாக அவரைக் காண வந்த இளைஞர்களில் விமலானந்தாவை மட்டும் கூர்ந்து கவனித்தார். பின் விமலானந்தாவிடம் அவருடைய ஜாதகத்தைக் கொண்டு வந்து தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். அத்தனை பேர் போயிருந்த போது தன் ஜாதகத்தை மட்டும் ஏன் இந்த மனிதர் கேட்கிறார் என்பது விமலானந்தாவுக்குப் புரியவில்லை. ஆனால் அவர் கூறிய படியே மறுநாள் தனியாக தன் ஜாதகத்தைக் கொண்டு போய் அவரிடம் விமலானந்தா தந்தார்.

ஜீனசந்திர சூரி அந்த ஜாதகத்தை நிறைய நேரம் ஆராய்ந்தார். பின் “உனக்கு ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், மற்றும் சில அபூர்வசக்தி யந்திரங்கள் படித்துத் தேற விருப்பமா?என்று விமலானந்தாவைக் கேட்க விமலானந்தாவும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். பின் மூன்று வருடங்கள் அந்தத் துறைகளில் நிறைய அவர் கற்றுக் கொண்டார். முக்கியமாக பல வகை சக்தி யந்திரங்கள் எப்படி தயாரிப்பது, அவற்றை வைத்து சில பூஜைகள் செய்வது எப்படி என்பதை ஜீனசந்திர சூரியிடமிருந்து விமலானந்தா கற்றுக் கொண்டார்.

மூன்று வருடங்கள் கழித்து கல்லூரிக்கு விடுமுறை நாட்களின் போது ஒரு சமயம் என்னுடன் வெளியூர் வருகிறாயா?என்று ஜீனசந்திர சூரி கேட்க விமலானந்தாவும் ஒத்துக் கொண்டார். அன்றைய தர்பாங்கா மாநிலத்தில் இருந்த, இன்றைய பீகாரில் உள்ள, ஜனக்பூர் என்ற சிறிய கிராமத்திற்கு அவரை ஜீனசந்திர சூரி அழைத்துச் சென்றார். இரண்டு மூன்று நாட்கள் அந்தக் கிராமத்தில் இனிதே கழிந்தன. கிராமத்து மக்களில் பலரும் ஜீனசந்திர சூரிக்கு முன்பே மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் போலிருந்தது. கிராம மக்களும் அன்பாகப் பழகினார்கள். மூன்றாவது நாள் அமாவாசை நாள்.

அன்று இரவு ஜீனசந்திர சூரி விமலானந்தாவிடம் வந்து மிக இனிமையாகப் பேசினார். வழக்கத்திற்கும் மாறாகக் கூடுதல் இனிமையோடு அவர் பேசியது விமலானந்தாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்பே சொன்னது போல எத்தனை தான் மரியாதைக்குரிய நபர்களாக இருந்தாலும் அறிவை மழுங்கடித்து அவர்களைப் பின்பற்ற முடியாத விமலானந்தா இந்த மனிதர் எதற்கோ அடிபோடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டார்.

கடைசியில் ஜீனசந்திர சூரி விஷயத்துக்கு வந்தார். “நீ இன்று சவ சாதனா செய்யப் போகிறாய்என்றார்.

விமலானந்தாவுக்கு சவ சாதனாஎன்றால் என்ன என்று தெரியவில்லை. அப்படியென்றால் என்ன என்று கேட்டார்.  

“சவ சாதனா என்றால் சவத்தின் மேல் அமர்ந்தபடி பூஜை செய்வது. இன்று புதியதாக ஒரு இளம்பெண்ணின் சவம் கிடைத்திருக்கிறதுஎன்று ஜீனசந்திர சூரி சொன்னவுடன் விமலானந்தாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறு வயதில் இருந்தே சவம் என்றால் அவருக்குப் பயம். அந்தப் பிணத்தைத் தன் பிணமாகவே நினைத்து மயங்கி விழும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவருக்குப் பிணத்தின் மீது அமர்ந்து யோகசாதனை செய்வது என்பது எப்படிப்பட்ட திகிலைக் கிளப்பி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அப்போது தான் விமலானந்தாவுக்கு ஜீனசந்திர சூரி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு தான் செயல்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவர் ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு சவ சாதனா சித்தியாகும் என்பதை அறிந்து கொண்டு தான் அதற்காக இவ்வளவு நாட்கள் தயார்ப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை விமலானந்தா புரிந்து கொண்டார். உடனே உறுதியாக அதெல்லாம் என்னால் முடியாது என்று விமலானந்தா தெரிவித்தார்.

பல விதங்களில் சொல்லிப் பார்த்தும் விமலானந்தா கேட்காமல் போகவே கடும் கோபம் அடைந்த ஜீனசந்திர சூரி “நீ அதைச் செய்யா விட்டால் உன் சவத்தின் மீது அமர்ந்து நானந்த சவ சாதனாசெய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார்.   

இளைஞரான தன்னை இந்த வயதான மனிதர் இப்படி மிரட்டுவதைச் சகிக்காத விமலானந்தா இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்என்று கோபத்துடன் தெரிவித்தார்.

இதை முன்பே எதிர்பார்த்திருந்த ஜீனசந்திர சூரி தன்னோடு அந்தக் கிராம எல்லையில் வசித்து வந்த சில பழங்குடி மக்களை அழைத்து வந்திருந்தார். திடகாத்திரமான அந்தப் பழங்குடி மக்கள் தங்கள் கைகளில் கத்தி முதலான தாக்குதல் ஆயுதங்களை வைத்திருந்தபடி நெருங்கினார்கள்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத விமலானந்தா பயந்து போனார். இங்கு இவர்களால் கொல்லப்பட்டாலும் ஏனென்று கேட்க நாதியில்லை. இந்த ஆள் சொல்வது போலச் செய்தாலோ பயத்திலேயே உயிர் போய் விடும். சவசாதனத்தின் போது ஏதாவது ஒரு துஷ்ட சக்தி என்னை ஆட்கொண்டு உயிரைக் குடித்து விடும். மொத்தத்தில் இன்று எனக்கு மரணம் நிச்சயம்என்று மனதிற்குள் புலம்பியவராக கடைசியில் சவ சாதனாசெய்வதற்கு விமலானந்தா ஒத்துக் கொண்டார்.    

உடனே மீண்டும் இனிமையான பேச்சுக்கு மாறிய ஜீனசந்திர சூரி சவ சாதனா எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்க ஆரம்பித்தார். சவத்தின் கை, கால்களின் கட்டை விரல்களை எப்படிக் கட்ட வேண்டும், சவத்தின் மீது எப்படி அமர வேண்டும், எப்படி சவசாதனா செய்ய வேண்டும் என்பதை  எல்லாம் சொல்லித் தந்த ஜீனசந்திர சூரி ஒரு பாட்டில் சாராயத்தையும் தந்து அப்போதே குடிக்கச் சொன்னார்.  அன்று வரை மதுவைக் கையாலும் தொட்டிராத விமலானந்தா ‘இன்று எல்லாம் விதி விட்ட வழிஎன்று நினைத்தவராக சாராயத்தை முழுவதுமாகக் குடித்தார். தொண்டை, வயிறு எல்லாம் எரிந்தது.

அவர் அருகில் இருந்த மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே பிணம் தயாராக வைக்கப்பட்டிருந்தது.  ஜீனசந்திர சூரி தான் ரகசியமாய் வைத்திருந்த ஒரு யந்திரத்தை எடுத்து விமலானந்தாவின் கையில் தந்தார். “இது நான் நாற்பது ஆண்டு காலமாக அஸ்ஸாமில் பூஜித்து வந்த சக்தி வாய்ந்த யந்திரம். இது உன்னைக் காக்கும். நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. என்று சொல்லிய அவர் விமலானந்தாவை சவத்தின் மீது அமர வைத்து, சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, சவத்தைச் சுற்றி கருப்புக் கயிறால் பெரிய வட்டமிட்டு மந்திரங்கள் ஜபித்தார்.

சவ சாதனாவின் போது வேறெந்த ஆவியும் இதைத் தாண்டி வந்து உன் கவனக்குவிப்பைக் கலைத்து விட முடியாதபடி ரட்சனை செய்திருக்கிறேன். பயப்படாமல் நான் சொன்னபடி செய்என்று சொன்னார்.

அமாவாசைக் கும்மிருட்டில், மயானத்தில், பிணத்தின் மேல் அமர்ந்து ஒரு அமானுஷ்ய சடங்கைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளான விமலானந்தா விரக்தியுடன் தலையசைத்தார்.

அந்தத் திகில் சடங்கில் இனி என்ன ஆயிற்று என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(தொடரும்)
என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 20.6.2017

3 comments:

  1. திகிலுடன் காத்திருக்குக்கிறேன்......

    ReplyDelete
  2. அடபோங்க முக்கியமான இடத்துல தொடரும்னு போட்டுடீங்க..

    ReplyDelete