சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 21, 2017

இருவேறு உலகம் – 48


ர்ம மனிதனின் அந்தக் கேள்வி சதாசிவ நம்பூதிரியைத் திடுக்கிட வைத்தது. அவர் இந்தக் கோணத்தில் அந்த இரண்டு ஜாதகங்களையும் பார்த்திருக்கவில்லை என்பதை அவர் திகைப்பில் இருந்தே மர்ம மனிதன் யூகித்தான். அவனையே சில வினாடிகள் யோசனையுடன் அவர் பார்த்தார். மர்ம மனிதன் தன் முகத்தை இயல்பாகவே வைத்திருந்தான்.

சதாசிவ நம்பூதிரி மெல்ல தன் பார்வையை அந்த ஜாதகங்கள் மீது திருப்பினார். இரண்டு நிமிடங்கள் அந்த ஜாதகங்களை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்து விட்டு அவர் மெல்லச் சொன்னார். “ரெண்டு பேரும் எதிரிகளானா ரெண்டு பேருக்குமே அழிவு தான்

மர்ம மனிதன் தனக்குள்ளே எழுந்த புன்னகையைச் சாமர்த்தியமாக மறைத்தான். அவன் முகத்தில் போலியான கவலை குடிகொண்டது. சதாசிவ நம்பூதிரி அவனிடம் கேட்டார். “நீங்க எதனால அந்தக் கோணத்துல பார்த்தீங்க?”

மர்ம மனிதன் சொன்னான். “ரெண்டு பேருமே வலிமையானவங்க. ரெண்டு  பேருக்குமே ஆபத்தான காலம். ரெண்டு பேருக்குமே பலமான எதிரிகள் இருப்பாங்கன்னு எல்லாம் தெரிஞ்சப்ப, ஏன் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியாய் இருந்துடக் கூடாதுன்னு தோணுச்சு. அதான் கேட்டேன்

கிரகங்கள் அப்படித்தான் இருக்கு. ஆனால் ரெண்டு நல்லவங்களுக்கு மத்தியில சின்ன பிணக்குகள் வரலாமே ஒழிய பெரிய பகை வர வாய்ப்பு குறைவுங்கறதால நான் அந்தக் கோணத்துல யோசிச்சுப் பார்க்கல.”

உன் சொந்த அபிப்பிராயத்தைச் சொல்லாதே கிழவா, ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதைச் சொல்என்று மனதுக்குள் கடுகடுத்த மர்ம மனிதன் வெளியே பொறுமையாகக் கேட்டான். “ஆனால் ஜோதிடப்படி அதற்கான வாய்ப்பு இருக்கல்லவா ஐயா?”

இரண்டு ஜாதகங்களையும் மாறி மாறிப் பார்த்து விட்டுஇருக்குஎன்று சதாசிவ நம்பூதிரி ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த இரண்டு ஜாதகங்களையும் ஆராய்ந்து பார்த்ததில் அவர்களை நிஜ மனிதர்களாகவே உணர்ந்து விட்டிருந்த அவருக்கு மிக நல்லவர்களான அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரியாவதை எண்ணிப் பார்க்கவே கசந்தது.

அவர் அவனிடம் தொடர்ந்து சொன்னார். “இவங்க ஜாதகப்படி ரெண்டு பேருக்குமே மறைமுக எதிரி தான் உண்மையான எதிரியாக இருப்பான்….”  

நானும் அதைக் கவனிச்சேன்…..”  அவன் ஒத்துக் கொண்டான்.

சதாசிவ நம்பூதிரி ஒரு கணம் தயங்கி விட்டு அவனிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “நீங்க இந்த ரெண்டு ஜாதகங்களையும் பத்தி யார் கிட்டயாவது பேசினீங்களா? இங்கே என் கிட்ட குடுத்துப் பார்க்கச் சொன்னதா சொன்னீங்களா?”

ஜோதிடம் தெரிஞ்ச சில பேர்கிட்ட இந்த ஜாதகங்களைக் காமிச்சிருக்கேன். அவங்க கிட்ட இந்த ஜாதகங்கள உங்க பார்வைக்கு அனுப்பி இருக்கறதை சொல்லியும் இருக்கேன். ஏன் கேக்கறீங்க?”

சதாசிவ நம்பூதிரி குரலை உயர்த்தாமலேயே சொன்னார். “அவங்கள்ல ஒருத்தர் இவங்களோட ரகசிய எதிரியாய் இருக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி அவங்க மூலமா அந்த ரகசிய எதிரிக்குத் தகவல் போயிருக்கு. ஏன் சொல்றேன்னா இந்த ஜாதகங்களை அலசிகிட்டிருக்கறப்ப நேத்து ராத்திரி அந்த ரகசிய எதிரி இங்கே வந்திருந்தான்…..”

ஐயா என்ன சொல்றீங்க?” மர்ம மனிதன் தன் முகத்தில் பேரதிர்ச்சியைக் காட்டினான். சதாசிவ நம்பூதிரி தன் நேற்றிரவு அனுபவத்தைச் சுருக்கமாக அவனிடம் தெரிவித்தார். மர்ம மனிதன் வாயடைத்துப் போனது போல் காட்டிக் கொண்டான். பின் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்பது போல் அவரிடம் கேட்டான். “ஐயா நீங்க ஏன் அந்த ஆளோட ஆருட ஜாதகத்தை இன்னும் விரிவா பார்க்கக்கூடாது? அவன் தான் போயிட்டானே

மேற்கொண்டு பார்க்க வேண்டாம்னு சொன்னதும் எனக்கு ஆருடம் தான். அதனால விஷப்பரிட்சைல நான் இறங்கலை. இறங்கப் போறதுமில்லை. உங்களுக்குத் தகவல் சொன்னேன். அவ்வளவு தான்சதாசிவ நம்பூதிரி உறுதியாகச் சொல்லித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

உனக்கு ஆயுசு கெட்டி கிழவாஎன்று மனதினுள் மெச்சினாலும் அவரது முடிவால் வருத்தம் கொள்வது போல் அவன் காட்டிக் கொண்டான். பின் யோசனையுடன் சொல்வது போல் சொன்னான். “எனக்கு இவங்க ரெண்டு பேர் யாருன்னே தெரியலை. ஜாதகங்கள் சுவாரசியமா இருந்ததால தான் நானும் ஆழமா பார்த்து உங்களையும் பார்க்கச் சொன்னேன்….. நீங்க சொன்ன மாதிரி நான் இந்த ஜாதகங்களைப் பத்திப் பேசின ஆட்கள்லயோ, அந்த ஆட்களுக்குத் தெரிஞ்சவங்கள்லயோ இவங்களோட எதிரி இருந்தா அவங்களைக் கண்டுபிடிச்சு அவங்க மூலமா இந்த ரெண்டு பேரைக் கண்டு பிடிக்கப் பார்க்கணும்…. கஷ்டம் தான் ஆனால் முயற்சி செஞ்சா முடியாததில்லை.....”

சதாசிவ நம்பூதிரி ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தார். அவன் அவர் எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து, சொல்லாமல் போகவே மெல்லக் கேட்டான்.

நீங்க பார்த்த வரைக்கும் அந்த எதிரி ஜாதகம் எப்படி ஐயா இருந்துச்சு?”

அதை விவரிச்சு சொல்றது கஷ்டம்

சுருக்கமாவாவது சொல்லுங்களேன்….”

எமனோட ஏஜெண்டுசொல்லும் போது அவரையும் மீறி அவர் உடல் நடுங்கியது.   

அவன் அதிர்ந்து போனது போல் காட்டிக் கொண்டான். பின் கவலை தொனிக்கச் சொன்னான். “இவங்க ரெண்டு பேரையும் காப்பாத்த இவங்களோ, இவங்களுக்காக மத்தவங்களோ என்ன பண்ணனும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க ஐயா. எப்படியாவது இவங்களைக் கண்டுபிடிச்சு தெரிவிச்சுடறேன்…..”

’சொன்னால் தப்பித் தவறியும் அவர்கள் அதைச் செய்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்….


நினைவு திரும்பிய போது க்ரிஷ் அந்த மலை மேல் இருந்தான். சற்று முன் வரை அவன் உணர்ந்து வந்த குளிரும் இருட்டும் இப்போதில்லை. கண்விழித்துப் பார்த்த அவனை அதிகாலையின் இளங்காற்றும், அரையிருட்டும் வரவேற்றன. உடல் களைப்பிலிருந்து மீண்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான். எச்சரிக்கையுடன் பக்கத்தில் ஏதாவது பாம்பு தென்படுகிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். முன்பெல்லாம் இந்தப் பகுதியில் பாம்பு கிடையாது. அதுவும் கடும்விஷமுள்ள பாம்பு கிடையவே கிடையாது. அப்படி இருக்கையில் அன்றிரவு அவனை அப்படி ஒரு விஷமுள்ள பாம்பு கடித்திருந்தது இப்போது ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது.

“பயப்படாதே. இங்கே பாம்பு கிடையாது” வேற்றுக்கிரகவாசி தெரிவித்தான். “அன்றைக்கு உன்னைக் கடித்ததும் இங்கே இருந்த பாம்பு அல்ல. உன்னைக் கொல்ல, கொண்டு வரப்பட்ட பாம்பு”

க்ரிஷ் திகைத்தான். முன்பின் பார்த்திராத அந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிரி, என்றோ வழியில் குறுக்கிடக்கூடும் என்று இப்போதே அவனைக் கொலை செய்ய முயற்சித்தது முட்டாள்தனமாகப் பட்டது.

”இந்தத் தடவை உன்னைக் கொல்ல முயற்சி செஞ்சது அந்த எதிரி அல்ல உன் நண்பன் தான்….” என்று ஆரம்பித்த வேற்றுக்கிரகவாசி அன்றிரவு என்ன நடந்தது  என்பதை விவரித்தான். விவரிக்கும் போது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் என்ன நினைத்து எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் கூட ஒன்று விடாமல் சொன்னான். க்ரிஷின் திகைப்பு அதிர்ச்சியாக மாறவில்லை. எல்லாம் தெரிந்து கொண்ட பிறகு ஒருவித வெறுமையே முடிவில் மிஞ்சியது. முன்பே அவர்களை ஆழ்மனதில் எடைபோட்டு அறிந்திருந்தது போன்ற உணர்வே அவனுக்கு மேலிட்டது.

வேற்றுக்கிரகவாசி கடைசியில் சொன்னான். “…… கடைசியில் நீ சாக வேண்டியிருந்த அந்த அமாவாசை ராத்திரியில் அந்த வாடகைக் கொலையாளி செத்துப் போனான்”

“எப்படி செத்தான்?”

“அந்தப் பாம்பு அவனைக் கடித்து விட்டது…”

“அதெப்படி?”

“அதன் மனதில் சின்னப் ப்ரோகிராம் போட்டு வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். ப்ரோகிராம் சக்சஸ்…. ஆள் க்ளோஸ்…”

க்ரிஷ் புன்னகைத்தான். “பாம்புக்கும் மனம் எல்லாம் இருக்கிறதா என்ன?”

“மனிதன் மனமளவு பல அடுக்கு, பரிமாணங்கள் எல்லாம் இல்லை என்றாலும் எல்லா உயிரினங்களுக்கும் நுணுக்கமான அடிப்படை உணர்வுநிலைகள் கொண்ட மனம் இருக்கிறது…”

வேற்றுகிரகவாசி க்ரிஷை மறுபடியும் பிரமிக்க வைத்தான். ’இவன் தொடாத சப்ஜெக்டே இருக்காது போலிருக்கிறதே’ என்று எண்ணியவனாய் ’வேறென்னவெல்லாம் பரிசோதனைகள் செய்தாய்?’

“விளையாட்டாய் சிலதெல்லாம் செய்தேன். அந்த வாடகைக்கொலையாளி மொபைல் போன் மூலமாய் சங்கரமணிக்கு சில தடவை போன் செய்து பார்த்தேன்….. மனுஷன் ரொம்பவே டென்ஷன் ஆயிட்டார்….. இத்தனைக்கும் நான் ஒன்னுமே சொல்லலை….”

க்ரிஷ் அந்தக் காட்சியை மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்து, வாய்விட்டுச் சிரித்தான். “ஒன்னும் சொல்லாதது தான் ப்ரச்னையே”

அவன் சிரித்து முடியும் வரை காத்திருந்து விட்டு வேற்றுக்கிரகவாசி சொன்னான். “க்ரிஷ் நாம் பிரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது…..”

(தொடரும்)
என்.கணேசன் 

15 comments:

  1. என்ன சார் எதிரி விவரமா எல்லாம் தெரிஞ்சுகிட்டே வர்றான். க்ரிஷ் பாவம் ஏலியனும் போய் விட்டால் என்ன தான் பண்ணுவான். சீக்கிரம் ஏதாவது வழி செய்யுங்கள்.திக் திக்குன்னு இருக்கு.

    ReplyDelete
  2. Unmaiyana sambavam polave irukku sir....

    ReplyDelete
  3. Hope top gear shifted to the story.... waiting for his mom & lover's expression... very exciting boss.

    ReplyDelete
  4. Mr மர்ம மனிதன், தனக்கு வேண்டிய விவரங்களை, மிக தந்திரமாக நம்பூத்திரியின் வாய் வழியாக கேட்டு உறுதிப் படுத்திக் கொள்கிறான்....மாஸ்டர்,கிரிஷ் இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்குவதுதான் அவனுடைய அடுத்த திட்டமோ....

    கிரிஷ் , வே.கி வாசி மூலம் தன் கொலை முயற்சிக்கு காரணம் அறிகிறான்....
    அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலை தூண்டிய பதிவு....
    மாஸ்டர், கிரிஷ் சந்திப்புக்கு வெயிட்டிங்.....

    ReplyDelete
  5. பிரியும் நேரத்தில் தொடருமா...?😰என்ன சார்...? ஆனாலும் வேற்று கிரகவாசியுடனான க்ரிஷ் நட்பு அபாரம் ...

    எழில். S

    ReplyDelete
  6. Analum neenga romba mosam sir ipdi tempt pannitu next week varium kathiruka vaikringa

    k.sathish kumar

    ReplyDelete
  7. என்ன பாம்புக்கு எல்லா உயிரினங்களுக்கும் கூட உணர்வுநிலைகள் கொண்ட மனம் இருக்கிறதா உணர்வுகள் தெரியும் மனம் கேள்வி படாதா தகவல் G
    கிரிஷின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் ?, ம.ம வின் மாஸ்டர் பிளான் என்னவாக இருக்கும் ?இங்கு மாஸ்டர் எங்கே எப்படி குறுக்கிடுவார்? அறியும் ஆவலில்.....

    ReplyDelete
  8. நான் எதிர்பார்த்தது இத்தடவை நம்பூதிரி மாயாவியை உள்முகமாக தெரிந்துக்கொண்டிருப்பாரென்று ஆனால் அங்கும் அவர் உயிர்க்கு ஆபத்து என்பதால் இத்துடன் விட்டுவிட்டீர்கள்.இன்னும் வேற்று கிரகவாசியைப் பற்றி கிரிஷ் ஜாதகத்தில் நம்பூதிரியால ஏதும் குறிப்பிடப்படவில்லை ......நன்றி இந்நாவலில் பல அமானுஷ்யன்கள் சற்று கூடுதல் அமானுஷ்யன் நாவலைவிட...

    ReplyDelete
  9. "அதன் மனதில் சின்னப் ப்ரோகிராம் போட்டு வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். ப்ரோகிராம் சக்சஸ்…. ஆள் க்ளோஸ்…”

    செம ட்விஸ்ட்...

    அற்புதம் சுவாரசியம் தாங்க முடியவில்லை.

    அடுத்து என்ன என கத்துக்கொண்டிருக்க கடினமாக உள்ளது. விஜயதசமி கூடுதல் எபிசொட் போடுங்கள்.

    ReplyDelete
  10. விலங்கினங்களும் மனம் உண்டு...பயனுள்ள தகவல் சார்

    ReplyDelete
  11. sir nan ungaloda amanushyan navalai enga vangalam illana ennoda mail id ku send pannivida mudiyuma

    K.Sathish Kumar

    ReplyDelete
    Replies
    1. பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

      Delete
  12. வேற்று கிரகவாசியும், மர்ம மனிதனும் ஒருவரா?
    மாஸ்டரை, தன் எதிரியாக க்ரிஷை நினைக்க செய்வது தான் வேற்று கிரகவாசியின் நோக்கம் போல...

    ReplyDelete