நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில்
ருத்திராட்ச மாலை, பளிச் வெள்ளையில் விலையுயர்ந்த வேட்டி, சட்டை, நடையில் வேகம் கலந்த
தனி மிடுக்கு என்ற அடையாளங்களுடன் சதாசிவ நம்பூதிரியைச் சந்திக்க மனோகருடன் மர்ம மனிதன்
உள்ளே நுழைந்தான். மனோகர் வந்த காரையே பார்த்து முன்பு பிரமித்திருந்த சங்கர நம்பூதிரிக்கு
இப்போது மனோகரின் முதலாளி வந்திறங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பார்த்தவுடன் பிளந்த வாய்
மூடச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டது. இப்போது யோசிக்கையில் இரண்டு ஜாதகங்கள் பார்க்க
இந்த ஆள் தந்த நாற்பதாயிரம் ரூபாய் அதிகத் தொகை அல்ல என்று தோன்றியது. ‘அப்பா அந்த
இரண்டு ஜாதகங்கள் அலச எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அதுவும் இனி
ஜாதகம் பார்ப்பதில்லை என்ற பிடிவாதத்தை இந்த ஆளுக்காக விட்டுக் கொடுத்து ஜாதகம் பார்த்திருக்கிறார்……’
சங்கர நம்பூதிரி
பணிவுடனும், பயபக்தியுடனும் மர்ம மனிதனைப் பார்த்துக் கைகூப்பினார். மனோகர் அவரை அறிமுகப்படுத்தினான்.
“இவர் பெரியவரோட மகன். இவரும் ஜோதிடர் தான்”
மர்ம மனிதன்
மிகுந்த மரியாதையுடன் கை கூப்பினான். அந்த மரியாதையில்
புளங்காகிதம் அடைந்த சங்கர நம்பூதிரி அவர்களை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்.
சதாசிவ நம்பூதிரி
சாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். மேலே வரும் காலடி ஓசைகளைக் கேட்டு
விட்டுக் கண்களைத் திறந்த அவரிடம் மனோகர் சொன்னான். “ஐயா வணக்கம். சார் தான் என் முதலாளி.”
மர்ம மனிதன்
சங்கர நம்பூதிரிக்குக் காட்டிய மரியாதையை விடக்கூடுதல் மரியாதையுடன் கைகூப்பினான்.
சதாசிவ நம்பூதிரியும் மரியாதையுடன் கைகூப்பி விட்டு எதிரே இருந்த நாற்காலிகளில் அமரக்
கை காட்டினார். மனோகர் அமரவில்லை. மர்ம மனிதன் ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டு மனோகரைப்
பார்த்து லேசாகத் தலையசைத்தான். மனோகர் கிளம்பி விட்டான். சங்கர நம்பூதிரிக்கு அவர்கள்
என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய ஆவல் இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவனுடனேயே கீழிறிங்கி
விட்டார். ’அப்பா மட்டும் புத்திசாலியாக இருந்தால் இந்த ஆளிடம் இனியும் ஒரு பெருந்தொகை
கறந்து விடலாம். ஆனால் சூரியன் எப்படி மேற்கில் உதிக்காதோ அது போல இவரும் அதைச் செய்ய
மாட்டார்.’ என்று அவர் மனம் அங்கலாய்த்தது.
சதாசிவ நம்பூதிரி
எதிரில் இருந்த மர்ம மனிதனைக் கூர்ந்து பார்த்தார். மர்ம மனிதன் தான் வந்த பாத்திரமாகவே
மாறி இருந்ததால் அவருக்கு முந்தைய நாள் இரவு வீட்டுக்கு வெளியில் இருட்டில் கண்காணித்த
மனிதன் என்று தோன்றவேயில்லை. சதாசிவ நம்பூதிரிக்கு எதிரில் அமர்ந்திருந்த ஆள் கம்பீரமாகவும்,
ஆன்மிகவாதியாகவும், நல்ல துடிப்பான மனிதராகவும் தெரிந்தார். சக்தி அலைகளைப் படிப்பதில் வல்லவரான மாஸ்டரே இங்கிருந்திருந்தாலும்
கூட இப்போது மர்ம மனிதனின் சுயரூபத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகத் தானிருந்திருக்கும்
என்கிற நிலையில் சதாசிவ நம்பூதிரிக்கு சந்தேகம் தோன்றாமல் இருந்தது ஆச்சரியமில்லை.
மர்ம மனிதன்
அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். “வணக்கம் ஐயா. நான் கனகசபை. பூர்வீகம் தஞ்சாவூர்ப்
பக்கம். தொழில் விஷயமா குஜராத்ல போய் செட்டில் ஆனவன்….”
சதாசிவ நம்பூதிரிக்கு
அவன் தொழில் பற்றியோ சேர்த்திருக்கும் சொத்து பற்றியோ விசாரித்துத் தெரிந்து கொள்ளத்
தோன்றவில்லை. அவர் ஆர்வத்துடன் தன் பழைய சந்தேகத்தைக் கேட்டார். ”சந்தோஷம்…. உங்க ஆள்
நீங்கள் ஜோதிடத்தைக் கரைச்சுக் குடிச்சவர்னு சொன்னார். உங்களுக்கு எப்படி ஜோதிடத்தில் ஆர்வம்?”
“ஐயா ஆரம்பத்தில்
நான் ஜோதிடத்தை நம்பாமல் தான் இருந்தேன். என் குருநாதர் தான் அது ஒரு சயின்ஸ். எல்லாத்தையுமே
சொல்லிடாட்டியும் முக்கியமான பல தகவல்களை நாம் சுலபமாய் தெரிஞ்சுக்கலாம்னு சொல்லி எனக்கு
ஜோதிடத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தினவர். அதுல இறங்கினதுக்கு அப்புறம் அதுல ஆர்வம் அதிகமாயி
ஆழமாவே போயிட்டேன்….”
“இந்த ரெண்டு
ஜாதகங்கள் யாரோடது? உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?”
மர்ம மனிதன்
மிகவும் எச்சரிக்கையுடன் பதிலளித்தான். “ரெண்டு ஜாதகங்களையும் எனக்கு குரு தான் கொடுத்தார்.
இந்த ரெண்டு ஜாதகத்தையும் பாரு. அவங்க என்ன ஆவாங்கன்னு சொல்லுன்னார். நான் பார்த்தேன்.
ரெண்டும் ரொம்ப சுவாரசியமான ஜாதகங்கள்….. முடிஞ்சா வரலாற்றையே புரட்ட முடிஞ்ச ஜாதகங்கள்…..
ஆனா இப்ப நடப்பு தசைல ஆபத்தான கட்டத்துல இருக்கிறதா எனக்கு பட்டுச்சு……”
“உங்க கணிப்பு
உண்மை தான். உங்க குரு என்ன சொல்றார்?”
“அவர் கிட்ட
நான் கேட்கறதுக்குள்ள அவர் காலமாயிட்டார்…..” மிகுந்த வருத்தத்துடன் மர்ம மனிதன் சொன்னான்.
சதாசிவ நம்பூதிரி
தன் முன்னால் டீப்பாயில் வைத்திருந்த இரண்டு ஜாதகங்களையும் ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தார்.
மர்ம மனிதன் அவரையே கூர்ந்து பார்த்தான். அவனுக்கு அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை
அறிய ஆவலாக இருந்தது. அவனுக்கு இருக்கும் சக்தியின் பரிமாணத்திற்கு அவனால் சுலபமாக
ஊடுருவிப் பார்க்க முடியும். ஆனால் அவரிடம் தன் சக்தியை உபயோகிப்பதில் ஒரு பிரச்னையை
அவன் உணர்ந்தான். உண்மையான ஆன்மிகவாதியும், சாத்வீகியுமான அவர் அவன் சக்தி ஊடுருவலை
உணர முடிந்த நுட்பநிலை கொண்டவர். நேற்றிரவு உணர்ந்தும் இருந்தவர். இப்போது அவன் தான்
நேற்று இரவு இங்கு வந்தவன் என்று ஒப்பிட்டு அறிந்து கொள்ள அதிக நேரம் ஆகாது. அவர் தெரிந்து
கொண்டார் என்றான பிறகு அனாவசியமாய் அவரைக் கொல்ல வேண்டி இருக்கும். இப்போதிருக்கும்
சூழ்நிலையில் அது தேவையில்லாத சக்தி விரயமாய் இருக்கும். எனவே அவர் வாய் மூலமாகவே கேட்டுத்
தெரிந்து கொள்வது தான் நல்லது….
சதாசிவ நம்பூதிரி
கேட்டார். “ஜாதகங்களைக் கொடுத்தப்ப உங்க குரு இந்த ரெண்டு ஜாதகங்களும் யாருடையதுன்னு
சொல்லலியா?”
”இல்லை.
பாருன்னு மட்டும் தான் சொன்னார்….. நானும் அவர் நான் பார்த்துச் சொல்றதுக்குள்ளே இறந்துடுவார்னு
தெரியாததாலயும், யாருன்னு தெரிஞ்சதுக்கப்பறம் ஜாதகம் பார்த்தால், தெரிஞ்ச விஷயங்கள்
நம் கணிப்பை பாதிச்சுடுமோங்கறதாலயும் கேட்கலை….”
சதாசிவ நம்பூதிரி
தலையாட்டினார்.
மர்ம மனிதன்
தொடர்ந்து உணர்ச்சிகரமாகச் சொன்னான். “… பார்த்த பிறகு இவ்வளவு அருமையான ஜாதகர்கள்
இப்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பார்களே அவர்களுக்கு என்ன ஆகும், தப்பிப்பார்களா இல்லை
மாட்டிக் கொள்வார்களாங்கற சந்தேகம் என்னை அரிக்க ஆரம்பிச்சுடுச்சு. முகம் தெரியாத மனுஷங்களா
அவங்க இருந்தாலும் அந்த ஒரு நெருடலை என்னால தவிர்க்க முடியல….. அதனால தான் ரெண்டாவதா
ஒரு நல்ல ஜோதிடர் கருத்தையும் கேட்கலாமேன்னு தோணுச்சு….. என்னுடைய ஒரு கெட்ட பழக்கம்
என்னன்னா, ஒரு விஷயத்துல இறங்கிட்டா அதோட முடிவு வரைக்கும் தெரிஞ்சுக்கற வரைக்கும்
நிம்மதியா இருக்க முடியாது. மனசுல அந்தக் கேள்விக்குறி பெருசா நிக்கும்… நின்னுகிட்டே
இருக்கும்…..”
சதாசிவ நம்பூதிரி
க்ரிஷின் ஜாதகத்தைக் கையிலெடுத்தபடி சொன்னார். “இந்த ஜாதகன் இப்ப உயிரோட இருக்கவே வாய்ப்பு
குறைவு. போன அமாவாசையிலேயே காலமாயிருக்கலாம்…..”
மர்ம மனிதனுக்கு
அவரை மனதினுள் மெச்சாமல் இருக்க முடியவில்லை. மெல்லக் கேட்டான். “ஒருவேளை பிழைச்சிருந்தா
அவன் கண்டத்துல இருந்து முழுசா தப்பிச்சதா நாம எடுத்துக்கலாமா ஐயா?”
“இல்லை.
இன்னும் நிறைய ஆபத்து காத்துகிட்டிருக்கு. ஆபத்துக்காலம் இன்னும் ஆறு மாசம் இருக்கு.
ஆனா பையன் மகாபுத்திசாலி. நல்ல ஆத்மா. அன்பானவன்….. புதனின் வேகமாய் புரிந்து கொள்ளும்
திறமையும், சனியின் ஆழமாய் உணரக்கூடிய ஞானமும் இருக்கிறவன். அதனால கஷ்டம்னாலும் எதையும்
சமாளிக்கற வாய்ப்பும் இல்லாமலில்லை…..”
மர்ம மனிதனும் அந்த சாத்தியக்கூறில்
தான் சின்னதாய் ஒரு அபாயத்தை உணர்ந்திருந்தான். கிழவரும் அதே முடிவைத் தான் எட்டியிருக்கிறார்…..
அடுத்ததாக சதாசிவ நம்பூதிரி மற்ற ஜாதகத்தை
எடுத்தார். ”இந்த ஜாதகரும் ஒரு தர்மாத்மா. ஆரம்பகாலத்தில் நாஸ்திகராய் இருந்திருக்க
வாய்ப்பு இருக்கு. பின் ஆன்மிகத்துல இழுக்கப்பட்டிருப்பார். பல மகாசக்திகளை இந்த ஆள்
கண்டிப்பாய் தன்வசமாக்கி இருப்பார். இவருக்கும் இனி ஆறுமாச காலம் ஆபத்தாய் தான் இருக்கும்.
இவர் பின்னால பல பலம்வாய்ந்த ஆட்கள் இருப்பார்கள். அதே போல எதிரிகளும் பலம் வாய்ந்தவர்களாக
இருப்பார்கள். கிரகங்கள் யுத்த சூழலைச் சொல்றதால இவர் விதியையும் நிச்சயமாய் சொல்றதுக்கில்லை….”
மாஸ்டரின் ஜாதகத்தை நன்றாக அலசியிருந்ததால்
இதையும் மர்ம மனிதன் அறிந்திருந்தான். யதார்த்தமாய் கேட்பது போல் அவன் மெல்லக் கேட்டான்.
“ஐயா உண்டு, இல்லை என்று முடிவாகச் சொல்வதல்லவா விஞ்ஞானம். இப்படி நிச்சயமாய் சொல்ல
முடியாத போது ஜோதிடத்தை எப்படி விஞ்ஞானம்னு சொல்றது? இதை என் குரு கிட்டயே கேட்டிருப்பேன்.
அவர் இல்லாததால உங்க கிட்ட கேட்கிறேன்…. தப்பா நினைச்சுக்கக் கூடாது….”
“விஞ்ஞானம் படிச்ச டாக்டர்கள் கூட பிழைக்கறதுக்கு
வாய்ப்பு 50 சதவீதம், 40 சதவீதம்னு சொல்றாங்களே. அது அவங்க தப்போ, விஞ்ஞானத்தோட தப்போ
இல்லை. சாதகமும், பாதகமும் ஒன்னை ஒன்னு மிஞ்சற மாதிரி இருக்கறப்போ முடிவா சொல்ல கடவுளால
தான் முடியும், ஜோதிடனும், டாக்டர்களும் தெளிவாய் தெரிஞ்சதை மட்டும் தான் உறுதியா சொல்ல
முடியும். மத்ததச் சொல்ல முடியாது….”
மர்ம மனிதன் அவருடைய வாதத்தை ரசித்தான்.
ஆனால் ஒரு உண்மையை அவன் அறிவான். எல்லாத் தகவல்களையும் பெற்ற பின் சாதக பாதகங்கள் சரிசமமாகவே
இருந்தால் கூட வாக்கு பலிதம் உள்ள ஒரு திறமையான ஜோதிடன் தன் உள்ளுணர்வால் முடிவாக ஒன்றை உணர்வான். இந்த மனிதரும்
அதை உணர்ந்திருக்காமல் இருக்க மாட்டார். அதை மெல்ல அவன் வரவழைப்பான். அதற்கு முன் தான்
அறிய வேண்டியிருந்த முக்கியக் கேள்வியை அவன் மெல்லக் கேட்டான். “இந்த ரெண்டு பேரும்
எதிரிகளானால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியுமா ஐயா?”
(தொடரும்)
என்.கணேசன்
The conversation between Sadhasiva and enemy is Superb, especially regarding astrology and doctors...
ReplyDeleteசதாசிவ நம்பூதிரி கலக்கறார்.
ReplyDeleteAthukkulla Mudinjirchu :(
ReplyDeleteஇது வரை அமானுஷ்ய சக்தி அலைகள் மீது இருந்த ஆர்வம் ஜோதிடத்திலும் வந்து விட்டது. உங்கள் எழுத்துக்களில் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம் கணேசன். பாராட்டுக்கள்!
ReplyDeleteமர்ம மனிதன் படு ஸ்மார்ட்.....தனக்கு வேண்டிய விவரங்களை புத்திசாலித்தனமான கேள்விகள் மூலம் பதில் பெறுகிறான்.....கடைசியில் அம்மாநில முக்கியாமான வினாவையும்
ReplyDeleteஎழுப்புகிறான்.....நம்பூத்திரிகளின் சாதக,பாதக விளக்கம் excellent....உங்களின், எழுத்துகள் மூலம் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது....G... ரசித்து படித்த பதிவு.....
எப்போதுமே உரையாடலில் மட்டும் உச்சகட்டமான சுவாரஸ்யம்..
ReplyDeleteஐயா தங்களது கதையை எனது WhatsApp குழுவில் பகிரலாமா
ReplyDeleteபகிரலாம்.
DeleteHi Saravanan, i hope you might be doing this already. If not, as a good etiquette, when you sharing with your watsapp friends make sure you mention your source..
ReplyDeleteYes.
Deleteஜோதிடம் பற்றிய சில தெளிவான கருத்துக்கள் அருமை..
ReplyDeleteஅற்புதமான கதை,கரு,கதாபாத்திரம், கருத்துகளும், இப்படி உயிர் எழுத்தில் இருந்து ஆயுத எழுத்து வரை அருமை அண்ணா.
ReplyDeleteEppadi sir eppadi elzhudiringa week by week expectations and standards getting higher and higer...enjoying it...
ReplyDeletegood dialogue writing between Astrologer and the villain:-)
ReplyDeleteArumaiyana Uraiyadal sir...
ReplyDeleteமெய்ஞானம் விஞ்ஞானம் என்று எல்லாத்தையும் கதை வழியாகவும் கட்டுரை வழியாகவும் காண்பித்து அஞ்ஞானத்தை போக்கிவருகிறீர்கள் இப்பொழுது அதில் ஜோதிட ஞானத்தையும் இணைத்து கொண்டு போகிறீர்கள் சூப்பர் விஷ பாம்பு பட்டு சடடை போட்டு ப்வவ்யமாய் சீறாமல் சிங்காரமாய் பேசுகிறது பாவம் ஏமாந்துவிடுவாரா ஜோதிடர் அவர் நிலை அவருக்கு எப்படி இருக்கும் சாதகமாகவா? பாதகமாகவா ? G ....கடவுளின் பதில் என்ன
ReplyDeleteஅற்புதமான எழுத்து நடை மிகவும் சுவாரசியமாக உள்ளது.
ReplyDeleteநம்பூதிரிக்கும் மர்ம மனிதனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் கண் முன்னே நிக்கிறது.
நம்பூதிரி கிரிஷின் ஜாதகத்தை எடுத்ததும் சொன்ன வார்த்தைகள் ஜாதகத்தின் உச்சம்.
ஜாதகத்தின் மீது ஒரு மிக பெரிய ஆர்வத்தை கூட்டுகிறது.
மிகவும் நன்றி. அடுத்த வியாழன்கிழமைக்கு ஆவலாக உள்ளேன்.