சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 7, 2017

இருவேறு உலகம் – 46


யாரோ வரும் காலடியோசை கேட்டதுமே மாஸ்டரின் கை அந்தப் பேனாவுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த காகிதத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.  வருவது எதிரியாக இருக்குமோ என்ற எண்ணம் தான் முதலில் மனதில் எழுந்தது. ஆனால் அந்த ஆட்களை முந்தி வந்த அலைவரிசைகள் அப்படிச் சொல்லவில்லை என்றாலும் அவன் அலைவரிசைகளை மறைப்பதில் வல்லவன் என்று முன்கூட்டியே அறிந்திருந்த தகவல் எச்சரிக்கை விடுத்தது. அவர்  வேகமாக அந்தக் காகிதத்தைத் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பத்ரகாளியின் பின்னால் மறைவாக நின்று கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தார். இரண்டு இளைஞர்கள் சாராய பாட்டிலுடன் வந்து கொண்டிருந்தார்கள். சற்று முன் வேகமெடுத்த இதயத்துடிப்புகள் இயல்பு நிலைக்கு வர ‘இங்கிருக்கும் காலி பாட்டில்கள் இவர்கள் கைங்கர்யம் தானா?என்று எண்ணியவர் அமானுஷ்யமாய் ஒரு வினோத ஒலியை எழுப்பியபடி சிலையின் பின்னால் இருந்து தாவிக் குதித்தபடி வெளியே வந்தார். “உங்கள் ரத்தம் வேண்டும் பிள்ளைகளேஎன்று ஹிந்தியில் பெண்குரலில் கிறீச்சிட்ட குரலில் அவர் சொன்னார்.

எதிர்பாராமல் அரையிருட்டில் இருந்து வெளிப்பட்ட உருவமும் அதன் ஒலியும், இரத்தம் கேட்டதும் அந்த இளைஞர்களிடம் பெரும் பீதியைக் கிளப்பி விட்டது. ஒரு கணம் பயத்தில் உறைந்து போன இருவரும் அடுத்த கணம் அங்கிருந்து புயல் வேகத்தில் ஓடி மறைந்தார்கள். மாஸ்டர் புன்னகைத்தார். பயத்தின் இயல்பே இது தான். கண்டது என்ன, கேட்டது என்ன என்றெல்லாம் நின்று ஆராய்ச்சி செய்ய விடாது... ஆனால் இரத்தம் கேட்கும் இந்தக் கோயிலுக்கு இனி சாராய பாட்டில்களோடு சீக்கிரத்தில் யாரும் வர மாட்டார்கள் என்று எண்ணியவராக தீப்பெட்டி எடுத்து ஒரு தீக்குச்சியை உரசி அந்த வெளிச்சத்தில், தான் எடுத்து வைத்திருந்த தாளில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். ஒரு எளிமையான வரைபடமாக அது இருந்தது.



ஒரு பனிமலையில் ஓரிடத்தில் ஒரு திரிசூலம்.... அதன் மேல் ஆகாயத்தில் ஒரு பறவை.  அவ்வளவு தான்.  அந்தத் தீககுச்சியில் நெருப்பு தீர்வதற்கு முன்  அந்த வரைபடத்தை மனதில் பதித்துக் கொண்ட மாஸ்டருக்கு எதிரி எடுத்துக் கொண்டு போன தாளிலும் இதே வரைபடம் இருந்ததா அல்லது வேறுபடம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் குரு தன் பிரிய சீடனுக்கு என்று அனுப்பி இருந்த செய்தியைச் சரியான நாளில் சரியான முகூர்த்தத்தில் பெற்றுக் கொண்ட திருப்தியில் கண்கள் ஈரமாயின. இது சொல்லும் தகவல் என்ன, தொடர்ந்து அவர் செய்ய வேண்டியதென்ன என்பது இனிமேல் தான் பிடிபடும் என்றாலும் இப்போதைக்கு இது போதும்.

ஈரமான கண்களுடன் மாஸ்டர் அரையிருட்டில் தெரிந்த பத்ரகாளியைப் பார்த்து கைகூப்பியபடி சொன்னார். உன் முன்னிலையில் எனக்குக் கிடைக்க வேண்டிய தகவலைப் பெற்று விட்டேன். சற்று முன் ஏமாற்றி விட்டதாகச் சொன்னதற்கு என்னை மன்னித்து விடு தாயே. எத்தனை தான் ஞானம் பெற்றாலும் சமயத்தில் மனம் சராசரியாகி விடுகிறது... அவசரப்பட்டு முடிவெடுத்து வெளிக்கொட்டியும் விடுகிறது.....

உடனடியாக அங்கிருந்து வெளியேறி விடாமல் அங்கிருந்த குப்பைகளையும், மது பாட்டில்களையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து விட்டு சில நிமிடங்கள் பத்ரகாளி சிலை முன் அமர்ந்து தியானம் செய்து வணங்கி விட்டுத் தான் மாஸ்டர் கிளம்பினார். செல்லும் போது மனம் லேசாக இருந்தது.

இருட்டில் கங்கைக்கரையில் நிறைய நேரம் பல சிந்தனைகளுடன் அவர் அமர்ந்திருந்தார். கரையில் யாத்திரீகர்கள் ஆரவாரம் ஓய்ந்து அவர் தனியாக அமர்ந்திருந்த போது அந்த நதி  மட்டுமே அவர் துணையாக இருந்தது. இன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்த போது குருவின் அருள் அவரைக் கைவிட்டு விடவில்லை என்று தோன்றியது. குரு தன் பிரிய சிஷ்யனுக்கு வெளியே ஒரு பொதுவான தகவல் எழுதி வைத்தாலும் உள்ளே ஒரு முக்கியத் தகவலையும் வைத்து விட்டு தான் சென்றிருக்கிறார். ஒருவேளை வெளித்தகவல் எதிரியின் கண்ணில் பட்டு அதை அவன் எடுத்துச் சென்றிருந்தாலும் முக்கியத் தகவல் கண்டிப்பாகக் கிடைக்கும் என்ற நிம்மதியில் தான் வருத்தமில்லாமல் அவர் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்....

குருவின் மரணத்தை நினைக்கையில் எதிரி மீது வந்த ஆத்திரத்தை அவரால் குறைக்க முடியவில்லை. “நீ எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் சரி, க்ரிஷ் போன்ற ஜீனியஸை உன் பகடைக்காயாக உபயோகப்படுத்திக் கொண்டாலும் சரி என் கடைசி மூச்சு வரை உன்னை எதிர்த்துப் போராடுவேன்என்று மர்ம எதிரியை நினைத்துச் சொன்னார்.

ண்டது கனவல்ல உண்மைக் காட்சிகள் தான் என்பதை வேற்றுக்கிரகவாசி தெரிவித்தவுடன் ஏற்பட்ட திகைப்பு அவனுக்குள் பல கேள்விகளை எழுப்பியது. வேற்றுக்கிரகவாசியிடம் க்ரிஷ் கேட்டான்.

“யார் அவர்கள்?

“ரெண்டு பேரும் உன் விதியோடு சம்பந்தப்பட்டவர்கள். முதல் காட்சியில் பார்த்தவன் தான் உன் எதிரி

அவனை எங்கே சரியாகப் பார்த்தேன். இருட்டில் சரியாகத் தெரியவில்லை.... சரி இரண்டாம் காட்சியில் பார்த்தது?

“அந்த ஆள் உன்னை எதிரியின் ஆளாகப் பார்க்கிறவர்?

“குழப்பாதே

“அவர்கள் இரண்டு பேர் பற்றியும் என்னிடம் கேட்காதே. நீயாகப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் அவர்கள்....

“அவர்களை நான் இது வரை பார்த்தது கூடக் கிடையாதே....

“இனி பார்க்க வேண்டி வரும். அப்போது புரிந்து கொள்.

வேற்றுக்கிரகவாசி சில விஷயங்களில் பிடிவாதமானவன். சொல்ல வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் பின் அவன் கண்டிப்பாகச் சொல்ல மாட்டான்..... “சரி அந்தப் பாழடைந்த கோயில் எங்கே இருக்கிறது?

“வாரணாசி எல்லையில் இருக்கிறது?

“அவர்கள் ஏன் அங்கே போகிறார்கள்?

“அவர்களுக்கு வேண்டிய தகவல் அந்தக் கோயிலில் இருக்கிறது. அதைத் தேடிப் போகிறார்கள்.

“அதையேன் முழு இருட்டில் ஒருத்தரும், அரையிருட்டில் ஒருத்தரும் தேடிப் போகிறார்கள். நல்ல வெளிச்சத்திலேயே போகலாமே

“முதல் ஆளுக்கு ரகசியம் முக்கியம். இரண்டாம் ஆளுக்கு முகூர்த்தம் முக்கியம்.....

க்ரிஷுக்குக் குழப்பம் அதிகமானதே ஒழியக் குறையவில்லை. இப்படியே தொடர்ந்தால் தலை வெடித்து விடும் போல இருந்தது. அவன் பேச்சை மாற்றினான். “இனி எவ்வளவு நாள் நான் இங்கேயே இருக்க வேண்டும்? வீட்டுக்கு எப்போது போவது?

“நீ மரணத்திலிருந்து இப்போதைக்குத் தப்பி விட்டாய். அதனால் இனி நாம் போய் விடலாம். உன்னை அந்த மலையிலேயே விட்டு விட்டு நானும் கிளம்புகிறேன்....

“மரணத்திலிருந்து இப்போதைக்குத் தப்பி விட்டாய்என்று அவன் சொன்னதை க்ரிஷ் கவனித்தான். “சரி இனியும் எனக்கு ஆபத்து வந்தால், நீயும் போய் விட்டால் யார் என்னைக் காப்பாற்றுவார்கள்? நான் என்ன செய்வது?

நான் உனக்கு ஒரு பேருண்மையைச் சொல்லட்டுமா?

“சொல்...

“எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரை நம்பியும் வாழாதே. உனக்குத் தேவையானதை எல்லாம் கொண்டு வந்து தர உனக்குள்ளே ஒரு மகாசக்தி இருக்கிறது. அந்த சக்தி அலைவரிசையில் நீ இருக்கும் வரை உனக்கு வேண்டியது எதுவும் கிடைக்காமல் போகாது....

“அந்தச் சக்தி அலைவரிசையில் இருப்பது எப்படி...?

“அதை நீயே தான் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். சரி நாம் கிளம்பலாமா?

க்ரிஷ் தலையசைத்தான். அடுத்த கணம் தனக்குள் ஏதோ ஊடுருவுவதை அவன் உணர்ந்தான். பின் லேசாவது போல் உணர்ந்து கடைசியில் அவன் நினைவிழந்தான்.....


வியாழக்கிழமை காலையில் சதாசிவ நம்பூதிரியின் வீட்டுக்குள் மனோகருடன் புதியதொரு வேடத்தில் மர்ம மனிதன் நுழைந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

13 comments:

  1. Post are getting shorter nowadays or it's my illusion??

    ReplyDelete
  2. Super sir. Waiting eagerly for next Thursday!

    ReplyDelete
  3. தொடரும்கிற வார்த்தையைத் தவிர அத்தனையும் அற்புதம் சார். சீக்கிரம் புக் ரிலீஸ் பண்ணுங்க. முதல் ஆளாய் வாங்கிப் படிச்சுட்டு தான் மத்த வேலை.

    ReplyDelete
  4. சரவணகுமார்September 7, 2017 at 6:37 PM

    வாராவாரம் ஆர்வம் அதிகமாகிறது.உங்கள் அலைகளை ஊடுருவி மீதி நாவலை படிக்கும் கலையை கற்க வேண்டுமோ!
    விரைவில் நூலாக வெளியிடுங்கள்.நன்றி

    ReplyDelete
  5. இந்த வாரம் சட்டுன்னு முடிஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங். செரியான இடத்துல தொடரும் போட்டு முடிச்சிடறிங்க.

    ReplyDelete
  6. எதிர்பார்ப்புகளை தூண்டுகிறது எல்லாவற்றயும் நீயே கண்டுபிடி என்று கூறிவிடும் வேறு கிரகவாசி உன்னிலே இருக்கிறது நீ தேடுவதின் பதில் என்றுவிட்டான் கிரிஷ் இனி தேடுதலின் பின்னே பயணிக்க வேண்டுமா அல்லது விதியின் உதவி கிடைத்திடுமா G.....

    ReplyDelete
  7. Intha part la neraiya....useful words irukku....arumai

    ReplyDelete
  8. “எந்தக் காரணத்தைக் கொண்டும் யாரை நம்பியும் வாழாதே. உனக்குத் தேவையானதை எல்லாம் கொண்டு வந்து தர உனக்குள்ளே ஒரு மகாசக்தி இருக்கிறது. அந்த சக்தி அலைவரிசையில் நீ இருக்கும் வரை உனக்கு வேண்டியது எதுவும் கிடைக்காமல் போகாது.....So beautiful and true too

    ReplyDelete
  9. ஒருவர் எதிரி.....மற்றொருவர் எதிரியின் ஆளாக அவனை நினைப்பவர்....முதலில் கிரிஷ் யாரை சந்திப்பான்.....???? ஏலியன்,கதையில் தொடர்ந்து வருவானா...?...சதாசிவ
    நம்பூத்திரியின் ஆருடம் என்னவாக இருக்கும்....??????? பலபல கேள்விகள் மனதில் அலையடிக்கின்றன....காத்திருக்கின்றேன் பதில்களுக்காக.....


    ReplyDelete
  10. முதல் காட்சியில் பார்த்தவன் தான் உன் எதிரி...

    இப்பொழுது, வேற்றுக் கிரக வாசியின் பாத்திரம் கொஞ்சம் தெளிவாகப் புரிகிறது..

    ReplyDelete
  11. வழக்கம் போல உங்கள் கதை நன்றாக இருக்கிறது சார்... ஆனால் ரொம்ப மெதுவாக நகர்கிறது. அதுதான் குறை...

    ReplyDelete