சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 20, 2017

இருவேறு உலகம் – 26

                                     
மூவரும் நடராஜன் சொன்ன அந்த அற்புதமான மகானைச் சந்திக்கப் போன போது அவர் தனியறையில் தியானத்தில் இருந்தார். வரவேற்பறையில் தினசரிப் பத்திரிக்கை ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த, பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த தாடிக்கார இளைஞனிடம் நடராஜன் நட்புடன் கேட்டார். “சுவாமி இருக்காரா சுரேஷ்?

மாஸ்டர் தியானத்தில் இருக்கார்என்று சொல்லி அவர்களை வரவேற்பறையில் உட்கார வைத்து விட்டு சுரேஷ் எழுந்து போனான்.

சங்கரமணி நடராஜனைக் கேட்டார். “ஏன் நட்ராஜ் நீ அவரை மகான்ங்கிறாய். இவன் அவரை மாஸ்டர்ங்கறான். அந்த ஆளோட சொந்தப் பேர் என்ன?

“தெரியலைங்க பெரிய ஐயாஎன்று ஒத்துக் கொண்ட நடராஜன் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் வந்திருந்த தகவல்களை மிகவும் சுவாரசியமாகப் பார்ப்பது போல் பாவிக்க ஆரம்பித்தார். ‘சும்மா இருந்தால் இந்த ஆள் பேசியே கொன்னுடுவார்’.

நிமிட முட்கள் நிதானமாக நகர்ந்தன. மாஸ்டர் தியானம் முடித்து வருவது போல் தெரியவில்லை. அதிகார வர்க்கத்தினராக மாறிய பிறகு இப்படிக் காத்திருந்து பழக்கப்படாத மூவரும் காத்திருப்பதில் சலிப்பையும் சிறு கோபத்தையும் உணர்ந்தார்கள். ஏதோ புத்தகத்தை எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் சுரேஷ் அங்கு வரவே சங்கரமணி அவனிடம் சொன்னார். “ஏம்ப்பா, நாங்க வந்திருக்கறதா உங்க மாஸ்டர் கிட்ட சொன்னாயா?

சுரேஷ் அவரை ஏதோ வினோதப் பிராணியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டுச் சொன்னான். “அவர் தியானத்தில் இருக்கறப்ப தொந்தரவு செய்யறதை விரும்ப மாட்டார்

சங்கரமணியும் அவனை வினோதப் பிராணியைப் பார்ப்பது போலவே பார்த்தார். ஒரு அமைச்சர் வந்திருக்கிறார் என்கிற மரியாதையே இந்தப் பையனுக்குத் தெரியவில்லையே! நாங்க ஒரு முக்கியமான மீட்டிங்குக்குப் போகணும்ப்பா.....என்று சொல்லி விட்டு அவனைப் பார்த்தார்.

அவன் உடனே “சரிங்க ஐயா. போயிட்டு வாங்கஎன்று சொல்லிவிட்டு மறுபடி போய் விட்டான்.

கோபத்தில் முகம் சிவந்த சங்கரமணியிடம் நடராஜன் சொன்னார். “பெரிய ஐயா. இன்னைக்கு அவர் யாரையும் பார்க்கறதா இருக்கல. நான் தான் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன். காரியத்தைக் கெடுத்துடாதீங்க. அவருக்கு நம்ம கிட்ட ஆக வேண்டிய வேலை எதுவும் இல்ல. காசுபணம் கைல தொட மாட்டார். நமக்குத் தான் அவர் கிட்ட ஏதாவது வேலை ஆகலாம்....

சங்கரமணி மருமகனைப் பார்த்தார். மாணிக்கம் பொறுமையாயிருக்கும்படி பார்வையாலேயே சொல்ல சங்கரமணி உள்ளே கொதித்தாலும் வெளியே அடங்கினார்.

மேலும் அரை மணி ஆமை வேகத்தில் நகர்ந்தது. பின் மெல்ல மாஸ்டர் இருந்த அறைக்கதவு திறந்தது. மாஸ்டர் வெளியே வந்தார். கம்பீரமான தேஜஸான உயரமான ஒரு நடுத்தர வயது மனிதராக மாஸ்டர் இருந்தார். காவி வேட்டியும் அரக்கு நிற கதர் சட்டையும் அணிந்திருந்தார். அவர் தீட்சண்யமான கண்களால் மூவரையும் கூர்ந்து பார்க்க, தங்களையும் அறியாமல் மூவரும் மரியாதையுடன் எழுந்து நின்றார்கள்.

அவர்களுடன் பயபக்தியுடன் எழுந்து நின்ற நடராஜன் அவர்களை மாஸ்டருக்கு அறிமுகப்படுத்தினார். “சுவாமி, இவர் தான் நான் சொன்ன அமைச்சர் மாணிக்கம். இது அவர் மகன் மணீஷ். இது அவர் மாமனார் சங்கரமணி

மூவரும் கைகூப்பி வணங்கினார்கள். மாஸ்டரும் கைகூப்பினார். “உட்காருங்கள்என்றார். அவர் பார்வையைப் போலவே குரலும் கம்பீரமாக இருந்தது.

அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்கள் எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் அவரும் உட்கார்ந்தார். ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்கள். பின் சங்கரமணி அமைதியைக் கலைத்தார். “வெளிப்படையா பேசறதுக்கு மன்னிக்கணும். நான் அந்தக் காலத்து மனுஷன். எனக்கு எதையும் மறைச்சு பேசத் தெரியாது.... நட்ராஜ் உங்களைப் பத்தி சொன்னப்ப நான் நம்பல. நான் இப்படிச் சொல்லிட்டு வர்ற எத்தனையோ சாமியார்களைப் பாத்திருக்கேன். சொல்ற அளவு சக்தி படைச்சவங்களா இருக்கல....

சங்கரமணியின் திமிர்ப் பேச்சால் நடராஜன் பதறிப் போனார். தர்மசங்கடத்துடன் மாஸ்டரைப் பார்த்தார். ஆனால் மாஸ்டர் முகத்தில் கோபம் தெரியாமல் புன்னகையே விரிந்தது.  “இவர் என் எந்த சக்தி பத்தி சொன்னார்?என்று புன்னகை மாறாமல் கேட்டார்.

ஓ இந்த ஆளிடம் பல சக்திகள் இருக்குதாக்கும்என்று மனதில் சொல்லிக் கொண்ட சங்கரமணி “மனசில் இருக்கறதைச் சொல்லிடுவீங்களாம்....என்று அசராமல் சொன்னார். தன்னைக் காக்க வைத்த மனிதனிடத்தில், பார்த்தவுடனே தன்னை அறியாமல் எழ வைத்த மனிதனிடத்தில் அவருக்கு இன்னும் கோபம் இருந்தது. ‘நீ உன்னை நிரூபி பார்க்கலாம்என்ற அலட்சிய பாவம் சொன்ன வார்த்தைகளில் தெரிந்தது.      

மாஸ்டர் புன்னகைத்தபடியே சொன்னார். “நாகலிங்கப்பூ, எருக்கம்பூ மனசுல நினைச்சதை சொல்லாத அந்த ஜோசியக்காரன் மாதிரி நானும் இருப்பேன்னு நினைச்சுட்டீங்க போல.....

சங்கரமணி நடராஜனைப் பார்த்தார். நடராஜன் பிரமிப்புடன் மாஸ்டரைப் பார்த்ததை வைத்து தான் அவர் அந்த விஷயத்தை மாஸ்டரிடம் சொல்லவில்லை என்பது தெரிந்தது. சொல்லாமலேயே அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் என்கிறார் என்றால் உண்மையாகவே சக்தி வாய்ந்தவர் தான் என்கிற பிரமிப்பு அவருக்குள் எழுந்தது. மாணிக்கமும், மணீஷும் கூட இந்த விஷயத்தை சங்கரமணி நடராஜனிடம் சொல்லும்போது மட்டுமே அறிந்தார்கள். அவர்கள் இருவரும்கூட அதே சிந்தனையுடன் மாஸ்டரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள்.

மாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “உங்களிடம் நிரூபித்து எனக்கு என்ன ஆகணும்?

சங்கரமணி சொன்னார். “இந்தக் கிழவனை நீங்கள் ஆச்சரியப்படுத்தலாமே

மாஸ்டருக்கு அவரை ஆச்சரியப்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. புன்னகைத்து விட்டுப் பேசாமல் இருந்தார். சங்கரமணி விடவில்லை. “நான் ஒரு பூ இப்போது நினைக்கட்டுமா

மாஸ்டர் குறும்பாய் சிரித்து விட்டு கடைசியில் ஒரு குழந்தையைத் திருப்திப்படுத்த முடிவெடுத்தவர் போல் சொன்னார். “பூவாகவே இருக்கணும்னு இல்லை. எதை வேண்டுமானாலும் நினையுங்கள்

சங்கரமணி ‘என்கிட்டயே சவாலாஎன்பது போல் பார்த்துத் தலையசைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தார். கடைசியில் நீர்மூழ்கிக் கப்பல் என்று நினைத்தார். இதெல்லாம் லேசில் கண்டுபிடிக்க முடிந்ததல்ல.

பின் சொன்னார். “நினைச்சுட்டேன்.... சொல்லுங்கோ பார்க்கலாம்

மாஸ்டர் கண்களை மூடிக் கொண்டார். சில வினாடிகளின் அமைதிக்குப் பின் சொன்னார். “தண்ணீர் சம்பந்தப்பட்டது..... மறைந்திருப்பது.... நீர்மூழ்கிக் கப்பல்

சங்கரமணி வாயைப் பிளந்தார். அவர் பிரமிப்பைக் கவனித்து மாஸ்டர் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்பதை அனுமானித்த மற்ற மூவர் முகத்திலும் பிரமிப்பு தெரிந்தது.

இத்தனை நிரூபணமான பின் மாணிக்கம் இனி மாமனார் எதாவது ஏடாகூடமாகப் பேசி நிலைமையைச் சிக்கலாக்க வேண்டாம் என்று தீர்மானித்து தானே பேசினார். “மாமா பேசினதைத் தப்பா நினைக்காதீங்க சுவாமி. அவர் பழைய அனுபவங்கள் அப்படிங்கறதால் அவர் அப்படிக் கேட்டார். உண்மைல என் நண்பர் மகன் ஒருத்தன் திடீர்னு காணாமல் போயிட்டான். அவன் எங்கே இருக்கான்னு தெரியாமல் அவன் குடும்பமே கவலைல மூழ்கியிருக்கு.... அதான் உங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்.... அவன் உயிரோட தான் இருக்கானா, எங்கே இருக்கான்னு சொன்னா எங்களுக்குப் பெரிய உதவியாய் இருக்கும்....

மாஸ்டர் அமைதியாகக் கேட்டார். “அந்தக் காணாமல் போன பையன் பெயர் என்ன? அவன் கிட்ட உங்கள்ல அதிகமா நெருக்கமாய் இருந்தது யார்?....

மாணிக்கம் மணீஷைக் காண்பித்தார். “அவன் பேர் க்ரிஷ். இவன் தான் அவனுக்கு நெருங்கின நண்பன்....

மாஸ்டர் மணீஷிடம் சொன்னார். நீ அவனை மனசுல நினைச்சுக்கோ மணீஷ். அவன் நினைவுல மனசைக் குவிச்சுக்கோ....

மணீஷ் தலையசைத்தான். மனதில் க்ரிஷை நினைத்தான்.... அவனையே நினைத்தான். சிறிது நேரத்தில் காந்தமாய் மாஸ்டரின் சக்தி அவனுக்குள் ஊடுருவுவதை அவனால் உணர முடிந்தது. அவன் மனதை மெல்ல மெல்ல அவர் ஆக்கிரமிப்பது போல் இருந்தது. அவர்கள் திட்டம் அனைத்தையும் அவர் அறிவது போல் இருந்தது. அவன் பெரும்பயத்தை உணர்ந்தான். அந்தப் பயத்தையும் அவர் படித்தது போல் இருந்தது. அவன் அங்கிருந்து ஓடிவிட நினைத்தான். ஆனால் அவனால் நகர முடியவில்லை. கட்டுண்டது போல் நின்ற அவன் க்ரிஷ் மீது மறுபடி கவனத்தைத் திருப்பினான். அதற்கு மாஸ்டர் உதவியது போலத் தெரிந்தது. பயம் விலகியது. க்ரிஷ் அவன் மனதில் நிறைந்தான்....

மாஸ்டர் அவர்கள் திட்டத்தையும் அதன் பின்னால் இருந்த நோக்கத்தையும் இப்போது தெளிவாக அறிந்தாலும் அதில் தங்காமல் மணீஷ் மனதில் நிறைந்திருந்த க்ரிஷ் மீது தன் சக்தியைக் குவித்தார். அவருக்கு க்ரிஷ் பற்றி அறிய வேண்டிய அவசியம் அவர்களை விட அதிகமாய் இருக்கிறது......

மூன்று நிமிடங்கள் கழித்து மெல்லச் சொன்னார். “அவன் சாகலை. உயிரோடு தான் இருக்கிறான்....

மூவர் இடி விழுந்தது போல் உணர்ந்தார்கள். மாணிக்கம் தான் முதலில் சுதாரித்தவர். அவர் படபடப்புடன் கேட்டார். “அவன் எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க சுவாமி


பாவமன்னிப்புக் கூண்டில் அமர்ந்திருந்த புதுடெல்லி உயரதிகாரி ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை அறிந்த போதும் ஒன்றுமே செய்ய முடியாத ஜடநிலையில் இருந்தான். ‘என்னைக் காப்பாற்றுங்கள்என்று கத்த வேண்டும் வேண்டும் என்று நினைத்தான். அந்த எண்ணம் மன அளவிலேயே மந்தமாய் நின்றது. வாயே திறக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அவன் சுயநினைவிழந்தான். அப்படி எத்தனை நேரம் அவன் இருந்தானோ தெரியவில்லை. காலக்கணக்கு அவனுக்குக் கிடைக்கவில்லை.

“என்ன ஆயிற்று?என்று பக்கத்துக்கூண்டில் இருந்து கேட்ட அந்த அடித்தளக் குரல் அவனை மறுபடி சுயநினைவுக்கு வரவைத்தது.  அவனைப் பீடித்திருந்த அந்த சக்தி தன் பிடியைத் தளர்த்த ஆரம்பித்தது போல் இருந்தது.

கஷ்டப்பட்டு மீண்டவன் “ஒன்றுமில்லைஎன்று பலவீனமாகச் சொன்னான்.  

சரி. நன்றி. போகலாம்என்று சொன்ன அந்த ஆள் தடாலென்று எழுந்து சென்று விட்டான். சர்ச்சின் உட்பகுதியிலிருந்து வந்த அந்த ஆள் அந்த வழியாகவே போனதால் அவனுக்கு அந்த ஆள் போகும் போதும் பார்க்கவோ, அதிகமாய் அந்த ஆள் குறித்து அறிந்து கொள்ளவோ முடியவில்லை. ஆனால் அவனில் ஏதோ ஒரு பகுதியை அந்த ஆள் எடுத்துக் கொண்டு போனது போலவோ, இல்லை அந்த ஆளின் ஒரு பகுதியை அவனிடம் விட்டு விட்டுப் போனது போலவோ புதுடெல்லி அதிகாரி உணர்ந்தான். அவன் சுதந்திரமாயில்லை.

அவனுக்கு எழுந்திருக்கவே கஷ்டமாகவும், களைப்பாகவும் இருந்தது. கஷ்டப்பட்டு எழுந்தான். மெல்ல நடந்தான். நாலைந்து அடிகள் எடுத்து வைத்த பிறகு ஓரளவு சக்தி திரும்பக் கிடைத்தது. முடிந்த வரை வேகமாக வெளியே வந்தான். வெளியேயும் யாருமில்லை. நடந்ததெல்லாம் அவனுக்கு ஏதோ அமானுஷ்யத் திகிலாக இருந்தது.  சர்ச்சின் பாதிரியார்கள் தங்கும் பகுதி பின்புறம் தான் இருந்தது. அவர்களிடம் விசாரித்துப் பார்க்கலாமா என்று நினைத்தான்.....

(தொடரும்)
என்.கணேசன்                         


7 comments:

  1. சுஜாதாApril 20, 2017 at 6:18 PM

    எங்களுக்கும் அமானுஷ்ய திகலா தான் இருக்கு. ஆனா நீங்க படக்குன்னு தொடரும் போட்டு வீட்டீர்களே.

    ReplyDelete
  2. I think that sakthi is from that master

    ReplyDelete
  3. I think some other planet people involved. They come to that mountain every dark moon. That black bird is their vehicle.

    ReplyDelete
  4. Excellent and thrilling...switch from master to church made me to think about quantum entanglement...keep going we will follow...

    ReplyDelete