என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, April 10, 2017

இறைவனின் கருவியா நீங்கள்?
கீதை காட்டும் பாதை 46

றைவனின் விஸ்வரூபத்தைத் தரிசித்த பின் அர்ஜுனன் மெய்சிலிர்க்க, தலைவணங்கிக் கைகூப்பிச் சொல்ல ஆரம்பித்தான்.

“லோகநாதா! விஸ்வரூபா! எண்ணிலடங்காத புஜங்கள், வயிறுகள், முகங்கள், கண்களுடன் கூடியவனாய், முடிவில்லாத உன் உருவத்தை எங்கும் காண்கிறேன். உன் உருவத்தின் முடிவையோ, நடுவையோ, அடியையோ எனக்குக் காண முடியவில்லை.

அறிய வேண்டிய பொருளாகக் கூறப்பட்ட அழிவில்லாத பரம்பொருள் நீ. இந்த உலகத்திற்கு உயர்ந்த ஆதாரம் நீ. அழிவில்லாதவன் நீ. நிலையான தர்மத்தை ரட்சிப்பவன் நீ. சனாதன புருஷன் நீயே என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

மகாத்மாவே! நீ ஒருவனே ஆகாயம் பூமிகளின் இடைவெளியிலும்,  சகல திக்குகளிலும் பரவியிருக்கிறாய். அற்புதமாகவும், உக்கிரமாகவும் உள்ள உன்னுடைய இந்த உருவத்தைக் கண்டு மூவுலகும் அச்சத்தால் நடுங்குகின்றன. நானும் நடுங்குகின்றேன். உன்னைக்கண்டு நான் மனம் கலங்கி  தைரியத்தையோ, அமைதியையோ அடைய முடியாமல் இருக்கிறேன்.

தேவர்களின் அரசனே! உலகின் உறைவிடமே! கோரைப்பற்களால் பயங்கரமானதும், பிரளய காலத்து அக்கினி போன்றதுமான உன் முகத்தைப் பார்த்ததுமே எனக்குத் திக்குத் தெரியவில்லை. அமைதியும் ஏற்படவில்லை. இந்த அரசர்களின் கூட்டங்கள், திருதராஷ்டிரனின் புத்திரர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் இவர்கள் மட்டுமல்லாமல் நம் சேனைத்தலைவர்கள் எல்லோருமே கூட கோரைப்பற்களுடன் கூடிய பயங்கரமான உன்னுடைய வாய்களில் வெகுவேகமாய் நுழைகிறார்கள். சில தலைகள் பொடியாக்கப்பட்டு பற்களுக்கிடையில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன்.

நதிகளின் பல வெள்ளங்கள் சமுத்திரத்தை நோக்கி எப்படி ஓடுகின்றனவோ அப்படியே இந்த மானிட வீரர்கள் சுடர் விட்டெறியும் உன் வாய்களில் பிரவேசிக்கிறார்கள்.

தேவ சிரேஷ்டனே! உக்கிர ரூபம் கொண்ட நீ யார்? எனக்குச் சொல். உனக்கு நமஸ்காரம். அருள் புரிவாயாக!ஆதிமூலமான உன்னைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். உன்னுடைய செய்கை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

இறைவனுடைய விஸ்வரூப தரிசனம் ஆரம்பத்தில் சஞ்சயன் சொன்னது போல் ஆயிரம் சூரியன்கள் ஒருசேரத் தோன்றியது போல் ஒளிமயமாக இருந்தாலும் உற்று உள்ளே பார்த்த போது அர்ஜுனனுக்கு வேறுபல உணர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது. இறைவனின் முடியையோ, அடியையோ, நடுவையோ காண முடியாமல் போன போது அவன் பிரமிப்பை உணர்ந்தான். வேதங்களில் அறிய வேண்டிய அழிவில்லாத பரம்பொருள் இவன் என்றே உணர்ந்தான். தர்மத்தைக் காப்பவனாகவும் அறிந்தான். ஆனால் அற்புதமாகத் தோன்றிய தோற்றம், இறைவனின் அழிக்கும் சக்தியை அறிய ஆரம்பித்த போது அச்சம் தருவதாகவும் மாற ஆரம்பித்தது.

பிரளய காலத்து அக்கினியாய் பகவானின் முகம் தெரிய ஆரம்பித்தது. பகவானின் வாயில் பயங்கரமான கோரைப்பற்களை அர்ஜுனன் பார்க்கிறான். அப்படி ஒரு வாயல்ல பல்லாயிரம் வாய்களை அவன் பார்க்கிறான். தற்போது உயிருடன் இருக்கும் அவன் உறவுகளும், அரசர்களும், வீரர்களும் வேகமாக அந்த வாய்களில் பிரவேசித்து மடிவதைக் காண்கிறான். அது அழகான காட்சி அல்ல. அதிபயங்கரமான காட்சி. நதி வெள்ளங்கள் கடலில் சங்கமிப்பது போல குருக்ஷேத்திர வீரர்கள் அந்த வாய்களில் சென்று மடிவதைப் பார்க்கையில் அச்சத்தை உணர்ந்து அர்ஜுனன் நடுங்கினான்.

இது அவன் அறிந்த உருவம் அல்லவே. அழகுக்குப் பெயர் போன ஸ்ரீகிருஷ்ணரின் உருவத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையே என்று குழம்பியவன் நீ யார்? இது என்ன தோற்றம்?என்று வணங்கிக் கேட்கிறான்.  
  
அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

“உலகத்தை அழிக்கும் காலன் நான். உலகத்தை அழிப்பதற்காகத் தொடங்கி இருக்கிறேன். யுத்தபூமியில் நிற்கும் இந்த வீரர்கள் நீ இல்லா விட்டாலும் அழியப் போகிறார்கள்

ஆகவே நீ எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடைவாயாக. செல்வம் நிறைந்த ராஜ்ஜியத்தை அனுபவி. இவர்களெல்லாம் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டவர்கள். நீ நிமித்தமென்ற ஒரு கருவியாக மட்டும் இரு

குருக்‌ஷேத்திர யுத்த பூமியில் காலனாகவே நின்று கொண்டிருப்பதை பகவான் தெரிவிக்கிறார். அந்த வீரர்கள் எல்லாம் முன்னமே மரணத்தின் பிடியில் சிக்கியாகி விட்டார்கள் என்றும் அர்ஜுனன் இல்லா விட்டாலும் அவர்கள் மாண்டு போவது உறுதி என்றும் கூறிய பகவான் அவர்கள் எல்லாம் தன்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டவர்கள் என்பதைத் தெரிவிக்கிறார். அதனால் அர்ஜுனன் யுத்தம் புரிந்து அவனாகக் கொல்லப்போவதில்லை என்றும் பகவானின் கருவியாகவே இருக்கப் போகிறான் என்றும் தெரிவித்து அவன் மனதில் எழுந்திருந்த குற்ற உணர்வைக் கலைகிறார்.

இறைவனின் கருவியாக இரு என்று சொல்வதைப் பலரும் பல விதங்களில் தங்கள் தவறுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இன்று நம்மால் பார்க்க முடிகிறது. இறைவனின் கட்டளைக்கிணங்கி இறைவனின் கருவியாகச் செயல்பட்டு வருவதாகச் சொல்லிப் பலரும் தங்கள் பாவச்செயல்களுக்கும் இறைவனைக் கேடயமாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் கருவிக்கு விருப்பு வெறுப்பு இருக்காது. கரண்டியால் பரிமாறுவது தேன் ஆனாலும் சரி, கசப்பான மருந்தானாலும் சரி, வேறெந்த சுவை கொண்ட பதார்த்தமானாலும் சரி கரண்டி என்னும் கருவிக்கு அதில் எந்த அபிப்பிராயமும் இல்லை, விருப்பு வெறுப்பும் இல்லை. அதற்கென்று அதில் தனிப்பட்ட இலாப நஷ்டங்கள் இல்லை.  எதைப் பரிமாற வேண்டும் என்று பரிமாறும் கை விரும்புகிறதோ அதைப் பரிமாறும் கருவியாக கரண்டி இருந்து விடுகிறது.  அப்படியே ஒரு செயலில் எந்த விருப்பும், வெறுப்பும் இல்லாத ஒரு கருவியாக நாம் இருக்கிறோமா, இல்லையா என்பதை வைத்தே நம்மை இயக்குவது இறைவனா, ஈகோவா என்பதை நாம் பிரித்தறிய முடியும்.

பாதை நீளும்.....       

என்.கணேசன்

4 comments:

 1. கருவியாக பரிமாறும் கரண்டியை உதாரணமாகச் சொன்னது அருமையான விளக்கம். நான் இதுவரை இந்த உதாரணத்தைக் கேட்டதில்லை.இந்த உதாரணம் மூலம் நம்மைப் பிரித்தறிய சுலபமாக இருக்கும். மிக்க நன்றி.

  ReplyDelete
 2. Can u pl help me to get
  t the previous 45 parts mymail id is baanee100@yahoo.com

  ReplyDelete
  Replies
  1. click கீதை in வகைகள். you can read all chapters of கீதை காட்டும் பாதை in single thread.

   Delete
 3. இறைவனின் கருவியாக இருக்க...எப்படி இருக்க வேண்டும்? என்று சொன்னது அருமை... கீதை காட்டும் பாதை...தொடரை தொடர்ந்து பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்...அல்லது புத்தகமாக வெளியிட்டாலும் படித்து பயன் பெறுவேன்...நன்றி

  ReplyDelete