சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 6, 2017

இருவேறு உலகம் – 24

லையில் இடி விழுந்தது போல மாணிக்கமும், மணீஷும் உணர்ந்தார்கள். அங்கு சில வினாடிகள் அமைதி நிலவியது. கேள்விப்பட்டது பிரமையாக இருக்க வேண்டும் என்ற நப்பாசை அவர்கள் இருவருக்கும் தானாக வந்து பரிதாபமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கமலக்கண்ணனுக்கும் பத்மாவதிக்கும் அது உண்மை தான் என்று நம்ப, இது கனவில்லை நிஜம் தான் என்று உணர அந்த வினாடிகள் தேவைப்பட்டன.

கண்கள் ஈரமாக கமலக்கண்ணன் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கண்மூடி, கடவுளை வணங்கினார். கண்களிலிருந்து அருவியாய் கண்ணீர் வழிய குரலடைக்க பத்மாவதி சொன்னாள். “மணீஷ் வாயில சக்கரை தான் போடணும். அவன் திடீர்னு நல்ல செய்தி வரும் ஆண்ட்டி, கவலைப்படாதீங்கன்னு சொல்லி வாய் மூடல அந்த மெசேஜ் வந்திருக்கு...

மணீஷுக்குத் தன் வாயில் மண்ணைத் தான் அள்ளிப் போட வேண்டும் என்று ஆத்திரம் வந்தது. மாணிக்கம் அந்தச் செய்தியை நம்பவில்லை. மகனிடம் பார்வையாலேயே பதற்றப்படாதே என்று அறிவுரை சொன்னார். கமலக்கண்ணன் பக்கம் திரும்பி போலியாய் புன்னகைத்து விட்டுச் சொன்னார். “ஏதோ நாங்கள் கவலையிலே வந்ததுக்கு நல்ல செய்தி கேட்டுட்டுத் திரும்பற மாதிரி பாக்கியம் கிடைச்சுது. நம்ம பிரார்த்தனை வீண் போகலை...

உதய் க்ரிஷுக்குப் போன் செய்தான். மறுபடி க்ரிஷின் போன் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆகியிருந்தது. உதய் சொன்னான். “பேசவோ, வரவோ முடியாத சூழலா இருக்கும். அதனால மெசேஜ் பண்ணியிருக்கான்.....

திரும்பவும் க்ரிஷின் மொபைலுடன் தொடர்பு கொள்ள முடியாதது சின்ன ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், வீட்டாரின் நம்பிக்கையை அது சிறிதும் சிதைத்து விடவில்லை. க்ரிஷின் குடும்பத்தினர் நம்பிக்கை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்கும் மனநிலையில் தற்போது இல்லை என்பது மாணிக்கத்திற்கும், மணீஷுக்கும் புரிந்தது. அதன் பின் சம்பிரதாயத்திற்கு இருவரும் ஏதோ பேசினார்களேயொழிய அங்கு இருப்பது அனல் மேல் இருப்பது போன்ற தாங்க முடியாத தவிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பி விட்டார்கள். “க்ரிஷ் வந்த பிறகு வர்றோம்என்று கடைசியாக கஷ்டப்பட்டு முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டிச் சொல்லி விட்டு இருவரும் வெளியேறினார்கள்.

காரில் போகும் போது மாணிக்கம் மகனிடம் கேட்டார். “க்ரிஷ் வந்துடுவான்னு பயந்துட்டியா?

மணீஷ் ‘அதிலென்ன சந்தேகம் என்பது போலத்  தந்தையைப் பார்த்தான்.

மாணிக்கம் சொன்னார். “வாடகைக் கொலையாளியிடம் செல்போன்ல இருந்து உன் தாத்தாக்கு அழைப்பு வந்ததே அது வாடகைக் கொலையாளி செஞ்சதா? வாடகைக் கொலையாளி பிணத்தை பார்த்துட்டோம்கிறதால அந்த மொபைல்ல இருந்து கூப்டறது அவன் இல்லைன்னு நமக்குத் தெரிஞ்சுது. அவன் பிணத்தைப் பார்க்கலைன்னு வெச்சுக்கோ, நாம ஒவ்வொரு தடவை கால் வர்றப்பவும் அவன் தான் எங்கிருந்தோ கூப்டறான்னு நினைப்போம். இல்லையா?

மணீஷ் புதிதாக நம்பிக்கை பிறக்க கேட்டான். “அப்படின்னா மெசேஜ் அனுப்பிச்சது க்ரிஷ்ஷா இருக்காதுன்னு சொல்றீங்களாப்பா?

ஆமா. அவன் உயிரோட இருந்தான்னா, நேர்ல வந்திருப்பானே ஒழிய மெசேஜ் அனுப்பிச்சிருக்க மாட்டான். அவனோட மொபைல் எவன் கிட்டயோ கிடச்சிருக்கு. அவன் இந்த விசாரணை நடக்கிறதுல ஏதாவது பாதிக்கப்படற நிலைமை வந்திருக்கலாம். இப்படியொரு மெசேஜ் அனுப்பிச்சா விசாரணைய கைவிட்டுடுவாங்கன்னு நினைச்சிருக்கலாம்....

மணீஷுக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. ஆனால் இன்னொரு சந்தேகமும் வந்து அந்த நிம்மதியைக் குலைத்தது. “வாடகைக் கொலையாளி மொபைலும், க்ரிஷோட மொபைலும் ஒரே ஆள் கிட்ட கிடைச்சிருக்கும்னு நினைக்கிறீங்களா?

“அப்படித் தான் தோணுதுமாணிக்கம் வறண்ட குரலில் சொன்னார்.

இருவர் மனங்களிலும் “அந்த ஆள் யாராக இருக்கும்? ஏன் இப்படி நடந்து கொள்கிறான். அவன் உத்தேசம் என்ன?என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தன.

க்ரிஷிடமிருந்து தகவல் வந்ததை செந்தில்நாதனிடம் உதய் போனில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். அவன் அளவு மகிழ்ச்சி அடையாத செந்தில்நாதன் அந்தக் குறுந்தகவலைத் தனக்கு அனுப்பி வைக்கும்படி சொன்னார். அப்படியே அவருக்கு அனுப்பி வைத்து விட்டு பத்மாவதியிடம் உதய் சொன்னான்.

“க்ரிஷ் கிட்ட இருந்து மெசேஜ் வந்ததை நீயே உன் சின்ன மருமகளுக்கும் சொல்லிடு. பாவம் சந்தோஷப்படுவாள்

பத்மாவதி தனக்கு சின்ன மருமகள் உறவில் யார் இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தவுடன் உதய் “நீ ஒரு ட்யூப்லைட்டும்மா. ஹரிணிக்குப் போன் செஞ்சு சொல்லுன்னு சொன்னேன்....

பத்மாவதி திகைப்பிலிருந்து சந்தோஷத்திற்கு மாறினாள். “இது எப்போ?

“கொஞ்ச நாளாவே..

“உன் கிட்ட சொன்னவன் எங்கிட்ட சொல்லவே இல்லை பார்”  பத்மாவதிக்கு அது பெரும் குறையாகப் பட்டது. 

“உன் மகன் அழுத்தமானவன். அவனா எங்கே வாயத் திறந்தான்? நானா..பார்த்தது என்று சொல்ல வந்தவன் சுதாரித்துக் கொண்டு “தெரிஞ்சுகிட்டதுஎன்று சொல்லி முடித்தான்.

“அவ நம்பர் என் கிட்ட இல்ல. நீ அடிச்சுக் குடு பேசறேன்...

தன் மொபைலில் ஹரிணியின் எண்ணைத் தேடியபடியே தாயிற்கு உதய் அறிவுரை சொன்னான். “இங்க பேசற மாதிரி சும்மா வள வளன்னு என்னென்னவோ பேசக் கூடாது. மாமியாரா கம்பீரமா பேசணும்....

“ஆமா இவன் ரொம்ப பேசத் தெரிஞ்சவன் எனக்கு புத்திமதி சொல்ல வந்துட்டான்....

“என்ன அப்படி சொல்லிட்டே. நான் பாராளுமன்றத்திலேயே பேசினவன் மறந்துடாதே. என் முதல் பேச்ச வடநாட்டு பத்திரிக்கைல கூடப் புகழ்ந்திருக்காங்க தெரியுமா?

“அது நீயாகவாடா பேசினே. உன் தம்பி எழுதிக் கொடுத்து நீ அங்க போய்ப் படிச்சது தாண்டா

பத்மாவதி சொல்லிக் காட்டிய போது அவனுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. இதை அம்மாவிடம் சொல்லி ஏன் கேவலப்பட்டோம் என்று யோசித்தவன் அப்போது தான் அங்கே வந்த தந்தையிடம் கேட்டான். “ஏம்ப்பா நீ இந்த அம்மாவைக் கல்யாணம் செஞ்சுகிட்டே. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா?

கமலக்கண்ணன் முகத்தை மிக வருத்தமாக வைத்துக் கொண்டு சொன்னார். “அப்ப தெரியாம ஏமாந்துட்டேண்டா

பத்மாவதி இருவரையும் முறைத்தாள். “பாவிகளா?

ஏம்ப்பா. உனக்கே இங்க மரியாதை இவ்வளவு தானா?என்று கேட்ட உதய் மீது பத்மாவதி வீசிய ஆனந்த விகடன் பத்திரிக்கை பாய்ந்து வர, அவன் அவசரமாக விலகினான்.

                                                                                          
புதுடெல்லி உயரதிகாரி அந்த சர்ச் முன்னால் மதியம் 12.50க்குப் போய் நின்றான். சர்ச்சில் வழிபாட்டிற்கு வந்திருந்த அனைவரும் வழிபாடெல்லாம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். தான் சந்திக்க வேண்டியிருக்கும் ஆள் இவர்களில் யாராவது ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டான். யாராவது தன்னருகே வந்து அறிமுகப்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தான். தனக்குப் பணம் அனுப்பும் ஆள் பெரிய செல்வந்தனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்ததால் பணக்காரத் தோற்றம் உள்ள ஆட்களைக் கூர்ந்து பார்த்தபடி நின்றான். ஆனால் எல்லோரும் அவனைக் கடந்து போனார்கள். மணி ஒன்றான போது ஒருவரும் வாசலில் இருக்கவில்லை. சந்திக்க வேண்டிய ஆள் சர்ச்சுக்குள் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது. மெள்ள சர்ச்சுக்குள்ளே போனான். உள்ளே ஒருவரும் இருக்கவில்லை.

அவன் செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்த சத்தம் கேட்டது. தாமதமாகி விட்டது. தயவு செய்து ஐந்து நிமிடம் காத்திருங்கள்என்று நம் ஆள் சொல்கிறானோ என்ற எண்ணத்துடன் செல்போனை எடுத்துப் பார்த்தான். தகவல் அனுப்பியிருந்தது அந்த ஆள் தான். ஆனால் தகவல் அவன் எதிர்பார்த்தது இல்லை. பாவ மன்னிப்புக் கூண்டில் சென்று அமரவும்என்பதாக தகவல் இருந்தது.

அவனுக்குக் கோபம் வந்தது. இந்த ஆள் என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்.  பாவமன்னிப்புக் கூண்டில் உட்கார வைத்து என்னை அவமானப்படுத்த நினைக்கிறான்’.  ஆனால் பணம் அந்தக் கோபத்தை அப்படியே விழுங்க வைத்தது. அவன் பாவமன்னிப்புக் கூண்டை நெருங்கினான். அந்த ஆள் அவனுக்கு முன்பே வந்து பாதிரியார் உட்காரும் பக்கத்துக் கூண்டில் அமர்ந்திருந்தது, பாவமன்னிப்புக் கூண்டின் கதவைத் திறந்த போது இடையே இருந்த தடுப்பின் சிறுதுளைகள் மூலம் தெரிந்தது....

ஏனோ மனதில் இனம் புரியாத ஒரு பயம் சூழ்வதை அவனால் தடுக்க முடியவில்லை....


செந்தில்நாதன் முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு இனி என்ன செய்வது என்று கேட்டார். முதலமைச்சர் கேட்டார். “நீங்க என்ன நினைக்கிறீங்க? அந்த மெசேஜ் க்ரிஷ் அனுப்பினதா தான் இருக்குமா?

“இருக்கலாம். ஆனா அப்படி நிச்சயமாவும் நம்மால சொல்ல முடியாது. மெசேஜ் அனுப்ப முடிஞ்சவர் போன்ல பேசியே இருக்கலாமே. இல்லை உடனடியாக வந்துவிடலாமே. இரண்டையும் ஏன் செய்யலைன்னு புரியல. க்ரிஷ் ஒருவேளை கடத்தப்பட்டிருந்தா கடத்தின ஆள்கள் அவரோட மொபைல்ல இருந்து மெசேஜ் தாராளாம அனுப்பலாமே? அதுவும் மெசேஜ் அனுப்பின அடுத்த நொடியே அது ஸ்விட்சுடு ஆஃப் வேற ஆயிருக்கு

அப்படின்னா க்ரிஷ் வீடு வந்து சேர்ற வரைக்கும் உங்களோட வேலைய தொடர்ந்து செய்யறது தான் நல்லது. நாம இதை அதிகமா இப்போதைக்குத் தோண்டிப்பார்க்க வேண்டாம்னு நினைச்சு கூட குற்றவாளி இப்படி செஞ்சிருக்கலாம்.... சரி அடுத்ததா என்ன செய்யப் போறீங்க?

“க்ரிஷோட மொபைல் போன் எந்த ஏரியால ஆன் ஆகி மறுபடி ஆஃப் ஆகியிருக்குன்னு பாத்துட்டு அதுக்குத் தகுந்த மாதிரி நடவடிக்கை எடுக்கலாம்னு பார்க்கறேன் சார்

“அப்படியே செய்ங்க

செந்தில்நாதன் முதல்வரிடம் சொன்னது போலவே  க்ரிஷின் மொபைல் போன் எந்த இடத்தில் ‘ஆன்ஆகியிருக்கிறது எந்த இடத்தில் ஆஃப்ஆகி இருக்கிறது, அந்த மொபைல் போனிலிருந்து எந்த எண்களுக்கெல்லாம் தகவல்கள் சென்றிருக்கின்றன, எந்த எண்களிடம் எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிய ஏற்பாடு செய்து விட்டு அங்கிருந்து வரும் தகவல்களுக்காகப் பரபரப்புடன் காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் தகவல் வந்தது. கேள்விப்பட்ட தகவல் அவரைத் தலைசுற்ற வைத்தது.

(தொடரும்)

என்.கணேசன்


12 comments:

  1. சுஜாதாApril 6, 2017 at 6:14 PM

    நாலு பக்கமும் பரபரப்பு. தூள் கிளப்பறீங்க. திரில்லிங்கா போகுது.

    ReplyDelete
  2. அலார்ம் வச்சு காத்திருந்து படிக்க வைச்சுட்டு சட்டுன்னு தொடரும் போட்ட எப்பிடி சார் ...?😕 செம த்ரில் சார் கதை ...👍

    ReplyDelete
  3. Super update. Going fantastic.

    ReplyDelete
  4. I guess the mobile worked from his home only?

    ReplyDelete
    Replies
    1. they do not have any tower information.should be satellite signal...

      Delete
  5. My guess: Message might have been sent via internet. So it can't be tracked by mobile network provider.

    ReplyDelete
  6. I think antha malai mela irrunthu call vanthu irrukum ....

    ReplyDelete
  7. msg came from nowhere

    ReplyDelete
  8. இந்த கதை முழுக்க முழுக்க க்ரிஷை மையப்படுத்தி நகர்கிறது. நாங்களும் செந்தில்நாதனை போல கிரீஷ் பற்றிய தகவல்களோடுதான் இருக்கிறோமே தவிர இன்னமும் கதையின் பிரதான பாத்திரம் அறிமுகமாகவில்லை. ஆனாலும் விறுவிறுப்பாக நகர்கிறது. க்ரிஷின் அறிவு மற்றும் திறமையினை விவரிக்கும் வரிகள் எனக்கு ஈஸ்வரை (பரமன் இரகசியம்) நினைவூட்டுகின்றன.


    பி.கு: நீங்கள் க்ரைம்/த்ரில்லர் சினிமாவுக்கு கதை/திரைக்கதை எழுதலாம். சமீபத்திய சில தமிழ்படங்கள் கதை/திரைக்கதை இல்லாமல் தடுமாறுகின்றன.

    ReplyDelete
  9. Message came from Girish home

    ReplyDelete
  10. Some other planet

    ReplyDelete