சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 23, 2017

இருவேறு உலகம் – 18


செந்தில்நாதன் ஹரிணியைப் போனில் தொடர்பு கொண்டு க்ரிஷ் குறித்து நேரில் பேச வேண்டும் என்று சொன்ன போது, உடனடியாக வார்த்தைகள் சற்றுக் கடுமையான தொனியிலேயே வந்தன. அவனப் பத்தி என் கிட்ட ஏன் பேச வர்றீங்க, அவனோட வீட்டாளுங்க கிட்ட பேசுங்க

செந்தில்நாதன் அமைதியாகச் சொன்னார். “அவரோட வீட்டாள்க கிட்ட பேசிட்டேன். அவர் நண்பர் மணீஷ் கிட்டயும் பேசிட்டேன். உங்க கிட்டயும் பேச வேண்டியிருக்கு.....

அப்போது தான் அவள் விபரீதமாக ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தது போல் தோன்றியது. கடுமை காற்றில் பறக்க அவள் திகிலோடும் பதற்றத்தோடும் மெல்லக் கேட்டாள். “என்னாச்சு அவனுக்கு...?

அவர் சுருக்கமாகச் சொன்னார். சொன்னவுடன் இப்போதே வரலாம் என்றவள் தன் விலாசத்தையும் தெரிவித்தாள். அவள் குரல் மிகவும் தாழ்ந்து போயிருந்தது.

க்ரிஷ் கம்ப்யூட்டரில் தெரிந்த ஹரிணியின் முகத்திற்கும் இப்போது நேரில் தெரியும் முகத்துக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை செந்தில்நாதனால் பார்க்க முடிந்தது. க்ரிஷ் கம்ப்யூட்டரில் மகிழ்ச்சியும் துடிப்புமாய் தெரிந்த ஹரிணி இப்போது கவலையும் வாட்டமுமாய்த் தெரிந்தாள். க்ரிஷ் காணாமல் போனது குறித்து அவர் போனில் சுருக்கமாகச் சொன்னதை மீண்டும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த நேரத்தில் அவள் முகத்தில் தெரிந்த வலிமிகுந்த உணர்வுகள் அவள் க்ரிஷைக் காதலிக்கிறாள் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் அவருக்குத் தெரிவித்தன....

செந்தில்நாதன் அங்கு வருவதற்கு முன்பே அவளைப் பற்றியும் தகவல்கள் சேகரித்து விட்டே வந்திருந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள், தாய் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்க்கிறார், பள்ளிப் படிப்பை மதுரையில் முடித்தவள், கல்லூரிப் படிப்பின் போது தான் சென்னை வந்தவள், கல்வியில் மட்டுமல்லாமல் சமூக சேவையிலும், பெண்ணுரிமையிலும் முன்னணியில் இருப்பவள்...

செந்தில்நாதன் அவளிடமும் மணீஷிடம் க்ரிஷ் பற்றி கேட்ட ஆரம்பக் கேள்விகளைக் கேட்டார். அவள் பதில்களும் அவன் பதில்களை ஒட்டியே இருந்தன. ஆராய்ச்சிகள் பற்றி அவை முடியும் முன் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான், கேட்டாலும் சொல்ல மாட்டான், அவனுக்கு யாரும் எதிரிகள் இல்லை, சமீபத்திய ஆராய்ச்சி பற்றித் தெரியாது....

கடைசி ஆராய்ச்சி மாயமாக மறையும் தன்மை குறித்ததாக இருக்குமா, அவன் கடைசியாக நிறைய தேடிப்படித்த விஷயம் அது என்று அவர் கேட்ட போது அவள் மணீஷ் காட்டிய எதிர்விளைவைக் காட்டவில்லை. மாறாக அவள் முகத்தில் பெருமிதம் ஒரு கணம் எட்டிப் பார்த்தது. “இருக்கலாம் சார். அவன் மனசுக்குள்ள ஒரு கேள்வி எழுந்துடுச்சுன்னா விடை கிடைக்கற வரைக்கும் ஓய மாட்டான்.... நான் யார் கிட்டயும் இது வரைக்கும் பார்த்திருக்காத ஒரு தன்மை அது....

சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு திடீரென்று அவளையே கூர்ந்து பார்த்தபடி செந்தில்நாதன் கேட்டார். முதல்ல எல்லாம் அவர் வீட்டுக்கு நீங்க அடிக்கடி போவீங்க, ஆனா சில மாதங்களா போறதில்லைன்னு கேள்விப்பட்டேன்.... என்ன காரணம்?

ஒரு கணம் சிலையாகச் சமைந்த அவள் பின் மெல்ல சுதாரித்துக் கொண்டாள். பின் உண்மையை விவரித்துச் சொல்லி விடாமல், அதே நேரம் பொய்யும் சொல்லிவிடாதபடி யோசனையோடு சரியாக வார்த்தைப்படுத்தி உண்மையைச் சொன்னாள். அவன் வீட்டுக்குப் போனா எப்பவுமே அவன் படிச்சுட்டோ, எழுதிட்டோ, ஆராய்ச்சி பண்ணிட்டோ இருப்பான். சில நேரங்கள்ல நாம போயிருக்கறதைக் கூட மறந்துடுவான். போய் அவனை ஏன் தொந்தரவு செய்யணும்னு கடைசி தடவ தோணிடுச்சு. அதனால அதுக்கப்பறம் போகல....

அவள் ஒரு சாதாரண விஷயம் போலவே அதைச் சொன்னாலும் அவன் வீட்டிற்குக் கடைசியாகப் போன அந்த நாளில் நடந்ததை அவளால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது....

காதலிப்பதாக அவனும் அவளிடம் இதுவரை தெரிவித்ததில்லை. அவளும் அவனிடம் தெரிவித்ததில்லை. காதலை வார்த்தைகளால் சொல்லித் தெரியப்படுத்த வேண்டிய நிலையை எப்போதோ தாங்களிருவரும் தாண்டி விட்டதாக அவள் நினைத்திருந்தாள்... அவனுடன் இருக்கும் கணங்கள் மிகவும் உயிர்ப்புள்ள கணங்கள்... எத்தனையோ நாட்கள் நேரிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள். அதே போல எத்தனையோ நாட்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கையில் ஒவ்வொரு புத்தகத்துடன் சேர்ந்து உட்கார்ந்து படித்திருந்திருக்கிறார்கள். பேச்சு கூட அவசியம் இல்லை என்கிற நிலையைத் தாங்கள் எட்டி விட்டிருந்ததாக அவள் பெருமையுடன் நினைத்திருக்கிறாள்.

அவன் அவள் வீட்டுக்கு வருவது மிக அபூர்வம். ஆனால் அவள் அடிக்கடி அவன் வீட்டுக்குப் போவாள். அவளுடைய தாய் “நீ தான் நாய் மாதிரி அவன் பின்னாடியே போயிட்டிருக்காய். அவன் அப்படி வர்றானா பார்என்று அடிக்கடிக் குத்திக் காண்பித்தாலும் அவள் அதை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. இந்தக் கணக்கெல்லாம் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குப் பட்டது. அந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளும் தன்மை அவளிடம் இருந்ததால் தங்களுக்குள் விரிசல் வரும் என்று அவள் என்றுமே நினைத்ததில்லை. ஆனால் அப்படி ஒரு நாளும் வந்தது....

எப்போதுமே அவள் அவனுடைய வீட்டுக்குப் போகும் போது அவன் ஏதாவது படித்துக் கொண்டோ, ஆராய்ந்து கொண்டோ இருந்தால் முதலில் பார்த்துப் புன்னகைத்து விட்டு மறுபடித் தன் வேலையில் சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஈடுபட்டு விட்டு ஒரு சரியான கட்டத்தில் அதை  நிறுத்தி விட்டுத் தான் அவள் பக்கமே திரும்புவான். அவளுக்கு அதில் வருத்தமே இருந்ததில்லை. அது உச்சக்கட்ட செயல்திறத்தின் நல்லதொரு பழக்கம் என்று கூட அங்கீகரித்தாள்.  அன்றும் அவளைப் பார்த்தவுடனேயே புன்னகைத்து விட்டு எதையோ குறிப்பிடெடுத்துக் கொண்டிருந்த வேலைக்குக் கவனத்தைத் திருப்பிக் கொண்டான். பத்து நிமிடம் பதினைந்தாகியது.... பதினைந்து நிமிடம் அரை மணியாக நகர்ந்தது. அரை மணி ஒரு மணியாகியது. ஒரு மணியாகிய போது பொறுமை இழந்தாள். ஒன்றரை மணியாக ஆரம்பித்த போது அவளுக்கே அது அநியாய அலட்சியமாகத் தோன்ற ஆரம்பித்தது. இரண்டு மணியான பிறகு அவமானமாகவே தோன்றவே அங்கிருந்து எழுந்து வந்து விட்டாள். மனம் கொதிக்க ஆரம்பித்து விட்டது.

கண்டிப்பாக நினைவு திரும்பியவுடன் போன் செய்வான் அப்போது கடுமையாகப் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அவன் பேசவேயில்லை. அது அவள் ஆத்திரத்தைப் பலமடங்காகப் பெருக்கியது. இரண்டு நாட்கள் கழித்து கல்லூரியில் சந்திக்கையிலாவது அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்தாள். அவன் அப்போதும் அதுபற்றி எதுவும் பேசவோ, கேட்கவோ இல்லை. பொதுவாக எப்போதும் போலப் பேசினான். அவன் கேட்ட கேள்விகளுக்கு இறுக்கமான முகத்துடன் அவனுக்குப் பதிலளித்துப் பார்த்தாள். அதுவும் அவனுக்கு உறைத்ததாகத் தெரியவில்லை.     

வேறு யாராவதாக இருந்திருந்தால் சரிதான் போடா என்று உதறிவிட்டுப் போயிருப்பாள். அவனிடம் அப்படி விலக அவள் மனம் அனுமதிக்கவில்லை. பொக்கிஷமாக நினைத்துப் பார்க்க எத்தனையோ தருணங்கள் தந்திருக்கிறான். நட்பு என்கிற எல்லையை மீறி காதலின் நெருக்கமான தருணங்களில் இருவரும் திளைத்திருக்கிறார்கள்.

அவன் மிக நல்லவன். அனாவசியமாக யார் மனதையும் புண்படுத்தாதவன். நியாயம் தவறாதவன். சின்ன முகபாவனை மாற்றத்தைக் கூட கவனிக்க முடிந்தவன், அதற்கான காரணத்தை ஆழமாக உணர முடிந்தவன். அடுத்தவர் உணர்வுகளில் இருந்து பார்க்க முடிந்தவன்.... அப்படிப்பட்டவன் அவளிடம் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் அவளுக்குப் புரியவே இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது.  காதல் வட்டத்தில் இருந்து வெளியே வந்து நட்பு வட்டத்திலேயே தங்கி விட அவன் முடிவெடுத்திருப்பது புரிந்தது. அவன் அலைவரிசையில் அவளும் அடிக்கடி இணைய முடிந்தவள். அதனால் அது அவளுக்குப் புரிந்தது. காதலையே தெரிவிக்காதவன் விலகுவதற்காகக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையே....

ஆனால் அவளுக்கு வலித்தது. நிறையவே வலித்தது. பல நாட்கள் யாருக்கும் தெரியாமல் தனியாக அழுதிருக்கிறாள். அதை வெளிக்காட்டாமல் அவனுடன் அதற்குப் பின் சின்ன இடைவெளியுடனேயே பழக ஆரம்பித்தாள். ஏன் என்ற காரணத்தை ஏதாவது ஒரு தருணத்திலாவது அவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவள் ஏதாவது தவறு செய்திருந்து அவன் தெரிவித்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கக் கூட அவள் தயாராக இருந்தாள். ஆனால் முன்பு அப்படி நெருங்கி இருந்ததற்கான எந்த அடையாளமும் அவனிடம் பின் தென்படவில்லை.  பல சமயங்களில் காரணத்தை அவனிடம் வாய்விட்டே கேட்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்திருக்கிறாள். அவனாகச் சொல்லப் பிரியப்படாத ஒன்றை வலுக்கட்டாயமாகக் கேட்பதும் தனக்குக் கேவலம் என்றும் கூடவே தோன்றியதால் அதைத் தவிர்த்திருக்கிறாள்.....

செந்தில்நாதன் அதற்குப் பிறகும் நிறைய கேள்விகள் கேட்டார். அவளும் பதில் சொன்னாள். அவர் போன பிறகுத் தனதறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டு அவள் அழ ஆரம்பித்தாள். “ஒன்னும் சொல்லாட்டிக் கூடப் பரவாயில்லை.... எங்கயாவது தூரத்துல இருந்தே உன்னைப் பார்த்துட்டு வாழ்ந்துட்டுப் போயிடலாம்னு நினைச்சேன்.... இப்ப காணாமக் கூடப் போயிட்டியேடா.... டேய் பாவி நமக்குள்ள இருந்த பந்தத்துக்கு என்னடா அர்த்தம்.. கடைசி வரைக்கும் அதையும் சொல்லாமயே போயிட்டியேடா... எங்கடா போனே? உன் மனசுல என்னப் பத்தி என்னடா நினைச்சுட்டிருந்தே?...


மாஸ்டர் என்றழைக்கப்பட்ட மனிதர் கையில் க்ரிஷுக்கு நெருக்கமானவர்கள் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும் ஏராளமாக இருந்தன. ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு புத்தகமே எழுதி விடும் அளவு தகவல்கள் இருந்தன. எதையும் விட்டு விடாமல் பொறுமையாக எல்லாவற்றையும் படித்தார்.  பல வருடங்கள் பழகியவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியாத எத்தனையோ புரிதல்கள் இப்போது  அவர்களைப் பற்றி அவருக்கு ஏற்பட்டிருந்தன. எல்லோரையும் ஆழமாகவே தெரிந்து கொண்ட பின் முடிவாக அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்த நபர் மூலம் களத்தில் இறங்கத் தீர்மானித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

  1. க்ரிஷின் ஆராய்ச்சியில் தான் சஸ்பென்ஸ் என்றால் காதலில் கூட என்ன சார் சஸ்பென்ஸ்? அவன் ஏன் சார் அப்படி நடந்து கொண்டான? ஹரிணியின் கடைசி கதறல் டச்சிங்.

    ReplyDelete
  2. After waiting for a week, story seems much little.! If possible, please consider writing twice a week or at least little more.!
    Nice suspense but couldn't wait.

    ReplyDelete