என்ன
தான் தயார் நிலையில் இருந்தாலும் கூட செந்தில்நாதன் வந்து போகும் வரை மன
அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது என்றே மணீஷுக்குத் தோன்றியது. இத்தனைக்கும்
பஞ்சுத்தலையர் சொன்னது போல் என்ன செய்திருக்கிறோம், என்ன
நடந்திருக்கிறது என்றே தெளிவில்லாத நிலை தான் இப்போது. ஆனாலும் குற்றமுள்ள மனது
குறுகுறுத்துக் கொண்டே இருந்தது....
பஞ்சுத்தலையர் வீட்டில் அவன் இருக்கும் போது தான் செந்தில்நாதன் போன்
செய்திருந்தார். க்ரிஷ் குறித்துப் பேச வேண்டும் என்று சொன்னவரிடம் ஏன் என்ன
விஷயம் என்று குரலில் முழு திகைப்பைக் காட்டி, அவர் தெரிவித்த தகவலில்
அதிர்ச்சியைக் காட்டி சின்ன சந்தேகம் கூட அவருக்கு வராதபடி கவனமாக
இருந்திருந்தான். க்ரிஷ் காணாமல் போனது குறித்துத் தெரிவிக்க தன்னிடம் எந்தப்
புதிய தகவலும் இல்லை என்பதை நாசுக்காக அவன் சொல்லியும் அவர் அவனை நேரில் சந்திக்க
வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் அவனுக்கு ஒத்துக் கொள்ள வேண்டியதாகப்
போயிற்று. அவரை வீட்டுக்கு வரச் சொல்லி விட்டுத் தானும் வீட்டுக்கு விரைந்தான்.
அவன் வீடு போய்ச் சேர்ந்து கால் மணி நேரத்தில் செந்தில்நாதன் அங்கு
வந்து சேர்ந்தார். அவர் அவனைப் பற்றி ஓரளவு தகவல்கள் சேகரித்து விட்டே
வந்திருந்தார். மணீஷ் அமைச்சர் மாணிக்கத்தின் ஒரே மகன், பள்ளிப் படிப்பை ஊட்டி
கான்வெண்டில் படித்தவன், படிப்பில் கெட்டிக்காரன், மூன்று வருடங்களுக்கு முன் தாயை
இழந்தவன், இரண்டு குடும்பங்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாகச்
சிறிய வயதிலிருந்தே க்ரிஷின் நண்பன், சென்னை ஐஐடியில் தான் கல்லூரிப் படிப்பில்
இருவரும் இணைந்தார்கள், க்ரிஷைப் போலவே அரசியலில் ஈடுபட விரும்பாதவன் ....
அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் கவலை தோய்ந்த முகத்துடன் மணீஷ் அவரிடம்
கேட்டான். “சார் க்ரிஷ் பத்தி எதாவது தகவல் ....?”
‘இல்லை’ என்று தலையசைத்த செந்தில்நாதன் கேட்டார். “உங்களுக்குத்
தெரிந்து க்ரிஷ்க்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா?”
“இல்லை”
“அவரை யாராவது பின் தொடர்றதாகவோ, சந்தேகப்படற மாதிரி அவர் கிட்ட
நடந்துகிட்டதாகவோ எப்பவாவது உங்க கிட்ட சொல்லிருக்காரா?”
யோசிப்பதாகச் சிறிது காட்டி விட்டு மணீஷ் இல்லை என்றான்.
பதில் தெரிந்திருந்தாலும் கூடக் கேட்டார். “நீங்க ரெண்டு பேரும்
ஸ்கூல்ல இருந்தே ஒன்னா படிச்சவங்களா?”
“இல்லை சார். நான் ஊட்டி கான்வெண்ட்ல படிச்சேன். க்ரிஷ் சென்னைலயே
தான் படிச்சான்..... காலேஜ்ல இருந்து தான் கூடப்படிக்கிறோம்.... ஐஐடில”
“ரெண்டு பேருமே காலேஜ்ல ஒரே வகுப்பா?”
“ஆமா”
செந்தில்நாதனின் அடுத்த கேள்விகள் கல்லூரி சூழல், நண்பர்கள் பற்றியதாக
இருந்தன. மணீஷ் அந்த விஷயத்தில் மறைக்க ஏதுமில்லாததால் உண்மையையே சொல்லிக் கொண்டு
வந்தான்.
“சமீப காலமா க்ரிஷ் என்ன ஆராய்ச்சியில் இறங்கியிருந்தார்னு தெரியுமா?”
“சமீப காலங்கள்ல அமானுஷ்யமான விஷயங்கள்ல அதிகமா ஆர்வம்
காண்பிச்சான்.... ஆனா ஆராய்ச்சி அது சம்பந்தமா செஞ்சானான்னு தெரியல...”
“பொதுவா அவர் செய்யற ஆராய்ச்சிகள் பத்தி உங்க கிட்ட அவர் பகிர்ந்துக்குவாரா”
“பகிர்ந்துக்கறதுண்டு. ஆனா எல்லாமே முடிவடைஞ்சதுக்கு அப்புறமா
தான்.... இது தான் உண்மைன்னு அவன் கண்டுபிடிக்கறதுக்கு முன்னால அது சம்பந்தமா வாயே
திறக்க மாட்டான்.... அது சம்பந்தமான பேச்சு வர்றப்ப கூட அவன் கிட்ட இருந்து ஒரு
கருத்தைப் பிடுங்க முடியாது.....”
சொல்லும் போது சின்னதாக ஒரு கசப்பைக் குரலில் வெளிப்படுத்தாமல் இருக்க
மணீஷால் முடியவில்லை. அந்த விஷயத்தில் க்ரிஷ் உண்மையிலேயே அழுத்தக்காரன்....
“அவர் ஒவ்வொரு அமாவாசையும் அந்த மலைக்குப் போகிறது உங்களுக்குத்
தெரியுமா?”
பிரச்னைக்குரிய பகுதி வந்து விட்டது என்பதை உணர்ந்த மணீஷ் கவனமாகப்
பதில் அளித்தான். ”தெரியும்.... ஒரு
அமாவாசை சாயங்காலம் நான் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன்.... அவன் அங்கே போக
கிளம்பிகிட்டிருந்தான்....”
“ஏன் போகிறாருங்கறதயும் அவர் சொன்னாரா...?”
“சொன்னான்”
செந்தில்நாதன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்ன சொன்னார்?”
“ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க வேண்டியிருக்குன்னு சொன்னான். பொதுவா
எதாவது ஆராய்ச்சில இருக்கறப்ப நாம ’என்ன
செய்யறே’ன்னு
கேட்டா அவன் சொல்ற ஒரே பதில் அது தான்....”
”அதுக்கு மேல ஒன்னும் நீங்க கேக்கலயா?”
“கேட்டா அது அவன் காதுல விழாது..... கேள்வியே அனாவசியம்னு அவன்
நினச்சா பதிலும் அனாவசியம்னு காதுலயே விழாத மாதிரி இருந்துடுவான்....” என்று சொன்ன மணீஷ் தன் வாழ்வில் பின்பற்ற ஆசைப்பட்டு முடியாமல்
அவஸ்தைப்படும் ஒரு விஷயமாகவே அது இருந்தது. அந்த விஷயத்தில் க்ரிஷைப் போலவே இருக்க
மணீஷ் எத்தனையோ முறை முயன்று தோற்றிருக்கிறான்.... பதில் சொல்லா விட்டாலும் உள்ளே
கோபம் கொதித்துக் கொண்டாவது இருக்கும்....
“அங்கே அவர் என்ன மாதிரியான ஆராய்ச்சி செஞ்சிகிட்டிருந்திருப்பார்னு
நினைக்கிறீங்க?”
அந்தக் கேள்வி சின்னதாய் எரிச்சலைக் கிளப்ப அதை
அப்படியே அடக்கிக் கொண்டு அவன் சொன்னான். ”அவன் ஆராய்ச்சிகள் விஷயத்துல நாம எதையுமே யூகிக்க முடியாது....”
“மாயமா மறைகிற தன்மை பத்தி அவர் ஏதாவது ஆராய்ச்சியில் இறங்கி இருக்க
வாய்ப்பிருக்கா?” செந்தில்நாதன் க்ரிஷ் கடைசியாக ஆர்வம் காட்டிய பல
விஷயங்களில் ஒன்றை பொதுவாகத் தேர்ந்தெடுத்து சும்மா தான் கேட்டார்.
ஆனால் இப்படி ஒரு ஆராய்ச்சி பற்றி சற்றும் எதிர்பாராமலிருந்த
மணீஷுக்கு உடனடியாக முகம் வெளுத்தது. உடல் வியர்த்தது..... க்ரிஷ் சாகாமல் தன்
ஆராய்ச்சியில் வெற்றி பெற்று மாயமாக மறைந்திருப்பானோ?...
அந்த மனிதருக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். கம்பீரமான தேஜஸுடன் கங்கைக்
கரையில் அமைதியாக அமர்ந்திருந்தார். மாலை நேரங்களில் கங்கை பிரத்தியேக அழகு பெற்று
விடுகிறது. அவர் அழகை ரசிப்பவர். நதியானாலும், கடலானாலும், மலையானாலும்,
மழையானாலும், மனிதர்களானாலும் காணக்கிடைக்கிற அழகை அவர் ரசித்து லயிக்காமல் இருப்பதில்லை.
தூரத்தில் சில யாத்திரீகர்கள் கங்கையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். சில
இளைஞர்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.....
அவர் செல்போன் மெலிதாக இசைத்தது. அவர்
என்றுமே செல்போன் ஒலியை மெலிதாகவே வைத்திருப்பார். ஒலிப்பது அவருக்கு மட்டும்
கேட்டால் போதும். எந்த சந்தடியிலும் அந்த மெலிதான சத்தம் அவருக்குக் கேட்கும்.... செல்போனைக்
கையில் எடுத்து அழைப்பது யாரென்று பார்த்தார். உமா நாயக் என்ற பெயர்
பளிச்சிட்டது. ISTRAC ல் வேலை செய்யும் பெண் விஞ்ஞானி.....
கங்கையைப் பார்த்துக் கொண்டே ஆங்கிலத்தில் “சொல்” என்றார்.
“சென்னையிலிருந்து
ஒரு புதுத்தகவல்” அவளும் ஆங்கிலத்தில் சொன்னாள்.
“என்னது?”
“அந்த அமாவாசை இரவு ஒரு ஆள் அட்டைப்
பெட்டியை எடுத்துகிட்டு மலையேறினான்னு
சொன்னேனே. அவன் இறந்துட்டான்....”
“எப்படி?”
“பாம்பு கடிச்சு செத்திருக்கான்....
டிவியில் நியூசில் வினோத் தற்செயலா பார்த்திருக்கான்... பார்த்துட்டு எனக்கு
சொன்னான்.....”
வினோத் ISTRAC ல் வேலை செய்யும் ஆராய்ச்சியாளன்.... அந்த மனிதர் கண்கள் தானாக மூடின.
மூளை வேகமாக இயங்க ஆரம்பித்தது. “பாம்பு கிடைச்சுதா...”
“இல்லை.... அந்த ஏரியா ஜனங்க பீதியோட
இன்னும் தேடிகிட்டிருக்கறதா ந்யூஸ்ல சொன்னாங்களாம்....”
“உன் டைரக்டருக்கு சொன்னாயா?”
“சொன்னேன்.... அந்த மனுஷன் அதுக்கு பெரிய முக்கியத்துவம்
தரல...”
“முட்டாள்” என்று சொல்லியபடி
அந்த மனிதர் எழுந்தார். எந்தத் தகவலும் அதன் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு
மட்டுமே உதவ முடியும். முட்டாள்கள் எதன் அருமையையும் கடைசியாக மட்டுமே
உணர்கிறார்கள்.
”சரி.... அந்தக் கருப்பு படங்கள் பத்தி ரிப்போர்ட்
ஏதாவது வந்துச்சா”
“இன்னும் வரலை....”
“வந்தவுடனே போன் செய்” என்றவர் நடக்க
ஆரம்பித்தார். அதன் பின் அவர் கவனம் கங்கை பக்கம் செல்லவில்லை. கிடைத்த தகவலைத்
தீர்க்கமாக யோசிக்க ஆரம்பித்தார். முடிவில் ‘களத்தில்
முதல் காய் நகர்த்தப்பட்டு விட்டது’ என்பது புரிந்தது.
அவரும் களமிறங்க
வேண்டிய நேரம் வந்து விட்டது!
(தொடரும்)
என்.கணேசன்
superb
ReplyDeleteரொம்ப த்ரில்லிங்கா இருக்கு. உங்க மத்த நாவல்லயாவது சில இடங்கள் கெஸ் பண்ண முடிஞ்சுது. இதுல முடியல.
ReplyDeleteGirish than pamba? Interesting!
ReplyDeleteதமிழ் நாடு மாதிரி பரபரப்பா கொண்டுபோறிங்க சார் super
ReplyDeletesize of the novel is getting reduced as years pass on...I am feeling sad for this:-(
ReplyDeleteசார் இதுலயும் அக்க்ஷய் வருவாரா ? :)
ReplyDeleteவர மாட்டார்.
Deletevantha kuda nalla than irkum.... Dhayavusenju intha novel.a udane book.a publish pannunga..... anavasiyama kolai case.la ulla poirathinga :(
DeleteVery interesting wait for next update
ReplyDeleteExcellent one suggestion more n more characters are introduced can we have index of characters when we read after a weeks time it is getting hard to realise who is who...
ReplyDeleteHello Sudhakar, Vitta konar guide ketpinga pola irukae?
DeleteThrill move ji..
ReplyDeleteபிரமாதமாக உள்ளது
ReplyDelete