சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 1, 2016

இருவேறு உலகம் – 6


கேள்விப்பட்ட தகவல் கவலையைத் தந்தாலும் கூட கமலக்கண்ணன் தன்மனைவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து, கஷ்டப்பட்டு தன் முகத்தை இயல்பாகவே வைத்துக் கொண்டார். இது ஒரு காலத்தில் அவர் அறியாத வித்தை. அரசியலில் பல காலம் தங்கியதில் காலப்போக்கில் அவர் படித்துக் கொண்ட மிகப்பெரிய பாடம் இது. அலைபேசியைச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டே மனைவியிடம் சொன்னார். “இன்னும் ஒரு தகவலும் இல்லை என்பதைக் கூப்பிட்டுச் சொல்கிறான்... முட்டாள்”.

சொல்லி விட்டு மூத்த மகனை அவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். உதய் தந்தையின் பார்வையைப் புரிந்து கொண்டு மெல்ல எழுந்து சோம்பல் முறித்தான். “அப்பா, இங்கே சும்மா உட்கார்ந்திருக்கறதுக்குப் பதிலா நேராவே போய் பார்த்துட்டு வர்றது நல்லதுன்னு தோணுது.  நீங்களும் வாங்களேன்...

“இப்பவாவது நல்ல புத்தி வந்துதேஎன்ற பத்மாவதியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவன் கிளம்ப, கமலக்கண்ணனும் அவனுடனேயே அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

வெளியே வந்தவுடன் உதய் தந்தையிடம் கேட்டான். “என்னப்பா?

“அவனோட டெலஸ்கோப் மலைச்சரிவுல விழுந்து கிடந்ததைப் பார்த்து எடுத்து வெச்சிருக்காங்க....கமலக்கண்ணன் கவலையோடு தெரிவித்தார்.

உதய் முகத்திலும் கவலையின் ரேகைகள் பரவ ஆரம்பித்தன. மெல்ல சொன்னான். “நானே நேர்ல போய்ப் பாக்கறேம்ப்பா.... போலீஸுக்குப் போகணுமா?

“எதுக்கும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்த பேசிட்டு முடிவு செய்யலாம்னு நெனக்கிறேன்....என்றார் கமலக்கண்ணன். அண்ணன் என்று அவர் சொன்னது முதலமைச்சரான ராஜதுரையை. உடனடியாக அலைபேசியில் ஒரு எண்ணை அழுத்திப் பேசினார். “அண்ணன் என்ன பண்றார்..... எனக்கு உடனடியா அவர் கிட்ட பேசணும்.... பர்சனல் விஷயம்.... கேட்டுச் சொல்லு.....

மூன்றே நிமிடங்களில் முதலமைச்சரின் உதவியாளரிடமிருந்து போன் வந்தது. சார் வீட்டுக்கே வரச் சொன்னார்.

உடனே உதய் அந்த மலைக்கும், கமலக்கண்ணன் முதலமைச்சர் வீட்டுக்கும் கிளம்பினார்கள். கமலக்கண்ணன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன....                                                                                                                                                                                                            ரமேசுவரப் பணிக்கர் கணித்தது போலவே க்ரிஷ் அபார அறிவு படைத்தவனாக இருந்தான். உதய்  பிறந்து மூன்றரை ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் என்றாலும் கூட க்ரிஷ் உதய்க்கு முன்பே எழுதப்படிக்க ஆரம்பித்து விட்டான். மிகச்சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகையில் தவறுகள் ஏற்பட்டால் அவ்வப்போதே சுட்டிக் காட்டும் அளவு அறிவுபடைத்திருந்தான்.

எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு புதிய ஆசிரியர் ஒரு முறை பாடம் சொல்லிக் கொடுத்ததில் தவறிருந்ததை அவன் உடனடியாகச் சுட்டிக் காட்ட அவர் அதை அவமானமாக நினைத்தார். அவனைத் தண்டிப்பதாக எண்ணி “நீ வந்து பாடம் சொல்லிக் கொடேன்...என்று சொல்லி அமைதியாகப் போய் தன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பையன்கள் பயந்து போய் உடனடியாக அடங்கி மன்னிப்பு கேட்பதைத் தான் வழக்கமாக அவர் கண்டிருந்தார். ஆனால் க்ரிஷ் அந்த ரகத்தில் சேராமல் உடனடியாக வகுப்பு மாணவர்களின் முன்னுக்கு வந்து அந்தப் பாடத்தை அவரை விடச் சிறப்பாக நடத்தி விட்டு சந்தேகம் இருந்தால் மாணவர்களைக் கேட்கச் சொல்லி, ஓரிரு மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களையும் கச்சிதமாக நிவர்த்தி செய்து விட்டே தன் இருக்கைக்குத் திரும்பினான்.   அந்த ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை. அன்றிலிருந்து அவன் இருக்கும் வகுப்புகளுக்கு வரும் முன் கூடுதலாகத் தயார்ப்படுத்திக் கொண்டே அவர் வர ஆரம்பித்தார். கல்லூரிக் காலங்களில் பரிட்சைக்குக் கூட அவர் அப்படிப் படித்திருக்கவில்லை....

மற்ற மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்பதற்குப் பதிலாக அவனிடம் வந்து கேட்க ஆரம்பித்தார்கள். சில ஆசிரியர்களும், பெரும்பாலான மாணவர்களும் அவனைக் கொண்டாடினார்கள். சில ஆசிரியர்களும், சில சக மாணவர்களும் தலைக்கனம் பிடித்தவனாக அவனை நினைத்தார்கள். ஆனால் யாருமே அவன் சொன்னதில் எதையாவது தவறென்று நிரூபித்து வெற்றி காண முடிந்ததில்லை. அவன் சொன்னால் அது சரியாகத் தான் என்கிற நூறு சதவீத நம்பிக்கை அவன் எதிரிகளிடம் கூட உருவாக ஆரம்பித்தது.

கல்லூரிக் காலத்தில் அவன் புகழ் மேலும் உயர்ந்தது. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் ஒரு பேராசிரியர் ஒருநாள் அறிவியல் வகுப்பில் எதோ விஞ்ஞான உண்மையை விளக்கிய போது அவன் சொன்னான். “அது பழைய ந்யூஸ் சார். போன வாரம் தான் அது பொய் என்பதை ஒரு ஜெர்மன் சயண்டிஸ்ட் நிரூபிச்சிருக்கார்.  அது அமெரிக்கன் சயின்ஸ் ஜர்னல்ல முந்தா நாள் பப்ளிஷ் ஆயிருக்கு...

அந்தப் பேராசிரியர் திகைப்புடன் அவனைப் பார்த்தார். அது உண்மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபோது அவர் அசந்து போனார். இரண்டு துறைகளில் டாக்டரேட் பட்டம் பெற்றிருந்த அறிவுஜீவி அவர். அவனைத் தனியாக சந்தித்து  நிறைய நேரம் பேசினார். அந்த ஒரு துறை, பாடம் மட்டுமல்லாமல் வேறு எத்தனையோ துறைகள் பற்றியும் அவன் அறிந்து வைத்திருந்த ஆழத்தை அறிந்த போது பெரும் பிரமிப்பே அவரிடம் மிஞ்சியது. சக ஆசிரியர்களிடமெல்லாம் அந்த மாணவனைப் பற்றிச் சொன்னார். நட்பில் இருந்த அறிஞர்களிடம் எல்லாம் அவனைப் பற்றிச் சொல்லிப் புகழ்ந்தார்.  

ஒரு நாள் கமலக்கண்ணனையே நேரில் சந்தித்து “எப்படிப்பட்ட ஒரு ஜீனியஸ பெத்திருக்கீங்கய்யா. ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கீங்கஎன்று சொல்லி கமலக்கண்ணனின் இருகைகளையும் பற்றிக் கொண்டு அந்தப் பேராசிரியர் கண்களில் ஒற்றிக் கொண்ட போது கமலக்கண்ணன் மெய்சிலிர்த்துப் போனார்.

மந்திரியாகிப் பல காலமாகி இருந்ததால் பாராட்டுகள், கூழைக்கும்பிடுகள் போன்றவை எல்லாம் பழகிச் சலித்துப் போயிருந்த அவருக்கு இளைய மகன் அறிவு பற்றி மட்டும் என்றுமே உண்மையான பெருமிதம் உண்டு. தகுதி இருந்து கிடைக்கும் பாராட்டுகளில் அல்லவா ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சி. பலரும் அதற்கு முன்னாலும் அவரிடம் அவனைப் பற்றிப் பாராட்டி இருக்கிறார்கள்.

ஆனால் வயதான அறிஞராகத் தோன்றிய அந்தப் பேராசிரியர் உண்மையான பரவசத்துடன் ஆத்மார்த்தமாய் சொன்ன விதம் தான் அவரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்படிச் சொல்லி முடித்த பேராசிரியர் வேறு ஏதாவது உதவியோ, சிபாரிசோ கேட்கக் கூடும் என்று கூட அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பேராசிரியர் அதைச் சொல்ல மட்டுமே வந்தவராக வேறெதையும் கேட்காமல் திரும்பிப் போனது மறக்க முடியாத நிறைவைத் தந்த அனுபவமாக அவர் மனதில் தங்கிப் போனது. அடிமட்டத்தில் இருந்து முதலமைச்சருக்கு அடுத்த இரண்டாம் நிலை அமைச்சராக உயர்ந்து வந்திருக்கும் அவர் எத்தனையோ வெற்றிகளையும் தாண்டியே வந்திருக்கிறார். ஆனால் அத்தனையும் ராஜதுரை போட்ட பிச்சை என்கிற நினைப்பே அவர் மனதின் ஆழத்தில் இது வரை நின்றிருக்கிறது. இது ஒன்று தான் வாழ்க்கையில் பெற்ற உண்மையான வெற்றி என்று அந்த தந்தையின் மனம் நினைக்க ஆரம்பித்தது.

அதன்பின் இளைய மகன் பற்றி எத்தனையோ பாராட்டுகளை அவர் கேட்கும் சந்தர்ப்பங்கள் வந்தன. அவன் ஐஐடியில் சேர்ந்து, அங்கும் மதிப்பெண்களில் தொடர்ந்து முதலிடத்திலேயே  இருந்தான். பல கல்லூரிகளில் அவனைப் பேசக்கூப்பிட்டார்கள். சில அறிவுசார்ந்த போட்டிகளில் நடுவராக அவனை நியமித்தார்கள். வீடு வரை வந்து கூட பல அறிஞர்கள், பேராசிரியர்கள்  அவனிடம் தங்கள் சந்தேகங்கள் கேட்டார்கள். ஆர்வமுள்ள எதையுமே மேலோட்டமாக இல்லாமல் ஆழமாகவே அறிந்திருந்த அவன் அதற்கெல்லாம் விளக்கமாகவே பதில் அளித்தான். ஆழமாகத் தெரியாத அவனுக்கு ஆர்வமில்லாத விஷயங்களாக இருந்தாலும் அது பற்றிய சில அடிப்படைத் தகவல்களாவது அவனால் தெளிவாகச் சொல்ல முடிந்தது. அவன் சொல்லும்  போதும், அங்கிருந்து கிளம்பும் போதும் வந்தவர்கள் முகத்தில் தெரிந்த பிரமிப்பு அவர் அடிக்கடி கவனித்த விஷயம்.

வீட்டில் அவன் அறையில் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் தான் இருப்பான். பல நேரங்களில் சாப்பிடவும் வர மாட்டான். பத்மாவதி உணவை எடுத்துக் கொண்டு மகன் அறையில் வைத்து விட்டு வருவாள். அடுத்த வேளை உணவை எடுத்துக் கொண்டு போகையில் முந்தைய உணவு அவள் வைத்த இடத்தில் அப்படியே இருப்பதும் உண்டு. பத்மாவதி மகனிடம் கோபப்படும் தருணங்கள் அவை மட்டுமே. கடுமையாகத் திட்டுவாள். அப்போதே சாப்பிட்டால் தான் அங்கிருந்து நகர்வேன் என்பாள். படிப்பது புத்தகமானால் அதைப் பிடுங்கி மூடி வைப்பாள். கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாக இருந்தால் அதை உடனடியாக அணைத்து விடுவாள். அவன் முன் ஏதாவது ஆராய்ச்சிப் பொருள்கள் இருந்தால் கலைத்து விடுவாள். அதனால் வேறு வழியில்லாமல் அவளிடம் திட்டு வாங்கிக் கொண்டே அசட்டுப் புன்னகை பூத்தபடி க்ரிஷ் சாப்பிடுவான்.

இந்த அளவு  அறிவுத் தாகம் கொண்ட அவருடைய இளைய மகன் தற்போது எந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளான் என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. கேட்டிருந்தால் அவன் கண்டிப்பாகச் சொல்லி இருப்பான். ஆனால் அவன் சொல்லும் விஷயங்கள் அவர்கள் அறிவுக்குப் பெரும்பாலும் எட்டுவதில்லை. சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரமிப்பை ஏற்படும் தகவல்கள், ஆர்வமோ, புரிந்து கொள்ளும் அறிவோ இல்லாத அவர்களுக்குப் பலமுறை தலைசுற்றலுக்கும் அவஸ்தைக்குமே கொண்டு சென்றிருக்கின்றன. அதனால் அப்படிக் கேட்கும் தவறைச் செய்யாமல் வீட்டார் மூவரும் கவனமாகவே இருந்திருக்கிறார்கள்.
 
புதிய ஆராய்ச்சியில் அமாவாசை இரவன்று அந்த மலைக்குச் சில மாதங்களாய் தான் அவன் போக ஆரம்பித்திருக்கிறான். அதுவும் அந்த பகுத்தறிவு அமைப்பினர் பேய், பிசாசு, ஆவிகள் அந்தப்பகுதியில் இல்லை என்று நிரூபித்த செய்திகள் வெளி வந்த பிறகு தான் க்ரிஷ் போக ஆரம்பித்திருக்கிறான்... அங்கு போய் என்ன செய்கிறான், எப்படி ஆராய்ச்சி நடத்துகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த ஆராய்ச்சி தான் அவனுக்கு இப்போது ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர் மனதில் எழ ஆரம்பித்தது.

(தொடரும்)


என்.கணேசன் 

6 comments:

  1. Classic characterization sir.

    ReplyDelete
  2. இப்படிப்பட்ட ஹீரோ என்ன ஆனான்னு சொல்ல மாட்டேங்கறீங்களே. அடுத்த வியாழன் வரைக்கும் என்ன தான் செய்வது?

    ReplyDelete