சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 7, 2016

அஞ்ஞான இருளை அகற்ற வழியென்ன?


கீதை காட்டும் பாதை 43  


கவத் கீதையின் பத்தாம் அத்தியாயமான விபூதி யோகத்தில் பரம்பொருளின் விசேஷ தன்மைகள் விவரிக்கப்படுகின்றன. ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார். 

என்னைப் பிறப்பற்றவனென்றும் மூலமற்றவனென்றும் உலகத்தை ஆளும் ஈசர்களுக்கெல்லாம் ஈசனென்றும், மனிதர்களுக்குள் எவனொருவன் அறிகிறானோ, மோகமற்ற அத்தகைய மனிதன் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

என்னுடைய பெருமையையும், யோகத்தையும் உள்ளதை உள்ளபடி எவன் அறிகிறானோ அவன் அசைக்க முடியாத பக்தி யோகத்துடன் கூடியவனாக ஆகிறான். இதில் சந்தேகமில்லை.

நானே இவ்வுலகத்தின் தோற்றத்திற்குக் காரணம். என்னிடம் இருந்தே எல்லாம் இயங்குகின்றன என்று அறிந்து என்னிடம் பற்றுகொண்டு ஞானிகள் என்னைத் துதிக்கிறார்கள்.

கீதோபதேசத்தின் போது ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையின் மன்னனாகவோ, அர்ஜுனனின் நண்பனாகவோ, ஏன் மகாபாரத காலத்தின் அவதாரமாகவோ கூடப் பேசவில்லை. அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற ஆதியந்தமில்லாத மகாசக்தியின் கருப்பொருளாகவே லயித்து, அந்த மகோன்னத நிலையிலிருந்தே பேசுகிறார். அதை மனதில் இருத்திக் கொண்டு படித்தால் மட்டுமே இந்த சுலோகங்களின் உண்மைப் பொருளை ஒருவரால் விளங்கிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் இது சுயதம்பட்டமாகவே தெரியும். 

சுயதம்பட்டமடித்துக் கொள்ளும் ஒருவர் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்திருக்க மாட்டார். முன்பே கர்மயோக விளக்கங்களில் குறிப்பிட்டது போல குதிரைகளைக் குளிப்பாட்டி, உணவிட்டு, நட்பு பாராட்டி போர்க்களத்திற்குக் கூட்டி வந்து, தேரோட்டி, அர்ஜுனனின் கால்களில் உதைகள்பட்டிருக்க மாட்டார். இங்கு பேசுகிற பரம்பொருளிடம் சிறுமை இல்லை. இறைநிலையின் உச்சத்திலேயே நின்று உண்மையை உரத்துச் சொல்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம் தனிமனித அடையாளம் இல்லை. இதை நினைவு வைத்துக் கொண்டு மேலே சொன்ன சுலோகங்களின் பொருளை ஆய்வு செய்வோம்.

இறைவனின் மகாசக்திகளை முற்றிலும் உள்ளபடியே அறிந்து கொள்கிற போது, அந்த சக்தியைத் தவிர இங்கு வேறொன்றுமில்லை என்பதையும் ஒருவரால் உணர முடியும். அரைகுறையாய் அறிந்தவனுக்கு இருக்கும் குழப்பங்கள், பலவீனங்கள் முற்றிலும் அறிந்தவனிடம் இல்லை. எந்தப் பரம்பொருளை அறிந்த பின் வேறெதையும் அறிய வேண்டிய அவசியம் இல்லையோ, எந்தப் பரம்பொருளை அறிந்த பின் வேறெதன் மீதும் ஆசை கொள்ள முடியாதோ அந்தப் பரம்பொருளை அறிந்த பின் தவறான எண்ணங்கள் ஒருவர் மனதில் தோன்றுமா? பாவங்கள் செய்யும் தூண்டுதல் தான் இருக்குமா?

தவறான எண்ணங்களும், பாவச் செயல்களும் அறியாமையால் வரும் துன்பங்கள் அல்லவா? அவற்றின் அடிப்படையில் இருப்பது அறியாமையே அல்லவா? பரம்பொருளை அறியும் போது அவன் சக்தியின் அங்கமென நம்மை நாம் உணரத் தவறுவோமா?  அப்படி அறிந்த பின் ஒருவரால் இந்த அழுக்குகளை சகித்துக் கொள்ள முடியுமா? அவை எல்லாம் உயர்ந்த நிலைக்கு எட்டிய ஆத்மாவிற்கு அருவருப்பே அல்லவா? அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் அத்தகைய மனிதன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவதாகச் சொல்கிறார்.

இறைவனை அறிந்தவன், அறிந்து துதிப்பவன், பாவம் செய்து விட்டுத் தப்பிக்க முடியும் என்கிற பொருள் கொண்டால் அது அறிவுப்பிழை. இறைவனை அறிந்தவனுக்கு பாவம் செய்ய முடியாது, அவன் மனம் அவனை அனுமதிக்காது. அதனாலேயே அவன் பாவங்களைத் தவிர்த்து அதிலிருந்து விடுபட்டிருக்கிறான் என்று தான் இதன் மெய்ப்பொருள்.

இறைவனை முழுமையாக அறிந்து கொள்ளும் போது, அவன் அருமை பெருமைகள் விளங்கும் போது அவன் மீது பக்தி ஏற்படுவது இயற்கை. உண்மையான பக்தி அவ்வப்போது வந்தும், மறைந்தும் போகிற சமாச்சாரம் அல்ல. அப்படி வந்து போவது பக்தியுமல்ல. உண்மையான பக்தி உறுதியானது. காலங்களும், கோலங்களும் மாறினாலும் மாறாமல் இருப்பது. எல்லாப் பற்றுகளையும் நீக்கிய பின் அந்தப் பரமன் மேல் மட்டும் பற்று வைக்க ஞானம் வேண்டும்.

இதைத் தான் திருவள்ளுவரும் சொல்கிறார்-

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(பற்றுகள் இல்லாதவனாகிய இறைவன் மீது பற்று வைக்க வேண்டும். அந்தப் பற்றையும் பற்றுவது மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டொழிப்பதற்காகவே!)

பரம்பொருளாகிய இறைவனைப் பற்றிக் கொண்டவர்கள் பெறுவது என்னென்ன? ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து சொல்கிறார்.

என்னிடம் மனத்தைச் செலுத்தியும், என்னிடம் உயிரை அர்ப்பணித்தும், ஒருவருக்கொருவர் போதித்துக் கொண்டும், என்னைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டும், மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகிறார்கள்.

இவ்வாறு அன்புடன் என்னிடம் எப்போதும் ஈடுபட்டவர்களுக்கு நான் புத்தி யோகத்தை அளிக்கிறேன். அதனால் அவர்கள் என்னை அடைகிறார்கள்.

அவர்களுக்குக் கருணை புரிவதற்காகவே நான் அவர்களின் உள்ளத்தில் தங்கி ஒளிமிக்கதான ஞானவிளக்கினால் அவர்களின் அஞ்ஞானமென்னும் இருளை அழித்து விடுகிறேன்.

இறைவனை ஒரு கணமாவது உணர முடிந்த பாக்கியசாலிகள் பின் எப்போதும் வேறெதிலும் முழுத்திருப்தி அடைய மாட்டார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்ததை ஒரு கணமேனும் உணர்ந்தவனுக்கு அதை விடக் குறைவான மற்ற அனைத்திலும் திருப்தி ஏற்படுமா? அதனால் ஒரு கணம் உணர்ந்த அந்த பவித்திரத்தை, பரம்பொருளைப் பற்றிப் பேசியும், போதித்தும், கேட்டும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறும் சுபாவம் வந்து விடும்.

அப்படி இறையுணர்வைப் பல வழிகளில் தக்க வைத்துக் கொள்பவன் தான் உண்மையான அறிவாளி. அந்த ஈடுபாடு இருப்பவனுக்கு புத்தியோகத்தை அளிப்பதாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். அந்தப் புத்தியோகத்தால் அவர்கள் இறைவனையே அடைவதாகவும் கூறுகிறார். அவர்கள் உள்ளத்தில் ஒளிமிக்க ஞான விளக்கை ஏற்றி அவர்களுடைய அறியாமையென்னும் அக இருளை அழித்து விடுவதாகவும் உறுதியளிக்கிறார்.

கால காலமாக நமது இதயங்களில் மண்டிக்கிடக்கும் காரிருள் எத்தனை துன்பங்களில் நம்மைத் தள்ளியிருக்கிறது. அறியாமையால், அக இருளால் எத்தனை கோடி வழிகளில் தவறிழைத்து அதன் விளைவுகளில் சிக்கி வேதனைப்பட்டிருக்கிறோம். ஜென்ம ஜென்மங்களாக நம்மை ஆட்சி புரிந்து துக்கத்தின் பிறப்பிடமாகவே நம்முள் மண்டி இருக்கும் அறியாமைக் காரிருளைத் துரத்த எத்தனையோ வழிகள் தேடித் தேடித் தோல்வி அடைந்திருக்கிறோமே! இந்த இருள் விலக ஆத்ம ஞான ஒளியல்லவா வேண்டும்? அதை இறைவனால் அல்லவா ஏற்ற முடியும்?

அந்தப் பரம்பொருளின் உண்மைத் தன்மை அறிந்து, அதன்மூலம் பக்தி உருவாகப் பெற்று, அந்தப்பக்தியால் அவனையே பற்றிக் கொண்டு அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பவன் மனதில் ஞான ஒளிவிளக்கை இறைவன் ஏற்றி வைப்பதாக உறுதியளிக்கிறார். இதை விட ஒருவன் அடைய வேண்டிய பேறென்ன இருக்க முடியும்?

பாதை நீளும்....

என்.கணேசன்  


1 comment:

  1. இருளை நீக்கும் வழி... அருமையான விளக்கம்

    ReplyDelete