என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 10, 2016

இருவேறு உலகம் – 3


வர் என்ன ஆகியிருக்கும் என்பதை ஊகிக்க முயன்றார். அந்த வாடகைக் கொலையாளி ஏமாற்றி விட்டானா என்ற சந்தேகம் தான் முதலில் வந்தது. அவனுக்கு முழுப்பணமும் முன்கூட்டியே தந்தாகி விட்டது என்றாலும் பணத்தை வாங்கிய பிறகு ஏமாற்றுகிற ரகம் அல்ல அவன். அந்தத் தொழிலிலும் அவர்களுக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது. தொழிலை முறையாக நடத்துகிறவர்கள் பொதுவாக ஏமாற்றுவதில்லை. ஏமாற்றவில்லை என்றால் காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை பிணத்தை ஏதாவது விலங்கு கொண்டு போயிருக்குமோ? இருக்கலாம் என்றது மனம். அந்த மலையின் பின்புறம் ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. அங்கு விலங்குகள் கொண்டு போயிருந்தால் இந்த வேலைக்காரன் பார்வைக்குச் சிக்க வாய்ப்பில்லை....

அப்படி இருக்கலாம் என்று நம்பி அவரை நிம்மதியாக இருக்க விடாமல் இருந்தது கொலைகாரன் அலைபேசியை எடுத்துப் பேசாமல் இருந்தது தான்.

அவரைப் போலவே இருப்பு கொள்ளாத ஆள் அவருக்கு மறுபடி போன் செய்தான். இவன் வேற....என்று மனதில் சலித்துக் கொண்டு அவர் பேசினார். “ஹலோ

“அவன் போன்ல கிடச்சானா

“போன் அடிக்குது. எடுக்க மாட்டேன்கிறான். நைட்ல நல்லா தண்ணி போட்டுட்டு மொபைல சைலண்டில் வச்சு தூங்கியிருப்பான் தடியன்...

டபுள் கேம் ஆடியிருக்க மாட்டானில்ல

தன் சந்தேகம் அவனுக்கும் வந்திருக்கிறது என்று நினைத்தாலும் புரியாதது போல் கேட்டார். என்ன சொல்ற நீ?

“நம்ம திட்டத்த க்ரிஷ் கிட்ட சொல்லி அவனைக் கொல்லாம இருக்க அவன் கிட்ட பேரம் பேசியிருந்தா?

“க்ரிஷ் உயிரோட இருந்தா பைக்கில் போயிருப்பானே. பைக் அங்கேயே தான் இன்னும் இருக்கு... அதை மறந்துட்டியா?

“ஒரு வேளை அந்தக் கொலைகாரன் மறுபடி கார்ல அங்கே போய், க்ரிஷ்ஷை தன்னோட கார்லயே கூட்டிகிட்டுப் போயிருந்தா?...

அவருக்கு அவன் கற்பனை பீதியைக் கிளப்பியது. அது கற்பனையா, நிஜமா என்பது பிறகு தான் தெரிய வரும் என்றாலும் இப்போதைக்கு அதைக் கற்பனையாகவே நினைக்கத் தோன்றியது. அவனிடம் சொன்னார். சும்மா என்னென்னவோ கற்பனை பண்ணாதே.... க்ரிஷுக்குப் போன் பண்ணிப் பேசு. சந்தேகத்தை உடனே நிவர்த்தி பண்ணிக்கலாம்...

“ம்ம்ம்... அதுவும் சரி தான்...என்றவன் இணைப்பைத் துண்டித்தான். ஐந்து நிமிடம் கழித்து அவன் மறுபடி அவரிடம் பேசினான். “அவனுக்குப் போன் பண்ணினா ஸ்விட்ச்டு ஆஃப் மெசேஜ் தான் வருது....

அவர் சிறிது நிம்மதியை உணர்ந்தார். அப்படின்னா நீ பயப்பட்ட மாதிரி இருக்காது... அவன் பிணத்தை எதாவது விலங்கு எடுத்துட்டுப் போயிருக்கலாம்...

“அந்த மலையில அந்த மாதிரி விலங்கெல்லாம் கிடையாதே....

அவனும் நிறையவே தகவல்கள் சேகரித்து வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. “எதுக்கு அனாவசியமான சந்தேகம்... அந்தக் கொலைகாரன் வீட்டுக்கே ஆளனுப்பி விசாரிச்சுட்டு சொல்றேன்என்றவர் உடனடியாக அந்த வேலையாளுக்குப் போன் செய்து விசாரித்துத் தகவல் தெரிவிக்க உத்தரவிட்டார்.

வேலையாள் திரும்பவும் போன் செய்து தகவல் தெரிவிக்கும் வரை அமைதியாக இருக்க முடியாத அவர் மனம் பல யூகங்களை யோசித்தது. அந்த வாடகைக் கொலையாளி ஏமாற்றி இருந்தால் வீட்டிலிருக்க மாட்டான், கண்டிப்பாகத் தப்பி ஓடியிருப்பான். ஆனால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று இப்போதும் அவர் உள்ளுணர்வு சொன்னது. அந்தப் பாம்பு கடித்ததாக வாடகைக் கொலையாளி நினைத்தது தவறாக இருந்திருக்கலாம். ஆனால் கொலையையே தொழிலாகக் கொண்ட ஒருவன் அந்தத் தவறைச் செய்திருப்பான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை. அதுவும் அந்த வாடகைக் கொலையாளி பாம்பு கடித்த இடத்தையும் கூடத் தெளிவாகச் சொன்னான். செத்து விட்டான் என்பதையும் உறுதியாகச் சொன்னான். உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அந்தத் திறமைசாலியான வாடகைக் கொலையாளி அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியானால் என்ன நடந்திருக்கும்? எத்தனையோ கற்றிருந்த அந்த அறிவுஜீவியான க்ரிஷ் பாம்பு விஷத்தை முறியடிக்கும் வித்தையையும் கற்றிருந்திருப்பானோ? செத்தது போல நடித்துப் பின் தப்பி இருப்பானோ? சேச்சே... இதெல்லாம் அதிகப்படியான கற்பனை! தப்பியிருந்தால் பைக் அங்கிருக்க வாய்ப்பில்லை. காற்றிலா அவன் பறந்திருக்க முடியும்? வேலைக்காரன் போன் செய்யத் தாமதமாக, தாமதமாக மனம் என்னென்னவோ கற்பனைகளைச் செய்து அவரை திகிலடைய வைத்தது. பாழாய் போன வேலைக்காரன் போகிற வழியிலேயே செத்து விட்டானா என்ன, இன்னும் போன் செய்யாமல் இருக்கிறான்.....!  

அடுத்த அரை மணி நேரத்தில் அவரது வேலையாள் போன் செய்தான். பேசும் போது அவன் குரல் நடுங்கியது. “ஐயா அவன் செத்துட்டான்யா.....

அவருக்குக் கோபம் வந்தது. “என்ன உளர்றேஎன்று கடுமையாகக் கேட்டார்.

“உண்மை தானுங்கய்யா. அவனை பாம்பு கடிச்சுடுச்சாம்.....

அவர் அதிர்ந்து போனார். அவர் கரகரத்த குரல் பதற்றத்துடன் கேட்டது. “அவன் பிணத்த நீ பாத்தியா?

“ஆமாங்கய்யா. கூட்டத்தோட கூட்டமா நின்னு பாத்தேன். உடம்பெல்லாம் விஷம் ஏறி கருப்பாயிடுச்சு........அவன் குரலில் இருந்த நடுக்கம் இன்னமும் நீங்கவில்லை.

அவர் சிறிது அமைதி காத்தார். மேற்கொண்டு அவனாக எதுவும் சொல்லாதது எரிச்சலைக் கிளப்பியது. “ஏண்டா தவணை முறையில தான் எதுவும் சொல்லுவியா?

அவன் அவசர அவசரமாய் சொன்னான். “அவன் பக்கத்து வீட்டுக்காரன் காலைல ஒம்பதரை மணிக்கு எதோ பேசப் போன் செஞ்சிருக்கான். இவன் போன் எடுக்கலைன்னதும் நேர்லயே பேசப்போயிருக்கான். அப்ப தான் இவன் செத்துக்கிடந்தத பாத்திருக்கான்.... டாக்டரக் கூப்டுருக்கான். வந்து பாத்த டாக்டர் அவன் செத்து அஞ்சாறு மணி நேரம் ஆயிருக்கும்னு சொன்னாராம்.... கடிச்சது சாதாரண பாம்பா இருக்காது, கடுமையான விஷப்பாம்பா இருக்கும்னும் சொன்னாராம்

அந்தப் பாம்பு கடுமையான விஷப்பாம்பு என்பதைக் கொலைகாரனே அவரிடம் சொல்லி இருக்கிறான். கடித்து சில நிமிடங்களிலேயே உயிர் போவது உறுதி என்றும், பலரை அப்படிக் கொன்றிருப்பதாகவும் பெருமையாக அவரிடம் சொல்லியிருக்கிறான். அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டே செத்திருக்கிறான் முட்டாள். இப்படி யாராவது அஜாக்கிரதையாய் இருப்பார்களா?...

“பாம்பு கிடச்சுதா? யாராவது பார்த்தாங்களா?அவர் ஆர்வத்துடன் கேட்டார்.

“இல்லை.... அந்த வட்டாரமே நடுங்கிட்டிருக்கு.... எல்லாரும் அவன் காலக் கடிச்ச மாதிரி நம்மளயும் கடிச்சுடுமோன்னு இன்னும் பயத்தோட  தேடறாங்க.....

அவன் காலக் கடிச்ச மாதிரி என்ற தகவல் திகைப்பை ஏற்படுத்தியது. நேற்றிரவு காரில் வரும் போது அந்த வாடகைக் கொலையாளியிடம் கேட்ட கேள்வியை அவரையும் அறியாமல் கேட்டார். “பாம்பு அவனை எங்கே கடிச்சுதாம்?

“வலது கால் கட்டை விரல்லங்கய்யா

அவர் கையிலிருந்து செல் போன் நழுவிக் கீழே விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன நினைப்பது, நடந்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

அந்த நேரத்தில் தான் அவருடைய கூட்டாளி நேரிலேயே அவரைப் பார்த்துப் பேச அங்கு வந்தான். அவர் உட்கார்ந்திருந்த நிலை அவனை திகைக்க வைத்தது. அவரை அவன் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்தவன். அவருக்கு அடுத்தவரை அதிர வைத்து தான் பழக்கமே ஒழிய அதிகமாய் அதிர்ந்து பழக்கமில்லை. அவரே இப்படி அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அந்த வாடகைக் கொலையாளி ‘டபுள் கேம்ஆடியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டது சரியாகவே இருந்திருக்கும்...  

அவன் அவரருகில் வந்தமர்ந்து கேட்டான். “என்னாச்சு. அவன் ஏமாத்திட்டானா....

அவர் பெருமூச்சு விட்டார். “ஏமாந்துட்டான்....

அவன் புரியாமல் விழித்தான். “எப்படி?

அவர் சொன்னார். “அவனே செத்துட்டான்.....

இப்போது அதிர்ந்து போனது அவன்.  மறுபடி அவன் பலவீனமாய் கேட்டான். “எப்படி?

சற்று முன் வேலையாள் சொன்னதை எல்லாம் அவர் சொன்னார். அவன் விழிகள் பிதுங்க அவரைப் பார்த்தான். நேற்று க்ரிஷ்ஷைப் பாம்பு கடித்ததாகச் சொன்ன இடமான வலது கால் கட்டைவிரலிலேயே இவனும் பாம்பு கடித்துச் செத்திருப்பது அவனுக்கும் வில்லங்கமாகத் தெரிந்தது.

தரையில் விழுந்திருந்த அவர் செல்போன் திடீரென்று இசைத்தது. அவன் தான் சுதாரித்துக் கொண்டு குனிந்து அழைக்கின்ற ஆளின் பெயர் என்ன என்று பார்த்து விட்டுச் சொன்னான். “ V K

இப்போது அவரது முட்டை விழிகள் பிதுங்கின.

அவன் கேட்டான். “V Kன்னா யார்?

சப்த நாடியும் ஒடுங்கிப் போய் வெறும் காற்றாய் திகிலுடன் வந்தது அவர் பதில். “வாடகைக் கொலையாளி

(தொடரும்)
என்.கணேசன் 


11 comments:

 1. என்ன சார் ஆரம்பமே இப்படி திகிலை கிளப்பறீங்க. அடுத்த வாரம் வரை எப்படி வெய்ட் பண்றது?

  ReplyDelete
 2. செம்ம திரில்லிங்
  நொடிக்கு நொடி இந்த வாரம் திகில் திகில் திகில்தான்

  படிப்பவர்களின் மனதில் மூன்றாம் உலகை உருவாக்கி, அருமையாக வருகிறது இருவேறு உலகம்.

  வாழ்த்துகள் கணேசன்

  ReplyDelete
 3. Thrilling... Can you release the book now itself.. So that we can read all at once...

  ReplyDelete
  Replies
  1. Now only I have started. It will take time to complete it.

   Delete