என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, November 17, 2016

இருவேறு உலகம் – 4

வனும் அதிர்ந்து போனான். இரண்டு பேரும் இசைக்கின்ற அந்த செல்போனையே திகிலோடு பார்த்தார்கள். வாடகைக் கொலையாளி இறந்து போன பிறகு அவன் செல் போனிலிருந்து அவரை அழைப்பவர் யாராக இருக்கும்?  

கடைசியில் செல்போன் மௌனமாகியது. மறுபடி அழைப்பு வரும் என்று இருவரும் எதிர்பார்த்தார்கள். வரவில்லை. யோசித்து விட்டு, பயத்திலிருந்து முதலில் மீண்டவர் பஞ்சுத்தலையர் தான். சிந்தனைக்குப் பின் அவருக்குத் தன் மீதே கோபம் வந்தது. இப்படிப் பயந்து சாக என்ன இருக்கிறது?என்று தனக்குள்ளே கேள்வி கேட்டவர், வறட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு அவனைத் தைரியப்படுத்தினார்.   அவனுக்கு அந்தப் பாம்பு கடிச்ச இடம் தவிர  இதுல ஏடாகூடமாக எதுவும் நடக்கல. அந்தக் கொலைகாரத் தடியன் ராத்திரி குடிச்சுட்டு மட்டையாயிருப்பான்.... அஜாக்கிரதையாய் பாம்பு வச்ச பெட்டிய சரியா மூடாம வெச்சிருப்பான். அது வெளியே வந்து அவனைக் கடிச்சுட்டுப் போயிருக்கு. செத்துட்டான். அது தெரியாம இவன் போன் எடுத்துப் பேசலன்னு இவனயே சந்தேகப்பட்டுட்டோம் அவ்வளவு தான். இப்போ போன் செஞ்சது கூட அவன் செல்லுல நம்ம இத்தன மிஸ்டுல கால்ஸப் பாத்த சொந்தக்காரங்களோ, நண்பர்களாவோ தான் இருக்கும்....

அவர் சொல்வது சரியாகவே இருக்கும் என்று அவனுக்கும் தோன்றியது. ஆனால் அவரே சொன்னது போல் பாம்பு கடித்த இடம் இயல்பாக இல்லை....

அவர் தன் செல்போனை எடுத்து வாடகைக் கொலையாளியின் எண்ணை அழுத்தினார். அவன் நண்பனோ, சொந்தக்காரனோ எவனோ ஒருவனிடம் பேசி ஏன் போனில் அழைத்தோம் என்று ஏதோ ஒரு கதை சொல்லி, இறந்து விட்டான் என்று அவன் சொல்லப் போகும் தகவலுக்குத் துக்கம் தெரிவித்து, தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தார்.

மறுமுனையில் மணியடிக்கும் சத்தம் கேட்டது. ஆனால் போனை யாரும் எடுத்துப் பேசவில்லை. பொறுமையாக மீண்டும் முயன்றார். இப்போதும் யாரும் எடுத்துப் பேசவில்லை. மூன்றாவது முறை முயன்ற போது பொறுமை போயிருந்தது. அடித்த மூன்றாவது மணி ஓய்வதற்கு முன் போன் எடுக்கப்பட்டது. நிம்மதிப் பெருமூச்சு விட்ட பஞ்சுத்தலையர் “ஹலோஎன்றார்.

மறுபுறம் சத்தமில்லை. அவர் மீண்டும் “ஹலோஎன்றார். இப்போதும் மறுபுறத்தில் மௌனமே. எரிச்சலோடு அவர் “ஹலோஎன்று கத்தினார். இப்போது பேய்க்காற்று வீசும் ஒலியே செல்போன் வழியாகப் பதிலாகக் கேட்டது. அந்த மலையடிவாரத்தில் அவர் கேட்ட அதே ஒலி.....

அதிர்ச்சியில் உறைந்து போன அவர் சகல பலத்தையும் திரட்டி “யாருடா என் கூட விளையாடறீங்கஎன்று கிறீச்சிட்ட குரலில் கத்தினார். அவருக்கே அவர் குரல் காதில் நாராசமாகக் கேட்டது.

மறுபக்கத்தில் பேய்க்காற்றின் ஓசையே மீண்டும் பதிலாக ஒலித்தது.    கைகள் நடுங்க அவர் இணைப்பைத் துண்டித்தார். அவரால் உடனடியாக சகஜ நிலைக்கு வர முடியவில்லை.  அவரையே திகைப்புடன் பாத்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஓடிப் போய் அங்கிருந்த ஒரு வெள்ளிச்செம்பில் தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதை வாங்கி மடமடவென்று குடித்து முடித்த பின் மெள்ள அவர் சகஜ நிலைக்குத் திரும்பினார்.

உடனடியாகத் தன் வேலையாளுக்குப் போன் செய்து அந்த மலையடிவாரத்திற்கு மறுபடி சென்று அங்கே புதிய நிலவரம் என்ன என்று கண்டு தெரிவிக்கச் சொன்னார். ஒரு பட்டாளத்தையே அங்கு அவரால் அனுப்பி இருந்திருக்க முடியும். ஆனால் அவர் ஆட்கள் பலரால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடிந்தவர்கள். சிறிய சந்தேகம் கூடப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். அதை அவர் விரும்பவில்லை. இந்த வேலையாள் பலரும் அறியாதவன். அதிகமாகக் களத்திற்கு வராதவன்...

அவன் திரும்பவும் போன் செய்யும் வரை இங்கே இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இரண்டு பேருக்கும் யோசிக்க நிறைய இருந்தது.

அவன் போன் செய்தான். “ஐயா அவங்க ஆட்கள் நிறைய பேர் வந்திருக்காங்க. மலை மேலயும் கீழயும் தீவிரமா தேடிகிட்டு இருக்காங்க....

அவருக்குச் சின்னதாய் ஒரு ஆறுதல் ஏற்பட்டது. க்ரிஷ் பிழைத்து வீடு போய்ச் சேர்ந்து விடவில்லை.....

ஆனாலும் நடப்பது எல்லாமே வில்லங்கமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருந்து ஏதோ ஒரு அபசுரம் இந்த விஷயத்தில் இழையோடிக் கொண்டே வந்தது போல் ஒரு பிரமை.... கொலைகாரன் கொலையை முடித்துக் கொண்டு வந்த அந்த கணத்திலிருந்து நடந்ததை எல்லாம் மனதில் மறு ஒளிபரப்பு செய்து பார்த்தார்.

அவன் வேகமாக வந்தான்.... கவனமாக அட்டைப் பெட்டியைக் காரின் பின்சீட்டில் வைத்தான்.... வேகமாக வண்டியை ஓட்டினான்.... அவன் அவரிடம் பேச விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது..... மலை மேலே என்ன நடந்தது என்பதை அவன் விவரிக்கவில்லை.... அவர் கேட்ட கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தது ரத்தினச் சுருக்கமாக மட்டுமே.... அவன் இயல்பே குறைவாகப் பேசுவது தான் என்றாலும் அவன் காரை ஓட்டிய வேகமும், அவரை இறக்கி விட்டதும் காற்றாய் பறந்து மறைந்த வேகமும் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் இப்போது அவருக்குத் தோன்றியது. ஆளை விட்டால் போதும் என்ற மனநிலையே அவனை விரட்டியது போல் இருந்தது. அந்த மனநிலைக்குக் காரணம் என்ன என்பதற்கான பதில், மலையின் மேல் நடந்த சம்பவத்தில் இருக்கக்கூடும்.....

அதை விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள விடாதபடி அந்த நேரமாகப் பார்த்துத் தன்னிடம் போன் செய்து பேசிய எதிரிலிருந்த முட்டாள் மேல் அவருக்குக் கோபம் பொங்கியது. இப்போது வாயடைத்துப் போய் திகிலோடு பார்த்தபடி எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த இளைஞன் நேற்றிரவு அந்த ஐந்து நிமிடம் வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தால் இவ்வளவு குழப்பம் இருக்காது.... ஆனால் வந்த கோபத்தை வெளியே காட்டாமல் புன்னகை பூக்க அவரால் முடிந்தது. இன்னேரம் க்ரிஷ் வீட்டு நிலவரம் என்னவாக இருக்கும் என்று அவர் ஊகிக்க முயன்றார்.


க்ரிஷ் வீட்டில் கனத்த இறுக்கம் நிலவ ஆரம்பித்திருந்தது. அவன் தந்தையான மந்திரி கமலக்கண்ணனிடம் அவர் மனைவி பத்மாவதி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை “போன் போட்டுக் கேளுங்களேன்...என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் அவள் சொன்னபடி செய்த அவர், பின் சலித்துப் போய் “கொஞ்ச நேரம் சும்மா இரு. ஏதாவது தகவல் இருந்தா அவனுகளே போன் பண்ணிச் சொல்லுவாங்க....என்று கடுகடுத்தார்.

அவள் அடுத்ததாக தன் மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமாரிடம் சொல்ல ஆரம்பித்தாள். “உதய் நீயாவது கேளுடா

அவர்கள் மூவரில், க்ரிஷிற்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று முழு நம்பிக்கையோடு அலட்டாமல் அமர்ந்திருந்தவன் அவன் தான்.

கவலையோடு அமர்ந்திருந்த தாய் அருகே வந்தமர்ந்த உதய் “எதுக்கு பயப்படறே நீ. உன் பையன் என்ன சின்னக் குழந்தையா? 23 வயசுப் பையன். அவன் வேற எங்கயாவது போயிருப்பான். வந்துடுவான்....

“அவன் பைக் அங்கேயே நிக்குதுன்னு சொல்றாங்களேடா. பைக் இல்லாம எப்படிடா போயிருப்பான்?அவள் கவலை குறையாமல் கேட்டாள்.

“நார்மலான ஆளுன்னா நீ சொல்றது சரி. உன் பையன் தான் லூசாச்சேஎன்று சொல்லி உதய் சிரிக்க பத்மாவதி மூத்த மகனை முறைத்தாள்.

“அவனை ஏண்டா லூசுங்கற. அவன் ஜீனியஸ்

“ரெண்டும் ஒன்னு தான். அந்த ஜீனியஸ் ஏதாவதை ஆராய்ச்சி செஞ்சிட்டே நடந்தே போயிருப்பான்....

அப்படியும் இருக்குமோ என்கிற எண்ணம் அவளுக்கு நம்பிக்கை தந்தது. ஆனால் திடீரென்று இன்னொரு சந்தேகமும் வந்து தொலைத்தது. ஏண்டா, அவனை யாராவது கடத்திட்டு போயிருக்க மாட்டாங்களே....

ஒரு கணம் புருவங்களை உயர்த்தி தாயைப் பார்த்த உதய் குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தான். பத்மாவதி கோபப்பட்டாள். “தோளுக்கு மேல வளர்ந்த பையன்னு பார்க்க மாட்டேன். ஓங்கி அறைஞ்சுடுவேன். ஏண்டா இப்படி சிரிக்கறே

“உன் பையனைக் கடத்திட்டு போகிற அளவு ஒரு துர்ப்பாக்கியசாலி இருந்து அப்படிக் கடத்திட்டும் போயிருந்தா என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். அதான்....

“என்னடா நடந்திருக்கும்?

“கடத்தின ஒரு மணி நேரத்துல உன் பையன் கால்ல விழுந்து “தம்பி என்னை நீ தயவு செஞ்சு மன்னிச்சுடு. ஆள் தெரியாம கடத்திட்டேன். உன்னை எங்கே கொண்டு போய் விடணும்னு சொல்லு. அங்கேயே கொண்டு போய் விட்டுடறேன். இனி உன் வழிக்கு வர மாட்டேன்னு கதறி அழுது தொழிலுக்கே முழுக்கு போட்டு கண் காணாத தேசத்துக்கு ஓடிப்போயிடுவான்என்று உதய் சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான். 

கோபமும், சிரிப்பும் சேர்ந்து வர, பத்மாவதி கணவரைப் பார்த்தாள். பயப்பட ஆரம்பித்திருந்தாலும் கூட அவருக்கும் மூத்த மகன் சொன்னதைக் கேட்டுப் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. அப்படிப் புன்னகைத்தாலும் கூட அவருடைய உள்ளுணர்வு இளைய மகனுக்கு ஆபத்து தான் என்று சொல்ல ஆரம்பித்தது. அதற்கு ஒரு வலிமையான காரணமும் இருந்தது....


(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

 1. சுவாரசியத்தில் உங்கள் மற்ற நாவல்களை இது மிஞ்சி விடும் போல் இருக்கிறது. செமயா திகில் கிளப்பறீங்க. ஹீரோ(?) குடும்ப அறிமுகம் அருமை. மனம் பழையபடி அடுத்த வியாழன் சீக்கிரம் வரணும் என்று ஆசைப்படுது.

  ReplyDelete
 2. Super suspense sir. I really enjoy Thursday evenings because of your novels. Thank you.

  ReplyDelete
 3. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  ReplyDelete