சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 5, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 97



மாராவுக்கு அந்தக் காவியுடை மூலமாக மைத்ரேயனின் அலைகளில் லயிக்க  இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது. மைத்ரேயன் அந்த ஆடையைக் களைந்து சில நாட்கள் ஆகிவிட்டிருந்தபடியால் அவன் அலைகளின் சுவடுகள் மிக நுட்பமாகத்தான் அந்த ஆடையில் இருந்தன. ஆனால் மாரா அடைந்திருந்த சக்திகளுக்கு மைத்ரேயனின் அலைகள் அகப்படாமல் போகவில்லை. அந்த அலைகளில் லயித்து மாரா மைத்ரேயனை அந்த அலைகள் வழியாகவே நெருங்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் மைத்ரேயன் அவன் மனக்கண்ணில் தெரிந்தான். சிறிது சிறிதாக கவனத்தைக் குவித்து மைத்ரேயனின் இருப்பிடத்தையும் தன் அசாதாரண சக்தியால் மனத்திரைக்குக் கொண்டு வந்தான்.

மைத்ரேயன் ஒரு கட்டிலில் தியானத்தில் அமர்ந்திருந்தான். அவன் அருகே வேறொரு சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தான். சற்று தள்ளி இன்னொரு கட்டிலில் ஒரு இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தான்.

“மைத்ரேயா என்னைப் பார்” என்று மாரா மானசீகமாகக் கட்டளை பிறப்பித்தான். மைத்ரேயன் மூடியிருந்த கண்களைத் திடீர் என்று திறந்தான். மாராவின் கண்களும் மைத்ரேயன் கண்களும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. மைத்ரேயன் கண்களில் சலனம் இல்லை. அதிர்ச்சி இல்லாவிட்டாலும் குறைந்த பட்சமாய் ஆச்சரியமாவது ஏற்பட்டிருக்க வேண்டும் என்றாலும் அது கூட இல்லாமல் போனதை மாராவால் நம்ப முடியவில்லை. மைத்ரேயனின் கண்களில் பேரமைதி மட்டுமே தெரிந்தது.

மாராவின் கண்கள் அக்னி ஜூவாலைகளாக ஜொலிக்க ஆரம்பித்தன. கூர்மையாக அவை மைத்ரேயனை ஊடுருவின. மாரா பெரும் சக்தியைத் தனக்குள் உருவாக்கிக் கொண்டான். அவன் தன்னை மிக லேசாக்கிக் கொள்ள ஆரம்பித்தான். அவன் உடல் தானாக தரையில் இருந்து அரையடி உயர்ந்தது. அவன் பின்னால் நின்று கொண்டிருந்த அவனுடைய ஆட்கள் பிரமிப்புடன் அவனைப் பார்த்தார்கள். சற்று தொலைவில் நின்று கொண்டு அவன் என்ன செய்கிறான் என்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு இளம் பிக்கு தலைசுற்றி அப்படியே சுவரில் சாய்ந்து சறுக்கியபடி தரையில் சரிந்தார்.

ஆனால் மைத்ரேயன் கவனம் மாராவின் கண்களில் மட்டுமே நிலைத்தது. அவன் மாரா உட்கார்ந்திருந்த தரையில் இருந்து அரையடி உயர்ந்ததைப் பார்த்தானா, மாரா சம்யே மடாலயத்தில் இருப்பதை அறிந்தானா என்பதெல்லாம் தெரியவில்லை. மாராவைப் பார்த்தும் என்ன உணர்ந்தான் என்பதும் தெரியவில்லை. ஆனால் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

மாரா மைத்ரேயனை ஊடுருவி அவனை அறிய முயன்றான். என்ன விதமான மன அலைகளில் அவன் இருக்கிறான் என்பதை உணர முடிந்தால் அந்த இழைகளைப் பிடித்துக் கொண்டு அவை தொடர்புடைய அனைத்தையும் அவனால் உணர்ந்து விட முடியும். ஆனால் மைத்ரேயனுக்குள் மாரா வெற்றிடத்தையே பார்த்தான். எதுவும் இல்லாத சூனியம்..... மாரா திகைத்தான். மைத்ரேயன் அமைதியாக மறுபடி கண்களை மூடிக் கொண்டு தியானத்தைத் தொடர்ந்தான்.

இப்போதும் கூட மைத்ரேயனின் வெளிப்புறத்தை மாராவால் பார்க்க முடிந்த போதும் அவன் அறிய நினைத்த முக்கியமான உட்புறத்தின் கதவு சாத்தப்பட்டிருந்தது. இப்போது அந்த சூனியமும் காணக் கிடைக்கவில்லை....

மாரா தீப்பந்தங்களாக மின்னிய அவன் பார்வையால் கோபத்துடன் கையிலிருந்த காவியுடையைப் பார்க்க அந்தக் காவியுடை பற்றி எரிய ஆரம்பித்தது. மாரா எரியும் உடையை வீசி எறிந்தான். மைத்ரேயனுடன் இருந்த அலைத்தொடர்பு அறுந்து போனது. மறுபடி தரைக்கு வந்தான்.

மறு நாள் காலை பிக்குகள் வந்து பார்த்த போது கோங்காங் மண்டபத்தில் அரைகுறையாய் கருகிப் போயிருந்த ஒரு காவியைத் தவிர வேறெந்த வித்தியாசமும் வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை. மாராவும், மாறுவேடத்தில் இருந்த அவனுடைய இரு ஆட்களும் மடாலயத்திலிருந்து அதிகாலைக்குள் வெளியேறி இருந்தார்கள்.....



சானுக்கு சம்யே மடாலயத்தின் தலைமை பிக்குவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “மன்னிக்க வேண்டுகிறேன் ஆசானே. அவசியமாக இருந்தால் மட்டும் அழைக்க உத்தரவிட்டிருந்தீர்கள். அவசியம் மட்டுமல்ல. ஆபத்தும் வந்திருக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் தான் இப்போது தங்களை அழைத்திருக்கிறேன்.....”

அலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று அறிந்து விட்டிருந்த ஆசான் யோசித்து விட்டுக் கேட்டார். “ஆபத்து எந்த ரூபத்தில்?”

“மாரா ரூபத்தில்”

பேசப்படுவது மைத்ரேயன் அல்ல மாரா என்று அறிந்தவுடன் ஆசான் சொன்னார். “சுருக்கமாகச் சொல்”. மாரா பற்றி லீ க்யாங்கும் அறியட்டும் என்று அவருக்குத் தோன்றியது. உன்னைத் தூக்கிச் சாப்பிடுகிறவனும் இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவிக்கத் தோன்றியது.

”நேற்றிரவு மாரா வந்திருந்தான். கோங்காங் மணடபத்தில் ஏதோ ரகசிய வழிபாடு நடத்தினான். மைத்ரேயரின் காவி உடையை அக்னியால் கருக வைத்திருக்கிறான். இப்போது போய் விட்டான் என்றாலும் நாங்கள் தியானத்தில் லயிக்க முடியாத அளவு தீய சக்திகள் இந்த மடாலயம் முழுவதும் நிரம்பி இருக்கின்றன....”

“தியானம் செய்ய முடியா விட்டாலும் பிரார்த்தனை செய்ய முடியுமல்லவா. அதைச் செய்யுங்கள்.” என்ற ஆசான் இணைப்பைத் துண்டித்து விட்டார்.



லீ க்யாங் அடுத்த அரை மணி நேரத்தில் வாங் சாவொவிற்குப் போன் செய்தான். “நேற்று சம்யே மடாலயத்திற்கு மாரா நேராகவே போயிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. நாம் அங்கே நிறுத்தி இருந்த ஒற்றர்களிடம் விசாரித்து விட்டு எனக்கு உடனே தகவல் அனுப்பு.....”



சானுக்கு பைலகுப்பே மடாலயத்தில் இருப்பு கொள்ளவில்லை. சம்யேவில் மாரா பகிரங்கமாக பிரவேசித்தது அவன் கை ஓங்கி வருவதைத் தான் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் துஷ்டசக்திகளை அடக்கி காவல் சக்திகளாய் மாற்றி விட்டிருந்த பத்மசாம்பவாவின் வெற்றி இன்று முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதையும், அதோடு மைத்ரேயரின் காவி எரிப்பையும் அவரால் சகிக்க முடியவில்லை. மைத்ரேயருக்கு ஏதோ வகையில் ஆபத்து நெருங்குவதை அவர் உள்மனம் உணர்ந்தது. இந்த நேரத்தில் மைத்ரேயர் அருகில் இருக்க வேண்டும் என்று அவர் மனம் விரும்பியது. லீ க்யாங் ஏற்பாடு செய்திருக்கும் உளவாளிகளை ஏமாற்றி விட்டு எப்படிச் செல்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார்.



சேகர் தேவை மறுபடி சந்தித்த போதும் தேவ் கருப்புக் கண்ணாடியுடனும், கோட்டு சூட்டுடனும் தான் இருந்தான். தான் எடுத்திருந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் சேகர் தேவிடம் தந்தான். தேவ் முதலில் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தான். எல்லாவற்றிலும் மைத்ரேயன் இருந்தான். சேகர் அந்தப் புகைப்படங்களில் கூட இருக்கும் மற்றவர்களை தேவுக்கு அறிமுகப்படுத்தினான். ”இது கௌதம் அந்த வீட்டின் சின்னப் பையன்........ இது வருண், என் மகன்..... இது அக்‌ஷய்.... இது சஹானா... இது அந்த வீட்டுப் பாட்டி.....”

பெரும்பாலான புகைப்படங்கள் வீட்டின் முதல் மாடி ஹாலில் எடுக்கப்பட்டதாகவே இருந்தன. சில புகைப்படங்கள் வீட்டு வாசலிலும், சில படங்கள் மற்ற ஜன்னல்கள் அருகில் அவர்கள் நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்டவையாக இருந்தன. சேகர் தன் வீட்டு மாடிப் பகுதியில் இருந்து எடுக்க முடிந்தவை.... தேவ் தலையசைத்தான். அவன் மைத்ரேயனை விட அக்‌ஷயை நிறைய ஆராய்ந்தான்.

அதைக் கவனித்த சேகர் ஏளனமாகச் சொன்னான். “இவன் என்னேரமும் மனைவி, குழந்தைகள் கூடவே தான் இருப்பான். சமயத்தில் மனைவிக்கு சமையலுக்கு உதவுவதையும் பார்த்திருக்கிறேன். பெண்டாட்டி தாசன்.... இவனுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை..... நீங்கள் அந்த திபெத் பையன் விஷயத்தில் நடவடிக்கை எடுத்த பிறகு எனக்கும் இவனிடம் கொஞ்சம் வேலை இருக்கிறது.....” அவன் கடைசி வார்த்தைகளைச் சொன்ன போது வெறுப்பும் ஆத்திரமும் வெளிப்பட்டது.

தேவ் மெல்ல கேட்டான். “என்ன செய்வதாக உத்தேசம்?”

“அவன் தன் வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஏதாவது செய்ய வேண்டும். என் மனைவியும் மகனும் என் சக்தியை உணர வேண்டும்” சேகர் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

மனிதனின் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லையா என் தேவ் வியந்தான். அமானுஷ்யன் பாதுகாப்பில் அந்த திபெத்தியச் சிறுவன் இருக்கிறான் என்று தெரிந்தவுடனேயே தொகையை இரட்டிப்பாக்கி கேட்க, லீ க்யாங்கும் ஒத்துக் கொண்டிருக்கிறான். ஒன்றரைக் கோடி கிடைத்தாலும் தப்பித்தவறி கூட அமானுஷ்யன் நெருங்க முடிந்த அளவு தூரத்தில் இருக்கும் உத்தேசம் தேவுக்கு இல்லை. அப்படிப்பட்ட ஒருவன் மறக்க முடியாதபடி ஏதாவது செய்ய வேண்டும் என்று இவன் ஆசைப்படுகிறான். அதீத வெறுப்பும் அதீத அன்பைப் போலவே முழுமையாக ஒருவனை சிந்திக்க விடுவதில்லை.

சேகரின் வெறுப்பைப் பற்றி யோசிக்கையில் தேவுக்கு மூளையில் ஒரு பொறி தட்டியது. மெல்ல சேகரிடம் கேட்டான். “நீ நினைப்பது போல் செய்ய உனக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். அப்படிச் செய்தால் உன் விருப்பமும் நிறைவேறும். அதுமட்டுமல்லாமல் உனக்கு நான் ஐந்து லட்ச ரூபாயும் தருகிறேன். செய்வாயா?”

சேகருக்கு அதிர்ஷ்டம் இப்படி மறுபடி மறுபடி தன் கதவைத் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏற்கெனவே ஐந்து லட்சம் கிடைத்திருக்கிறது. இதுவும் சேர்ந்தால் பத்து லட்சம். ஆனாலும் மகிழ்ச்சியை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் கேட்டான். “அவர்கள் கொடுப்பதாகச் சொல்லி இருப்பதில் நீங்கள் சொல்லும் ஐந்து லட்சம் சேராதே?”

“அது தனி. இது தனி. இது நான் கொடுப்பது”

சேகருக்குத் தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. “சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும்.....?”

“நான் சொல்கிற நாளில் நீ ஒரே ஒரு நாளுக்கு உன் மகனைக் கடத்திக் கொண்டு போய் எங்காவது ஒளித்து வைத்துக் கொள்கிறாயா?”

சேகர் உடனே சம்மதித்தான்.

(தொடரும்)

என்.கணேசன்



7 comments:

  1. Superb sir. Very thrilling.

    ReplyDelete
  2. சுஜாதாMay 5, 2016 at 9:05 PM

    அதகளம். செம சிட்டுவேஷன்.

    ReplyDelete
  3. "அதீத வெறுப்பும் அதீத அன்பைப் போலவே முழுமையாக ஒருவனை சிந்திக்க விடுவதில்லை"

    Superb Anna..

    Thanks for sharing..

    ReplyDelete
  4. I admire the creativity in you - in telling a unique story - in a unique manner.

    ReplyDelete
  5. Sir, when this one will come as a book? Its really having so much to influence me.

    ReplyDelete