சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 16, 2016

பிபிசி கவனத்தை ஈர்த்த யோகி!

மகாசக்தி மனிதர்கள் 58

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த ரமானந்தனுக்கு பதினெட்டு வயதிலேயே திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்த்து. ஆனால் இமயமலையும், அதன் சக்தி வாய்ந்த யோகிகளும் அவர் மனதை நிறையவே ஈர்க்க அவர் குடும்பத்தை விட்டு இமயமலைக்குப் பயணமானார். மகன் மனதை மாற்ற முடியாத அவருடைய தந்தையாருக்குத் தன் பிள்ளை அங்கே போய் கஷ்டப்படுவானோ என்று கவலை அதிகம் இருந்தது. செல்வந்தரான அவர் நிறைய சொத்துக்கு அதிபதியாக இருந்தார். அதனால் எங்கிருந்தாலும் விலாசம் தெரிவிக்கும்படியும் செலவுக்குப் பணம் அனுப்புவதாகவும் அவர் மகனிடம் சொல்லி அனுப்பினார்.

இமயமலையில் பல சாதுக்களையும், யோகிகளையும் கண்டு அவர்களில் சிலரிடம் சில காலம் தங்கிக் கற்ற ரமானந்தன் கடைசியில் கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரியில் இருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள உத்திரகாசியில் ஒரு குகையில் நிரந்தரமாகத் தங்கி தியானங்களில் லயிக்க ஆரம்பித்தார். சில நாட்களுக்கு ஒரு முறை நகருக்கு வந்து, அவர் அளித்திருந்த விலாசத்திற்கு தந்தை அனுப்பி வைத்திருக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அதில் சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டு மறுபடி குகைக்குச் சென்று விடும் வழக்கத்தை சில காலம் ரமானந்தன் பிற்பற்றினார்.

ஒரு துறவி ரமானந்தனின் இந்த வழக்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த இளைஞனைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  ஒரு நாள் ரமானந்தனை அழைத்து அவர் சொன்னார். எல்லாவற்றையும் விட்டு விட்டு இமயம் வந்த உனக்கு உன் தந்தையின் பணத்தை விட முடியவில்லையா? எத்தனை காலம் தான் உன் தந்தை உனக்குப் பணம் அனுப்புவார்? அதன் பின் என்ன செய்வாய்?

அந்தக் கேள்வி ரமானந்தனை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. தந்தை, மனைவி, குழந்தை குடும்பம் அத்தனையும் விட்டு விட்டு வந்தாலும் தந்தையின் பணத்தை விடாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது நியாயமா? இந்தத் துறவி கேட்டது போல இது எத்தனை காலம் நடக்கும்? இமயத்தில் எத்தனையோ சாதுக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் அனுப்புகிறார்கள்? அவர்களால் வாழ முடிவதில்லையா?

அன்றிலிருந்து தந்தையின் பணம் பெற்றுக் கொள்வதை ரமானந்தன் நிறுத்திக் கொண்டார். மகனுக்கு அனுப்பிய பணம் திரும்பி வந்தவுடன் அவர் வேறு இடத்திற்குப் போயிருக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் நினைத்தார்கள். ஆனால் வேறு விலாசம் தெரிவிக்கப்படவில்லை, ரமானந்தனிடம் இருந்து பின் எந்தத் தகவலும் இல்லை என்றான போது ரமானந்தன் இறந்தே போய் விட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணி விட்டார்கள்.

ரமானந்தன் தியானத்தில் தீவிரமடைந்தார். அவர் வசிக்கும் குகைக்கு கரடிகளும், பாம்புகளும் வரும் என்றாலும் அவை தியானத்தில் இருந்த அவருக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. ரமானந்தனின் தியானம் ஆழப்பட்டது. அது போன்ற ஒரு தியான நேரத்தில் தன்னால் உயிரோடு மண்ணில் புதைந்திருக்க முடிவது போல ஒரு காட்சி தோன்றி மறைந்தது.

ரமானந்தனுக்கு அதை முயன்று பார்க்கும் ஆசை ஏற்பட்டது. அது நிகழ்ந்தது 1948 ஆம் ஆண்டு. மற்றவர்கள் உதவியுடன் அந்த ஆண்டின் இறுதியில் 24 மணி நேரம் மண்ணில் புதைந்திருந்து ரமானந்தன் சாதனை செய்தார்.  1951 ஆம் ஆண்டில் 28 நாட்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருக்க அவரால் முடிந்தது. இந்த மகாசக்தியைப் பெற்ற பிறகு ரமானந்தன், ரமானந்த யோகி என்ற பெயராலேயே மற்றவர்களால் அழைக்கப்பட்டார்.

இது போன்ற சாதனைகளால் அவர் பெயர் பிரபலமாகவே விஞ்ஞானிகள் கவனம் அவர் பக்கம் திரும்பியது. 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி புது டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (All India Institute of Medical Sciences, New Delhi) அவரை வைத்து உயர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள்.  இந்தப் பரிசோதனை அவரை மண்ணில் புதைய வைத்து நடக்கவில்லை. மாறாக அவர் அது போல் மண்ணில் புதைந்து இருக்கும் போது மூச்சு நிறுத்தப்பட்டு செய்யும் இதயத்துடிப்பு மற்றும் நாடித் துடிப்பு நிறுத்தங்களை வெளியில் இருக்கும் போதே செய்து காட்டும் பரிசோதனைகளாக இருந்தன. ECG  போன்ற இதயத் துடிப்பு ஆராய்ச்சிக் கருவிகளை வைத்து இரு சிறப்பு மருத்துவர்கள் (Drs. Wenger and Bagehi) பரிசோதித்த போது ரமானந்த யோகி இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு குறைத்துக் கொண்டே வந்து சில வினாடிகள் நிறுத்தியும் காட்டினார். அதே பரிசோதனையின் தொடர்ச்சியாக புதுடெல்லியின் இர்வின் ஆஸ்பத்திரியில் ஒரு ரேடியாலஜி சிறப்பு மருத்துவர் (Dr. N. G. Gadekar) முன்னிலையிலும் நவீன உபகரணங்கள் கண்காணிப்பில் ரமானந்த யோகி இதை நிகழ்த்திக் காட்டினார்.

இந்த அறிவியல் அங்கீகாரம் மற்ற விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. சர்வதேச மூளை ஆராய்ச்சி நிறுவனத்தின் ( International Brain Research Organization) உறுப்பினரும் இந்தியாவைச் சேர்ந்தவருமான ஆனந்த் என்பவர் அதே நிறுவனத்தைச் சேர்ந்த சினா என்பவருடன் சேர்ந்து ரமானந்த யோகியை ஆராய்ச்சி செய்தார். 1961 ஆம் ஆண்டில் அவர் காற்று புகாத கண்ணாடி மற்றும் உலோகப் பெட்டிகளில் ரமானந்த யோகியை அடைத்து வைத்து இரண்டு ஆராய்ச்சிகள் நடத்தினார்.

அவர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச ஆக்சிஜன் ஒரு மணிக்கு 19.5 லிட்டர் ஆகும். முதல் பரிசோதனை எட்டு மணி நேரம் நடந்தது. இதில் சராசரியாக மணிக்கு 12.2 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே அவர் பயன்படுத்தினார். இரண்டாவது பரிசோதனை பத்து மணி நேரம் நடந்தது. இதில் அவர் சராசரியாக மணிக்கு 13.3 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தினார். இரண்டு பரிசோதனைகளிலும் ஆரம்பத்தில் இருந்து ஆக்சிஜன் பயன்படுத்துவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறார். அதற்கேற்றாற் போல கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

குறைந்தபட்ச ஆக்சிஜன் உட்கொள்வது குறையும் பட்சத்தில் ஒரு மனிதன் உயிர் வாழ்வதே கஷ்டம் என்பது ஒரு பக்கம் இருக்க ஆக்சிஜன் குறையக் குறைய மூளை, இதயம் முதலான முக்கிய உறுப்புகளில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளும் மிக அதிகம். அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆக்சிஜன் மட்டுமே உபயோகித்தும் எந்தப் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லாமல் ரமானந்த யோகி இயல்பாக இருந்தது விஞ்ஞானிகளை வியக்க வைத்தது.    

இந்த ஆராய்ச்சியும் இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளும் பிபிசி தொலைக்காட்சியின் கவனத்தைக் கவர்ந்தது.  அந்தத் தொலைக்காட்சி ஆராய்ச்சியாளர் ஆனந்த் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் முன்னிலையில் மற்ற நிபுணர்கள் மேற்பார்வையில் இன்னொரு முறை அந்த ஆராய்ச்சியை நடத்த வேண்டிக் கொண்டார்கள். அவர் சம்மதிக்கவே 1970 ஆம் ஆண்டு ரமானந்த யோகியை காற்று புக முடியாத ஒரு பெட்டியில் வைத்து ஆறு மணி நேர ஆராய்ச்சி நடந்தது.  அதிநவீன உபகரணங்களைக் கொண்டு நடந்த இந்த ஆராய்ச்சியின் முடிவில் அவரை பிபிசி குழு பேட்டி கண்டது.

அந்த ஆராய்ச்சியின் போது அவர் என்ன செய்கிறார், எந்த விதமான அனுபவங்களை உணர்கிறார் என்று கேட்ட போது ரமானந்த யோகி சொன்னார். “இரு புருவங்களுக்கு மத்தியில் கவனத்தை நிறுத்துவேன். சில முறை மூச்சு விட்ட பின் ஒரே இருட்டாகி விடும். எப்போதாவது ஒன்றிரண்டு ஒளிப் பிழம்புகள் நகர்வது போல் தெரியும்......”. 

தியானம், துறவு வாழ்க்கை என்று வாழ்ந்த ரமானந்த யோகி தன் பிற்காலத்தில் மறுபடி இல்வாழ்க்கைக்குத் திரும்பினார் என்பது வித்தியாசமான தகவல். அவர் இறந்தே போய் விட்டார் என்று நினைத்திருந்த குடும்பத்தினருக்கு அவர் திரும்பி வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்படித் திரும்பிய பிறகு அவர் ஒரு மகனுக்கும் தந்தையானார். அவருடைய மகளும், மகனும் கூட யோகா பயின்றார்கள். துறவு வாழ்க்கை சலித்து இல்வாழ்க்கையில் ஈர்ப்பு ஏற்படும் போது, உலகத்தின் பார்வைக்காக துறவு வேடம் பூண்டு, ரகசியமாய் கள்ளத்தனமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் மறுபடி தன் முந்தைய வாழ்க்கைக்கே வெளிப்படையாகத் திரும்பிய அந்த நேர்மையில் ரமானந்த யோகி வித்தியாசமானவரே அல்லவா?

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 25.09.2015

(மகாசக்தி மனிதர்கள் தற்போது வண்ணப்படங்களுடன் நூலாக தினத்தந்தி பதிப்பில் வெளியாகி உள்ளது. ஆன்மிக, அற்புதசக்திகளில் ஆர்வம் உள்ள வாசகர்கள் தவறாமல் வைத்திருக்க வேண்டிய நூல் அது என்பதால் வாங்கிப் பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

No comments:

Post a Comment