சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 21, 2015

நீரிலும் எரியும் விளக்கு!


மகாசக்தி மனிதர்கள் - 37

து வரை நாம் பார்த்த யோகிகள் அனைவரும் தங்கள் காலத்தவர்களை ஆச்சரியப்பட வைத்தவர்கள். அவர்களில் சிலர் தங்களுக்கென்று சீடர்களையும், ஆசிரமங்களையும் உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் புகழ் பெற்றவர்களாகவும், சீடர்களால் ஆராதிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கலாம். ஆனால் யாருமே கடவுளுக்கு இணையாக பூஜிக்கப்பட்டவர்கள் அல்ல. நாம் இனி அற்புதங்கள் செய்து காட்டி, பக்தர்கள் பலரைத் தன் காலத்திலேயே ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பூதவுடலை நீத்த பின்பும் லட்சக்கணக்கான மக்களால் கடவுளாகவே தொடர்ந்து பூஜிக்கப்பட்டு வரும் ஒரு மகானைப் பற்றி பார்ப்போமா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு பிராமணத்தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர்.  பிறந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முஸ்லீம் தம்பதியிடம் ஒப்படைக்கப் பட்டவர்.  சில ஆண்டுகள் அந்த முஸ்லிம் தம்பதியால் வளர்க்கப்பட்ட அவர் அந்த முஸ்லீம் வளர்ப்புத்தந்தையின் மரணத்திற்குப் பின் உள்ளூர் ஜமீந்தாரும், திருப்பதி வேங்கடநாதனின் பரமபக்தருமான கோபால்ராவ் தேஷ்முக் என்பவர் ஆதரவில் வாழ்ந்தவர். கோபால்ராவ் தேஷ்முக்கின் மரணத்திற்குப் பின் ஷிரடி என்ற ஊரில் வந்து சேர்ந்து அங்கேயே வாழ ஆரம்பித்தவர். ஊர் பெயரைச் சொன்னவுடன் அந்த மகான் யார் என்று யூகித்திருப்பீர்கள். ஆம் அவர் தான் ஷிரடி சாய்பாபா.

ஷிரடி பாபா வாழ்க்கை வரலாறு பற்றி எத்தனையோ பேர் எழுதியிருந்தாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுபவை மூன்று நூல்கள். அவை-

1)      ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே ஷிரடியில் வாழ்ந்து தன் நேரடி அனுபவங்களை ஷிரடி டயரி (Shirdi Diary) என்ற தலைப்பில் கணேஷ் ஸ்ரீகிருஷ்ண காபார்டே (Ganesh Shrikrishna Khaparde )என்பவர் எழுதிய நூல்


2)      ஷிரடி பாபா வாழ்ந்த காலத்திலேயே அவர் ஷிரடியில் வாழ்ந்த கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் (Govindrao Raghunath Dabholkar) என்ற இன்னொரு பக்தர் ஸ்ரீ சாய் சத்சரிதம் (the Shri Sai Satcharita)  என்ற பெயரில் எழுதிய நூல். இவரை ஷிரடி சாய்பாபா ஹேமத்பந்த் என்ற செல்லப்பெயரில் அழைத்தார். இதன் மூலம் இவருக்கு ஷிரடி பாபாவிடம் இருந்த நெருக்கம் தெரிகிறது. இவர் இந்த நூலை மராத்தியில் எழுதி இருக்கிறார்.

3)      சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு (Life of Sai Baba) என்ற பெயரில் பி.வி. நரசிம்ம ஸ்வாமி (B.V. NARASIMHA SWAMI) என்பவர் எழுதிய நான்கு தொகுதிகள் கொண்ட நூல். இது ஷிரடி சாய்பாபாவின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டது என்ற போதும் ஷிரடி சாய்பாபா காலத்தில் வாழ்ந்தவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டறிந்து தொகுத்த நூல்.

இந்த நூல்களின் மூலமாக ஷிரடி பாபாவின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்துடன் அவர் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களையும், அவர் அறிவுறுத்திய உபதேசங்களையும், நம் தலைப்பிற்கு உட்படக்கூடிய மற்ற சுவாரசிய நிகழ்வுகளையும் பார்ப்போமா?


முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டதால் இஸ்லாம் மார்க்கத்திலும், கோபால்ராவ் தேஷ்முக்குடன் சில ஆண்டுகள் வாழ்ந்ததால் இந்து முறை வழிபாட்டிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த ஷிரடி சாய்பாபா தன் இளமையிலேயே இரண்டு மார்க்கங்களின் சாராம்சத்தையும் தனக்குள் முழுமையாக கிரகித்துக் கொண்டவராக விளங்கினார். உலகியல் வாழ்க்கையில் எந்த ஆர்வமும் இல்லாமலிருந்த அவர் ஷிரடி மண்ணில் காலடி வைத்த போது அவரைப் பைத்தியம் என்றே அந்த ஊர் மக்கள் எண்ணினார்கள்.


அதற்குக் காரணம் இருந்தது. பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்தடியிலேயே வாழ்ந்த அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்தார். அடிக்கடி தியானத்தில் ஆழ்ந்து விடும் அவருக்கு அந்த நேரங்களில் சுற்றுப்புற பிரக்ஞை சுத்தமாய் இருக்கவில்லை. வெப்பமும், குளிரும், மழையும், காற்றும் அவரைப் பாதித்தது போல் தெரியவில்லை. அடிக்கடி நீண்ட நேரம் பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதிகளில் சஞ்சரிக்கும் பழக்கமும் அவரிடம் இருந்தது. அந்தக் காட்டு விலங்குகளும் அவரைப் பயப்படுத்தியது போல் தோன்றவில்லை. தோற்றத்திலும் அவர் எந்தக் கவனமும் செலுத்தாதவராக இருந்தார்.


பைத்தியம் போல் தெரிந்த இளைஞன் சாய்பாபாவை ஆரம்பத்தில் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்த ஷிரடி மக்கள் நாட்போக்கில் அவரை தங்களுள் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள். வேப்ப மரத்தின் அடியில் மழை, வெயில், குளிர் முதலான இயற்கை சக்திகளின் தாக்கத்தில் அவர் வாழ்வதைக் கண்டு இரங்கிய அவர்கள் அவர் முஸ்லீமாகவும் தோன்றியதால் ஷிரடியில் இருந்த ஒரு பாழடைந்த மசூதியில் தங்க அவரை அனுமதித்தார்கள். (அந்த பாழடைந்த மசூதியே ஷிரடி சாய்பாபா கடைசிவரை தங்கிய வசிப்பிடம் ஆகியது).


தியானத்தில் ஆழ்ந்திருக்காத போது சாய்பாபா கபீரின் பாடல்களை வசீகரிக்கும் குரலில் பாடவும் செய்தார். பாடிக்கொண்டே ஆடவும் செய்தார். அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் பாரசீக மொழியிலோ, அராபிய மொழியிலோ இருந்ததால் உள்ளூர் மக்களுக்கு அப்பாடல்களின் பொருளும் புரியவில்லை. அதனால் அவர்கள் பைத்தியமாக நினைத்ததில் தவறில்லை என்றே எண்ணினார்கள்.


ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தியானமும், ஆடல் பாடலும் இல்லாத நேரங்களில் சாய்பாபா ஊர் மக்களில் நோயாளிகளைக் கண்டு அவர்கள் நோய் தீர்க்க உதவவும் ஆரம்பித்தார். அவருக்கு மூலிகைகள், மாற்று மருத்துவ முறைகள் குறித்த ஞானம் சிறப்பாகவே இருந்தது. கடுமையான நோய்களுக்கும் எளிமையான மருந்துகள் தந்து குணப்படுத்திய அவர் தன் சேவைக்கு யாரிடமும் காசு வாங்கவில்லை. அது மட்டுமல்லாமல் உபயோகப்படுத்தாமல் வெறுமனே விட்டிருந்த ஊர்ப் பொது இடங்களில் பூச்செடிகள் நட்டு தோட்டமாக்கினார். தினமும் குடங்களில் தானே தண்ணீர் சுமந்து கொண்டு போய் அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, வளர்த்து பூக்களைப் பறித்து கோயில்களுக்கும், மசூதிகளுக்கும் தர ஆரம்பித்தார்.


ஊர்மக்கள் தொடர்பில் ஆரம்பத்தில் அதிகம் இல்லாதிருந்த சாய்பாபாவின் பிற்கால இத்தகைய செயல்களால் ஊர்மக்களும் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். இரவு நேரங்களில் அவரைச் சந்திக்க வரும் மக்களுக்கு இருட்டு பெரிய அசவுகரியமாக இருந்தது. எனவே சாய்பாபா ஊரில் இருந்த இரண்டு எண்ணெய் வணிகர்களிடம் எண்ணெயைத் தானமாக வேண்டினார்.  சில நாட்கள் எண்ணெயை சாய்பாபாவிற்குத் தந்த அந்த இரண்டு வணிகர்களும் ஒரு நாள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு தங்களிடம் எண்ணெய் இல்லை என்று பொய் சொல்லி விட்டார்கள்.

சாய்பாபா சரி என்று சொல்லி காலி எண்ணெய் டின்னுடன் திரும்பி விட்டார். அந்த இரண்டு வணிகர்களுக்கும் அவர் என்ன செய்கிறார், எப்படி சமாளிக்கிறார் என்று அறியும் ஆர்வமும் இருந்தது. அதனால் அவர்கள் இருவரும் அவரைப் பின் தொடர்ந்து அவரைக் கண்காணித்தார்கள்.


தான் வசிக்கும் பாழடைந்த மசூதிக்கு சாய்பாபா சென்ற போது இருட்ட ஆரம்பித்திருந்தது. அங்கு சென்றதும் அவர் தண்ணீர் கூஜாவில் இருந்த நீரை காலி எண்ணெய் டின்னில் ஊற்றி நன்றாகக் குலுக்கினார். பின் அந்த நீரைத் தன்னிடம் இருந்த நான்கு மண்விளக்குகளிலும் ஊற்றினார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த வணிகர்களுக்கு ஒரே சிரிப்பு. இந்தப் பைத்தியம் தண்ணீரிலும் விளக்கு எரியும் என்று நம்புகிறதே என்று உள்ளுக்குள் பரிகாசம். சாய்பாபா அந்த மண்விளக்குத் திரிகளில் நெருப்பைப் பற்ற வைத்தார். அதிசயமாய் விளக்குகள் எரிந்தன. வணிகர்களுக்குத் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. ஆனாலும் விளக்குகள் உடனடியாக அணைந்து விடும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் விளக்குகள் அணையாமல் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருந்தன. அப்போது தான் சாய்பாபா தாங்கள் நினைத்தது போல் பைத்தியக்காரரோ சாதாரண மனிதரோ அல்ல என்பதையும், மகான் என்பதையும் அவர்கள் இருவரும் உணர்ந்தார்கள். இத்தனை சக்தி வாய்ந்த மனிதர் தங்கள் பொய்யை அறியாதிருக்க மாட்டார், அவர் தங்களைச் சபித்தாலும் சபிக்கலாம் என்ற பயம் அவர்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது. உடனடியாக அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அவர்கள் தங்கள் பிழையைப் பொறுத்தருளும்படி வேண்டிக் கொண்டார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி- 01.05.2015

3 comments: