சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 10, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 62


சீன உளவுத்துறையின் முந்தைய தலைவர் தொடர்ந்து சொன்னார். “அவன் எனக்குப் போன் செய்த போது மணி இரவு ஒன்பது. எங்கே அவனைப் பார்த்தாய் என்று நான் கேட்டதற்கு அவன் வீட்டருகே இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் பார்த்ததாகப் பரபரப்புடன் பதில் சொன்னான். அது பற்றிய முழு விவரங்கள் சொல்லும்படி நான் சொன்னதற்கு மறுநாள் காலை நேரில் வந்து சொல்வதாகச் சொன்னான். அது மட்டுமல்லாமல் என்னை அழைத்துக் கொண்டு போய் ஆளையும் காண்பித்துத் தருவதாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவன் வரவில்லை. அவன் இறந்து விட்டதாகச் செய்தி மட்டும் தான் எனக்கு வந்தது

லீ க்யாங் நெற்றி சுருங்கக் கேட்டான். “எப்படி இறந்தான்?

“விபத்து. அதிகாலை நடைப்பயிற்சிக்குப் போனவனை ஏதோ வாகனம் இடித்து விட்டுப் போயிருக்கிறது. விபத்தைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பிணத்தைப் பார்த்து விட்டு யாரோ போன் செய்திருக்கிறார்கள். அன்று இடிந்து போன என் நண்பர் இன்று வரை மீளவில்லை. ஒரு நடைப்பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்....சொல்லும் போது அவர் குரலில் வருத்தம் இருந்தது.

லீ க்யாங் கேட்டான். “விசாரணையில் துப்பு எதுவும் கிடைக்கவில்லையா?

“என்னிடம் இரவு ஒன்பது மணிக்கு அவன் பரபரப்போடு போன் செய்ததால் அவன் மாலைக்கு மேல் தான் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும் என்று எண்ணி முந்தைய நாள் மாலையில் இருந்து அவனுடன் இருந்தவர்கள் எல்லாம் யார் என்று ஆரம்பித்து மறுநாள் காலையில் அவனை பார்த்த ஆட்கள் யார் என்பது வரைக்கும் ஆழமாகவே விசாரித்துப் பார்த்து விட்டேன். பயன் இருக்கவில்லை.... சாயங்காலம் ஆறு மணி வரை அவனுடன் அவன் நண்பன் ஒருவன் இருந்திருக்கிறான். அதற்குப் பின் அவன் வீடு திரும்பி இருக்கிறான். அப்படி வீட்டுக்கு வரும் போது அவன் அந்த ஆளைப் பார்த்திருக்க வேண்டும்.... ஆனால் அவன் அதற்குப் பின் போனில் பேசிய ஒரே ஆள் நான் தான். அவன் வீட்டில் அன்று யாரும் இருக்கவில்லை. அவர்கள் எல்லாம் ஒரு சுற்றுலாவுக்குப் போயிருந்ததால் வீட்டில் இவன் தனியாகவே இருந்திருக்கிறான். வீட்டில் ஆட்கள் இருந்திருந்தால் அவர்களிடம் இவன் கூடுதலாக ஏதாவது சொல்லி இருக்கலாம். எந்த அடுக்கு மாடி என்று சொல்லி இருந்திருக்கலாம். அவன் வீட்டைச் சுற்றி சுமார் இருபது அடுக்குமாடிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் யாராவது புதிதாகக் குடி வந்திருக்கிறார்களா என்று கூட விசாரித்துப் பார்த்து விட்டேன்.... சந்தேகப்படுகிற மாதிரி ஒருவர் கூடக் கிடைக்கவில்லை. அவன் வீட்டில் அவன் அறையிலும் போய் ஏதாவது தடயம் சிக்குகிறதா என்று தேடிப்பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை...  தீர்க்க முடியாத வழக்குகளில் அதுவும் ஒன்றாகி விட்டது.  அன்று உளவுத்துறையின் தலைவனாக நான் இருந்தும் கூட என் நண்பனின் மகன் கொலையாளியை என்னால் கண்டு பிடிக்க முடியாதது இன்று வரை எனக்கு உறுத்தலாகவே இருக்கிறது.....கடைசி வாக்கியத்தைச் சொல்கையில் அவர் குரல் கரகரத்தது. 

லீ க்யாங் சொன்னான். “அவனிடம் அந்தக் கிழவர் சொன்னது போல அவர்கள் உயிரை எடுப்பதில் மிக வேகமாக இருந்திருக்கிறார்கள்....

அவர் ஆமென்று தலையசைத்தார். லீ க்யாங் சொன்னான். “ஆனால் எனக்கு அந்தக் கிழவர் அவர்கள் கண்கட்டு வித்தை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போல் சொன்னதில் உடன்பாடில்லை....

அவர் அவனைக் கேள்விக்குறியோடு பார்த்தார். அவன் சொன்னான். “அந்தக் குகை வாசலில் ஒரு பாறையை உருட்டி வைத்து மறைத்திருந்தாலோ, அடர்த்தியான செடி கொடிகளை வைத்து மறைத்திருந்தாலோ யாரும் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்....

அவன் அனுமானம் புத்திசாலித்தனமாகவே அவருக்குப் பட்டாலும் அவர் சொன்னார். “நான் முன்பே சொன்னது போல அவன் மலைகளுக்கும் காடுகளுக்கும் நன்றாகப் பழக்கமானவன். புத்திசாலியும் கூட. அதனால் அது போன்ற சின்னத் தந்திரங்களால் அவன் ஏமாந்து போயிருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி இரவில் ஏமாந்து போயிருந்தாலும் அவன் மறுநாள் பகலில் போகையில் கண்டுபிடித்திருப்பான்.....

அவர் சொல்வதை மறுக்க முடியா விட்டாலும் கூட லீ க்யாங்குக்கு இது போன்ற கண்கட்டு வித்தைகளை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கொண்டு இது போன்ற சம்பவங்களை எப்படித் தான் நம்புவது?

அவர் அவன் ஆரம்பித்த விஷயத்திற்கு வந்தார். “நீ ஆரம்பத்தில் சொன்ன  சம்பவமும், நான் சொன்னதைப் போல தடயம் எதுவும் கிடைக்காத ஒன்றாக இருந்தால் அதற்குப் பின்னால் அந்தக் குழு இருக்கிறது என்று தாராளமாக நீ முடிவெடுத்துக் கொள்ளலாம்.

அவன் என்ன முடிவெடுத்தான் என்பதை அவன் முகபாவனை மூலம் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மகா அழுத்தக்காரன் என்று மனதில் எண்ணிக் கொண்டார். அவன் அமைதியாக யோசிக்கையில் அவர் மனதிலும் பல யூகங்கள் வந்து போயின. திடீரென்று அவர் மனதில் ஒரு சந்தேகம் உதித்து அது விஸ்வரூபம் எடுத்தது.

அந்தக் குகைக் கோயிலில் அவர்கள் பேசிக் கொண்டதை யோசித்துப் பார்க்கையில் அவர்கள் சொன்ன மாராவின் அவதாரம் முன்பே பிறந்து பல வித்தைகள் கற்று புத்தரின் அவதாரமான மைத்ரேயனை வீழ்த்துவதற்காக காத்திருக்கிறது என்றால் பிற்காலத்தில் மைத்ரேயன் பிறப்பும் நிச்சயமாகவே இருக்க வேண்டும்..... அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன் மைத்ரேயன் பிறப்பு பற்றி எழுந்த பேச்சுகள் நிஜமாகவே இருக்க வேண்டும். அப்படியானால் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்த சில குழந்தைகள் மைத்ரேயனாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது உண்மையல்ல. இப்போது மைத்ரேயன் உயிரோடு இருப்பதால் அந்த ரகசியக்குழுவின் இயக்கம் லீ க்யாங் கவனம் வரை வந்திருக்கிறதோ?

அவர் மெல்ல அவனிடம் கேட்டார். “அப்படியானால் மைத்ரேயன் பிறப்பு பற்றி பத்மசாம்பவா சொன்னதாக அன்று எழுந்த பேச்சு கற்பனை அல்ல. சரி தானே

லீ க்யாங் ஆமோதிக்கவோ மறுக்கவோ செய்யாமல் வெற்றுப் பார்வை பார்த்தான். அவன் மறுக்காததே ஆமோதிப்பது போலத்தான் என்று நிச்சயித்த  அவர் தொடர்ந்தார். “மைத்ரேயன் இருப்பது உண்மை தான். இல்லையா?

லீ க்யாங் கவனமாக வார்த்தைகளைக் கையாண்டான். “இப்போது மைத்ரேயன் என்று ஒருவனை ஆசான், தலாய் லாமா போன்றவர்கள் சொல்கிறார்கள் என்று பேச்சு ரகசியமாய் அடிபடுகிறது. அவன் நிஜமானவனா, நம்மைத் திசை திருப்ப அப்படி வதந்திகளைக் கிளப்புகிறார்களா என்பது தெரியாது...

அவர் ஆசான் பெயரைக் கேட்டவுடனே ஒரு புன்னகை பூத்தார். “அந்தக் கிழவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரா?

அவனும் புன்னகை செய்து விட்டு ஆமாம் என்று தலையசைத்தான். ஆசான் பற்றிப் பேசும் போது யாருக்குமே முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முடிவதில்லை என்று எண்ணிய போது அவன் புன்னகை விரிந்தது. கிட்டத்தட்ட குறும்புக்காரச் செல்லப் பிள்ளையைப் பற்றி பெரியவர்கள் பேசும் போது ஏற்படும் உணர்வுக்கு இணையான உணர்வை ஆசான் ஏற்படுத்தி விடுகிறார்....

“ஆசான் இப்போது எங்கே இருக்கிறார் லீ க்யாங்?

“யாருக்குத் தெரியும். அடிக்கடி காணாமல் போய் விடுவார்.....

“நீ... நீ பார்த்திருக்கிறாயா அந்த மைத்ரேயனை?

“இது வரை இல்லை...

அவன் இப்போது எங்கிருக்கிறான்?

“தெரியவில்லை.... எங்கேயோ மறைந்திருக்கிறான். ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் அவனைக் கண்டுபிடிப்பேன்.... லீ க்யாங்கின் குரலில் அசாதாரண உறுதி இருந்தது.

அவர் பார்வை ஜன்னல் வெளியே தெரிந்த இருட்டில் சிறிது நேரம் தங்கியது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவர் பின் லீ க்யாங் பக்கம் திரும்பினார். “லீ க்யாங், எனக்கு ஒரு உதவி செய்வாயா?

சொல்லுங்கள் சார். என்னால் முடிந்ததாய் இருந்தால் செய்கிறேன்

“என்றாவது ஒரு நாள் நீ மைத்ரேயனைக் கண்டுபிடித்தால் எனக்கு அவனைக் காண்பிப்பாயா? எனக்கு அவனை ஒரு முறை பார்க்க வேண்டும்.

அந்த மைத்ரேயன் பற்றி நிறைய எதிர்பார்க்காதீர்கள். நேரில் பார்க்கையில் நிச்சயம் ஏமாந்து போவீர்கள் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட லீ க்யாங் அவரிடம் வெளிப்படையாகச் சொன்னான். “காண்பிக்கிறேன். ஆனால் அந்த மைத்ரேயன் நீங்கள் நினைப்பது போல புத்தரின் அவதாரம் தானா என்றெல்லாம் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

அது பரவாயில்லை. ஆசானும், தலாய் லாமாவும் மைத்ரேயன் என்று சொல்கிறவனைக் காண்பித்தால் போதும்....

லீ க்யாங் அவரிடம் மறைக்காமல் தன் வெறுப்பைத் தெரிவித்தான். “ஆசானும், தலாய் லாமாவும் என் எதிரிகள். அவர்கள் பூஜிக்கிற மைத்ரேயனையும் நான் அந்தப் பட்டியலிலேயே தான் சேர்ப்பேன். அதனால் நீங்கள் அவனைப் பார்க்கும் போது அவன் என் கைதியாகத் தான் இருப்பான் சார். அதுவும் பரவாயில்லையா?

அவனைப் பற்றி நன்றாக அறிந்திருந்த அவருக்கு அவன் சொன்னது திகைப்பையோ ஆச்சரியத்தையோ ஏற்படுத்தவில்லை. அவர் அமைதி மாறாமல் “பரவாயில்லைஎன்று சொல்லி விட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார்.

அவன் விளையாட்டாகக் கேட்டான். “மைத்ரேயனை மட்டுமல்ல மாராவின் அவதாரம் என்று சொல்லப்படுபவனையும் நான் கண்டுபிடித்து சிறைப்படுத்துவேன். அவனையும் பார்க்க உங்களுக்கு ஆர்வமாய் இருக்கிறதா?...

“சுத்தமாக இல்லை

“ஏன்?

சாகும் வரை நான் நிம்மதியாக இருந்து விட விரும்புகிறேன் லீ க்யாங். அதனால் சைத்தானின் பார்வையில் படுவதில் எனக்கு விருப்பமில்லை. சரி நீ கிளம்புகிறாயாகேட்டு விட்டு  அவர் எழுந்து நின்றார்.

அவன் சிரித்துக் கொண்டே கேட்டான். “சைத்தான் என்றால் பயமா? ஏன் சார்?

அவர் சொன்னார். “கடவுளிடமும், அவதார புருஷர்களிடமும் நாம் எப்படியும் இருக்கலாம். ஆனால் சைத்தானிடமும், அவன் வாரிசுகளிடமும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உனக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன்


டிசல் இளைஞன் உறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டான். எதிரில் செல்லும் லாரி போய்க் கொண்டே இருந்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் லாரியின் பின் கதவு இடுக்கு வழியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரமை அடிக்கடி அவனுக்கு  ஏற்பட்டது. மைத்ரேயனின் பாதுகாவலன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பே லேசாய் கிலியை ஏற்படுத்தியது. அவன் என்னேரமும் லாரியின் பின் கதவைத் திறந்து ஜீப்புக்குள் குதித்து அவர்கள் கழுத்தையும் திருகி விடுவானோ என்று தோன்ற ஆரம்பித்தது. அவன் விஷ ஊசியைக் குத்திக் கொன்ற அவர்கள் இயக்க ஆளின் பரிதாப முகமும் நினைவுக்கு வர அவன் தன்னை அறியாமல் நெளிந்தான்.

அதை ஜீப் டிரைவர் கவனித்தான். அவனுக்கும் தொடர்ந்து வண்டி ஓட்டி சலிப்பேற்பட்டு விட்டது. அவன் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “அவர்களைப் பிடிக்க நான் ஒரு வழி சொல்லட்டுமா?

“என்ன?

பேசாமல் எதிரில் போகும் லாரியின் டயரைத் துப்பாக்கியால் சுட்டு ஓட்டையாக்கி லாரியை நிறுத்தி விட்டால் என்ன?  

(தொடரும்)

என்.கணேசன்

10 comments:

  1. அர்ஜுன்September 10, 2015 at 6:33 PM

    அட்டகாசம். சினிமா பார்ப்பது போல் இருக்கிறது. வசனங்கள் அற்புதம்.

    ReplyDelete
  2. தொய்வில்லாத,விறுவிறுப்பான மற்றும் கட்டுக்கோப்பான நடை கதைக்கு அழகு சேர்க்கிறது

    விபுலானந்தன்

    ReplyDelete
  3. Unkal kathai ilam vayathinaruku nalla pathayai amaikum...kathukolvatharku ayiram visayankal unkal kathaiyil amainthirikirathu..ivai anaithum karpanaiya ilai athil ethaenum nijankalum irukiratha endru solamudiyuma...padika padika arvam koodii kondae pokirathu..

    ReplyDelete
    Replies
    1. கதை கற்பனை என்றாலும் இத்தொடரில் உண்மையின் அம்சங்கள் நிறையவே இருக்கின்றன.

      Delete
  4. Ena vithamana amsankal endru kooramudiyuma...ethavathu oru eduthukatu

    ReplyDelete
    Replies
    1. நாவலின் முடிவில் கூறுகிறேன். இனிமேலும் நிறைய சம்பவங்கள் வரப்போவதால் அதையும் சேர்த்துக் கடைசியில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

      Delete