சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 28, 2015

உனக்குள்ளே இறைவனைப் பார்!


கீதை காட்டும் பாதை 37


ல்லாவற்றிற்கும் மூலமும் முடிவுமாய் இருப்பவன் இறைவனே. சிருஷ்டி காலத்தில் அனைத்தும் அவனிடம் இருந்தே தொடங்குகின்றன. அழிவு காலத்தில் அனைத்தும் அவனிடமே அடைக்கலம் அடைகின்றன. இதை அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்.

குந்தி மகனே! பிரளய காலத்தில் எல்லா உயிரினங்களும் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் சிருஷ்டி தொடங்கும் போது அவற்றைத் தோன்றச் செய்கிறேன்.

பிரகிருதிக்கு வசமானதால் தன் வசமிழந்த இந்த உயிரினங்களையும் என்னுடைய பிரகிருதியை வைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப சிருஷ்டி செய்கின்றேன்.

அர்ஜுனா! அந்தக் கருமங்களில் பற்று வைக்காமல் ஒதுங்கி நிற்பவன் போலுள்ள என்னை அந்தக் கருமங்கள் கட்டுப்படுத்துவதில்லை.

துவக்கத்தில் தூய்மையாக இருக்கின்றவை கடைசி வரை தூய்மையாகவே இருந்து விடுவதில்லை. எத்தனையோ மாற்றங்களை அடைந்து, பலவித  கர்மாக்களில் ஈடுபட்டு, அதற்கேற்ற பலன்களை சம்பாதித்து, கடைசியில் உயர்வையோ தாழ்வையோ பெற்று முடிவில் இறைவனை அடைகின்றன.

இறைவனை அடைந்து அங்கேயே தங்கி இருக்கின்ற சமயத்தில் உயர்ந்து போனதும், தாழ்ந்து போனதும் ஒரே போலவே இருக்கின்றன. உறக்கத்தில் உத்தமனும், அயோக்கியனும் ஒன்று தான். அவர்கள் உறக்கத்தில் அவர்களை வித்தியாசப்படுத்துவது இயலாத காரியம். விழித்துக் கொண்டபின் அவரவர் அவரவர் இயல்பின்படியே நடக்க ஆரம்பிக்கின்றனர். அது போலவே இறைவன் சிருஷ்டியை மறுபடி ஆரம்பிக்கையில் தாங்கள் அடைந்திருந்த மாற்றத்திலிருந்து மறுபடி துவங்குகிறார்கள். கர்மபலன்களை அனுபவித்துக் கொண்டே வாழ்கையில் மறுபடி மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்கள் கர்மாக்களிலும் கூட்டல், கழித்தல் நிகழ்கின்றன. இப்படியே பிரபஞ்சம் இயங்குகின்றது.

ஆனால் இத்தனையிலும் ஒதுங்கி நிற்பதும், பாதிக்கப்படாமலும் இருப்பது பகவானுக்கு எப்படி சாத்தியமாகிறது? திரையில் எத்தனை விதமான படங்கள் வந்து போனாலும் அந்தப் படங்கள் திரையைப் பாதிப்பதில்லை அல்லவா? மழைக்காட்சி வந்தால் அது ஈரமாவதுமில்லை. கடும் வெயில் அடித்தால் அது சூடாவதுமில்லை. திரை இல்லா விட்டால் அந்தப் படங்களே இல்லை என்பது உண்மையானாலும் அந்தப் படங்கள் திரையின் உண்மைத் தன்மையை மாற்றுவதில்லை அல்லவா? அப்படியே தான் இறைவனும் இருக்கிறார்.

தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

ஜீவகோடிகளுக்கெல்லாம் மகேசுவரனான என்னுடைய மேன்மையை அறியாமல் மனித உருவிலுள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள்!

இந்த சுலோகத்தை மேலோட்டமாய் படித்தால் ஸ்ரீகிருஷ்ணர் சாதாரண மனிதர்கள் போல புலம்புவது போல் தோன்றும். ஆனால் ஆழமாய் படித்தால் தான் உண்மை விளங்கும். மனிதர்களைப் போல் இறைவன் எதையும் எவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதில்லை. அதனால் மற்றவர் மதிப்பதும், அவமதிப்பதும் இறைவனை என்றுமே அசைப்பதில்லை. பின் ஏன் மனித உருவில் உள்ளவன் என்று என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் என்று சொல்கிறார்?

பிறவிகளில் உயர்ந்தது மனிதப்பிறவி. தாவரங்கள் தங்கள் இயல்பின்படியே இலைகளைத் துளிர்க்கும், காய்க்கும், பூக்கும். அவற்றை மாற்றிக்கொள்ளும் சக்தி தாவரங்களுக்கு இல்லை. வாழை மரத்தில் வாழை இலைகளே துளிர்க்கும், வாழைக்காய்களே காய்க்கும், வாழைப்பூவே பூக்கும். அவை மாறி கறிவேப்பிலையைத் துளிர்க்கவோ, ஆப்பிள்களைக் காய்க்கவோ, மல்லிகைப்பூவைப் பூக்கவோ முடியாது.

விலங்கினங்களும் தங்களுக்கென்று இருக்கும் இயல்புகளை ஒட்டியே வாழ்ந்து மடிகின்றன. பறவைகள் தங்கள் இயல்பின்படியே கூடுகட்டி அந்தக் கூடுகளில் வசிக்கின்றன, பறக்கின்றன, இரை தேடுகின்றன. விலங்குகளும் தங்கள் இயல்பின்படியே வசித்து மடிகின்றன. அவற்றிற்கு தங்கள் இயல்புகளை மாற்றிக்கொள்ளவோ, வாழும் முறையை மாற்றிக் கொள்ளவோ முடிவதில்லை.  

உயிரினங்களிலேயே மனிதப் பிறவி தான் உயர்ந்தது.  மனித இனம் தான் உருவாக்கப்பட்டது போலவே இருந்து, வாழ்ந்து, மடியும் நிர்ப்பந்தம் அற்றது. மாற முடிந்த சக்தியும் சுதந்திரமும் கொண்டது.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவான தற்போதைய மனித இனம், இன்று எல்லா வகைகளிலும், பிரமிக்கத்தக்க மாற்றம் அடைந்துள்ளது. வாழும் இடம் முதல் அனைத்திலும் அது அடைந்திருக்கும் பிரம்மாண்டமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் மற்ற உயிரினங்கள் அடையவில்லை.
மனம் வைத்து உறுதியோடு செயல்பட்டால் மனிதனால் எப்படியும் மாற முடியும். எதையும் சாதிக்க முடியும். மனித இனம் இதை எத்தனையோ கோடிக்கணக்கான விதங்களில் நித்தமும் நிரூபித்து வருகிறது. அதனால் அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மன் குடி இருந்தாலும் மனிதப் பிறவியில் மட்டும் சக்திகளிலும் சரி, அவற்றைச் செயல்படுத்தும் சுதந்திரத்திலும் சரி சற்று அதிகப்படியாகவே பிரகாசிக்கிறான் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.

ஆனால் அந்த மனிதப் பிறவியில் நாம் அவனை அடையாளம் காண்கிறோமா என்றால் இல்லை. சிலையிலும், படத்திலும், சின்னங்களிலும் கூட இறைவனைப் பார்க்க முடிந்த நமக்கு மனிதர்களில் அந்தர்யாமியை, சர்வசக்தி வாய்ந்தவனாய் இருக்கும் இறைவனைப் பார்க்கத் தெரியவில்லை.  மாறாக பல சமயங்களில் மனிதர்களில் மிருகங்களையும், எதிரிகளையும், சைத்தானையும் பார்க்கிறோம், அப்படியே உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறோம். உள்ளே இருக்கும் மகேசுவரனை உணராமல் வெளித்தோற்றமாய் இருக்கும் மனிதனாகவே பாவித்து தாழ்த்திப் பார்ப்பதும், தாழ்ந்து போவதும் மூடத்தனமே அல்லவா? அதையே இங்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

எல்லாம் வல்ல இறைவனை அடுத்த மனிதனிடம் பார்ப்பது அப்புறம். முதலில் நமக்குள்ளே இறைவனைப் பார்த்து அறிகிறோமா? நமக்குள்ளே உணர்கிறோமா? நமக்குள்ளே அந்த பரமாத்மாவை கௌரவப்படுத்துகிறோமா? குப்பனாகவும், சுப்பனாகவும் அல்லவா கடைசி வரை எண்ணி அப்படியே வாழ்ந்து மடிந்து போகிறோம்.

நமக்குள்ளே பரமாத்மனைப் பார்க்க முடிந்தால் தவறு செய்யத் தோன்றுமா? தாழ்ந்த எண்ணங்கள் உருவாகுமா? ஜடமாய் இருக்க முடியுமா? பயமும், சந்தேகமும் பிடித்து நம்மை ஆட்டுமா? நமக்குள் ஒவ்வொரு அணுவிலும் அவன் இருக்கிறான் என்று உணர முடிந்தால் உருவாகும் சக்திப் பிரவாகத்தில் நம்மால் முடியாதது தான் என்ன?

நமக்குள் இருக்கும் இறைவனை உணராமல் தரம் குறைந்து போகும் போது நமக்குள் இருக்கும் இறைவனை அவமானப்படுத்துகிறோம். இதையே ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.

முதலில் உனக்குள் இறைவனைக் காண ஆரம்பி. காலப்போக்கில் அனைவரிடமும் அவனைப் பார்க்க உன்னால் முடியும்.

பாதை நீளும்....

-          என்.கணேசன்

7 comments:

  1. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  2. Sir, Each and every letter and words written by you are precious things and is common to every human being living in this world.

    Thanks a lot Sir. I will never miss any mails from you. I will immediately read your mail.

    I will pray to God to give you a long life and help you with all basic things in your life.

    ReplyDelete
  3. சுலோகங்களுக்கான விளக்கமும்... உதாரணமும்... அருமை...ஐயா...

    ReplyDelete