சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 24, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 64


ந்த உணவகத்தை நெருங்க நெருங்க லாரியின் வேகம் குறைந்தது போலவே பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பின் வேகமும் குறைந்தது. அங்கே முன்பே மூன்று வாகனங்கள் நின்றிருந்தன. ஒரு லாரியும் ஒரு வேனும் ஒன்றன் பின் ஒன்றாக இவர்கள் போகின்ற திசை நோக்கி நின்றிருந்தன. அவற்றிற்குப் பின்னால்  சிறிது இடைவெளி விட்டு ஒரு லாரி இவர்கள் வந்த பாதை நோக்கிச் செல்ல நின்றிருந்தது.  லாரிக்காரன் வேண்டுமென்றே அந்த இடைவெளியில் தன் லாரியை நிறுத்தினான். அதுவும் முன்னால் நிறைய இடம் காலியாக விட்டு விட்டு பின்னால் இருந்த லாரிக்கு நாலைந்து அங்குலமே இடைவெளியை விட்டு நிறுத்தினான். ஒருவேளை பின்னால் ஜீப்பில் வருபவர்கள் திடீரென்று லாரியின் பின் கதவைத் திறந்து பார்த்து விடுவார்களோ என்று அவன் பயந்தது போல் இருந்தது.

அவன் அப்படி லாரியை நிறுத்தியதால் அதன் நேர் பின்னால் ஜீப்பை நிறுத்த முடியாமல் ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். “என்ன செய்வது?

“பொறு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவனும், அவன் உதவியாளும் முதலில் லாரியில் இருந்து இறங்கட்டும்  என்று ஒடிசல் இளைஞன் சொன்னான்.  நிறுத்துவது போல் நடித்து பின்னால் வருபவர்களை நம்ப வைத்து இறங்க வைத்து பின் திடீரென்று அவர்கள் கிளம்பிச் சென்று விடலாம் என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது.

ஆனால் லாரிக்காரனும் அவன் உதவியாளனும் லாரியில் இருந்து இறங்கி அவனுடைய சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அவர்கள் உணவகம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். உணவகம் சிறியதாகத் தான் இருந்தது. உள்ளே பெரிய மரபெஞ்ச் ஒன்றும் இரண்டு மேஜைகளும் இருந்தன. வெளியே மூன்று மேஜைகளும் சில நாற்காலிகளும் போட்டிருந்தார்கள். உள்ளே சற்று கதகதப்பாக இருந்ததால் அங்கு ஆட்கள் நிறைந்திருந்தார்கள்.

வெளியே ஒரு மேஜையில் மட்டும் தான் இரண்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். லாரிக்காரனும் அவன் உதவியாளனும் காலியாக இருந்த ஒரு மேஜையை ஆக்கிரமிக்க ஜீப் டிரைவர் ஒடிசல் இளைஞனிடம் சொன்னான். “நாமும் சாப்பிடலாம். பசிக்கிறது.

ஒடிசல் இளைஞன் தாங்கள் தொடர்ந்து வந்த லாரியைப் பார்த்தான். இவர்கள் வந்த வழியில் செல்லவிருந்த லாரியை கிட்டத்தட்ட ஒட்டியது போலவே அதை நிறுத்தி இருந்ததால் அந்தப் பின் கதவுகளைத் திறக்கவே வாய்ப்பில்லை....   

ஒடிசல் இளைஞன் சொன்னான். “சரி நீ வண்டியை முன்னால் நிற்கிற லாரிக்கும் முன்னால் கொண்டு போய் நிறுத்து. நம் லாரிக்காரன் வண்டியை எடுத்துக் கொண்டு போனால் உடனே கிளம்ப அது வசதியாக இருக்கும். இடையில் எந்த வண்டியும் குறுக்கே வரவும் வாய்ப்பில்லை.

ஜீப் டிரைவர் அப்படியே செய்தான். இருவரும் இறங்கி உணவகத்தின் வெளியே காலியாக இருந்த மேஜைக்குப் போனார்கள். அங்கு உட்கார்ந்து பார்த்தால் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் முன்பகுதி தெரிந்ததே ஒழிய பின் பகுதி தெரியவில்லை. அது ஒடிசல் இளைஞனுக்கு நெருடலாக இருந்தது. மைத்ரேயன் ஒளிந்து கொண்டிருக்கும் லாரியின் பின் கதவைத் திறக்க வழியில்லாமல் பின்னால் நிற்கும் லாரி கிளம்பிப் போனால் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் இங்கேயே இறங்கி எங்காவது ஒளிந்து கொண்டால் என்ன செய்வது என்று யோசித்தான்.

உடனே அவன் இருப்பு கொள்ளாமல் எழுந்தான்.  “நீ என்ன சாப்பிடுகிறாயோ அதையே எனக்கும் வாங்கி வைஎன்று ஜீப் டிரைவரிடம் சொல்லி விட்டு மறுபடியும் லாரிகளின் அருகிலேயே போய்ப் பார்த்தான். அவை இரண்டுமே சாலையின் இடது கோடியில் தான் நின்றிருந்தன. அதைத் தாண்டி முள் வேலி, அதையும் தாண்டினால் செங்குத்தான பள்ளத்தாக்கு. அவர்கள் லாரியில் இருந்து இறங்கினால் கூட அந்தப் பக்கம் போய் ஒளிய எந்த வாய்ப்பும் இல்லை. இந்தப் பக்கம் வந்தால் கண்டிப்பாக அனைவருடைய பார்வையிலும் அவர்கள் படுவார்கள். அது புரிந்த பின் அவனுக்கு நிம்மதி வந்தது.

திரும்பவும் வந்த போது சுடச்சுட உணவு தயாராக இருந்தது. இருவருக்கும் நன்றாகப் பசித்திருந்ததால் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். ஜீப் டிரைவர் சுற்றுப்புறத்தையே மறந்து சாப்பிட்டான். ஆனால் ஒடிசல் இளைஞனின் முழுக்கவனமும் பக்கத்து மேஜையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் லாரிக்காரன் மீதும், அவன் லாரி மீதும் இருந்தது. சீக்கிரமே சாப்பிட்டு முடித்து அவன் காத்திருந்தான்.

உணவகத்தின் உள்ளே சாப்பிட்டு முடித்து விட்டு இரண்டு பேர் வெளியே வந்தார்கள். இவர்கள் எந்த வாகன ஓட்டிகள் என்று ஒடிசல் இளைஞன் பார்த்தான். அவர்கள் இருவரும் மைத்ரேயன் ஒளிந்திருந்த லாரியின் பின்பக்கம் இருந்த லாரியில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் ஏறியவுடன் ஒரு காலிபாட்டிலோடு கீழே இறங்கினான். அதை எடுத்துக் கொண்டு உணவகத்துக்கு உள்ளே அவன் சென்றான்.

பக்கத்து மேஜையில் சாப்பிட்டு முடித்த லாரிக்காரன் எழுந்தான். வேகமாக சாப்பிட்டு முடித்திருந்த ஒடிசல் இளைஞனும் எழுந்தான். ஜீப் டிரைவர் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. ஆனால் ஒடிசல் இளைஞன் அவனைத் தன் பார்வையாலேயே எழுப்பினான்.

லாரிக்காரனும் அவன் உதவியாளனும் கூட லாரியில் ஏறிக்கொண்டார்கள். லாரிக்காரன் லாரியை கிளப்பினான். பின்னால் இருந்த லாரியும் கிளம்பத் தயாராகியது. உணவகத்தில் இருந்து பாட்டிலில் வெந்நீர் பிடித்துக் கொண்டு அந்த ஆள் ஓடி வந்தான். ஒடிசல் இளைஞனும் ஜீப் டிரைவரும் முன்னால் நிறுத்தியிருந்த தங்கள் ஜீப்பிற்கு விரைந்தார்கள். ஜீப் டிரைவர் ஜீப்பைக் கிளப்பி தயாராகக் காத்திருந்தான். ஒடிசல் இளைஞனின் பார்வை பின்னாலேயே இருந்தது.

லாரிக்காரன் மெல்ல அவர்களைத் தாண்டிக் கொண்டு முன்னால் செல்ல ஜீப்பும் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது. அந்த இடத்தைக் கடந்தவுடன் ஒடிசல் இளைஞன் திரும்பிப் பார்த்தான். அந்த இன்னொரு லாரியும் அவர்கள் வந்த பாதையில் போய்க் கொண்டிருந்தது. இப்போது ஒரு லாரியும் வேனும் மட்டுமே உணவகத்தின் முன்னால் இருந்தன. ஒடிசல் இளைஞன் கண்களைக் கூர்மையாக்கி அந்தப் பகுதியை அலசிப் பார்த்து விட்டுத் திருப்தி அடைந்தான்.  

பழையபடி இரு வாகனங்களும் ஒரே சீரான வேகத்தில் போக ஆரம்பித்தன. சிறிது தூரம் போன பிறகு சாலை அகலமாக ஆரம்பித்தது. சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தடாலென்று லாரியின் பின் கதவுகள் திறந்து கொண்டன. ஒடிசல் இளைஞனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் வலது கை தானாக துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டது. ஜீப் டிரைவர் முகத்தில் பீதி தெளிவாகத் தெரிந்தது. லாரியின் பின்பகுதியில் அடுக்கி வைத்திருந்த அந்தக் காலிப் பெட்டிகளைத் தாண்டி ஒளிந்து கொண்டிருக்கும் அந்த நரம்பு வர்மம் தெரிந்தவன் என்னேரமும் தங்கள் மீது தாவிக் குதிக்கலாம் என்று அவன் எதிர்பார்த்தான். எந்த நரம்பை எப்படிச் சுண்டுவானோ? பக்கத்தில் உட்கார்ந்திருப்பவன் தரும் ஒன்றரை மடங்குப் பணத்தைச் செலவு செய்ய உயிரோடாவது இருப்போமா? என்றெல்லாம் நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்தான்.

திடீரென்று எதிரில் சென்று கொண்டிருந்த லாரி நின்றது. படபடக்கும் இதயத்துடன் தன் ஜீப்பையும் டிரைவர் நிறுத்தினான்.  ஒடிசல் இளைஞன் துப்பாக்கியைத் தயாராக வைத்திருந்தானே ஒழிய மற்றபடி எந்த உணர்ச்சியும் காண்பிக்காமல் சிலை போல உட்கார்ந்து இருந்தான். கதவுகள் உள்ளே இருந்து திறந்து விடப்பட்டனவா இல்லை தற்செயலாகத் தானாகத் திறந்து கொண்டனவா என்ற சந்தேகம் அவனுக்குள் முதலில் எழுந்தது. பின் தான் வெளியிலிருந்து தானே தாள் போடப்பட்டிருந்தது என்ற பிரக்ஞை வந்தது. வெளியே இடப்பட்டிருந்த தாழ்ப்பாள் வண்டி ஓட்டத்தின் குலுக்கலில் தானாக விடுபட்டுத் திறந்திருக்கலாம் என்று எண்ணிய ஒடிசல் இளைஞன் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி பெட்டிகளை மிகவும் கூர்மையாக ஆராய்ந்தான்.   

லாரி டிரைவர் கீழே இறங்கி பின்னால் வந்தான். லாரியின் திறந்திருந்த கதவுகளை ஒரு முறை பார்த்து விட்டு  கோபத்துடன் ஜீப்பில் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தான். அவர்கள் தான் ஏதோ செய்து அந்தக் கதவுகள் திறந்து விட்டன என்று அவன் நினைத்த மாதிரி இருந்தது. பின் வேகமாக அவர்கள் அருகே வந்தான். “என்ன தான் வேண்டும் உங்களுக்கு?என்று சலிப்புடன் கேட்டான்.

ஒடிசல் இளைஞன் பார்வை லாரியின் பின்பகுதியிலேயே இருந்தது. கதவுகளைத் திறந்து விட்டு, இந்த டிரைவரைப் பேச விட்டு விட்டு, அவன் கவனம் டிரைவர் மேலிருக்கையில் அந்தப் பாதுகாவலன் வேகமாக மேலே பாயக்கூடும் என்று எதிர்பார்த்தது அவன் எச்சரிக்கை உணர்வு. கூடவே இன்னொரு சந்தேகமும் அவனுக்குள் எழ ஆரம்பித்தது. மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் உள்ளே தான் இருக்கிறார்களா?

தன் சந்தேகத்தை உடனே நிவர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்த ஒடிசல் இளைஞன் வலது கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டி இடது கையால் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு அடையாள அட்டையை லாரி டிரைவரிடம் நீட்டினான். “போதைத் தடுப்புத் துறை.... உன் லாரியில் நீ போதை மருந்து கடத்திக் கொண்டு போவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது..

லாரி டிரைவர் பதறினான். “ஐயா இது அபாண்டம். நீங்கள் இப்போதே வேண்டுமானாலும் என் லாரியைப் பரிசோதித்துக் கொள்ளலாம்....

ஒடிசல் இளைஞன் உடனடியாக எதுவும் சொல்லாமல் அவனை ஆழ்ந்த யோசனையுடன் பார்த்தான். பின் மெல்ல கேட்டான். “சம்யே மடாலயத்தில் இருந்து உன் லாரியைப் பின் தொடர்ந்து வருகிறோம். எங்களிடமிருந்து தப்பிக்க நீ பல விதமான ஜகஜாலம் செய்தது எதற்கு?

“நான்.... நான்.... உங்களைக் கொள்ளையர்கள் என்று நினைத்து விட்டேன்....

“கொள்ளையடிக்க உன்னிடம் என்ன இருக்கிறது?

“ஏழைக்கு இருக்கும் கொஞ்சமே பெரிய சொத்து தானே.... இந்தக் காலிப் பெட்டிகளுக்குக் கூட இப்போது விலை அதிகம்....

நீ இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?”

அவன் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து நகரத்தின் பெயரைச் சொன்னான்.  அங்கே உள்ள பெரிய கடையில் இருந்து தான் சம்யே மடாலயத்திற்குப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் மறுபடி இந்தப் பெட்டிகளை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்றான்

“இத்தனை தொலைவில் இருக்கும் ஒரு கடையில் இருந்து சம்யே மடாலயம் பொருள்கள் வாங்குவது ஏன்?ஒடிசல் இளைஞன் சந்தேகத்துடன் கேட்டான்.

“அந்தக்கடைக்காரர் புத்தபிரானின் பக்தர். லாபமே வைத்துக் கொள்ளாமல் பொருள்களை அந்த மடாலயத்துக்குத் தருகிறார்....
   
ஒடிசல் இளைஞன் சொன்னான். “உன் ஆளைக் கூப்பிடு. நீயும் உன் ஆளுமாய் சேர்ந்து அந்தக் காலிப் பெட்டிகளை எடுத்துக் கீழே வையுங்கள்.

லாரிக்காரன் சிறிது தயங்கினான். ஒடிசல் இளைஞன் அவனை கண்டிப்பான பார்வை பார்க்கவே வேறு வழியில்லாமல் தன் உதவியாளனை கூவி அழைத்தான். அவனும் வந்தான். அவன் லாரிக்குள் ஏறி இரண்டு முறை அந்த எண்ணெய்ப் பசை வழுக்கலில் வழுக்கி விழுந்தான். பின் ஒருவழியாக சமாளித்து நின்றான். பின் அவன் அந்தக் காலிப் பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துத் தர லாரி டிரைவர் அவற்றைக் கீழே வைத்தான்.... கடைசி சில பெட்டிகள் இருக்கும் போதே உள்ளே யாரும் ஒளிந்திருக்கவில்லை என்பது ஒடிசல் இளைஞனுக்குத் தெரிந்து விட்டது.

கடைசிப் பெட்டியையும் இறக்கி வைத்து விட்டு லாரி டிரைவர் ஒடிசல் இளைஞனைப் பார்த்தான். ‘திருப்தி தானே என்று அவன் பார்வை கேட்டது.  

துப்பாக்கி முனையில் இவனிடம் உண்மையை வரவழைத்தால் என்ன என்று ஒடிசல் இளைஞன் யோசித்தான்.

(தொடரும்)
என்.கணேசன்



10 comments:

  1. Super Akshay. Fantastic

    ReplyDelete
  2. I felt as if I am in the scene with tension. Super ganeshan sir.

    ReplyDelete
  3. லக்‌ஷ்மிSeptember 24, 2015 at 6:02 PM

    அன்பின் கணேசன், தங்கள் தொடர் பிரமாதமாக போகிறது. இத்தனை விறுவிறுப்பான கட்டத்திலும் ஜீப் டிரைவர் எந்த நரம்பை எப்படி சுண்டுவானோ என்று பயப்படும் இடத்தில் சிரித்து விட்டேன். நகைச்சுவையாகட்டும் தத்துவமாகட்டும் மிக யதார்த்தமாக எதிர்பாராத நேரங்களில் ரசிக்கும்படி வருவது தங்கள் எழுத்தின் சிறப்பு தான். பாராட்டுகள்.

    ReplyDelete
  4. அருமை அண்ணா. . .
    பகிர்வுக்கு நன்றிகள் . .

    ReplyDelete
  5. Could you publish weekly twice.

    ReplyDelete
  6. சுந்தர்September 24, 2015 at 7:52 PM

    ஹா ஹா ஹா. அக்‌ஷயா கொக்கா?

    ReplyDelete
  7. Enga eppadi thappichanga,.... Achariyamaha....ullathu!!!!

    ReplyDelete
  8. உணவு விடுதியிலிருந்து வந்த வழியே போன லாரியில் தப்பி இருக்கலாம் அக்ஷய்க்கு அந்த சிறிய இடைவெளி மிக தாராளமாக போதும் ..... கணேசன் சார் இன்னும் 2 பரா அதிகமாக எழுதுங்க ஒரு வாரம் காத்து இருக்கோம் இல்ல

    ReplyDelete
  9. I started reading this novel last week and today morning finished this chapter. Really it is a great journey sir. Your wring is extraordinary. It is not simple time passing. Characters and the story stay in our heart and lingers. Thanks. Began waiting for Thursdays.

    ReplyDelete
  10. Rmba azhgaka kathaiyin vegam selkirathu...adutha varavin ethirparpu adikamai kondae pokirathu...

    ReplyDelete