சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 21, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 47


 க்‌ஷய் வீட்டிற்கு எதிர் மாடியில் குடிவந்திருப்பவன் பகல் பொழுதுகளில் வெளியே வருவதைக் கூடுமான அளவு தவிர்த்தான். இருட்டிய பின் வெளியே சென்று வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு வேகமாக அவன் வீடு திரும்புவான். அப்போது கூட எதிர்ப்படும் நபர்களை அவன் நேருக்கு நேர் பார்ப்பதையோ அவர்களுடன் பேசுவதையோ அவன் தவிர்த்தான். கீழ் வீட்டில் குடியிருக்கும் வந்தனாவின் குடும்பத்தினரே கூட அவனிடம் பேச முடியவில்லை.

வந்தனாவின் தாய் ஜானகிக்கு வாயை மூடிக் கொண்டிருப்பது போல் ஒரு பெருங்கஷ்டம் வேறில்லை. அதனால் வீட்டு வேலைகளை வேக வேகமாக முடித்து விட்டு பேசும் வேலையை சிரத்தையுடன் அவள் செய்வாள். பேசுவதற்கு இன்னார் தான் வேண்டும் என்ற பிடிவாதம் எல்லாம் அவளிடம் இல்லை. கிழவிகளில் இருந்து மூன்று வயதுக் குழந்தைகள் வரை ஏதாவது ஒரு ஜீவன் அவளுக்குப் பேசக் கிடைத்தால் போதும். அப்படிப்பட்டவளுக்கு மாடி வீட்டில் வசிக்கும் சினிமாக்காரரிடம் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாதது பெரிய குறையாகவே இருந்தது. தன் கணவன் மாதவனிடம் அவள் ஆச்சரியப்பட்டாள்.  “இந்தக் காலத்தில் பெண்களே கூட குனிந்த தலை நிமிராமல் தெருவில் நடப்பதில்லை. நம் மாடி வீட்டுக்காரர் ஏன் இப்படி இருக்கிறார்? தெருவில் மட்டுமல்ல இங்கே மாடி ஏறும் கூட அவர் நிமிர்ந்து நடக்க மாட்டேன்கிறார்?

“கொஞ்சம் நிமிர்ந்தால் கூட உன்னை மாதிரி ஆள்கள் என்ன சினிமா, என்ன கதை, யார் நடிகர்கள், எப்போது படம் வெளியீடு என்று கேட்க ஆரம்பித்து விடுவீர்கள். பிறகு அவருக்கு கதை எழுத எங்கே நேரம் கிடைக்கப் போகிறது? அதனால் தான் அவர் தலையே நிமிர்வதில்லை போல இருக்கிறதுஎன்று சொல்லி விட்டு அவள் பதில் சொல்லும் முன் சாமர்த்தியமாக மாதவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டார்.

குளியலறைக் கதவை முறைத்து விட்டுத் திரும்பிய ஜானகி சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்த வந்தனாவைப் பார்த்துக் கோபப்பட்டாள். “என்னடி சிரிப்பு?

அதற்கும் மேல் வந்தனா தாயிடம் திட்டு வாங்கி இருப்பாள். வருண் அந்த நேரமாக அங்கே வந்து அவளைக் காப்பாற்றினான். வருணும் வந்தனாவும் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு கதைக்க ஆரம்பித்தார்கள்.

மாடி வீட்டு ஆள் தன் படுக்கை அறை ஜன்னலில் காதை வைத்துக் கீழே அவர்கள் பேசுவதைக் கேட்க முயன்று கொண்டிருந்தான். எங்கு நின்று காதைக் கூர்மையாக்கினால் கீழ் வீட்டில் எங்கு பேசுவதைக் கேட்கலாம் என்பது இந்த இரண்டு நாட்களில் அவனுக்கு அத்துபடி ஆகியிருந்தது. இது வரை கீழ் வீட்டில் பேசியதை எல்லாம் அவன் பெரும்பாலும் கேட்டிருக்கிறான். அவர்கள் பேச்சில் எதிர் வீட்டைப் பற்றிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறிவது தான் அவன் உத்தேசம். ஆனால் கீழ் வீட்டு அம்மாள் தேவையே இல்லாமல் வேறு எதை எதையோ பற்றி தான் அதிகம் பேசி இருந்தாள். நேற்று எதிர்வீட்டு ஆள்கள் மிக நல்ல மாதிரி, மாமியார் மருமகள் நல்ல அன்னியோன்னியம், வருண் தங்கமான பையன் என்கிற மூன்று அபிப்பிராயங்கள் மட்டும் தான் அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து அவனுக்குக் கிடைத்தது. அனாவசியமாகவே அதிகம் பேசிக் கொண்டிருக்கும் அந்த அம்மாளை அந்த ஆள் இது வரை விவாகரத்து செய்யாதது அந்த ஆளின் பொறுமையைத் தான் காட்டுகிறது என்று அவன் நினைத்தான்.

இப்போது வருணும் வந்தனாவும் பேசிக் கொண்ட ஆரம்பப் பேச்சுகள் எல்லாம் அவர்கள் கல்லூரியைப் பற்றியும் அவர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பற்றியும் தான் இருந்தது. பின் சிறிது இடைவெளிக்குப் பின் வந்தனா வருணின் தந்தையைப் பற்றிக் கேட்டதும் மாடி வீட்டு ஆசாமி உடம்பெல்லாம் காதானான்.

வந்தனா கேட்டாள். “உங்கப்பா எந்த ஊருக்குப் போயிருக்கிறார்?

வருணிடம் இருந்து உடனடியாகப் பதில் வரவில்லை. அவனுக்கு அவளிடம் உண்மையைச் சொல்லவும் முடியவில்லை. பொய் சொல்லவும் மனமில்லை. கடைசியில் பொய்யும் அல்லாமல் முழு உண்மையும் அல்லாமல் சொன்னான். “நேபாள் போயிருக்கிறார்”. இந்தியாவில் இருந்து அவன் அப்பா நேபாள் அல்லவா முதலில் போனார்?

உன் அப்பா எப்படி? உன் அம்மா மாதிரியே நன்றாகப் பேசுவாரா இல்லை அமைதியான ஆளா?

வந்தனா ஏன் இவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று வருத்தப்படுகிற அளவு வருண் தந்தையின் புகழ் பாட ஆரம்பித்தான். மிக மிக நல்லவர், வல்லவர், அன்பு மயமானவர் என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டு போன போது மாடிவீட்டு ஆசாமிக்கு காதில் இரத்தமே வழிந்து விடுவது போல் இருந்தது. அந்த மிக நீண்ட பேச்சின் ஒட்டு மொத்த சாராம்சம் அவனுடைய தந்தையைப் போல உலகத்தில் யாருடைய தந்தையும் இருக்க முடியாது என்பது தான்.

மாடி வீட்டு ஆளுக்கு வருண் “நேபாள் போயிருக்கிறார்என்று சொல்ல எடுத்துக் கொண்ட இடைவெளி நேரம் அது பொய் என்பதை உறுதியாகச் சொன்னது. ஏன் இவன் பொய் சொல்கிறான்? அந்த ஆள் எங்கே போயிருப்பான்?......  கீழ் வீட்டில் பேசுவதை ஒட்டுக் கேட்பது போல எதிர் வீட்டில் பேசுவதை ஒட்டுக் கேட்க முடிந்தால் எத்தனையோ நன்றாய் இருக்கும். பைனாகுலரில் ஆட்களின் நடவடிக்கைகளைத் தான் கண்காணிக்க முடியுமே தவிர பேசுவதைக் கேட்க வழியில்லையே! 



புத்த பிக்கு தன் அறையைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போயிருந்தார். அதனால் யாரும் திடீரென்று வந்து விடுவார்களோ என்று அக்‌ஷயும், மைத்ரேயனும் பயப்படத் தேவை இருக்கவில்லை. இருவரும் சும்மா அமர்ந்திருந்தாலும் அக்‌ஷய் பார்வை மைத்ரேயன் மீதே கூர்மையாகப் பதிந்திருந்தது.

மைத்ரேயன் “என்னஎன்பது போல அக்‌ஷயைப் பார்த்தான்.

“புத்த பிக்குவின் விரல் வீக்கத்தை நீ எப்படி குணப்படுத்தினாய்?”  அக்‌ஷய் கேட்டான்.

“நான் ஒன்றும் குணப்படுத்தவில்லை. அது தானாகவே குணமாயிருக்கிறது.மைத்ரேயன் சொன்னான். அக்‌ஷய்க்கு அவன் சொன்னதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. புத்த பிக்கு தன்னைக் குணப்படுத்தியது மைத்ரேயனே என்று மிக உறுதியாக நம்பினார். நான்கு நாட்களாகக் குறையாமல் இருந்த வீக்கமும், வலியும் திடீரென்று குறைய வேறு காரணமே இல்லை என்று அக்‌ஷயிடம் சொல்லி இருந்தார். அது இவன் சொல்வது போல காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ?

மைத்ரேயன் வெகுளித்தனமாக அக்‌ஷயைப் பார்ப்பதைக் கவனித்த போது அக்‌ஷய்க்கு இவன் நடிக்கிறானோ என்கிற சந்தேகமும் வந்தது. புத்த பிக்கு பரவசத்துடன் வணங்கி நின்ற போது பசிக்கிறது என்று சொன்னது கூட அவர் பூஜிக்க ஆரம்பிப்பதைத் தவிர்க்க திசை திருப்பியதாக இருக்கலாம்.

அக்‌ஷய் மெல்ல கேட்டான். “ஒரு ஆள் இந்த மடாலயத்திலேயே உன்னைக் கொல்ல முயன்றானே அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

“ஒன்றும் நினைக்கவில்லை

“ஏன்?

“அந்த ஆளைப் பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும்?” லேசான ஆச்சரியத்தோடு அவன் கேட்டான்.

அக்‌ஷய்க்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவனைப் பற்றிக் கூட ஏன் நினைக்க வேண்டும் என்று மைத்ரேயன் கேட்டது நடிப்போ, அலட்சியமோ, அகங்காரமோ இல்லை என்பதை மட்டும் அக்‌ஷயால் அந்தக் கணத்தில் உணர முடிந்தது.   இவனுடைய எதிரிகள் இவன் உடலை மட்டுமல்ல எண்ணத்தைக் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை என்பதே அவனுக்குப் பேராச்சரியமாக இருந்தது. மனித இயல்புகளை ஆழமாக அறிய முடிந்த அவனுக்கு இது மனித இயல்பே அல்ல என்று உறுதியாகக் கணிக்க முடிந்தது. இவன் நிஜமாகவே தெய்வீகப் பிறவியே என்று தோன்ற ஆரம்பித்தது. இவனை ஒருமையில் நினைப்பதும், பேசுவதும் கூட சரியல்ல என்றும் தோன்றியது. அதே நேரத்தில் அவனுடைய பிள்ளைகளைப் போல இரவில் ஒட்டிக் கொண்டு படுக்கும் அந்தச் சிறுவனை போதிசத்துவரே என்று அழைப்பதும் அன்னியமாய் பட்டது.

அக்‌ஷய்க்கு அவனிடம் நேரடியாகவே ஒரு கேள்வி கேட்டு அவன் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. மெல்ல மைத்ரேயனைக் கேட்டான். “நான் ஒரு கேள்வி கேட்டால் மழுப்பாமல் பதில் சொல்வாயா?

“கேளுங்கள்

“நீ கௌதம புத்தரின் மறு அவதாரமா?

“நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?அவன் பதில் கேள்வி கேட்டான்.

“தெரியாது

“பின் எனக்கு மட்டும் நான் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தேன் என்பது எப்படித் தெரியும்?

அக்‌ஷய் பேச்சிழந்து போனான்.



வாங் சாவொ சம்யே மடாலயத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். வரும் வழியில் இருந்த சிறு ஊர்களில் தன் ஜீப்பை நிறுத்தி அங்கிருந்தவர்களிடம் அக்‌ஷய், மற்றும் மைத்ரேயன் புகைப்படங்களைக் காட்டி கேள்வி கேட்டிருந்தான். ஓரிருவர் அவர்களில் அக்‌ஷயை அடையாளம் கண்டு கொண்டார்கள்.  ஒரு ஜீப்பில் அவனைப் பார்த்த விவரங்களைச் சொன்னார்கள். 


அவர்கள் பார்த்த மைத்ரேயன் புத்த பிக்கு ஆடையில் இருந்ததால் அவர்களுக்கு அவனைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அக்‌ஷயுடன் லாஸா விமான நிலையத்தில் வந்திறங்கிய புத்தபிக்குச் சிறுவன் படத்தைக் காட்டி அவர்கள் பார்த்தது அவனையா என்று கேட்ட போது அந்தச் சிறுவனாக இருக்கலாம் என்று சொன்னார்கள். வாங் சாவொ அவர்கள் கருத்தால் பாதிக்கப்பட்டு விடவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அந்தச் சிறுவன் ஏறத்தாழ மைத்ரேயனைப் போலவே தெரிவான் என்பது உண்மையே!

வாங் சாவொவிற்கு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. லீ க்யாங் உத்தேசமாகச் சொன்னது நூறு சதவீதம் சரியே. மைத்ரேயனும் அந்த போலி பிக்குவும் சம்யே மடாலயம் போயிருப்பது நிச்சயம். இது புரிந்தவுடன் வாங் சாவொவின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறியது. உடனடியாக அலைபேசியில் ஒரு நபரைத் தொடர்பு கொண்டு முப்பது ஆட்களை  துப்பாக்கிகளுடன் சம்யே மடாலயத்திற்கு அனுப்பி வைக்கச் சொல்லி  விட்டு வாங் சாவோ மிக வேகமாக சம்யே மடாலயம் வந்து சேர்ந்தான்.



(தொடரும்)

என்.கணேசன்

(பயணம் செல்ல இருப்பதால் புத்தம் சரணம் கச்சாமி 48 அடுத்த வியாழன் (28-5-2014) அன்று பதிவேறாது. அதற்கும் அடுத்த வியாழன் 
(4-6-2014) அன்று பதிவேறும். வாசகர்கள் பொறுத்தருள்க!)


9 comments:

  1. சுஜாதாMay 21, 2015 at 5:56 PM

    இரண்டு வாரம் காத்திருக்க வேண்டுமா? வாங் சாவொ வந்துட்ட நேரமாய் பார்த்து என்ன சார் இப்படி பண்றீங்களே.

    ReplyDelete
  2. வரதராஜன்May 21, 2015 at 6:07 PM

    மைத்ரேயன் எண்ணங்களில் கூட எதிரிகள் ஆக்கிரமிக்க முடியவில்லை என்ற ஒற்றை வரியில் மைத்ரேயனை முழுசாக விவரித்து விட்டீர்கள் கணேசன் சார். அருமை.

    ReplyDelete
  3. need to wait ????aiyooooooo!!!!!!!

    ReplyDelete
  4. Enjoy your trip Ganesan sir, I am amazed of your commitment (you dont have any obligation to inform us and take break but it shows clearly your respect towards your us, we are learning from you lot, thanks for all the good work and teachings) and discipline, it is not simple effort, week on week balancing family, work and social life;

    ReplyDelete
  5. Amazing.... you and your writing! Wish u happy journey sir.

    ReplyDelete
  6. Very exciting sir.But two more weeks we have to wait.....Ok enjoy the trip sir

    ReplyDelete
  7. Amazing and exciting. .Enjoy your journey sir

    ReplyDelete
  8. Sir , Thursday valakkampol blog padikka vanthtten :( How is hero Akshay & Maithreyan(r) ?

    ReplyDelete