சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 2, 2015

குடா பக்ஸின் மற்ற அமானுஷ்ய சாதனைகள்


மகாசக்தி மனிதர்கள் - 10


ரும்புத் திரை ஒன்றின் பின்னால் இருப்பதையும் உங்களால் படிக்க முடியுமா?” கேள்விக்கு தன்னால் அதைத் தொட முடிந்தால் படிக்க முடியும் என்று குடா பக்ஸ் பதில் சொன்னார். பத்திரிக்கையாளர் ரொவால்டு டால் இரும்பைத் துளைக்குமா குடா பக்ஸின் எக்ஸ் ரே பார்வை என்று அறிந்து கொள்ள ஒரு வழியை ஏற்பாடு செய்தார்.

அதன்படி ஒரு புத்தகத்தை இரும்புக் கதவின் பின்பக்கம் ஒருவர் பிடித்துக் கொள்ள குடா பக்ஸ் கதவிடுக்கில் தன் கையை நுழைத்து மறைவாக இருக்கும் அந்தப் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு படிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்படியே இரும்புக்கதவு குடா பக்ஸின் பார்வையை மறைக்க அதன் பின்பக்கம் இருந்த மூடிய புத்தகத்தின் மீது கையை வைத்த குடா பக்ஸ் சிறிது நேரத்திற்குப் பிறகு அதனுள்ளே இருந்ததைப் படிக்க ஆரம்பித்தார். பல பார்வையாளர்கள் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்க, பார்வைக்கு மறைவாக இருந்த புத்தகத்திலிருந்து அவர் பக்கம் பக்கமாகப் படித்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது என்று அந்த அர்கோசி பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

இப்படி பல நிகழ்ச்சிகளை பல உலக நாடுகளுக்குப் பயணித்து குடா பக்ஸ் செய்து காட்டி இருக்கிறார்.  இது பல வருடங்களாக இந்தியாவில் தான் கற்று, செய்து வந்த கடுமையான தொடர் யோகப் பயிற்சிகளால் சாத்தியமாகிறது என்று பல முறை குடா பக்ஸ் சொல்லி இருக்கிறார். உள்மன கவனக் குவிப்பு என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னதாக வின்செண்ட் ஜே. டேக்சின்ஸ்கீ குறிப்பிட்டது பதஞ்சலி முனிவர் கூறும் அஷ்டாங்க யோகத்தின் ஒரு அங்கமே.   இரும்புத் தடுப்பு மற்றுமல்லாமல் மரத்தடுப்புகளின் பின் புறத்தில் இருந்தும் அவரால் சிறிதும் சிரமம் இல்லாமல் பார்வைக்கு மறைவாக இருந்தவற்றைப் படிக்க முடிந்தது.

1937 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் ஒரு வித்தியாசமான சாதனையை குடா பக்ஸ் செய்து செய்து காட்டினார். தரையில் இருந்து 200 அடி மேலே ஒரு கட்டிடத்தின் மிகக் குறுகிய கூரையில் கண்களை முன்பு சொன்ன முறையிலேயே இறுக்கமாகக் கட்டிக் கொண்டு நடந்து காட்டி இருக்கிறார். கண்களைத் திறந்து கொண்டு அதில் நடப்பதே பெரும் சிரமமாக இருக்கையில் கண்களைக் கட்டிக் கொண்டு அவர் நடந்தது அற்புதமே அல்லவா?  

1938 ஆம் ஆண்டு கனடாவில் மாண்ட்ரீல் நகரில் கனடிய விஞ்ஞானிகள் முன்னிலையிலும் முற்றிலும் கண்களைக் கட்டிய நிலையிலும் தன்னால் பார்க்கவும் படிக்கவும் முடிவதை விஞ்ஞான சூழ்நிலையில் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.

1945 ஆம் ஆண்டு நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் பயணித்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறார். நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் மிகவும் சந்தடி மிக்கது. அங்கு அந்த சந்தடியில் அவர் செய்து காட்டிய இந்த சாகச நிகழ்ச்சி தான் ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும்.

கண்களைக் கட்டிய நிலையில் குறி பார்த்து துப்பாக்கியால் சுடுவதையும் பல இடங்களில் செய்து காட்டி இருக்கும் குடா பக்ஸ் அடுத்ததாக தன் எக்ஸ்ரே பார்வைக்கு அடுத்ததாக செய்து காட்டிய சாகசம் தீயில் நடப்பது.
தீ மிதிப்பது நம் ஊர் மக்களுக்குப் புதிதல்ல. பல கோயில் திருவிழாக்களின் போது தீ மிதிப்பது பலரும் செய்திருக்கும் சாதாரணச் செயலே என்றாலும் குடா பக்ஸ் செய்து காட்டியதோடு இதை ஒப்பிட முடியாது. காரணம் இந்த அளவு வெப்பம், இந்த அளவு கனல் என்று ஒவ்வொன்றும் அளக்கப்பட்டு அப்படி நடத்தப்படும் நிகழ்ச்சியில் குடா பக்ஸ் செய்து காட்டியது அபாரமான சாதனையே.

உதாரணத்திற்கு அவர் லண்டன் பல்கலைக்கழக அமானுஷ்ய சக்தி ஆராய்ச்சி கவுன்சில் (University of London Council for Psychical Reasearch) விஞ்ஞானிகள் முன்னிலையில் 1935 ஆம் ஆண்டு தீயில் நடக்கும் நிகழ்ச்சியை அவர் செய்து காட்டியதைச் சொல்லலாம். நிகழ்ச்சிக்கு முன்பு அவர் தீக்காயத்தில் பாதிக்காமல் இருக்க ஏதாவது மருந்து தடவி இருக்கிறாரா என்று பரிசோதிக்கப்பட்டது. இல்லை என்று உறுதியான பிறகே அவர் 12 அடி நீளமுள்ள நிலக்கரியால் தகித்துக் கொண்டிருந்த தீக்களத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.  அன்று காற்று அதிகமிருந்த தினம். தீக்கனலின் மேல் பாக வெப்பம் 806 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. உள் பாக வெப்பம் 2552 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. இது இரும்பையும் உருக்க வல்ல வெப்பம். அந்த தீக்கனல் மீது அவர் நடந்த போது புகைப்படம் எடுத்ததில் தவறு நிகழ்ந்து படம் எடுக்கவில்லை என்பதால் புகைப்படக்காரர் தனக்காக இன்னொரு முறை நடந்து காட்ட முடியுமா என்று கேட்ட போது குடா பக்ஸ் ஒத்துக் கொண்டு நடந்து காட்டினார்.  

இது இன்னொரு நாளும் அவரால் செய்து காட்டப்பட்டது. இந்த முறையும் அவர் கால்களை நன்றாகக் கழுவி, துடைத்து உலர்ந்த பின்னரே அப்படி நடக்க அனுமதிக்கப்பட்டார். நடப்பதற்கு முன்பும், நடந்த பின்னரும் காலின் சூடு அளக்கப்பட்டது. நடந்த பின்னர் காலில் அளக்கப்பட்ட வெப்பம் நடப்பதற்கு முன்பிருந்ததை விடக் குறைவாக இருந்தது விஞ்ஞானிகளை வியக்க வைத்தது. இந்த விஞ்ஞான பூர்வ நிகழ்ச்சி அந்தப் பல்கலைக்கழக புல்லட்டினில் 1936 ஆம் ஆண்டு முழு விவரத்துடன் வெளியாகி இருக்கிறது.

இதை நானும் செய்து காட்டுகிறேன் என்று டிக்பி மொய்னாக் (Digby Moynagh) என்ற ஐரோப்பியர் அதே தீக்கனலில் நடந்து காட்ட முன்வந்தார். அவர் தீக்கனல் மீதே சந்தேகப்பட்டிருப்பாரோ என்னவோ! அவர் நடந்து காயப்பட்டு அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

குடா பக்ஸ் 1938 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு சாதனையை ராபர்ட் ரிப்லீயின் “நம்பினால் நம்புங்கள்” (Believe It or Not ) நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் செய்து காட்டினார். அந்த நிகழ்ச்சி மன்ஹட்டன் நகரில் NBC ரேடியோ சிட்டி ஸ்டூடியோவில் நடைபெற்றது. தீக்கனலில் ஒரு முறை நடந்து சென்று திரும்பவும் ஒரு முறை நடந்து வந்த பின் அளந்த போது அவர் கால்களில் சாதாரண வெப்பம் கூட இல்லை என்பது ரிப்லியை மிகவும் வியக்க வைத்தது. அந்த நேரத்தில் எடுத்த செய்திப்படம் இப்போதும் அந்த அமைப்பிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இது போன்ற பல நிகழ்ச்சிகளை உலக நாடுகளில் செய்து காட்டிய குடா பக்ஸ் கலிஃபோர்னியா ஹாலிவுட்டில் குடியேறி தன் வாழ்வின் கடைசி ஆண்டுகளை அங்கேயே கழித்தார். 1981 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் மறைந்த குடா பக்ஸ் அந்திம காலத்தில் glaucoma என்ற கண் நரம்புகள் பாதிக்கப்படும் நோயால் தன் கண்பார்வையை இழந்தார்.  

எக்ஸ்ரே பார்வையாளர் என்ற உலகப்புகழ் பெற்றிருந்த குடா பக்ஸ சாதாரணமாகப் படிக்கையில் கண்ணாடி போட வேண்டி இருந்ததும், அந்திம காலத்தில் அந்தக் கண்பார்வையை முற்றிலும் இழந்ததும் விதியின் வேடிக்கையென்றே சொல்ல வேண்டும். ஆனால் தன் பதினான்காம் வயதில் ஆரம்பித்து கடுமையான யோகப் பயிற்சியால் இந்த அபூர்வ சக்தியைப் பெற்றிருந்த குடா பக்ஸ் அந்த சக்திகளை உலக அரங்கில் நிரூபித்துக் காட்டி இந்தியாவின் யோகாவிற்கு ஒரு சாராரிடம் பெருமதிப்பை ஏற்படுத்தித் தந்தது என்பது மட்டும் நிச்சயம்.

இனி இன்னொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்....

(தொடரும்)                       

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 14.11.2014
  

2 comments:

  1. Thanks Mr. Ganesan. While wondering about these amazing people, it is inevitable to wonder much more about the creator and the creation!!!

    ReplyDelete
  2. Just read a news item:
    Samyak Jain, a class 3 student at Delhi's Sardar Patel Vidyalaya, claims he is a good painter, loves origami, is a voracious reader, and, like any other 8-year-old, says his cycle tops the list of his most precious possessions. But there is one thing that sets him totally different from other children: Samyak says he can do all this, and much more, completely blindfolded!
    Full story:
    http://www.hindustantimes.com/newdelhi/can-you-read-blindfolded-this-8-year-old-can/article1-1313666.aspx

    ReplyDelete