சேடாங்
நகர எல்லையைத் தாண்டி வெளியே வந்த பின் இளைப்பாற அக்ஷய் ஒரு குன்றின்
பின்புறத்தைத் தேர்ந்தெடுத்தான். பாதையின் ஓரத்தில் இருந்த அந்தக் குன்றின்
பின்புறம், பாதையில் பயணிப்போர் கண்ணில் படாதபடி மறைவாக இருந்தது. மைத்ரேயன்
நிறையவே களைத்துப் போய் இருந்ததால் அதற்கு மேலும் பயணம் செய்ய அக்ஷய்க்கு மனம்
வரவில்லை. மைத்ரேயன் தானாய் வாய் திறந்து களைப்பாய் இருப்பதாய் சொல்லா விட்டாலும்
கூட அவன் களைப்பை அக்ஷயால் உணர முடிந்தது. அவன் மகன் கௌதம் இதில் பாதி தூரம் கூட
நடந்திருக்க மாட்டான்.....
அமைதியாக
இருவரும் அமர்ந்திருந்தார்கள். மைத்ரேயன் பார்வை அந்த தூரத்து நட்சத்திரத்திலேயே
இருந்தது. அவனாக ஏதாவது கேட்பான் என்று அக்ஷ்ய் ஆரம்பத்தில் எதிர்பார்த்தான். அந்த
வயது சிறுவர்கள் யாராka இருந்திருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இது வரை குறைந்தபட்சம் நூறு
கேள்வியாவது கேட்டிருப்பார்கள். யாரோ ஒரு அன்னியனுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி
வந்திருக்கும் மைத்ரேயன் அதில் சில கேள்விகளாவது கேட்டிருந்தால் தான் இயல்பாக
இருந்திருக்கும்.
அக்ஷய் தன்
பையில் மைத்ரேயனுக்காக வைத்திருந்த புத்தபிக்கு உடைகளில் ஒன்றை எடுத்து
நீட்டினான். “இதை நீ உடுத்துக் கொள்”
மைத்ரேயன்
மௌனமாக அதை வாங்கி உடுத்திக் கொண்டான். உடுத்தி
இருந்த உடைகளை பத்திரமாகத் தன் பையில் போட்டுக் கொண்டான். அப்போதும் ஏன் எதற்கென்ற
கேள்வி இல்லை.
அவனையே அக்ஷய்
கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்க மைத்ரேயன் அவனை என்ன என்பது போலப் பார்த்தான்.
“நாம் திபெத்தை
விட்டு வெளியே இந்த உடையில் தான் போகப் போகிறோம். கிட்டத்தட்ட உன்னைப் போலவே
இருக்கிற ஒருவனை அழைத்துக் கொண்டு திபெத்திற்குள் புனித யாத்திரை வருபவர்கள் போல
நான் நுழைந்திருக்கிறேன். போகும் போது அவனுக்குப் பதிலாக உன்னை அழைத்துப் போவது
தான் திட்டம். இப்போதிருக்கும் ஆபத்தான சூழ்நிலைக்கு உடனடியாக வெளியேறுவது தான்
நல்லது என்றாலும் புனித யாத்திரைக்கு வேண்டிய குறைந்த பட்ச நாட்கள் கூட தங்காமல்
திரும்பிப் போனால் அவர்கள் சந்தேகப்படுவார்கள். அதனால் இரண்டு நாளாவது இங்கே
எங்கேயாவது நாம் ரகசியமாய் தங்க வேண்டும். பலர் கண்ணில் பட்டால் அவர்கள் நம்மை எங்கே
பார்த்தார்கள் என்பதை ஞாபகம் வைத்திருக்கலாம். அது பிறகு நமக்கு
பிரச்னையாகலாம்.....”
மைத்ரேயன்
தலையசைத்தான்.
அக்ஷய்
கூர்ந்து பார்த்துக் கொண்டே தொடர்ந்தான். “எங்கே ரகசியமாய் தங்கலாம் என்பதை நீ
தான் எனக்குச் சொல்ல வேண்டும்”
இப்போது
மைத்ரேயன் பார்வை கூர்மையாகியது. அக்ஷய் விளக்கினான். “நீ அடிக்கடி எங்காவது போய்
யாரும் தொந்திரவு செய்யாத இடங்களில் தங்கி விட்டு வருவதாக ஆசான் சொல்லி
இருக்கிறார். நாம் போகும் வரை யார் கண்ணிலும் படாமல் இருப்பது நல்லது என்பதால் தான்
உன்னைக் கேட்கிறேன்...”
ஆசான்
மைத்ரேயனைத் தூரத்தில் இருந்து மட்டுமே சில முறை பார்த்ததாகத் தெரிவித்திருப்பதால்
மைத்ரேயனுக்கு சாதாரண முறையில் ஆசானைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் மைத்ரேயன் ஆசான் யார், அவருக்கு நான்
அப்படிப் போவது எப்படித் தெரியும் என்றெல்லாம் கேட்கவில்லை.
இப்படி எந்தக்
கேள்வியுமே கேட்காமல் இருக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று எதைப்பற்றியும்
தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருப்பது. யாரோ ஒரு ஆளைப் பற்றி ஏன் தெரிந்து
கொள்ள வேண்டும் என்று சலிப்பாய் உணர்வது. இன்னொன்று எல்லாமே தெரிந்து
வைத்திருப்பது. தெரிந்த ஒன்றைப் பற்றி ஏன் கேட்க வேண்டும். இதில் இவன் எந்த வகை
என்று அக்ஷய்க்குப் புரியவில்லை.
ரகசியமாய் தங்க
முடிந்த இடங்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மைத்ரேயன் பதில் சொல்வானா இல்லை புரியாதது
போல் விழிப்பானா என்று அக்ஷயால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அதிசயமாக மைத்ரேயன்
சொன்னான். “சில இடங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த இடங்களுக்கு நம்மால் நடந்து போக
முடியாது. பஸ், ஜீப், அல்லது மினி பஸ்ஸில் தான் போக முடியும்... நாளை காலை தான்
இதெல்லாம் கிடைக்கும்.....”
அக்ஷய் அவனை
ஆச்சரியப்பார்வை பார்த்தான். “உன்னால் இவ்வளவு வார்த்தைகள் சேர்ந்தாற்போல் பேச
முடியுமா என்ன!” என்கிற மாதிரியாய் அவன் பார்த்ததை மைத்ரேயன் புரிந்த
மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. மெள்ள கொட்டாவி விட்டான்.
அக்ஷய் சொன்னான். “அப்படியானால் காலை வரை நமக்கு நேரம் இருக்கிறது. அது
வரை நீ வேண்டுமானால் என் மடியில் படுத்துக் கொள்”
எந்தவொரு தயக்கமோ,
கூச்சமோ இல்லாமல் மைத்ரேயன் அக்ஷயின் மடியில் படுத்துக் கொண்டான். சில
வினாடிகளில் உறங்கியும் போனான். அக்ஷய்க்கு தன் மகன்கள் நினைவு வந்தது. வருணும்,
கௌதமும் தான் இவ்வளவு உரிமையுடன் படுத்துக் கொள்வார்கள்.... முதல் முறையாக அக்ஷய்க்கு
அந்தச் சிறுவன் மீது இனம்புரியாத பாசம் பிறந்தது. நிலவொளியில் மைத்ரேயனையே
மென்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் உட்கார்ந்தபடியே தானும் கண்ணயர்ந்தான்.
லீ
க்யாங் கவுரவிடம் அப்போது தான் பேசி முடித்திருந்தான். இது வரை புதிராக இருந்த பல
விஷயங்கள் இப்போது புரிந்தன. வழுக்கைத் தலையர் மைத்ரேயர் பற்றி ஒரு புத்தகம்
எழுதப் போவதாய் தலாய் லாமாவிடம் விமான நிலையத்தில் சொல்லி இருக்க வேண்டும்.
மைத்ரேயன் இருப்பதையே மிக ரகசியமாய் வைத்திருந்த தலாய் லாமா அதைக் கேட்டு
அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்....
அதே போல்
பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடி கிடைத்தவுடன் அதில் முக்கியமான ஒரு பக்கத்தை லாமாக்கள்
ஒளித்து வைத்து இருக்க முடியும் என்று
அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மற்றவர்கள் மைத்ரேயன் யார் என்று அறியாத போது
அவர்கள் மட்டும் மைத்ரேயனை அடையாளம் கண்டு வைத்திருந்தது எப்படி என்றும் இப்போது
விளங்கியது.
அதே போல்
மைத்ரேயன் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய நகரம் சேடாங் என்ற அனுமானத்திற்கு
வழுக்கைத் தலையர் வந்த விதமும் அறிவுபூர்வமாகவே லீ க்யாங்குக்குப் பட்டது.
திபெத்தின் முதல் புத்த மடாலயமான சம்யே மடாலயம், முதல் அரண்மனையான யும்பூ லாகாங்,
புனித குளமான லாமோ லாட்சோ மூன்றுக்கு அருகாமையில் இருக்கும் சிறப்பு நகரம் சேடாங்
தான்.
மைத்ரேயனைக்
காப்பற்ற இந்தியாவில் இருந்து திபெத் வந்து சேர்ந்த அந்த ரகசிய மனிதனின் திட்டம்
கூட அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அந்த மனிதன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல்
சிந்திக்கிறான் என்பதற்கு புத்தகயாவில் கண்காணித்துக் கொண்டிருந்த ஒற்றர்கள்
கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அவன் தப்பித்த விதமும், இப்போது தைரியமாக ஒரு புத்த
பிக்கு வேடத்தில் திபெத்தில் வந்திறங்கிய விதமுமே நல்ல உதாரணங்கள். தனியாக திபெத்
போய் மைத்ரேயனோடு திரும்புவது கஷ்டம் என்று புரிந்து கொண்டவன், மைத்ரேயன் வயதும்
தோற்றமும் கொண்ட ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து அவனைக் கூட்டிக் கொண்டு
திபெத்திற்கு வந்து திரும்பும் போது அந்தச் சிறுவனைத் திபெத்தில் விட்டு விட்டு
அவனுக்குப் பதிலாக உண்மையான மைத்ரேயனை
அழைத்துக் கொண்டு போகத் திட்டமிட்டதும் கூட லீ க்யாங்குக்கு நல்ல அறிவுக்
கூர்மைக்கு அடையாளமாகவே தோன்றியது. யாருக்கும் சந்தேகம் வரக் காரணம் இல்லை. அந்த
போலிச் சிறுவன் முகபாவனை காட்டிக் கொடுத்திரா விட்டால் லீ க்யாங் அந்த ரகசிய
மனிதனின் திட்டத்தை அறிய மேலும் அதிக காலம் ஆகியிருக்கும்!
எல்லாம்
தெளிவான பின் லீ க்யாங் காலத்தை வீணாக்கவில்லை. சேடாங் நகரத்திலும், சுற்றியுள்ள
பகுதியிலும் பத்து ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதம் வளர்பிறையில் பிறந்த
குழந்தைகள் பட்டியல் உடனடியாக தனக்கு வந்து சேர வேண்டும் என்று போனில் கட்டளை இட்டான்.
லாஸா விமான நிலையத்தில் வந்திறங்கிய புத்த பிக்கு மற்றும் சிறுவனின் பாஸ்
போர்ட்களில் இருந்த விலாசங்கள் உண்மையானவை தானா என்று கண்டுபிடிக்க உத்தரவிட்டான்.
நூறு சதவீதம் பொய் விலாசங்களாகவே அவை இருக்க வேண்டும் என்றாலும் அதை
உறுதிப்படுத்திக் கொள்வதில் அவன் அலட்சியம் காட்ட விரும்பவில்லை. அவை பொய் என்று
கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே அந்தப் பாஸ்போர்ட்களை முடக்கி விட வேண்டும் என்று
உத்தரவிட்டான்.
மைத்ரேயனைக்
காப்பாற்ற வந்தவன் இன்னேரம் மைத்ரேயனை அவனது வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு
போயிருக்கவும் கூடும் என்று லீ க்யாங் கணித்தான். மிக நிதானமாய் பாதம் வைத்து
திபெத்தில் நுழைந்தவன் மிக வேகமாகவும் இயங்க முடிந்தவன் என்ற கணிப்புக்கு லீ
க்யாங் இப்போது வந்து விட்டிருந்தான். அப்படிப் போயிருந்தால் மைத்ரேயன் இப்போது
அவனுடன் தான் இருக்க வேண்டும்....
லீ க்யாங் மனதினுள்
அந்த ரகசிய இந்தியனிடம் பேசினான். “திபெத்தில் நுழைந்த அளவுக்கு அங்கிருந்து
வெளியேறுவது சுலபமல்ல ரகசிய மனிதனே. உங்கள் நாட்டு இதிகாசமான மகாபாரத யுத்தத்தில்
அபிமன்யுக்கு சக்கர வியூகத்தின் உள்ளே மட்டும் தான் நுழைய முடிந்தது, உயிரோடு வெளியேற
முடியவில்லை என்பதை நீ படித்திருப்பாய். உனக்கு திபெத் வெளியே செல்ல முடியாத சக்கர
வியூகமாகவே இருக்கப் போகிறது”
ஆனாலும்
தன்னையே உயர்வாக எண்ணியும், எதிரியைப் பலம் குறைத்து எண்ணியும் ஏமாந்து விட லீ
க்யாங் விரும்பவில்லை. தோற்பதற்கான நிச்சய காரணம் தலைக்கனம் என்பதை அவன் அறிவான்.
நீண்ட நேரம் யோசித்தான். பீஜிங்கில் இருந்து கொண்டு திபெத்தில் இயக்க முடிந்த
விவகாரம் இது அல்ல என்று உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.
உடனடியாக
திபெத் செல்ல சீன உளவுத் துறையின் உபதலைவனான லீ க்யாங்கால் முடியாது. அவன் திபெத்
விவகாரத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு மற்றவற்றை அலட்சியப்படுத்தி விட முடியாது.
அதற்கு அவன் அரசாங்கம் அனுமதி தராது. சீனாவுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும்,
உள்நாட்டில் இருந்தும் பல பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவன்
இங்கிருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் அதே சமயம் மைத்ரேயன் விவகாரம் அவன்
தனிப்பட்ட பிரத்தியேக கவனம் செலுத்தி திட்டமிட்டு கையில் எடுத்துக் கொண்ட
விவகாரம்....
நீண்ட
யோசனைக்குப் பிறகு வாங் சாவொவிற்கு போன் செய்தான். “உடனடியாக திபெத்திற்குப் போ....”
என்னவெல்லாம்
செய்ய வேண்டும் என்ற தெளிவான கட்டளைகள் லீ க்யாங் வாங் சாவொவிற்குப்
பிறப்பித்தான். எல்லா விதங்களிலும் யோசித்து வைத்திருந்த லீ க்யாங் வாங் சாவொவைப்
பிரமிக்க வைத்தான்.....
(தொடரும்)
என்.கணேசன்
very good reading experience ganeshan sir. please try to translate amanushyan and buddham saranam gacchami in english. I am sure that these two would be real best sellers.
ReplyDeleteநல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteமலர்
நாவலை கொண்டு போகும் விதம் அருமை. காத்திருந்து படிக்க வைக்கும் வித்தியாசமான கதை.
ReplyDeleteExciting about the boy.
ReplyDeleteவிறு விறுப்பான கதையோட்டம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா. .
>முத்துக்குமார்
>>ஊதியூர்
Very interesting.
ReplyDeleteபிரமாதம் கணேசன் சார். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteவிறுவிறுப்பாய்....
ReplyDeleteஅருமை அண்ணா..
Currently reading putham saranam story. It's mind blowing. .. Hats off to you ganesan ji..
ReplyDelete