என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, October 20, 2014

நிம்மதிக்கும், முக்திக்கும் யோக வாசிஷ்டம்!

அறிவார்ந்த ஆன்மீகம் -51 

கவத் கீதையைப் பற்றி கேள்விப்படாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிற்குச் செய்த உபதேசம் அது. ஆனால் பகவத் கீதைக்கு இணையான இன்னொரு ஞானப் பொக்கிஷம் இராமாயணத்தில் இருக்கிறது. அது இராமபிரானுக்கு அவருடைய குரு வசிஷ்டர் உபதேசம் செய்தது. யோக வாசிஷ்டம் என்று அழைக்கப்படும் அந்த ஞான உபதேசத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அந்த ஞான உபதேசத்தைக் கேட்டு ஒப்பற்ற ஞானியும், திரிலோக சஞ்சாரியுமான நாரதரே “பிரம்ம லோகத்திலும், சொர்க்கத்திலும், பூமியிலும் இது நாள் வரை கேட்காத மகத்தான உபதேசத்தை இப்போது கேட்டு என் செவிப்புலன் புனிதம் அடைந்ததுஎன்று மெச்சி இருக்கிறார். மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கும் அவரே அந்த மூவுலகிலும் அது வரை கேட்டிராத உபதேசம் என்று சொல்கின்றார் என்றால் யோக வாசிஷ்டத்தின் உயர்வை வேறு வார்த்தைகளில் சொல்லத் தேவை இல்லை அல்லவா?

இனி யோக வாசிஷ்டம் எந்த சந்தர்ப்பத்தில் உபதேசிக்கப்பட்டது என்று பார்ப்போம். குருகுல வாசம் முடிந்து இராமன் தன் சகோதரர்களுடன் தீர்த்த யாத்திரை போய் விட்டு வருகிறார். அந்த சமயத்தில் உலக வாழ்க்கையின் நிலையாமை, அர்த்தமில்லாத வாழ்க்கை ஓட்டம் பற்றி எல்லாம் எண்ணி இராமனுக்கு வாழ்க்கையில் விரக்தியும் வைராக்கியமும் ஏற்பட்டிருந்தது. உற்சாகமில்லாமல் சோர்வாக இருக்கிறார். அந்த நேரத்தில் தான் விசுவாமித்திர முனிவர் இராமனைத் தன்னுடன் காட்டுக்கு அழைத்துப் போக தசரதனின் அனுமதி கேட்டு வந்திருந்தார். ஆரம்பத்தில் தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையால் தசரதனும் அனுமதி தந்திருந்தார். அந்த சமயத்தில் இராமனின் விரக்தி மனநிலையைக் காண நேர்ந்த விசுவாமித்திரர் வசிஷ்டரிடம் இராமனுக்கு உபதேசித்து மனம் தெளிவடைய வழிகாட்டச் சொல்கிறார். அப்படிப் பிறந்ததே யோக வாசிஷ்டம்.   

பகவத் கீதையில் முதல் அத்தியாயம் முழுவதும் அர்ஜுனனின் புலம்பல் தான். அதே போல யோக வாசிஷ்டத்திலும் முதல் காண்டம் முழுவதும் இராமனின் விரக்திப் பேச்சுகளே.  பிறப்பு, இறப்பென்ற சம்சார வாழ்க்கையில் என்ன சுகம்? மனிதர்கள் இறக்கவே பிறந்து, பிறக்கவே இறக்கிறார்கள்..... என் மனது கிராமத்து நாய் போல் குறிக்கோளில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. கிடைத்துள்ள மேலான சுகத்தை இழந்து விட்டு மூங்கில் கூடையில் பெய்யப்பட்ட நீர் போல் மனம் வீணாகிக் கொண்டிருக்கிறது.... அலைகடலை அடக்கிக் குடித்து விடலாம். மேரு மலையைப் பெயர்த்து எறிந்து விடலாம். சுட்டெரிக்கும் கனலை விழுங்கி விடலாம். ஆனால் மனத்தை அடக்குவது எளிதாக இல்லை..... காலம் அனைவரையும், அனைத்தையும் விழுங்கி விடுகின்றது...என்றெல்லாம் மன அமைதியற்ற நிலைக்கான கசப்பான உண்மைகள் மேலும் பல சொல்லி விட்டு கடைசியில்  சான்றோர்கள் உலகின் பிறப்பு இறப்புகளின் தன்மையை உணர்ந்து சஞ்சலமற்ற நிலையை எவ்வாறு பெற்றனரோ அதனை எனக்கு உபதேசித்தருள வேண்டும்என்று வசிஷ்டரிடம் இராமன் வேண்டிக் கொள்கிறார். பின் தொடரும் வசிஷ்டரின் உபதேசங்களே யோக வாசிஷ்டம்.

யோக வாசிஷ்டத்தில் சின்னச் சின்ன உதாரணக் கதைகள் உண்டு, அழகான உவமைகள் உண்டு, எளிமையான வார்த்தைகளில் வேதாந்த சாரம் உண்டு, மனதை உறுதியும் அமைதியும் படுத்தும் ஆத்மஞானம் உண்டு. தத்துவ விஷயமாகத் தோன்றும் ஐயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் தந்து முக்தியைடையத் தேவையான அனைத்து உபதேசங்களும் இதில் உள்ளதால் இதற்கு “மோக்‌ஷோபாயிஅதாவது முக்திக்கு வழிகாட்டும் நூல் என்ற பெயரும் இதற்கு உண்டு.

இனி வசிஷ்டர் இராமனுக்கு மனம் அடங்கி அமைதியடையவும், ஞானத் தெளிவு பெற்று உற்சாகத்தோடும் உறுதியோடும் வாழ்க்கையை நடத்தி முடித்து முக்தி பெறவும் சொல்லும் கருத்துக்களின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

யோக வாசிஷ்டத்தின் ஆரம்பத்திலேயே ஞானிகள் காட்டும் வழியில் மனிதன் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வசிஷ்டர் உபதேசிக்கிறார். “வேடனின் வலையில் இருந்து அல்லது பகைவனின் கூண்டிலிருந்து சிங்கம் தன் முயற்சியால் வெளிவருவது போல் உயர்ந்த மனித முயற்சியால் இந்த சம்சாரமென்னும் கிணற்றிலிருந்து வெளிவர வேண்டும். விஸ்வாமித்திரர் பிரம்மரிஷி பட்டத்தைப் பெற்றதும், பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் அப்படிப் பட்ட தீவிர முயற்சியாலேயே. நிலையற்ற இந்த சம்சாரத்தில் வீழ்ந்து துயரப்படும் மனிதன் உயர்ந்த சாத்திரங்கள், சத்சங்கம் இவற்றின் துணையோடு தனது அறியாமையை நீக்கிக் கொண்டு ஆன்ம நாட்டம் பெற்று அனுபூதி நிலைக்கு உயர்தல் வேண்டும்

காலமெல்லாம் சுகபோகங்களில் தம்மை இழந்து விட்டு, உடல் மற்றும் மன நோய்களால் தள்ளாடும் முதுமையில் எதையும் சாதிக்க முடியாமல் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். எனவே ஆன்ம வித்தைக்கு ஏற்ற பருவம் பால்யமும், வாலிபமுமே.

“நான் பந்தப்பட்டுள்ளேன். விடுதலையே எனது இயல்புநிலை. அதனை நான் இப்போது இழந்து நிற்கிறேன். இதற்குக் காரணம் புலன்வழிப்பட்ட எனது வாழ்க்கையேஎன்று உணர்ந்து பந்தப்படாமல் தன் இயல்பான சுதந்திரத் தன்மையில் வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்று தெளிந்து அதற்கான முயற்சியில் ஈடுபடும் சாதகன் சான்றோர் உதவியை நாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

முக்தியின் வாசலில் நான்கு துவாரபாலகர்கள் உண்டு என்கிறார் வசிஷ்டர். அவை:

1.       சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப்படுத்துதல்

2.       விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்பதில் தெளிவாயிருத்தல்.

3.       சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய் வாழ்தல்.

4.       சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி இருத்தல். (அவர்கள் பேசும் சாத்திரங்களுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல் இருக்கும் என்பதால் அவர்களோடு சேர்ந்திருத்தல் பெரும்பலன் கிடைக்கும்.)

இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின்பற்றினால் மீதி மூன்றும் தானாகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.

துக்க வடிவான சம்சாரத்திலிருந்து விடுதலையைப் பெற ஒரே வழி மனத்தை வசப்படுத்துதலே என்கிறார் வசிஷ்டர். “அனைத்து சுக துக்கங்களுக்கும் மனமே காரணம். மனம் புலன்களோடு இணைந்து உலக நாடகத்தை நடத்துகிறது. தானே உண்டாக்கிய உலகத்தில் தானே பாத்திரதாரியாகவும் இருந்து ஜீவனை அலைக்கழிக்கிறது.

“இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால், மலைகளைப் பிளந்தது போல் இந்திரியங்கள் என்ற விஷப் பாம்புகள் தலையெடுக்கும் போதெல்லாம் விவேகம் என்ற தடியால் தொடர்ந்து அடித்து நொறுக்க வேண்டும்

அப்படிச் செய்தால் மனம் அடங்கி வசமாகி விடுமா, முக்தி கிடைத்து விடுமா என்றால் இல்லை என்கிறார் வசிஷ்டர். நீண்ட காலப் பயிற்சி முக்கியம் என்கிறார். “இராமா! ஜனன மரண ரூபமான இந்த சம்சாரம் அநேக பிறவிகளில் சேர்த்த பலனே. எனவே அது குறுகிய காலப் பயிற்சியால் மறைவதில்லை. வெகுகாலம் மிக விழிப்போடு, தொடர்ந்து செய்யும் ஆன்மப் பயிற்சியால் மனமற்ற (அதாவது எண்ணங்களற்ற) நிலை தோன்றும். அப்போது மட்டுமே ஜனன மரண சம்சாரம் நீங்கி முக்தி கிட்டும்

“சீறிப்பாய்கிற நெருப்புக்கு அருகில் உள்ளவன் அந்தத் தீ தன்னைத் தீண்டாதிருக்கக் காட்டும் விழிப்புணர்வும், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கியவன் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு துடுப்பாவது சிக்காதா என தவிக்கின்ற தவிப்பும், மலை உச்சியில் நிற்பவன் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நழுவிப் போகாதிருக்கக் காட்டும் எச்சரிக்கை உணர்வும், ஜனன மரண சமசார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெற விழைபவனிடம் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் கேட்டு இராமன் மனம் தெளிந்து ஞானம் பெற்றார் என்கிறது யோக வாசிஷ்டம். வசிஷ்டர் அறிவுரையை முழுமையாகப் பின்பற்ற முடிந்தால் நம் மனமும் தெளிவடையும், வாழ்க்கை அமைதியடையும், முக்தியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமென்ன?

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 4.3.2014 

8 comments:

 1. Very vice! Seems some of readers buy Thinathanthi paper for Ganesan article.

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete
 3. மிக அருமையான பதிவு.. உங்களின் ஒவ்வொரு பதிவ்வோம் ஒரு வைரமாக மிளிர்கிறது ... உங்களின் எழுத்து தொடர வாழ்த்துக்கள்.

  யோகா வசிடம் தமிழில் கிடைக்குமா ? சென்னையில் கிடைக்கும் இடம் பற்றி தகவல் கூறினால் நன்றாக இருக்கும்

  அன்புடன்
  மோகன் தாஸ்

  ReplyDelete
  Replies
  1. யோக வாசிஷ்டத்தை தமிழில் நர்மதா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சென்னையில் கிடைக்கும் இடம் அறியேன்.

   Delete
  2. தமிழில் "சம்வித் (samvid)" என்பவர் உரை எழுதியுள்ளார். எளிய, தெளிய உரை. Publisher and seller : Samatha Book House, opposite to DMS bus stop, Teynampet, Chennai. விலை 100/-.

   Delete
 4. அருமை ...யோக வாசிஷ்டத்தை விரிவாக படிக்கும் ஆவலை தூண்டுகிறது

  ReplyDelete
 5. Your articles are always mind blowing. Thanks for everything.

  ReplyDelete