சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 16, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 16



க்‌ஷயிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த ஆசான் கனிவாகக் கேட்டார். “என்ன அன்பரே?

அக்‌ஷய் உடனே இயல்பு நிலைக்கு வந்தான். “ஒன்றுமில்லை ஆசானே. நீங்கள் தொடருங்கள்

ஆசான் தொடர்ந்தார். “அந்த ஓலைச்சுவடியில் இருந்த இரண்டாவது முடிச்சை அவிழ்த்ததில் மைத்ரேயரின் பத்து வயது முடிந்த பிறகு மறைவில் இருந்தாலும் பேராபத்து வரும் என்றும் சுமார் ஒரு வருட காலம் நீடிக்கும் அந்த பேராபத்திலிருந்து மைத்ரேயரைக் காக்க நாகசக்தி உள்ள ஒருவன் வருவான் என்றும் இருந்தது.  நாங்கள் சக்தி வாய்ந்த நாகர்களில் ஒருவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தோம்..... அப்போது தான் மௌன லாமாவின் எச்சரிக்கை வந்தது.... திபெத்தில் சில காலம் வசித்த உங்களுக்கு மௌன லாமாவைத் தெரியும் என்று நினைக்கிறேன்...

அக்‌ஷய் “தெரியும்என்றான். தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பிக்க முக்கிய காரணமானவர் என்பதாலும் பல தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தியவர் என்பதாலும் அக்‌ஷய் திபெத்தில் இருந்த காலத்திலேயே மௌன லாமா பெரும் மதிப்புடன் பேசப்பட்டதைக் கேட்டிருக்கிறான்.

ஆசான் தொடர்ந்தார்.  “இன்னும் சில நாட்களில் மைத்ரேயர் இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் என்றும் மைத்ரேயர் உடனடியாக திபெத்தில் இருந்து போய் விட வேண்டும் என்றும் எச்சரிக்கையை எழுதினார். மைத்ரேயரைக் காக்க நாகமச்சத்தை முதுகெலும்பின் மேல்பகுதியில் கொண்டிருப்பவன் உதவியை நாட வேண்டும் என்று ஆலோசனையையும் எழுதினார்....

அக்‌ஷய்க்கு அந்த நாகமச்சத்தில் மீண்டும் ஒரு சிலிர்ப்பு வந்து போனது. இத்தனை காலம் ஜடமாய் இருந்த ஏதோ ஒரு சக்தி தன் முதல் துடிப்பை வெளிப்படுத்தினது போல இருந்தது. மீண்டும் அரும்பிய வியர்வையை அக்‌ஷய் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான்.

அதைப் பார்த்து விட்டு ஆசான் குற்ற உணர்ச்சியுடன் சொன்னார். புழுக்கமான அசௌகரியமான ஒரு இடத்தில் உங்களை உட்கார வைத்திருப்பதற்கு என்னை மன்னியுங்கள் அன்பரே

ஒரு அசௌகரியமும் இல்லை. நீங்கள் தொடருங்கள்என்று அக்‌ஷய் புன்னகைத்தான். ஆசான் தொடர்ந்தார்.

பத்மசாம்பவா நாகசக்தி உள்ள ஒருவன் வருவான் என்று சொல்லி இருந்ததும் மௌன லாமா சொன்னதும் முரணாக இருப்பது எங்களைக் குழப்பியது. பத்மசாம்பவா நாங்கள் வணங்கும் முதல் குரு. மௌன லாமாவோ எங்களுக்கு பல நேரங்களில் சரியான வழியைக் காட்டியவர். மறுபடி அந்த ஓலைச்சுவடியில் எழுதி இருப்பதை மொழிபெயர்த்து தந்தவரிடம் போனோம். அந்த மொழிபெயர்ப்பாளர் அந்த வாக்கியத்தை நாக சக்தி இருப்பவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம் நாக சின்னம் இருப்பவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அப்படி எடுத்துக் கொண்டால் இருவர் சொல்வதும் ஒத்துப் போகிறது...

உடனடியாக எங்கள் புத்த மடாலயங்கள் அனைத்திற்கும் ரகசியத் தகவல் அனுப்பி யாருக்காவது அந்த மாதிரி ஒரு மச்சம் இருப்பவரைத் தெரியுமா என்று கேட்ட போது இமயமலையில் உள்ள ஒரு புத்தவிஹாரத்திலிருந்து உங்கள் பற்றிய தகவல் கிடைத்தது. அமானுஷ்யன் என்ற பெயரில் தான் அதிகம் அறியப்படுகிறீர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் விசாரித்து இப்போது அரசாங்க ஆதரவோடு நீங்கள் மறைவாக இருப்பது தெரிந்து கொண்டு உங்கள் அரசாங்கத்தை அணுகினோம்...

அக்‌ஷய் சொன்னான். “இருவர் சொன்னதும் ஒத்துப் போகிறது என்கிறீர்கள். ஆனால் பத்மசாம்பவா அவன் வருவான் என்றார். மௌன லாமா அவன் உதவியை நாட வேண்டும் என்கிறார். இரண்டும் ஒன்றல்லவே. தானாக வருவதும், தேடி அழைத்து வருவதும் வேறு தானே?

ஆசான் சிறிதும் தாமதிக்காமல் சொன்னார். அவன் அழைக்காமலேயே வருவான் என்று பத்மசாம்பவா சொல்லவில்லையே. வருவான் என்பது நிச்சயமாய் அவர் சொன்ன வார்த்தை. எப்படி என்பதை மௌன லாமா சொல்லிருக்கிறார். இப்படி தான் நான் பார்க்கிறேன். இதில் முரண் இல்லையே அன்பரே

ஆசானின் பேச்சு சாமர்த்தியம் அக்‌ஷய் முகத்தில் புன்னகை வரவழைத்தது.

புன்னகை செய்யும் போதெல்லாம் மிக அழகாகத் தோன்றும் அக்‌ஷயைப் பார்த்து புன்முறுவல் பூத்த ஆசான் அக்‌ஷயின் மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தலைப்பட்டார்.

“நீங்கள் கேட்டீர்கள். அது உண்மையிலேயே புத்தரின் அவதாரமான மைத்ரேய புத்தர் தானா? ஆம் என்றால் உண்மையிலேயே தெய்வாம்சம் பொருந்திய மைத்ரேயனுக்கு அடுத்தவர் உதவி எதற்கு? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா?”  அன்பரே. பத்மசாம்பவா சொல்லி இருக்கும் அடையாளங்கள், பிறந்த இடம், சூழ்நிலை எல்லாம் அந்தக் குழந்தையையே மைத்ரேயர் என்று காட்டியது. எனவே நாங்கள் பரிபூரணமாக நம்புகிறோம்.

ஒரு வீரியமுள்ள விதையில் மரம் ஒளிந்திருக்கிறது என்றாலும் அது மரமாக சில காலம் தேவைப்படுகிறது அன்பரே. அந்த மரத்தின் பலத்தை அது முளை விடும் போதே நாம் எதிர்பார்க்க முடியுமா. ஒரு குழந்தை கூட அந்த சிறு தளிரைப் பிடுங்கி விட முடியுமல்லவா? மைத்ரேயர் இப்போது தளிராக இருக்கிறார் அன்பரே. தன் தெய்வத்தன்மையை முழுவதுமாக உணரும் வரை அவருக்குப் பாதுகாப்பு தேவை தான் என்று நினைக்கிறோம். உங்கள் இதிகாசத்தையே உங்களுக்கு நினைவுபடுத்த நினைக்கிறேன் அன்பரே. தெய்வ அவதாரமான ராமனுக்கு பக்தனான அனுமனின் உதவி எதற்கு? வானர சேனையின் சேவை எதற்கு? தெய்வ அவதாரங்கள் கூட மாயா ஜாலங்களை நிகழ்த்தி எல்லாவற்றையும் உடனடியாக முடித்து விடுவதில்லை. எல்லாமே படிப்படியாகத் தான் நிகழ்கின்றன...

அக்‌ஷய்க்கு அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை.

ஆசான் பொறுமையாகத் தொடர்ந்தார். “அவர் உயிருக்கு எதனால் ஆபத்து, அவரைக் கொன்று எதிரிகள் சாதிக்கப் போவதென்ன என்று கேட்டிருந்தீர்கள் அன்பரே. வல்லமை நாடான சீனாவின் கண்களில் நாங்கள் தூசியாகவே உறுத்திக் கொண்டிருக்கிறோம் நண்பரே. அமெரிக்கா போன்ற பெரிய உலக நாடுகள் கூட தார்மீக ஆதரவை எங்களுக்குத் தந்து வருவதை சீனா ரசிக்கவில்லை. எங்களுக்கு எந்த விதத்திலும் பலம் கூடுவதை சீனா விரும்பவில்லை. ஒடுக்கப்பட்ட திபெத்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறோமே தவிர திபெத்திற்குள்ளே நாங்கள் அடங்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலைமையில் எங்களுக்கு மைத்ரேயர் போன்ற தெய்வப்பிறவி வந்து எங்கள் மக்களை எழுச்சி பெறச் செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருக்கிறது. மதமும், கடவுளும் மக்கள் மத்தியில் மிக சக்தி வாய்ந்தவை என்பதால் இரண்டும் கம்யூனிஸ்டுகளுக்கு என்றுமே அலர்ஜி தான் அன்பரே. எனவே ஒரு மைத்ரேயரின் உதயம் அவர்களுக்கு எதிர்காலத் தலைவலியாகலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. இது வரை மூன்று குழந்தைகளை மைத்ரேயராக இருக்கலாம் என்று எண்ணி எங்கள் எதிரிகள் கொன்றிருக்கிறார்கள்..... இப்போது அவர்கள் மைத்ரேயரைக் கொல்ல பெரியதோரு வலுவான காரணம் இருக்கிறது....

அந்த வாசகத்தைச் சொல்லும் போது ஆசான் நினைவில் லீ க்யாங் வந்து புன்னகைத்தான். அவருக்கு ஒரு கணம் ரத்தமே உறைவது போல் இருந்தது. மிகவும் திடமான மனதுடையவரே ஆனாலும் ஆசான் மனதில் லீ க்யாங் என்றும் இது போன்ற உணர்வையே ஏற்படுத்தினான்...

சீன உளவுத்துறையின் வாராந்திரக் கூட்டம் அன்று வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கூட்டம் முடிகிற வரை அலைபேசியில் வந்த குறுந்தகவல்களைப் பார்க்க முடியவில்லை. வெளியே வந்து பார்த்த போதோ வாங் சாவொ ஏழு தகவல்கள் அனுப்பி இருந்தான். புத்த கயாவில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் மிகச்சுருக்கமாக அவ்வப்போது தெரிவித்திருந்தான். அந்த தகவல்களைப் படித்து முடித்த அவன் திருப்தி அடையாமல் தனதறைக்குப் போனவுடன் வாங் சாவொவிடம் பேசினான்.

“என்ன நிலவரம்?

டெர்கார் மடாலயத்தில் ஆசான் இருந்ததையும், ஒருவனுடன் சந்திப்பு நிகழ்ந்ததையும், அவனிடம் ஆசான் ஒரு காகிதம் தந்ததையும், பிறகு அங்கிருந்து வெகுவேகமாக ஒரு காரில் கிளம்பியதையும் தெரிவித்த வாங் சாவொ தொடர்ந்து சொன்னான். “அந்தக் கார் புத்த க்யாவில் இருக்கும் இன்னொரு திபெத்திய மடாலயமான கர்மா தார்ஜேவுக்குப் போயிருக்கிறது. அங்கேயும் ஆசான் வேகமாக உள்ளே போய் விட்டார். நம் இரண்டு ஆட்கள் அங்கே வெளியே நிற்கிறார்கள். ஆசான் கடிதம் தந்த ஆள் இப்போது கயா போய் சேர்ந்திருக்கிறான். அவன் பின்னால் நம் ஆள்கள் பட்டாளமே இருக்கிறது....

எனக்கு அந்த ஆளின் புகைப்படங்களை அனுப்பு. அதோடு வீடியோ எடுத்தும் அனுப்பு. எதற்கும் கர்மா தார்ஜே மடாலயத்துக்கு கூடுதல் ஆள்களை அனுப்பு. ஆசானை கண்காணிக்க இரண்டு ஆளெல்லாம் போதவே போதாது.... கர்மா தார்ஜே மடாலயத்துக்குப் போனது ஆசான் தான் என்று நம் ஆட்களுக்கு நிச்சயமாய் தெரியுமா?

கிழவர் கூன் போட்ட பிக்கு போல அங்கே நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் நம் ஆட்கள் ஏமாந்து போகாததால் தான் அந்த ஆளிடம் அவர் ஒரு கடிதம் கொடுப்பதைப் பார்க்க முடிந்தது. அதே கூன் போட்டு தான் கர்மா தார்ஜே மடாலயமும் போய் சேர்ந்திருக்கிறார்....

லீ க்யாங் யோசனையுடன் சொன்னான். டெர்கார் மடாலயத்தில் நம் கண்காணிப்பு அதிகமாய் இருக்கிறதென்று கூட அவர் இடம் மாறி இருக்கலாம். இப்போது கயா போய் சேர்ந்திருக்கிற ஆள் நாம் தேடுகின்ற ஆளாய் இருக்கலாம். ஆசான் நம்மை திசை திருப்ப வைத்த ஆளாயும் இருக்கலாம். உண்மையான சந்திப்பு கர்மா தார்ஜே மடாலயத்தில் நடக்க இருக்கலாம்.... இப்போது டெர்கார் மடாலயத்திற்கு வெளியே நம் ஆள்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?"

“யாரும் இல்லை.

லீ க்யாங் யோசித்தான். பின் மெல்ல கேட்டான். டெர்கார் மடாலயத்தில் இருந்து கர்மா தார்ஜே மடாலயம் போனது ஆசான் தான் என்பதை நம் ஆட்கள் அவர் முகத்தைப் பார்த்து முடிவு செய்தார்களா, இல்லை கூன் முதுகைப் பார்த்துத் தான் முடிவு செய்தார்களா?

வாங் சாவொ “கொஞ்சம் பொறுங்கள் சார்என்று சொல்லி விட்டு சிறிது நேரத்தில் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு லீ க்யாங்குக்கு பதில் சொன்னான். “முகத்தைப் பார்க்கவில்லையாம் சார். ஆசான் முக்காடு போட்டு முகத்தை மறைத்திருந்தாராம்.

முக்காடாஎன்று கேட்ட லீ க்யாங் பிறகு அழுத்தமாகச் சொன்னான். 

“உடனடியாக டெர்கார் மடாலயத்துக்கு நம் ஆட்கள் சிலரை மறுபடியும் அனுப்பு. தொடர்ந்து கண்காணிக்கச் சொல். ஆசான் அங்கேயே இன்னமும் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆசானும் அக்‌ஷயும் உள்ளே பேசிக் கொண்டிருந்த போது மறுபடியும் டெர்கார் மடாலயத்திற்கு வாங் சாவொ அனுப்பிய ஆட்கள் நான்கு பேர் வந்து சேர்ந்தார்கள்.

(தொடரும்)

என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

13 comments:

  1. ராதா ராகவன்October 16, 2014 at 7:18 PM

    உங்கள் அமானுஷ்யன் நாவலை இன்று காலை படித்து முடித்தேன். இங்க்லீஷ் நாவல் படிக்கிற மாதிரி விறுவிறுப்பாய் இருந்தது. விறுவிறுப்போடு கேரக்டர்கள் அமைத்த விதம் சூப்பர். அட்டையில் போட்டிருந்த மாதிரி மீண்டும் மீண்டும் படிக்க நிறைய இடங்கள் உங்கள் நாவலில் இருந்தன. அதன் தொடர்ச்சியாக இதை படிக்கும் போது அக்‌ஷய் கூடுதலாக நெருங்கி இருக்கிற மாதிரி ஃபீலிங். இதுவும் மிக நன்றாய் போகிறது. வெய்ட்டிங் தான் கஷ்டம். இதிலும் ஆசான் கேரக்டரும், லீ க்யாங்க் கேரக்டரும் சூப்பர்.

    ReplyDelete
  2. Feel like seeing the incidents and people. Great going.

    ReplyDelete
  3. Awaiting for next update, Plz update very soon ...congrat

    ReplyDelete
  4. வித்தியாசமான விருவிருப்பான நாவல்.

    ReplyDelete
  5. உங்கள் எழுத்துநடை உண்மையிலேயே ஒரு புத்தபிக்கு பேசியதை போன்று அமைதியானதாக, தெளிவானதாக இருக்கிறது! ரசித்தேன்.

    ReplyDelete
  6. I very much enjoy your pleasant writing style.

    ReplyDelete
  7. Can we expect a Diwali bonus of two episodes together next? Thanks

    ReplyDelete
    Replies
    1. As I am very very busy I couldn't give two episodes for Diwali. But I'll give a longer chapter. Thank you.

      Delete
  8. Nice update..Awaiting for next update, Plz update very soon

    ReplyDelete
  9. nice update sir
    athuvum akshay unarum silirppu avanin pirappin karuvaa irukkumo
    aasan kuriya anaiththum tibet makkal odukkam patriyum budhharin siru vayathu paththiyum nanraga irunthathu
    lee kong arivu kurmai super ini avargal kannil mannai thuvi akshay epadi veliyera poraan nu kaana aavalaa irukku

    ReplyDelete
  10. லீ க்யாங் கண்டுபிடிக்க மாட்டார் என் நினைத்தேன்..,ஆனால் கண்டுபிடித்து விட்டார்...லீ க்யாங் அறிவு கூர்மை அருமை

    ReplyDelete