சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 23, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 17



லீ க்யாங்கின் நினைவு வந்து ஒரு கணம் உறைந்து போன ஆசானை அக்‌ஷய் கரிசனத்துடன் பார்த்தான். ஆசானுக்கு உடல்நலப் பிரச்னையோ என்று அவனுக்கு சந்தேகம் வந்தது. அவன் பார்வையில் இருந்தே அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஆசான் தன்னை சமாளித்துக் கொண்டு சொன்னார். “ஒன்றுமில்லை நண்பரே. ஒரு மனிதனின் நினைவு எப்போதுமே எனக்கு இது போல் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வளவு தான்

இத்தனை நேரமாய் ஆசானுடன் பேசிக் கொண்டிருந்த்திலேயே அவரை ஒரு உறுதியான மனிதராக அக்‌ஷய் கணித்திருந்தான். என்ன தான் பேச்சில் கனிவாக இருந்த போதிலும் அந்த அப்பாவித் தோற்றத்திற்கும், அன்பான பேச்சுக்கும் பின்னால் ஒரு இரும்புத்தன்மை இருந்ததை அவனால் உணர முடிந்திருந்தது. ஆனால் அவரையே ஒருவனின் நினைவே தடுமாற வைக்கிறது என்றால் அவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது என்பது புரிந்தது.

“அவன் தங்கள் நண்பனா எதிரியா ஆசானே?

“நண்பனல்ல. போதிசத்துவர் காட்டிய அன்பு வழியில் பயணிக்கும் என்னைப் போன்ற ஒரு பிக்கு அவனை எதிரி என்று சொன்னால் அதுவும் சரியாக இருக்காது. இப்போதைக்கு எங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறவன் அவன். சீன உளவுத்துறை MSS ல் உபதலைவனாக இருக்கிறான். பெயர் லீ க்யாங். திபெத் சம்பந்தப்பட்ட உளவுத்துறை விவகாரங்களில் அவன் தான் முடிவெடுப்பவன்....

இங்கே ரகசியமாய் ஆசான் வந்திருப்பதையும், அவரைச் சந்திக்க ஒரு ஆள் வருவான் என்பதையும் முன் கூட்டியே அறிந்திருந்த லீ க்யாங் அதி புத்திசாலி தான் என்பதில் அக்‌ஷய்க்கு சந்தேகமில்லை....

ஆசான் அக்‌ஷயைத் தாண்டி சுவரை வெறித்து பார்த்தபடி சொன்னார். “அந்த மனிதனின் அறிவுக்கு இணையான ஒரு அறிவை நான் இது வரை கண்டதில்லை. என்னுடைய வாழ்க்கை குறுகியதல்ல. மிக நீண்ட காலமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் சந்தித்திருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் குறைவானதல்ல. பல தரப்பட்ட மனிதர்களை ஆழமாகவே அறிந்திருக்கிறேன். ஆனால் லீ க்யாங் போன்ற ஒருவனை நான் சந்தித்ததில்லை. ...

அவர் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட அந்த வெறித்த பார்வை லீ க்யாங் என்ற மனிதனை மனதில் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.  அக்‌ஷய் ஆசானை லேசான புன்னகையுடன் பார்த்தான். பின் தனக்கு எழுந்த முக்கிய சந்தேகத்தைக் கேட்டான். “மைத்ரேய புத்தர் உயிரோடு இருப்பது லீ க்யாங்குக்குத் தெரியுமா?

“சில நாட்கள் முன்பு வரை அவனுக்குக் கண்டிப்பாகத் தெரியாது. இப்போது அவனுக்குத் தெரிந்திருக்கலாம், அல்லது சந்தேகமாவது வந்திருக்கலாம். ஆனால் சீக்கிரமே அவனுக்கு நிச்சயமாய் தெரிந்து விடும்... அது மட்டுமல்ல மைத்ரேய புத்தர் யார் என்பதும் கூட கண்டுபிடித்து விடுவான்....

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?

ஆசான் டெல்லி விமான நிலையத்தில் தலாய் லாமாவைச் சந்தித்த வழுக்கைத் தலையரைப் பற்றி விவரமாகச் சொன்னார். அக்‌ஷய் அதைக் கேட்டு விட்டு திகைத்தான். மௌன லாமாவின் எச்சரிக்கையின்படி  மைத்ரேயரை லீ க்யாங்க் நெருங்க நாட்கள் அதிகமாகாது என்பது அவனுக்கு புலனாக ஆரம்பித்தது.

ஆசான் உருக்கமான தொனியில் சொன்னார். “அதனால் தான் அங்கிருந்து மைத்ரேயரைத் தப்பிக்க வைத்து விட உங்கள் உதவியை நாடுகிறோம் அன்பரே.... அது மட்டுமல்ல மைத்ரேயரைக் கொன்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முந்தையதை விட பல மடங்கு உக்கிரமாக அவர்கள் முயற்சிகள் இருக்கும். ஏன் தெரியுமா...

அக்‌ஷய் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

ஆசான் மெல்ல சொன்னார். “அவர்கள் ஒரு போலி மைத்ரேய புத்தரை உருவாக்கி வைத்திருத்திருக்கிறார்கள் அன்பரே. சீக்கிரத்திலேயே அந்த போலி மைத்ரேயரை பதமசாம்பவா சொல்லி விட்டுப் போயிருக்கிற நிஜ மைத்ரேயராய் உலகத்திற்கு அரங்கேற்றம் செய்யப் போகிறார்கள்.... இந்த நேரத்தில் உண்மையான மைத்ரேயர் இருப்பது அவர்களுக்கு ஆபத்தல்லவா?

அக்‌ஷய் அசந்து போனான்.

லீ க்யாங் அடிக்கடி புத்த கயா நிலவரத்தை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான். யோசிக்க யோசிக்க ஆசான் டெர்கார் மடாலயத்திலேயே இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ஆசானிடமிருந்து ஒரு தாளை வாங்கிக் கொண்டு போன ஆசாமி கயா போய் சேர்ந்து கயாவில் இருந்து லக்னோ போகும் ரயிலில் ஏறி உட்கார்ந்திருக்கிற தகவல் வந்து சேர்ந்தது.

வாங் சாவொ ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் அந்த ஆசாமியின் புகைப்படங்களையும் சின்ன வீடியோக்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அவற்றில் அவன் சட்டைப்பையில் வைத்திருந்த ஆசான் தந்த காகிதத்தை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஏதோ பெரிய புதையல் ரகசியத்தை தன் சட்டைப்பையில் வைத்திருப்பது போன்றதொரு பிரமையை அவன் ஏற்படுத்தினான். பார்க்கவும் திடகாத்திரமாக இருந்தான். ஆனால் அவன் முகத்தில் புத்திசாலித்தனம் என்பது சிறிதும் தெரியவில்லை. உடலின் அளவு அறிவு முதிர்ச்சி இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.

தலாய் லாமாவும் ஆசானும் தேடிக் கண்டுபிடித்து போய் உதவி கேட்கிற அளவு இந்த ஆசாமியிடம் சரக்கு இல்லை என்பதால் இவனல்ல ‘அந்த ஆள்’.  ஒருவேளை அந்த ஆளிடம்  தரச்சொல்லி ஒரு கடிதத்தை ஆசான் இவனிடம் தந்திருக்கலாம். இல்லா விட்டால் கண்காணிப்பவர்களை திசை திருப்ப ஆசான் இவனிடம் ஏதாவது ஒரு காகிதத்தை தந்திருக்கலாம்.

டெர்கார் மடாலயத்தில் என்ன நிலவரம் என்று கேட்ட போது பார்வையாளர்கள் எல்லாரும் வெளியேறி விட்டார்கள் என்று தகவல் கிடைத்தது. ஆசான் உள்ளே இருக்கும் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவித்தார்கள். ஆனாலும் அங்கேயே காவல் இருக்கும்படி லீ க்யாங் கட்டளை இட்டான். அதே போல கர்மா தார்ஜே மடாலயம் முன்பும் ஆள்களை தொடர்ந்து இருக்கும்படி சொன்னான். வினாடி முட்கள் மிக மந்தமாக நகர்ந்தன. ஆனால் லீ க்யாங் பொறுமையாக காத்திருந்தான். அவசரப்பட்டால் நுணுக்கமான எத்தனையோ விஷயங்களை ஒருவன் தவற விட்டு விட நேரிடும். லீ க்யாங் ஒரு பக்குவ நிலையை எட்டிய பிறகு அப்படி ஒரு போதும் முக்கிய நுணுக்கமான தகவல்களைத் தவற விட்டதில்லை.  

தர்மசாலாவில் ஆசான் தலாய் லாமாவிடம் மைத்ரேய புத்தரைப் பற்றிப் பேசிய வேளையில் இருந்து இது வரை நடந்தவைகளை எல்லாம் புள்ளிகளாய் வைத்து இணைத்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மைத்ரேய புத்தர் என்று தலாய் லாமாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் நம்புகிற சிறுவன் இன்னும் இறந்து விடவில்லை. அது இது வரை லீ க்யாங்க் போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்க முடிந்த நிஜம். அதை அவன் ரசிக்கவில்லை. அது ஆச்சரியமில்லை. ஏனென்றால் உண்மைகள் என்றுமே ரசிக்கும்படியாக இருந்து விடுவதில்லை....

இத்தனை நாள் அமுக்கமாக இருந்தவர்கள் இப்போது அதைப் பற்றி பேச ஆரம்பித்திருப்பது திரை மறைவில் சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதை தெளிவாகத் தெரிவிக்கிறது. ஏதாவது செய்தாக வேண்டும். அதுவும் விரைந்து செய்தாக வேண்டும்....

தன் முன்னால் உளவுத்துறை சிறிது நேரத்திற்கு முன் வைத்து விட்டுப் போன ரிப்போர்ட்டை லீ க்யாங் மறுபடி படித்தான். வித்தியாசமான பெயர்கள் உள்ள திறமையான இந்திய உளவாளிகள் பெயர்கள் அதில் நிறைய இருந்தன. ஆனால் அந்தப் பெயர்களில் எதுவுமே இந்த மைத்ரேயர் விஷயத்தில் சம்பந்தப்படுத்த முடிந்தவை அல்ல என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. இது வரை அவன் உள்ளுணர்வு பொய்த்ததில்லை. இப்போது ஆசானை சந்திக்கவிருக்கும், அல்லது சந்தித்து முடித்திருக்கும் அந்த நபர் களத்திற்கு புதியவனாக இருக்க வேண்டும் அல்லது அடிக்கடி களத்திற்கு வராத அளவு ரகசியமானவனாக இருக்க வேண்டும் அல்லது உளவாளியே அல்லாத ஒருவனாக இருக்க வேண்டும். கடைசி அபிப்பிராயம் சரியாக இருந்தால் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. உளவாளியே அல்லாத ஒருவனைப் பற்றிய ரகசியங்களை காக்க இந்தியா ஏன் இந்த அளவு சிரத்தை எடுக்க வேண்டும்?...  அப்படிப்பட்டவன் உதவியை தலாய் லாமா ஏன் நாட வேண்டும்? அந்த நபரிடமிருந்து இவர்கள் எந்த விதமான உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் பெரிய கேள்வியாக இருந்தது.

தலாய் லாமாவை அதிர வைத்த வழுக்கைத் தலையன் பற்றிய விவரங்கள் எதுவும் இன்னமும் கிடைக்கவில்லை. கல்கத்தாவில் எல்லா மருத்துவமனைகளில் முழுவதும் தலை வழுக்கையான டாக்டர்களைத் தேடிப் பார்த்தாகி விட்டது. மொத்தம் நான்கு வழுக்கைத்தலை டாக்டர்கள் கல்கத்தாவில் இருந்த போதும் அந்த டாக்ஸி டிரைவர் சொன்ன அடையாளங்கள் பொருந்துகிற நபராக நான்கு பேரில் ஒருவர் கூட இல்லை.  

லீ க்யாங் வாங் சாவொவைக் கூப்பிட்டுக் கேட்டான். அந்த கிழட்டு டிரைவருக்கு  வழுக்கைத்தலையன் கொடுத்த விசிட்டிங் கார்டில் கல்கத்தா என்று இருந்தது ஞாபகம் சரியாக இருக்கிறதா இல்லை அது வேறெதாவது ஊராக இருக்க வாய்ப்பிருக்கிறதா?

“கிழவன் அது கல்கத்தா தான் என்று சாதிக்கிறான்வாங் சாவொ சொன்னான்.

லீ க்யாங் சொன்னான். “வாங் சாவொ. நாம் போகிற வேகம் போதாது. நாம் முன்பு நினைத்தது போல மைத்ரேய புத்தனாய் பிறந்த சிறுவன் அன்று செத்து விடவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கிறான்....

லீ க்யாங் முழுவதுமாய் நம்பினால் ஒழிய எதையும் திட்டவட்டமாய் சொல்லும் பழக்கம் இல்லாதவன். அதனால் வாங் சாவொ அதிர்ச்சி அடைந்தான். பின் மெள்ள கேட்டான். “எங்கே திபெத்திலேயேவா?

“அப்படித்தான் தோன்றுகிறது. அது மட்டுமல்ல அவன் சம்பந்தமாய் ஏதோ பிரச்னையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எச்சரிக்கை மௌனலாமாவிடம் இருந்து வந்திருக்கலாம்.

வாங் சாவொ குழப்பத்தோடு கேட்டான். “திபெத்தில் இருக்கும் மைத்ரேயனுக்கு பிரச்னை என்றால் இந்தியாவில் இருக்கும் ஒருவன் உதவியை எதற்கு அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவன்  என்ன செய்ய முடியும்?

“அதை நாம் கண்டுபிடித்தால் பாதி குழப்பம் தீர்ந்து விடும். ஆசான் சந்திக்கிற ஆள் யார் என்று தெரிந்தால் அதை நாம் கண்டுபிடித்து விடலாம்

கயாவில் இருந்து லக்னோ செல்லும் ரயிலில் உட்கார்ந்திருக்கும் அந்த ஆசாமி ஆசான் சந்திக்க இருந்தவன் அல்ல என்பதை வாங் சாவொ இன்னேரம் யூகித்திருந்ததால் அவனும் குழம்பினான்.

போன் இணைப்பைத் துண்டித்த லீ க்யாங் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டான். மைத்ரேய புத்தன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதை சீனத்தலைவர்களிடம் சொன்னால் அதை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் இப்போது தெரிவிப்பது உசிதம் அல்ல. அவர்களிடம் அந்த சிறுவனை அப்புறப்படுத்திய பின்பே தெரிவிப்பது தான் நல்லது.

மைத்ரேய புத்தா என்கிற ஒரு ரகசிய திட்டத்தை அவன் ஆரம்பித்ததே திபெத்தியர்கள் நம்பிய அந்த மைத்ரேய புத்தரின் அவதாரம் கற்பனை, அல்லது கொல்லப்பட்டு விட்டது என்ற எண்ணத்தில் தான். அவன் அந்த திட்டத்தை சீனத்தலைவர்கள் முன் வைத்த போது அவர்கள் தயக்கம் காட்டினார்கள். மதம், கடவுள் இரண்டிலுமே எந்த விதத்திலுமே அவர்கள் சம்பந்தப்பட விரும்பவில்லை. ஆனால் லீ க்யாங் ‘இதில் சீனாவுக்கு லாபமே தவிர நஷ்டம் இல்லைஎன்று சுட்டிக் காட்டினான்.

இப்போது தலாய் லாமா நமக்குத் தலைவலியாக இருப்பது தனி நாடு கேட்கும் வெறும் சுதந்திரப் போராளியாக அல்ல. அவலோகிடேஸ்வரர் என்கிற போதிசத்துவரின் மறுபிறவி என்று திபெத்தியர்கள் நம்பி அவர் பின்னால் நிற்பதால் தான். திபெத்தியர்களின் அந்த நம்பிக்கை தான் உலகநாடுகள் பல அவருக்கு ஆதரவு தெரிவிக்க காரணமாய் இருக்கிறது. அப்படி இருக்கையில் புத்தரின் மறு அவதாரமான மைத்ரேய புத்தர் என்ற ஒரு கதாபாத்திரத்தை உண்மையாகவே ஏற்படுத்தி அவரை நமக்கு சாதகமாய் உபயோகப்படுத்திக் கொண்டால் நாம் திபெத் விவகாரத்தில் எத்தனையோ சாதிக்க முடியும்?

சீனத் தலைவர்கள் யோசனையுடன் அதிகார மையமான பொதுச்செயலாளரைப் பார்த்தார்கள். பொதுச்செயலாளர் தன் சோடாபுட்டிக் கண்ணாடி வழியாக லீ க்யாங்கையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்து விட்டுக் கேட்டார். நீ ஏற்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்தை திபெத்தியர்கள் மைத்ரேய புத்தர் தான் என்று நம்புவார்களா?

திபெத்தியர்கள் மட்டுமல்ல. உலகமே நம்புகிற மாதிரி உருவாக்கிக் காட்டுகிறேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். கத்தியின்றி ரத்தமின்றி அமைதியாகவே திபெத்திய பிரச்னையை நாம் முடிவுக்குக் கொண்டு வருவோம்.....

லீ க்யாங்கின் அறிவு மற்றும் செயல் திறமையை பல முறை கண்டிருந்தாலும் பொதுச்செயலாளர் உடனடியாக ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

லீ க்யாங் சொன்னான். “இதில் நமக்கு லாபம் வரா விட்டாலும் கூட  நஷ்டப்பட ஏதுமில்லை....

நல்ல வேளை, இவன் அரசியலுக்குள் நுழையவில்லைஎன்று அருகே இருந்த சகாவிடம் முணுமுணுத்த பொதுச்செயலாளர் கடைசியில் தலை அசைத்தார். ஆனால் எழுத்து மூலமாக எந்த ஒப்புதலும் தரவில்லை. அதன் மூலமாக சீனத்தலைவர்கள் ஒன்றைத் தெளிவுபடுத்தினார்கள். நாளை இதில் ஏதாவது பிரச்னை என்று வந்தால் அரசாங்கம் அவன் பின்னால் நிற்கப் போவதில்லை...

அது பற்றி லீ க்யாங் கவலைப்படவில்லை. மைத்ரேய புத்தா என்கிற திட்டம் ஆரம்பமானது. யாருமே மறுக்க முடியாத, அனைவரையுமே கவரக்கூடிய ஒரு மைத்ரேய புத்தர் லீ க்யாங்கின் அறிவிலிருந்து ஜனனம் எடுத்தான்....

எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டிருந்தது, அசல் மைத்ரேய புத்தன் இருக்கிறான் என்கிற இந்த செய்தி வரும் வரை!

(தொடரும்)

-என்.கணேசன்

(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

7 comments:

  1. சுந்தர்October 23, 2014 at 6:16 PM

    அமர்க்களமான திருப்பம். சுவாரசியம் கூடுகிறது சார். தொடருங்கள். தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Excellent turning point. Eagerly following.

    ReplyDelete
  3. A different storyline that is new to Tamil novels. Very interesting also.

    (It is better if you remove word verification in blog. It is annoying. Thanks)

    ReplyDelete
    Replies
    1. I disabled that long ago and now also my blog settings show "no" only to 'show word verification'. I don't know whether other readers also facing the same problem of word verification.

      Delete
  4. அடுத்தது என்ன என்ற முடிவுடன்..,அருமையான திருப்பம்

    ReplyDelete
  5. அடுத்த பதிவு ..??

    ReplyDelete