சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 9, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 15


சான் பார்த்த முதல் கணத்திலேயே அவன் தான் அமானுஷ்யனாக இருப்பான் என்று ஊகித்தார். அவன் நடந்து வந்த விதத்தில் ஒரு லயம் இருந்தது. ஒரே பார்வையில் அந்த இடத்தில் இருந்த அத்தனையையும் கவனத்தில் கொள்ளும் திறமையும் இருப்பதை பார்த்த விதம் சொன்னது. அவன் டெர்கார் மடாலயத்திற்குள் நுழைந்த  போது அவர் சற்று மறைவாகத் தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்த அனைத்தையும் மேலோட்டமாய் அளந்த அவன் பார்வை சீக்கிரமாகவே அவர் மேல் நிலைத்தது. நிலைத்த பார்வை பின் நகரவில்லை.

உண்மையில் அக்‌ஷய் அவரைக் கண்டுபிடிக்க சிரமமே படவில்லை. தலாய்லாமாவிற்கே குருநாதராக இருக்க முடிந்த அளவு வயதான முதியவர்கள் தியான மண்டபத்தில் அதிகம் இருக்கவில்லை. இருந்த நாலைந்து பேரில் சற்று மறைவில் நின்றிருந்தாலும் ஆசானை வித்தியாசப்படுத்தியது முகத்தில் தெரிந்த அன்பான அமைதியும், அவரது அதிபுத்திசாலித்தனமான கண்களும்.

அவர் அவனை ஆழமாகப் பார்த்தார். அவர் பார்வையின் தீட்சண்ணியம் பலரை தர்மசங்கடப்படுத்துவதுண்டு. ஆனால் அக்‌ஷய் எந்த சங்கடமும் இல்லாமல் அவரைப் பார்த்தான். அவனை வரச் சொல்லி சமிக்ஞை செய்து விட்டு ஆசான் உள்ளே சென்றார். சில வினாடிகளில் அவன் அவருடன் இருந்தான். சுமார் நாற்பதடி தூரத்தில் இருந்த அவன் இடையில் பரவி இருந்த ஆட்களைத் தாண்டி அவ்வளவு சீக்கிரம் வந்த விதம் ஆசானுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. இதற்கு முன்பு வயோதிகனாக வந்து நடந்த விதம் பற்றி குரு பிக்கு சொன்னது நினைவுக்கு வர புன்னகை செய்தார். பார்த்துக் கொண்டிருந்த பலரும் அந்தக் கிழவரை போக வேண்டிய இடத்துக்கு தாங்களே தூக்கி வைத்து விடலாம் என்று நினைத்ததை உணர முடிந்தது என்று சொல்லி இருந்தார்....

உள் பகுதியில் கடைசி அறைக்கு அவனை ஆசான் அழைத்துச் சென்றார். உள்ளே ஒரு தியானக் கம்பளத்தைத் தவிர வேறு எந்தப் பொருளும் இருக்கவில்லை. உள்ளே நுழைந்தவுடன் தலையை மிகவும் தாழ்த்தி ஆசான் அவனை வணங்கினார். அக்‌ஷயும் அப்படியே அவரை வணங்கினான்.

ஆசான் ஹிந்தியிலேயே அவனிடம் பேசினார். “நீங்கள் தான் நான் சந்திக்க வேண்டிய ஆள் என்பதில் எனக்கு சந்தேகம் சிறிதும் இல்லை. ஆனாலும் உங்கள் பின்னங்கழுத்துக்கு கீழே இருக்கிற மச்சத்தையும் காட்டினால் எனக்கு பிற்பாடும் சந்தேகம் வராது.

அக்‌ஷய் இவர்கள் தன்னைப் பற்றி எந்த அளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று வியந்தான்.  தன் சட்டையின் மேலிரு பட்டன்களைக் கழற்றி பின்னங்கழுத்தை அக்‌ஷய் காண்பித்தான். நாகம் படமெடுப்பது போன்ற தோற்றத்தில் இருந்த மச்சத்தை ஆசான் தொட்டுப் பார்த்தார். அதை வரைந்து கூட அவன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறாரா என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். ஆசான் அந்த மச்சத்தை ஆராய மேலும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்.
பின் மிகுந்த மரியாதையுடன் இரு கைகளையும் கூப்பி சொன்னார். “தவறாகத் தோன்றியிருந்தால் தயவுசெய்து மன்னியுங்கள். உங்களுடைய இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் கண்டிப்பாக கோபித்துக் கொண்டிருப்பார். உதவி செய்ய வந்தவனையே சந்தேகப்படுவதா என்று நினைத்திருப்பார். ஆனால் நீங்கள் பொறுமையாக இருப்பது தங்கள் உயர்குணத்தைக் காட்டுகிறது. எங்கள் நிலைமை எங்களை சர்வஜாக்கிரதையாக இருக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கிறது...

ஆசானை சந்திக்கச் சொல்லி எழுதிய தலாய் லாமாவின் கடிதத்தையே  கூட படித்தவுடன் எரித்து விடச் சொல்லி இருந்ததை நினைவுகூர்ந்த அக்‌ஷய் “பரவாயில்லை.என்றான்.

எனக்கு உங்களைப் பார்க்கப் போகிற பரபரப்பில் சாதாரண வரவேற்பு சம்பிரதாயத்தைக் கூட யோசித்து வைக்கத் தோன்றவில்லை பாருங்கள். நான் நாற்காலி ஏதாவது கொண்டு வருகிறேன். இது துறவியின் அறை என்பதால் தியானக் கம்பளம் தவிர வேறு எதுவுமே இங்கில்லை.
அக்‌ஷய் அலட்டிக் கொள்ளாமல் தரையில் அமர்ந்தான். தியானக் கம்பளத்தில் அமர அவருக்கு கை காட்டினான்.

ஆசானுக்கு அவனது எளிமை நெகிழ வைத்தது. அவனிடம் பழகியவர்கள் எல்லாம் அவனை அளவுகடந்து நேசித்து உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்ததன் காரணம் விளங்கியது.

“போதிசத்துவர் அருள் உங்களுக்கு என்றும் இருக்கட்டும் அன்பரேஎன்று மானசீகமாக ஆசி கூறியவர் தியானக் கம்பளத்தைத் தள்ளி வைத்து விட்டு அவன் எதிரில் தானும் தரையில் அமர்ந்தார்.
“நீங்கள் சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு தான் முடிவு செய்ய முடியும் என்று சொன்னதாக தலாய் லாமா சொன்னார். கேளுங்கள்

அக்‌ஷய் அமைதியாக பேச ஆரம்பித்தான். “நீங்கள் மைத்ரேய புத்தர் என்று நம்பும் ஒரு சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்றும் அதனால் அவனை திபெத்தில் இருந்து பாதுகாப்பாக இந்தியாவிற்கு கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.  என் நாகமச்சம் உட்பட என்னைப் பற்றிய பல விவரங்கள் தெரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு தீவிரவாதக் கும்பல் ஒன்று இபோதும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது என்றும், அதனால் பாதுகாப்புக்காக தலைமறைவாய் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் தெரிந்திருக்கும். மறுபடி நான் களத்தில் இறங்கினால் புதிய எதிரிகளால் மட்டுமல்லாமல் பழைய எதிரிகளால் கூட ஆபத்தை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது நான் தனியன் அல்ல. மனைவி, குழந்தைகள் இருக்கிற குடும்பஸ்தன். இந்த நிலையில், இத்தனை ஆபத்தான வேலையில் இறங்க வேண்டிய அளவுக்கு இது எனக்கு அவசியமானது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் ஆசானே.

உங்கள் வேண்டுகோள் என் மனதில் சில கேள்விகளை எழுப்புகிறது. நீங்கள் நம்பும் சிறுவன் உண்மையிலேயே புத்தரின் அவதாரமான மைத்ரேய புத்தர் தானா? ஆம் என்றால் உண்மையிலேயே தெய்வாம்சம் பொருந்திய மைத்ரேயனுக்கு அடுத்தவர் உதவி எதற்கு? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா? மைத்ரேய புத்தரின் உயிருக்கு ஆபத்து என்று எதனால் சொல்கிறீர்கள்? அந்த மைத்ரேய புத்தரைக் கொன்று உங்கள் எதிரிகள் சாதிக்கப் போவதென்ன? இந்த வேலைக்கு என்னை நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஆசான் சொன்னார். “உங்கள் கேள்விகள் நியாயமானவை தான் அன்பரே. முழுமையான நிலவரத்தை ஆரம்பத்திலிருந்து சொன்னால் மட்டுமே உங்கள் சந்தேகங்கள் நீங்கும். என் பதில் நீளமாக இருந்தாலும் பொறுமையாக கேளுங்கள்.....  தர்மம் மறந்து மனிதகுலம் சீரழியும் போது தர்மத்தை நிலை நாட்ட மைத்ரேய புத்தர் அவதரிப்பார் என்று கௌதம புத்தரே மகத நாட்டில் தங்கியிருந்த போது தன் சீடரான சாரிபுத்ரனிடம் சொன்னதாக ஒரு சூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கௌதம புத்தர் வாயால் ஒரே ஒரு முறை சொல்லப்பட்ட இந்த மைத்ரேய புத்தர் பற்றியும் அவர் தோன்றும் காலம் பற்றியும் பிற்காலத்தில் நிறைய எழுதப்பட்டன. அந்த ஓலைச்சுவடிகள் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும், வித்தியாசப்பட்டும் இருந்தன. அதனால் மைத்ரேய புத்தர் விஷயத்தில் தெளிவுக்கு பதில் குழப்பமே மிஞ்சியது.

“இப்போதைய மைத்ரேய புத்தரை அடையாளம் காட்டிய ஒரு ஓலைச்சுவடியை நாங்கள் நம்பக் காரணம் அது கிடைத்த இடம், கிடைத்த நேரம், அதை எழுதியவர்... இந்த மூன்றும் தான்!.ஆசான் தன் பேச்சை சிறிது நிறுத்தி கண்களை மூடி வணங்கி விட்டு தொடர அக்‌ஷய் முழுக் கவனமாக கேட்க ஆரம்பித்தான்.

“திபெத்திற்கு புத்தமதத்தைக் கொண்டு வந்தவரும், நாங்கள் இணையற்ற குருவென நம்பி வணங்குபவருமான பத்மசாம்பவா திபெத்தில் எட்டாம் நூற்றாண்டில் பல வருடங்கள் ரகசிய குகைகளில் வாழ்ந்தவர். அவரிடம் இருந்த ஒரு விசேஷ தனித்தன்மை என்ன என்றால் தான் எழுதிய சுவடிகளில் சிலவற்றை ரகசியமாய் திபெத்திய ரகசிய குகைகளில் ஒளித்து வைத்தது தான். அவை எந்த காலத்தில் தேவையோ, எந்த காலத்தில் மக்களுக்குப் புரிய வருமோ அந்தக் காலத்தில் கிடைத்தால் தான் அவை ஒழுங்காகப் பயன்படும் என்று அவர் நினைத்தார். அந்தச் சுவடிகளை மந்திரங்களால் மூடி மறைத்து வைத்திருந்தார் என்றும் சரியான காலத்தில் தான் மந்திரத் திறை விலகி மனிதர்கள் பார்வைக்குப் புலப்படும் என்றும் சொல்கிறார்கள். அவர் மகா சித்தர் என்பதால் அது உண்மையாகவே இருக்கக்கூடும். அவர் எழுதி காணக்கிடைத்த ஓலைச்சுவடிகள் எல்லாமே தந்த்ரா சம்பந்தமானதும், மெய்ஞானம் சம்பந்தமானதுமான சுவடிகள் என்றாலும் ஒரே ஒரு ஓலைச்சுவடி வித்தியாசப்பட்டு மைத்ரேய புத்தரின் அவதாரம் பற்றியதாக இருந்தது. அந்த ஓலைச்சுவடி சுமார் 15 வருடங்களுக்கு முன்பு தான் ஒரு ரகசியக்குகையில் கிடைத்தது. அதில் மைத்ரேய புத்தரின் அவதார காலம் துல்லியமாக எழுதப்பட்டிருந்தது. கௌதம புத்தர் கூறிய ஏராளமான சூத்திரங்களில் ஒரே ஒரு சூத்திரத்தில் மட்டுமே மைத்ரேயரைப் பற்றி சொல்லி இருப்பது போல பத்மசாம்பவாவும் தான் எழுதிய பலப்பல சுவடிகளின் மத்தியில் ஒரே ஒரு சுவடியில் மட்டும் தெளிவாகச் சொல்லி இருந்தார். பத்து வருடங்களுக்கு முந்தைய மார்கழி மாத சுக்லபக்‌ஷத்தில் திபெத்தில் மைத்ரேயர் அவதரிப்பார் என்று அறிந்த போது நாங்கள் அடைந்த சந்தோஷம் அளவிட முடியாதது. காரணம் என்ன தெரியுமா அன்பரே?

அவர் சொன்ன விவரங்களில் சுவாரசியமாய் ஆழ்ந்து போயிருந்த அக்‌ஷய் ஏன் என்று பார்வையாலேயே கேட்டான்.

“எங்கள் குரு பத்மசாம்பவா உட்பட பெரும்பாலான மகாத்மாக்கள் பிறந்து வளர்ந்த புண்ணியபூமி உங்கள் பாரதம் தான். நாங்கள் பெற்ற ஞானம் எல்லாம் உங்கள் தேசத்து புண்ணிய புருஷர்கள் போட்ட பிச்சை தான். அப்படி இருக்கையில் எங்கள் பூமியிலும் ஒரு அவதாரம் நிகழப் போகிறது என்பது எங்களுக்கு மிகப்பெருமையாக இருந்தது. நாங்கள் கொண்டாடினோம். அந்த அவதார புருஷரை வரவேற்க தயாரானோம். அந்த அவதார நாளுக்கு சில நாட்கள் முன்பு தான் எங்களுக்கு அந்தச் சுவடி கிடைத்த அதே ரகசிய குகையில் அந்தச் சுவடியின் மேலும் சில பக்கங்கள் கிடைத்தன. பத்மசாம்பவா வேண்டுமென்றே அதை இரண்டு பகுதியாக பிரித்து முதல் பகுதி முன்பாகவும், இரண்டாம் பகுதி ஐந்து வருடங்கள் கழித்தும் கிடைக்க வேண்டுமென்று எண்ணி இருந்தாரா இல்லை அது விதியின் சூழ்ச்சியா என்று தெரியவில்லை. அந்த இரண்டாம் பகுதியில் அவர் எழுதிய வாசகங்கள் அனைத்தும் மர்மமுடிச்சுகள் நிறைந்ததாக இருந்தன. முதல் முடிச்சை அவிழ்க்க முடிந்த போது மைத்ரேய புத்தர் உயிருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆபத்து இருக்கும் என்பதும் அவர் அடையாளம் காணப்படுவது கூட பேராபத்து என்றும் அறிய முடிந்தது. எச்சரிக்கையானோம். தொழுது வணங்க வேண்டிய ஒரு தெய்வப் பிறவியை நேரில் சந்திப்பதைக் கூடத் தவிர்த்தோம்... வழக்கமாக செய்யப்படும் மதரீதியான சடங்குகள் எதையும் செய்யவில்லை.... ஆன்மிக சம்பந்தமே இல்லாத ஒரு சாதாரண ஏழைச் சிறுவனாய் மைத்ரேயர் வளர வேண்டி வந்தது.....

ஆசான் இதைச் சொன்ன போது அவர் குரலில் பெருந்துக்கம் தெரிந்தது. எங்கள் பூமியிலும் ஒரு அவதாரம் என்று அவர் சொன்ன சந்தோஷத்திற்கு எதிர்மாறானதாய் அந்த அவதாரத்தின் அருகே கூட செல்ல முடியாத துர்ப்பாக்கியத்தை அந்த துக்கம் சொன்னது. ஆசான் சற்று நிறுத்தி தன் துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.
“பத்மசாம்பவாவின் இரண்டாவது முடிச்சு மைத்ரேயரின் இந்தக் காலக்கட்டத்தைச் சொல்கிறதாக இருக்கிறது. இங்கு தான் நீங்கள் சம்பந்தப்படுகிறீர்கள் அன்பரே!...

அக்‌ஷய் தன் நாகமச்சத்தில் திடீர் என்று ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். இது வரை அந்த நாகமச்சத்தில் அவன் எந்தவொரு தனி உணர்வையும் உணர்ந்திருந்ததில்லை என்பதால் ஒரேயடியாக அவனுக்கு குப்பென்று வியர்த்தது!

(தொடரும்)

என்.கணேசன்


    

6 comments:

  1. what a surprise.. no need to wait till evening.. interesting novel..

    ReplyDelete
  2. excellent blending of fact and fiction! very interesting

    ReplyDelete
  3. சுந்தர்October 9, 2014 at 7:04 PM

    கடைசி வரிகளில் நானே ஒரு சிலிர்ப்பை உணர்ந்தேன். நல்ல சுவாரசியத்தோடு நாவல் போகிறது.

    ReplyDelete
  4. ''நாங்கள் பெற்ற ஞானம் எல்லாம் உங்கள் தேசத்து புண்ணிய புருஷர்கள் போட்ட பிச்சை தான்......'' Ithu romba arumaiya vasakam...
    Ithu suvarashayamaka mattum illamal... Sila vazhikalaiyum kattukirathu....

    ReplyDelete
  5. சுவராஸ்யம்... தொடருங்கள்....

    ReplyDelete