சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 28, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 9


ருண் அப்படிச் சொன்ன பிறகும் அக்‌ஷய் எந்த அபிப்பிராயமும் தெரிவிக்காமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

வருண் தாயையும் பாட்டியையும் பார்த்தான். அவர்களும் தன்னுடன் சேர்ந்து அக்‌ஷயைத் தடுப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் முகத்தில் பயமும் கவலையும் தெரிந்தாலும அவர்கள் அப்போதும் ஒன்றும் சொல்லாமல் அக்‌ஷயையே பார்த்தார்கள்.
                                                                                                                                                                                     
ஆனந்த் தலாய் லாமாவின் வேண்டுகோளுடன் இங்கே வந்திருக்க வேண்டாம் என்று வருணுக்குத் தோன்றியது. இவரே முடியாது என்று சொல்லி இருக்கலாமேஎன்று வருண் நினைத்தான். இந்தப் பதிமூன்று வருட அமைதியான வாழ்க்கைக்கு ஒரு முடிவு வரப் போகிறது என்று நினைக்கையில் மனம் பதைத்தது. தலாய் லாமா மீதும், திபெத் மீதும், ஆனந்த் மீதுமே கூட அவனுக்குக் கோபம் வந்தது.

கோபம் கலந்த ஏளனத்தோடு வருண் சொன்னான். “உலகத்தையே காப்பாற்றி தர்மத்தை நிலை நாட்டப்போகிற மைத்ரேய புத்தருக்குத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாதா என்ன?  

ஆனந்த் புன்னகைத்தான். அவன் மனதிலும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. தலாய் லாமா அக்‌ஷயின் உதவியை எதிர்பார்ப்பதற்கான எல்லா காரணங்களையும் தெரிவிக்கவில்லை என்று அவன் உள்மனம் சொன்னது. இதற்காவது தம்பி ஏதாவது சொல்வானா என்று பார்த்தான். ஆனால் அக்‌ஷய் வருணை மென்மையாகப் பார்த்தானே ஒழிய அவன் சொன்னதை மறுக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை.

உயிருக்கு உயிருக்காக நேசித்த வளர்ப்புத் தந்தையின் மௌனம் வருணுக்கு அபாயச்சங்கு ஊதியது. அழாத குறையாக ஆனந்த் பக்கம் திரும்பி கேட்டான். “ஏன் பெரியப்பா, அப்பாவுக்கு இதில் எந்த அபாயமும் இல்லை என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவன் கேள்வியில் மறைமுகமான குற்றச்சாட்டும் இருந்தது ஆனந்துக்கு தவறாகத் தோன்றவில்லை. அவனே சோம்நாத் சொன்ன போது கோபம் கொண்டவன் தானே. அக்‌ஷய் மீது அன்பு வைத்திருக்கும் யாருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனந்த் சொன்னான். “வருண் அக்‌ஷய்க்கு இதில் ஆபத்து அதிகம் இருக்கிறது என்று நான் வெளிப்படையாகவே உளவுத்துறை தலைமை அதிகாரியிடம் சொல்லி விட்டேன். இன்னும் தலிபான் தீவிரவாதிகள் அக்‌ஷயை மறந்து விடவில்லை. அமெரிக்காவில் இவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது எனக்கு வருகிறது. இவன் பாதுகாப்புக்காக நானே முயற்சி எடுத்து அமெரிக்காவில் எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறேன் என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அறிவித்த ஒரு மில்லியன் டாலர் சன்மானம் இப்போதும் பல பேரை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இப்போது இவன் வெளியே வந்தால் அந்த தலிபான் தீவிரவாதிகள் கண்ணில் படாமல் இருக்க முடியாது. சீனாவிடம் சிக்காமல் திபெத்துக்குப் போய் மைத்ரேய புத்தரை அழைத்துக் கொண்டு வருவதும் சுலபம் அல்ல. இதை ஏற்றுக் கொண்டால் இரட்டிப்பு ஆபத்து தான். ஒருபக்கம் சீனா, இன்னொரு பக்கம் தலிபான் தீவிரவாதிகள்...

வருண் கோபத்துடன் ஆனந்திடம் கேட்டான். இப்படி நிலைமை இருக்கையில் அவர்கள் எப்படி அப்பாவிடம் இந்த உதவியை எதிர்பார்க்கிறார்கள்? நம் பிரதமர் எப்படி இதற்கு ஒத்துக் கொள்ளலாம்?

ஆனந்த் பொறுமையாகச் சொன்னான். “வருண். தலாய் லாமா உதவி கேட்டிருக்கிறார். அதை பிரதமர் நம்மிடம் சொல்லி இருக்கிறார். ஒரு வேளை அக்‌ஷய் ஏற்றுக் கொண்டால் அக்‌ஷய்க்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளையும் ரகசியமாய் செய்துதர உத்தரவிட்டிருக்கிறார் அவ்வளவு தான். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் பிரதமர் வற்புறுத்தவில்லை. பிரதமர் அக்‌ஷயைக் கேட்காமல் தலாய் லாமாவிடம் முடியாது என்று சொல்ல முடியாது. நானும் அக்‌ஷயைக் கேட்காமல் அப்படி மறுக்க முடியாது. முடிவு எடுக்க வேண்டியது அக்‌ஷய் தான். இதில் எந்தக் க்ட்டாயமும் இல்லை.

‘இனி என்ன, மறுக்க வேண்டியது தானே?என்கிற மாதிரி வருண் அக்‌ஷயைப் பார்த்தான். ஆனந்த், சஹானா, மரகதம் மூவரும் அப்படியே அக்‌ஷயைப் பார்த்தார்கள்.  ஆனால் அக்‌ஷய் ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆழமாய் அவன் சிந்திக்கும் போதெல்லாம் அவன் அப்படித்தான் இருப்பான். இப்போது அவன் என்ன நினைக்கிறான்  என்பதை அவர்களால் யூகிக்க முடியவில்லை.

உண்மையில் அக்‌ஷய் கடந்த காலத்தில் இருந்தான். அவன் திபெத்தில் இருந்த இளமைக்கால நினைவுகள் மனத்திரையில் ஓடின...

ஒரு நாள் திபெத்தில் கடுங்குளிர் காலத்தில் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்த போது அவன் அந்த அதிசயத்தைப் பார்த்தான். எதிரில் ஒரு மனிதன்(?), நம்ப முடியாத வேகத்தில் வந்து கொண்டிருந்தான். நடந்து வந்து கொண்டிருந்தது போல் அக்‌ஷய்க்குத் தெரியவில்லை. அந்த மனிதன் நீண்ட தூரங்களில் காலடி வைத்து குதித்து ஓடி வருவது போல் தெரிந்தது. ஒரு காலடி இங்கு வைத்தால் எட்டடி தள்ளி அடுத்த காலடியை அந்த மனிதன் வைத்தான். அந்தக் கால் நிலத்தில் சரியாகப் பதிவதற்கு முன்பாகவே அடுத்த காலடிக்கு அவன் தயாரானது போல் பிரமை ஏற்பட்டது. இதெப்படி சாத்தியம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த மனிதன் அக்‌ஷயை நெருங்கி விட்டிருந்தான். ஆனால் அவன் அக்‌ஷயைப் பார்க்கவில்லை. அவன் பார்வை வெகுதூரத்தில் எங்கோ நிலைத்திருந்தது.   அந்தக் கடுங்குளிரில் கூட அவன் இடுப்புக்கு மேல் ஆடை எதுவும் அணிந்திராமல் இருந்ததும் அக்‌ஷயை ஆச்சரியப்படுத்தியது. அவனை மேலும் சரியாகப் பார்க்கும் முன் அவன் அக்‌ஷயைக் கடந்து வெகு தூரம் போயிருந்தான்.

பார்த்தது நிஜம் தானா அல்லது பிரமையா என்ற சந்தேகம் அக்‌ஷய்க்கு அந்த நாள் முழுவதும் இருந்தது. அந்த இடத்தில் அவனையும் அந்த மனிதனையும் தவிர வேறு யாரும் இருந்திருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டு பார்த்ததை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பான்....

பின் அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்த போது அவன் கண்டது பிரமை அல்ல, நிஜம் தான் என்று சொன்னார்கள். நீங்கள் லங்-கோம்-பா (lung-gom-pa) ஓட்டக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள் என்றார்கள்.     

ஆர்வம் அதிகமாகி அக்‌ஷய் மேலும் அது பற்றி விசாரிக்கையில் விளக்கியவர் ஒரு புத்த பிக்கு. கடுமையான யோகப்பயிற்சியால் உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி ஒருவர் லங்-கோம்-பாவில் தேர்ச்சி பெற முடியும் என்று சொன்னார். உடலை எடையற்ற இறகு போல் ஆக்கிக் கொள்ள முடியும் என்றும் பல நூறு மைல்களை குறுகிய காலத்தில் சிறிதும் களைப்பில்லாமல் தொடர்ந்து கடக்க முடியும் என்றும் சொன்னார். ஒரு காலத்தில் அப்படி நிறைய பேர் இருந்தார்கள் என்றும் இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இப்போது இருக்கிறார்கள் என்றும் சொன்னார். கண் முன்னால் அந்த மனிதனைப் பார்த்திரா விட்டால் அக்‌ஷய் அவர் சொன்னதை நம்பி இருக்க மாட்டான்....

அதை எப்படி கற்றுக் கொள்வது?என்று அவன் கேட்ட போது அந்த புத்த பிக்கு சாதாரண மனிதர்களுக்கு அது அவ்வளவு சுலபமில்லை என்று சொன்னார். “.... அந்தப் பயிற்சிகளை மூன்று நாள் கூட தொடர்ந்து செய்ய முடிவது கஷ்டம். ஆனால் வெற்றியடைய வருடக் கணக்கில் சளைக்காமல் செய்ய வேண்டும். அதை முழுமையாகக் கற்றுத்தரும் குருமார்களும் அதிகம் இல்லை... திபெத்தில் இப்போது ஒரே ஒருவர் தான் இருக்கிறார். பெரிய யோகி.... மற்றவர்கள் எல்லாம் அரைகுறைகள்....

அக்‌ஷய் அந்த ஒரே ஒருவரைத் தேடிப் போனான். அந்த வயதான யோகி அவனையே நிறைய நேரம் கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார். “இதற்கு எத்தனை காலம் ஆகும் என்று சொல்ல முடியாது. உனக்குத் திறமை இருந்து நீ முழு மனதோடு உறுதியாய் முயன்றால் கூட வருடக்கணக்கில் ஆகலாம்

அக்‌ஷய் சொன்னான். “எனக்கு அவசரமில்லை

அவர் கேட்டார். “ஆனால் அவசியமா? அப்படி நடந்து என்ன சாதிக்கப் போகிறாய்?....

அந்தக் கேள்வி அவனை யோசிக்க வைத்தது. அந்த அதிவேக மனிதனைப் பார்த்த பிரமிப்பில் அவனும் ஆசைப்பட்டானே ஒழிய அதைக் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதை அவன் யோசித்திருக்கவே இல்லை....

அவருக்கு நன்றி கூறி வணங்கி விட்டு அக்‌ஷய் திரும்பி சில அடிகள் போயிருப்பான். அந்த யோகி அவனை அழைத்தார்.

“ஆனால் அதில் சில சிறிய வித்தைகளைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. அது உன் வாழ்க்கைக்கு நிறைய உதவும்....

அவரிடம் அவன் சிஷ்யனாக சேர்ந்தான். அவர் சொன்ன அந்த சிறிய வித்தைகளைக் கற்றுத் தேறவே அவனுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. அதற்கே அவன் ஒவ்வொரு நாளும் விடாமல் பயிற்சிகள் செய்ய வேண்டி இருந்தது. அவன் பொறுமையாகச் செய்தான். அந்தப் பயிற்சிகள் அல்லாமல் வேறு எத்தனையோ அவரிடமிருந்து அவன் கற்றுக் கொண்டான். ஒரு வருடம் கழித்து அங்கிருந்து கிளம்பிய போது ஒரு புதிய மனிதனாக மாறி இருந்தான். அவருக்கு குரு தட்சிணையாக என்ன வேண்டும் என்று அவன் கேட்ட போது அவர் எதையும் வாங்க மறுத்தார். அவன் மறுபடியும் வற்புறுத்திக் கேட்டான். உடனடியாக ஒன்றும் சொல்லாமல் அவனையும் தாண்டி வெற்றிடத்தைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றவர் பின் என்றாவது ஒரு நாள் இந்த புனித மண் உன்னிடமிருந்து குருதட்சிணை கேட்டு வாங்கிக் கொள்ளும்என்று சொல்லி அனுப்பினார். அப்போது புரியவில்லை.  அந்த நாள் இப்போது வந்திருக்கிறது என்றே அக்‌ஷய் நினைத்தான்.

ஆனால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவன் குடும்பத்தினர் முகத்திலோ தயவு செய்து போக வேண்டாம்...என்ற கோரிக்கை கெஞ்சலோடு தெரிந்தது.....


சோம்நாத்  தன் முன்னால் இருந்த அந்த ரகசியக் குறிப்பை ஆழ்ந்த யோசனையுடன் மறுபடி படித்தார். தலாய் லாமாவின் புதுடெல்லி விஜயத்தின் போது வந்திருந்த சந்தேகப்படும்படியான ஒற்றர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது என்பதே அந்த ரகசியக் குறிப்பின் சாராம்சம். ஒருவேளை தலாய் லாமா எதற்காக இங்கே வந்தார் என்ற தகவல் சீன உளவுத்துறைக்கு எட்டியிருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது.

(தொடரும்)

-என்.கணேசன்

  (அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

9 comments:

  1. Super Great... as well as flashback story super....

    ReplyDelete
  2. First I thought lung-gom-pa is your imagination. When I searched in google I found that it is true. Your novel is a great combination of real facts and imagination. Thats why it is very impressive and unbeatable thriller. Thanks Sir.

    ReplyDelete
  3. வரதராஜன்August 28, 2014 at 10:03 PM

    கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்கள் இயல்பாய் சொல்லி இருக்கிறீர்கள். லங்கோம்பா கற்க வருடக்கணக்கில் ஆகலாம் என்று யோகி சொல்ல அக்‌ஷய் அவசரமில்லை என்று சொல்வதும் ஆனால் அவசியமா என்று அவர் கேட்க அக்‌ஷய் யோசிப்பதும் சூப்பர். சின்ன சின்ன வார்த்தைகளில் பெரிய தாக்கம் உண்டுபண்ணுகின்றன உங்கள் எழுத்துக்கள் என்.கணேசன். பாராட்டுகள்

    ReplyDelete
  4. Thank you Mr. Ganesan. Wonderful story.Anal ore oru varuthtam. Ungal kathayil sinarkalai(chinese) yetiriyaga katdukirirgal but they are very hard working persons,they follow their culture and tradition very strongly,very friendly.i got many chinese friends(i'm a malaysian). Ungal yeluthtu oru vagai botai tarukiratu...anta botaikku nanri...

    ReplyDelete
  5. Excellent as usual. Right from Nee naan thamirabarani, till this one, I've loved every bit of your creation. Waiting for next thursday...

    ReplyDelete
  6. Excellent as usual with new touch of information and also in simple terms big theories like desire and what is the use of it

    ReplyDelete
  7. Ella varamum oru ethiparpai...earpaduthum intha thodar.....intha varamum athaiye seithirukirathu....

    ReplyDelete
  8. கதை விறுவிறுப்பை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது...வாழ்த்துக்கள்.

    ReplyDelete