சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, August 9, 2014

”அமானுஷ்யன்” நாவல் வெளியீடு!-இரு அத்தியாயம் இலவச இணைப்பு!


ரு எழுத்தாளன் எத்தனையோ கதாபாத்திரங்களைப் படைத்தாலும் வாசகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து அமரத்துவம் பெறும் கதாபாத்திரங்கள் மிகச் சிலதே. அப்படி என் எழுத்தில் உருவாகி வாசகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற கதாபாத்திரங்களில் அமானுஷ்யனுக்கு முதல் இடம் உண்டு. நிலாச்சாரலில் நான் அமானுஷ்யன் நாவலைத் தொடராக எழுதி வந்த காலத்தில் அந்த நாவலுக்கும், கதாநாயகனான அமானுஷ்யன் அக்‌ஷய் கதாபாத்திரத்திற்கும் ஒரு ரசிகர் வட்டமே உருவாகி இருந்தது. அந்த ரசிகர் வட்டம் இன்று வரை கலையவில்லை.

நாவல் முடிந்து ஆண்டுகள் கழிந்த பின்னும் அந்தக் கதாபாத்திரம் இணையத்தில் பல தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அது போன்ற ஒரு நாவலையும், கதாபாத்திரத்தையும், நீங்களே நினைத்தாலும் உருவாக்க முடியாதுஎன்று என்னிடம் முடிவாகச் சொன்னவர்கள் பலர். அதைப் பல தடவை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களும் பலர். அதை அடுத்து நான் எழுதிய பரம(ன்) இரகசியம் நாவலின் பின்னூட்டங்களில் கூட அமானுஷ்யன் பற்றி அடிக்கடி வாசகர்கள் குறிப்பிட்டார்கள். அமானுஷ்யன் நாவலை திரைப்படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ கொண்டு வர வேண்டும் என்று கூட வாசகர்கள் தங்கள் ஆவலைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள்.

இந்த அளவு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றதாலேயே தற்போது நான் எழுதி வரும் ”புத்தம் சரணம் கச்சாமி” நாவலில் அமானுஷ்யனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறேன். புத்தம் சரணம் கச்சாமியில் இனி வரவிருக்கும் அமானுஷ்யன் பாத்திரத்தின் முந்தைய சுவாரசியமான கதையை மிகச்சுருக்கமாக அல்லாமல் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வாசகர்கள் அமானுஷ்யன் நாவலை வாங்கிப் படிக்கலாம்.

ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பும், விறுவிறுப்பும், மர்மங்களும், திருப்பங்களும் நிறைந்திருந்த அமானுஷ்யன் நாவல் படித்து முடிந்து, அதன் முடிவும் தெரிந்து, பரபரப்பு அடங்கி விட்ட பின்பும் மீண்டும் பல முறை படிக்கத் தூண்டுகிறது என்பதை விட அந்த நாவலுக்கு கிடைக்கும் மிகச்சிறந்த அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்?

அமானுஷ்யன் நாவலை அச்சு வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வாசகர்களிடம் மூன்றாண்டுகளாக இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்த்து அதனை அச்சில் கொண்டு வந்திருக்கும் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 600 பக்கங்களுக்கும் மேல் விறுவிறுப்புடன் செல்லும் அமானுஷ்யன் நாவலின் விலை ரூ.500/-


நூலை வாங்கவும், தங்கள் ஊர்களில் எந்தெந்த கடைகளில் இந்த நூல் கிடைக்கும் என்பதை அறியவும், பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் –
Mobile: 9600123146 
email: blackholemedia@gmail.com

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV 


அமானுஷ்யன் நாவலின் இரண்டு அத்தியாயங்கள் 
1


அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். "ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது"

இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல.

ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். "சத்தத்தை வைத்துப் பார்த்தால் விழுந்தது மரமாகத் தெரியவில்லை. மனிதனோ விலங்கோ தான் விழுந்திருக்க வேண்டும். போய்க் கதவைத் திறந்து பார்"

அவர் சொன்னவுடன் எழுந்த அந்த இளம் பிக்கு இரண்டடி வைத்த பின் தயங்கினார்.

என்ன என்று மூத்த பிக்குவின் கண்கள் கேட்டன.

"மனிதன் என்றால் பரவாயில்லை. ஏதாவது விலங்காய் இருந்தால்..." இளம் பிக்குவிற்கு விலங்கிடம் மாட்டிக் கொள்ள விருப்பமில்லை.

"மனிதனாயிருந்தாலும் சரி, விலங்காய் இருந்தாலும் சரி, பிரக்ஞை இருக்க வாய்ப்பில்லை. விழுந்த விதத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. விழுந்த சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. பிரக்ஞை இருந்திருந்தால் கண்டிப்பாக கத்தியிருக்க வேண்டும். எழுந்து ஓடின சத்தமும் இல்லை பார்த்தாயா. போய்ப் பார்"

இளம் பிக்கு தன் குருவை வியப்புடன் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ள கிழவருக்கு அதிக நொடிகள் தேவையில்லை. இது வரையில் அவர் எதையும் தவறாகப் புரிந்து கொண்டதுமில்லை. ஆனால் அவரும் மனிதர் தானே? எதற்கும் ஒரு ஆரம்பம் என்றும் இருக்கிறதே?....இளம் பிக்குவிற்கு இன்னும் தயக்கமாகவே இருந்தது.

மூத்த பிக்கு தன் பார்வையை மற்ற பிக்குக்களிடம் திருப்ப அவர்களில் இருவர் எழுந்து கையில் விளக்குகளை எடுத்துக் கொண்டு இளம் பிக்குவிற்குத் துணையாகக் கிளம்பினார்கள். இளம் பிக்கு அசட்டுச் சிரிப்புடன் போய் புத்த விஹாரத்தின் பெரிய மரக் கதவைத் திறந்தார். வெளியே இருந்து பனிக்காற்று பலமாக வீச ஒரு பிக்கு கையில் இருந்த விளக்கு அணைந்தது. மற்ற விளக்கின் வெளிச்சத்தில் விழுந்தது என்ன என்று பார்த்தார்கள்.

வெளியே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

                                  *******

அதே நேரத்தில் டில்லியில் ஒரு மனிதன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். சுவர்க் கடிகாரம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குத் தோன்ற, டீப்பாயின் மீது வைத்திருந்த தன் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி இரண்டிலும் இரவு ஒன்று பத்து தான். அவன் எதிர்பார்த்த போன்கால் வராமல் அவனால் இன்று உறங்க முடியாது.  அந்த போன் கால் மணி ஒன்று நாற்பத்திரண்டிற்கு வந்தது. பதட்டத்துடன் அவன் அந்த செல் போனை எடுத்தான். "ஹலோ"

"ஆபரேஷன் சக்ஸஸ்"

அந்த மனிதன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். "எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க"

பதினேழு நிமிடங்கள் கழித்து அந்த மனிதன் அந்த செல் போனில் இன்னொரு நபருக்குப் போன் செய்தான். மறுபக்கம் போனை எடுத்தவுடன் சொன்னான். "முடிச்சுட்டோம்"

சில வினாடிகள் மறுபக்கம் மௌனம் சாதித்தது. பிறகு அங்கிருந்து கேள்வி எழுந்தது. "உடம்பை என்ன செஞ்சாங்க"

"மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு. குண்டு படாம விழுந்தாலே எந்த மனுஷனும் பிழைக்க முடியாது......"

பீல்டுல பலரும் அவனை மனுஷனாய் நினைக்கிறதில்லை. அவனுக்கு அமானுஷ்யன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?"

அந்தக் குரலில் லேசாகப் பயம் இருந்ததாகத் தோன்றியது. உடல் கிடைக்கவில்லை என்ற செய்தி மறுபக்கத்தை சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன் CBI அடிஷனல் டைரக்டரையே சுட்டுக் கொன்ற போது அவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு அதிகார வர்க்கத்தின் உயரத்தில் இருக்கும் இத்தனை பெரிய மனிதரையே பயமுறுத்தும் அந்தக் குண்டடிபட்டு செத்தவனை நினைக்கப் பொறாமையாக இருந்தது.

மறுபக்கம் மறுபடி சொன்னது. "அவன் பிணத்தை அந்தப் பள்ளத்தாக்குல தேடச் சொல்லுங்க. அவன் கிட்ட ஏதாவது பேப்பர்ஸோ, வேறெதாவதோ இருந்தா எடுத்து அனுப்பச் சொல்லுங்க. பிறகு புதைச்சுட்டோ, எரிச்சுட்டோ தகவல் தெரிவிக்கச் சொல்லுங்க...."

"இந்த டிசம்பர் குளிரில் இமயமலைப் பள்ளத்தாக்குல ஒரு பிணத்தைத் தேடறது சுலபமில்லை....."

"எத்தனை செலவானாலும் பரவாயில்லை. வேலையை முடிக்கச் சொல்லுங்க.... உங்க பணம் ஸ்விஸ் அக்கவுண்ட்ல ஐம்பது லட்சம் டெபாசிட் ஆயிருக்கு. அவங்களுக்குத் தர வேண்டிய பணத்தை வழக்கமான இடத்தில் இருந்து நீங்க எடுத்துக்கலாம்..."

"தேங்க்ஸ் சார்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த மனிதன் செல் போனில் மீண்டும் ஒரு எண்ணிற்குப் பேசினான். தனக்குத் தெரிவிக்கப்பட்டதை தானும் அந்த எண்ணில் பேசிய மனிதனுக்குத் தெரிவித்தான். பின் செல்போனை சைலன்ஸ் மோடில் மாற்றி சமையலறைக்குப் போய் பெரிய எவர்சில்வர் டப்பாவை எடுத்து அதில் நிறைந்திருந்த துவரம்பருப்பின் அடியில் அந்த செல்போனைப் பதுக்கி வைத்தான்.  ஒரு போலி நபர் பெயரில் பதிவாகி இருந்த அந்த செல்போனை இந்த ஆபரேஷனுக்கு மட்டுமே அவன் பயன்படுத்தி வருகிறான்....

                                   ********

"உயிர் இருக்கிறது"

"தலையில் அடிபட்டிருக்கிறது. தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது..."

புத்த பிக்குகள் பரபரப்பாய் வந்து சொல்ல, மூத்த பிக்கு உடலை உள்ளே எடுத்து வரச் சொன்னார். "தூக்கி வரும் போது முடிந்த வரை உடலை அசைக்காமல் கொண்டு வரப்பாருங்கள்". இன்னொரு பிக்குவிடம் தண்ணீரைச் சூடாக்கச் சொன்னார்.  தனதறையில் வைத்திருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்து பிரித்தார். அதில் பல விதமான கத்திகள், ப்ளேடுகள், பஞ்சு, தூய்மையான துணிகள், கூரிய கம்பிகள் எல்லாம் இருந்தன.....

உள்ளே எடுத்து வரப்பட்டவனுக்கு வயது 25லிருந்து 30க்குள் இருக்கலாம் என்று மூத்த பிக்கு கணக்கு போட்டார். மாநிறமாக சுமாரான உயரத்துடன் இருந்தான். ஒல்லியாக இருந்தாலும் உறுதியான உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். உடலில் பல இடங்களில் இருந்த வடுக்கள் அவன் அடிபடுவது புதிதல்ல என்று சாட்சி சொல்லின.

மூத்த பிக்கு அமைதியாகத் தன் சிகிச்சையை ஆரம்பித்தார். காயங்களைச் சுத்தம் செய்யும் போது அவன் மயக்க நிலையிலேயே இருந்தான். ஆனால் அவர் அவன் தோள்பட்டையில் இருந்து குண்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிகமாய் வலித்திருக்க வேண்டும். கண்களைத் திறந்து அவரைப் பார்த்தான். அவர் ஹிந்தியில் அவனிடம் சொன்னார். "கொஞ்சம் பொறுத்துக் கொள். அசையாதே. இரண்டே நிமிடம் தான்...."

அவன் அதன் பிறகு அசையவில்லை. மூத்த பிக்கு அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்தார். மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையில் வலி எந்த அளவு இருக்கும் என்பதை அவர் அறிவார். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்ட விதம் அவரைப் பாராட்ட வைத்தது. குண்டை எடுத்து விட்டு மூலிகை மருந்துகளால் உறுதியாகக் கட்டுப் போட்ட பிறகு வலி குறைந்திருக்க வேண்டும். மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றான்.

மீண்டும் அவன் விழித்த போது அதிகாலையாகி இருந்தது. அவனருகில் மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அருகில் இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் புன்னகைத்தான். புன்னகைத்த போது முகம் பிரகாசமாகி அழகாகத் தெரிந்தான்.

மூத்த பிக்குவும் புன்னகைத்தார். அவருக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துப் போனது. கருணையுடன் ஹிந்தியில் கேட்டார். "எப்படி இருக்கிறது?"

அவன் பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.

"உன் பெயர் என்ன?" அவர் அன்புடன் கேட்டார்.

அவன் விழித்தான். கண்களை இரண்டு மூன்று முறை கசக்கிக் கொண்டு யோசித்தான். ஒன்றுமே தெரியவில்லை. மனத்திரையில் எல்லாமே வெறுமையாக இருந்தது. அவன் தமிழில் தாழ்ந்த குரலில் கேட்டான். "நான் யார்?"

பிக்குகள் இருவரும் விழித்தார்கள். ஹிந்தியில் மூத்த பிக்கு கேட்டார். "என்ன கேட்டாய்?"

அவன் சிறிதும் யோசிக்காமல் ஹிந்தியில் மறுபடியும் கேட்டான். "நான் யார்?". கேட்ட பின் தான் தன் கேள்வியின் விசித்திரம் அவனுக்கு உறைத்தது போலிருந்தது. அவன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தது தெரிந்தது. முகத்தில் படர்ந்த குழப்பம் நீங்காமல் நிறைய நேரம் தொடர்ந்தது. அவனுக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை.

மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.


2


CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?"

"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். "அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ் ஒரு சிறப்புக்குழு அமைத்துள்ளது. அவர்களுக்கு இதில் முழு ஒத்துழைப்பு தருவதுடன் எங்கள் தரப்பிலும் விசாரணை நடக்கும். இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றி"

நிருபர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "உங்களுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

மஹாவீர் ஜெயின் புன்னகையுடன் சொன்னார். "எனக்கும் என் மனைவிக்கும் இடையே எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.....எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்.....என்னை அதிகாரம் செய்து கொண்டு"

பலத்த சிரிப்பலைகள் எழ மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். தன் அறை நாற்காலியில் அமர்ந்த போது கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி அவர் மனதை நெருடியது. அவருக்கும் இறந்த ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்....

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆச்சார்யா மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது. மனிதர் மிக நேர்மையானவர். நல்லவர். ஆனால் அவர் சில விஷயங்களில் ரகசியமாக இயங்கி வந்தார். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகு தான் ஜெயினுக்கே தெரிவிப்பார். உதாரணமாக, சென்ற வருடம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த விதம். CBI ஆட்கள் அந்த கேஸில் ஈடுபடுத்தப்படவில்லை. யாரோ ரகசியமாகத் தெரிவித்தார்கள் என்று சொல்லி, தகவல் தெரிவித்தவருக்கு பெரும் தொகை ஒன்றையும் அவர் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயினுக்குத் தெரியும் யாரோ வெளியாட்கள் சிலரை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறார் என்று. அது பல நாட்கள் செய்த வேலையின் பலன். ஆனால் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன நபர் அல்லது கண்டு பிடிக்க உதவிய நபர் அல்லது நபர்கள் யார் என்று இன்று வரை ஜெயினுக்குத் தெரியாது. ஆச்சார்யா தன் சொந்த அதிகாரத்தில் அதை வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

ஜெயினுக்கு அவருடைய ரகசியத்தன்மை பெரும் எரிச்சலைக் கிளப்பியது. பல முறை வெளிப்படையாகவே அதை அவரிடமும், மற்ற உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இருந்தார். CBI வெளி மனிதர்களைத் தங்கள் துப்பறியும் வேலைகளுக்குப் பயன்படுத்துவது புதிதல்ல என்றாலும் முழுக்க முழுக்க யாரோ ஒருசில வெளியாட்களை அவர் பயன்படுத்துவது தவறு என்று ஜெயின் சொன்ன போது, இங்குள்ளவர்களுள் ஒருசிலர் மூலம் வெளியாருக்கு தகவல்கள் சுலபமாகச் செல்கிறது என்பது தான் காரணம் என்பது போல ஆச்சார்யா சொன்னார். யார் அந்தப் புல்லுருவிகள் என்று கேட்டதற்குச் சரியாகத் தெரியவில்லை என்பது அவரது பதிலாக இருந்தது.  

வழக்கமான கேஸ்களை அவருடைய டிபார்ட்மெண்ட் ஆட்களே கவனித்து வந்தார்கள் என்றாலும் இப்போதும் ஏதோ ஒரு பெரிய கேஸை அவர் திரை மறைவில் துப்பறிந்து வந்தார் என்று ஜெயினுக்கு சந்தேகம் தோன்றியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரவில் ஆச்சார்யா ஜெயினுக்குப் போன் செய்திருந்தார்.

"சார். நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்."

அப்போதைக்கு என்னவோ ஜெயினுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது. அவருக்குத் தெரியாமல் தானாகவே ஒரு கேஸை எடுத்துக் கொண்டு திரைமறைவில் இந்த முறையும் ஆச்சார்யா துப்பறிந்து சொல்ல வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆச்சார்யா சொல்ல வருவதற்கு முன் கொலை செய்யப்பட்டு விட்டார்.

ஆச்சார்யாவின் மனைவி பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததால் ஆச்சார்யா வீட்டினுள் தனியாகவே அன்று இருந்திருக்கிறார். நள்ளிரவில் அவர் வீட்டுக்குக் காவல் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பின் அவருடைய வீட்டுக்குக் கொலையாளியோ, கொலையாளிகளோ நுழைந்திருக்கிறார்கள். கதவு உடைக்கப்படவில்லை என்பதால் உள்ளே நுழைந்த நபர் அல்லது நபர்கள் ஆச்சார்யாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆள் யார் என்று பார்க்காமல் நள்ளிரவில் கதவைத் திறப்பவரல்ல அவர். உள்ளே நுழைந்த நபர்/கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருடைய வீட்டுப் பொருள்களைக் கண்டபடி துவம்சம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்....

போலீஸ் விசாரணையின் போது அவரிடமும் கேள்வி கேட்டார்கள். அப்போது ஜெயின் கடைசியாக ஆச்சார்யா செய்த போன் கால் பற்றி சொல்லப் போகவில்லை. அந்த போன் காலை அவர் ஏதோ ஒரு காயின் பாக்ஸ் போனிலிருந்து தான் செய்திருந்தார் என்பதால் போலீசிடம் அந்தத் தகவல் இருக்கவில்லை. இவராகவும் அதை சொல்லப் போகவில்லை. போலீசில் இருந்து பத்திரிக்கைகளுக்கு இந்தத் தகவல் கசிவதை அவர் விரும்பவில்லை.

இதை தங்கள் தரப்பிலிருந்தே ரகசிய விசாரணை செய்வது நல்லது என்று ஜெயின் நினைத்தார். அதுவும் இப்போதைய தலைமை அலுவலகத்தில் இல்லாத, தங்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள ஏதாவது ஒரு திறமையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவது உத்தமம் என்று தோன்றிய உடனேயே அவருக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. உடனே சென்னை அலுவலகத்திற்குப் போன் செய்தார்.

                                  *******

அவன் இன்னும் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டு தான் இருந்தான். எதுவுமே நினைவில்லை. அவனுக்கு நினைவிற்கு எதுவும் வரவில்லை என்பது தெரிந்த மூத்த பிக்கு அவனுடைய சட்டை, பேண்ட் ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்தார். ஒரு சிறிய காகிதம் கூட இருக்கவில்லை. சட்டை, பேண்ட் இரண்டும் ரெடிமேடாக இருந்ததால் தையல்காரன் பற்றிய தகவல் கூட இருக்கவில்லை. பிறகு மூத்த பிக்கு சொன்னார். "இப்போது எதுவும் நினைவுக்கு வரா விட்டால் பரவாயில்லை. கவலைப்படாமல் தூங்கு. இன்னொரு முறை தூங்கி எழுந்தால் எல்லாம் நினைவுக்கு வரும்" அவர் ஏதோ விதைகளைக் கசக்கி முகர வைத்து அவனை மறுபடி உறங்க வைத்தார்.

அவன் மறுபடி எழுந்து இப்போதும் யோசிக்கிறான். உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் தன் சொந்தப் பெயராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதுவே அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு நினைவு இருப்பதெல்லாம் புத்த பிக்குகளும் இந்த புத்த விஹாரமும் தான். மற்றதெல்லாம் துடைத்தெடுத்தது போல் நினைவரங்கம் வெறுமையாக இருந்தது. தலையில் அடிபட்டது காரணமாக இருக்குமா? தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்ததை மூத்த பிக்கு சிகிச்சை செய்து எடுத்தாரே, யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?

தலையும், தோளும் வலித்தது பெரிதாகத் தோன்றவில்லை. எதுவும் நினைவுக்கு வராதது பயங்கரமாக இருந்தது.

அப்போது புத்த விஹாரத்தின் வெளியே சலசலப்பு கேட்டது. அவன் காதைக் கூர்மையாக்கினான்.

வெளியே இரண்டு இளைஞர்கள் இளைய பிக்குவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். "இங்கே ஏதாவது மனித உடல் விழுந்திருந்ததா?"

அவர்கள் கேட்ட விதத்திலேயே அவர்கள் உயிருள்ள உடலைத் தேடவில்லை, செத்த பிணத்தைத் தான் தேடுகிறார்கள் என்பது அந்த இளைய புத்த பிக்குவிற்குத் தெரிந்து விட்டது. அவர்களை இதுவரை அந்தப் பகுதியில் பார்த்ததில்லை. அவர்கள் நினைப்பது போல் அவன் சாகவில்லை உயிர் பிழைத்து விட்டான் என்று சொல்ல நினைத்த இளைய பிக்கு வந்திருந்த ஆட்களின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். நல்ல மனிதர்களாகத் தெரியவில்லை. கண்களில் ஒருவித கொடூரம் தெரிந்ததை அவர் கவனித்தார். இவர்கள் கொலை செய்ய முயன்ற கூட்டத்தாராகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி ஒரு பிணம் இந்தப் பகுதியில் விழுந்து கிடக்கும் என்று தெரியும்? அப்படி எதுவும் இந்தப்பகுதியில் விழவில்லை என்று சொல்வதே உள்ளே உள்ள வாலிபனுக்கு பாதுகாப்பு என்று தோன்றியது. ஆனால் இந்த புத்த விஹாரத்தில் சேரும் போது அவர் சத்தியம் செய்திருக்கிறார்- எந்தக் காரணத்தை வைத்தும் பொய் சொல்ல மாட்டேன் என்று!

செய்த சத்தியம் பெரிதா உயிர் பெரிதா என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இளைய பிக்கு சத்தியம் திரும்பவும் செய்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால் திரும்பி வருமா? என்று யோசித்து முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டி "இல்லையே" என்றார்.

வந்தவர்களில் ஒருவன் திரும்பத் தயாரானான். அடுத்தவன் அவனைத் தடுத்து நிறுத்தி புத்தவிஹாரத்தின் கதவைக் காட்டினான். கதவில் இரத்தக் கறை இருந்தது......

இளைய பிக்குவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது


9 comments:

  1. சுந்தர்August 9, 2014 at 7:09 AM

    மகிழ்ச்சியான செய்தி கணேசன் சார். அந்த நாவலை பல முறை படித்தவர்களில் நானும் ஒருவன். அமானுஷ்யனின் தாயை தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போன பின் நடக்கும் பரபரப்பு நிகழ்ச்சிகளை எத்தனை தடவை படித்தேன் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. இங்க்லீஷ் சினிமா பார்க்கிற மாதிரி இருந்தது. முழு நாவலும் சூப்பர். புத்தகமாக கையில் வைத்து படிப்பது இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும். டிவி சீரியல் எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எங்கள் ஆவலும் நிறைவேறுமா.

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணுAugust 9, 2014 at 4:36 PM

      நானும் சுந்தர் அண்ணன் சொன்னபடியே நினைக்கிறேன். சினிமாவாகவோ, சீரியலாகவோ எடுத்தால் பரபரப்பாக போகும். புத்தக வடிவில் வந்தது அதற்கு முதல்படி என்று தான் நினைக்கிறேன். வாங்கி பல முறை படித்து இன்புற வேண்டிய நாவல் இது. வாழ்த்துக்கள்

      Delete
  2. அக்ஷய் இந்த பெயரை எங்கு கேட்டாலும் அமானுஷ்யன் நினைவு தான் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய அவன் புத்தக வடிவில்
    வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  3. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் கணேசன்.

    ReplyDelete
  4. விஸ்வநாதன்August 10, 2014 at 8:37 AM

    புத்தம் சரணம் கச்சாமியில் அமானுஷ்யன் வரவு வரும் அதே நேரத்தில் அமானுஷ்யன் நாவலும் வெளிவருவது டபுள் ட்ரீட் எங்களுக்கு. நன்றி.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கணேசன் சார் ,​

    ReplyDelete
  6. இந்த புத்தகத்தை எப்படி வாங்குவது

    ReplyDelete
    Replies
    1. பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.முதல் பதிப்பு விற்றுத் தீர்ந்து தற்போது இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.

      Delete
  7. வணக்கம் சார். சமீபத்தில் தான் உங்களது இந்த அமானுஷ்யன் நாவலை வாசித்தேன் சார். என்னையும் அமானுஷ்யன் கவர்ந்துவிட்டான் சார். கதையை வாசிக்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது சார் என்னுள். வருண் அமானுஷ்யனுக்கு வைத்தப்பேர் அக்ஷய். அவனது உண்மைப்பெயரும் அதுவே. பின்பு ஏன் சஹானா வீட்டில் விசாரணைக்கு வந்த போலீசார் இந்தப்பெயரை வைத்து அவனை சந்தேகிக்கவில்லை. இது ஒரு பெரிய விஷயம் இல்லை தான், இருப்பினும் கேட்கத்தோன்றியது சார். நவீன தொழிற்நுட்பத்தின் பயன்பாடு இல்லாதது கதை முந்தைய காலத்ததோ என்ற சந்தேகத்தை உண்டாக்கியது சார்.

    மேலும் இதுபோல் பல கதைகளை படைத்திட எனது வாழ்த்துகள் சார்.

    ReplyDelete