சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 21, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 8


விமானம் ஏறும் வரை கூட ஆனந்துக்கு தன்னை யாரும் கண்காணிக்கிறார்களோ, பின் தொடர்ந்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு அடிக்கடி உணர்ந்த பயம் அது. அப்போது அமானுஷ்யன் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த அவன் தம்பி அக்‌ஷய் பேராபத்தில் சிக்கி இருந்தான். இப்போதைய பயமும் தம்பிக்காகத் தான். அக்‌ஷயின் இருப்பிடம் அவனுடைய எதிரிகளுக்குத் தெரிந்தால் பழைய பேராபத்து பல மடங்காய் திரும்பி விடும். நல்ல வேளையாக யாரும் பின் தொடரவில்லை. அவன் நியமித்திருந்த சிபிஐ ஆள் நூறு அடிகள் இடைவெளியிலேயே விமானநிலையம் வரை வந்து அதை குறுந்தகவல் அனுப்பி உறுதி செய்தான். மனம் நிம்மதியானது.

அவன் பயத்தைச் சொன்னால் அக்‌ஷய் வாய் விட்டுச் சிரிப்பான். கிண்டல் செய்வான். கடவுள் எனக்கு குறித்த நேரத்திலிருந்து ஒரு வினாடி முன்பும் என்னை யாரும் கொல்ல முடியாது. அதற்கு ஒரு வினாடி பின்பும் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்படி இருக்கையில் நீ ஏன் பயப்படுகிறாய்?என்று தத்துவம் பேசுவான்.

விமானம் கிளம்பியது. இருக்கையில் சாய்ந்து கொண்டு தம்பியை நினைக்கையில் அவன் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அக்‌ஷய் வெறும் தத்துவமாக பயம் வீண் என்று சொல்பவன் அல்ல. சொன்னபடியே தைரியமாக இருந்தவன் அவன். பயமே அறியாத அக்‌ஷயைப் பார்த்து பயந்தவர்கள் தான் ஏராளம். தனிக்கட்டையாய் இருந்த போதிருந்த அந்த அசாத்திய தைரியம் இப்போதும் அதே அளவில் அவனுக்கு இருக்குமா என்று ஆனந்த் யோசித்தான். மனைவி, மக்கள், குடும்பம் என்று வந்த பிறகு பொதுவாக மனிதர்கள் பலவீனமாக அல்லவா ஆகி விடுகிறார்கள்? தனக்காக இல்லா விட்டாலும் அவர்களுக்காக சில பராக்கிரம செயல்களுக்குத் தயங்க அல்லவா வேண்டி வருகிறது....

சஹானா நினைவு வந்த போது மறுபடி ஆனந்த் புன்னகைத்தான். அக்‌ஷய்க்கு அவளை விடப் பொருத்தமான மனைவி கிடைத்திருக்க முடியாது. இமயமலைச்சாரலில் ஒரு விபத்தில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்றியவன் என்ற ஒரே காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளும், போலீஸ்காரர்களும் வலைவீசித் தேடிக்கொண்டிருந்த அக்‌ஷய்க்கு ஆரம்பத்தில் அடைக்கலம் கொடுத்தவள் அவள். சீக்கிரமாகவே அவள், அவள் மகன் வருண், மாமியார் மரகதம் – மூவர் மனதிலும் அவன் இடம் பிடித்து விட்டான். இளம் விதவையான சஹானா மனதில் அக்‌ஷய் இடம் பெற்றது கூட ஆனந்துக்கு ஆச்சரியம் இல்லை. வருண், மரகதம் இருவரும் அக்‌ஷயை அளவுகடந்து நேசிப்பது இப்போதும் அவனுக்கு வியப்பாய் இருக்கிறது. தந்தையின் ஸ்தானத்தில் வருணும், மகன் ஸ்தானத்தில் மரகதமும் அக்‌ஷயை ஏற்றுக் கொள்ள முடிந்தது பெரிய விஷயம் தான். சொல்லப் போனால் இறந்து போயிருந்த வருணின் தந்தை சேகரை விட பலமடங்கு மேலாகவே அவர்கள் அக்‌ஷயை நேசித்தார்கள். வாழும் காலத்தில் சேகர் ஒரு நாகரிக கொடுமைக்காரனாக இருந்திருந்தான் என்பது பிறகு தான் ஆனந்துக்குத் தெரிய வந்தது. அக்‌ஷயைப் போன்ற அன்பு மயமானவனை சேகருக்கு மாற்றாய் ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்குத் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று வருடத்தில் அக்‌ஷய்-சஹானா தம்பதிக்கு கௌதம் பிறந்தான்....

ஆனந்த் கண்ணயர்ந்தான். கோயமுத்தூரில் விமானம் தரையிறங்கிய போது தான் அவன் கண்விழித்தான். விமானநிலையத்திலிருந்து அக்‌ஷய் வீட்டுக்குப் போகும் போது தம்பியைப் பார்க்கப் போகிற ஆர்வத்தில் மனம் பரபரப்பாக இருந்தது. இந்த பதிமூன்று வருட காலத்தில் இரண்டே முறை தான் அவன் அக்‌ஷயை சந்தித்திருக்கிறான். ஏழு வருடங்களுக்கு முன் அவர்கள் தாய் இறந்த போது தான் நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் முறை. இரண்டு வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நகருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு கோடை விடுதியில் இருவர் குடும்பங்களும் சேர்ந்து மூன்று நாட்கள் கழித்தார்கள். அப்போதும் எதிரிகள் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் மட்டும் ஆனந்துக்கு இருந்து கொண்டே இருந்தது. இரண்டு குடும்பங்களையும் சேர்ந்து பார்க்கையில் கடந்த கால சம்பந்தப்பட்டவர்கள் யாருக்காவது சந்தேகம் வந்து விடலாம் என்பதால் கூடுமான வரை சுற்றுலா பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களை அவர்கள் தவிர்த்தார்கள்.

இத்தனைக்கும் அக்‌ஷயும் சஹானாவும் தோற்றத்தில் நிறையவே மாறுதல்களைச் செய்து கொண்டிருந்ததால் பார்க்கின்ற பழைய ஆட்களுக்கும் அவ்வளவு சுலபமாக அவர்களை அடையாளம் காண முடியாத நிலையே இருந்தது. அவர்கள் தொழிலிலும் கடந்த காலத்தின் சாயல் இருக்கவில்லை. கோயமுத்தூரில் ஒரு பள்ளியில் சஹானா  ஆங்கில ஆசிரியையாகவும், அக்‌ஷய் உடற்பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்கள். வருண் அழகான இளைஞனாக வளர்ந்திருந்தான். டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறான். கௌதம் நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தான்....

கால் டாக்சியில் இருந்து இறங்கிய ஆனந்தை முதலில் பார்த்தவன் அக்‌ஷய் தான். அக்‌ஷய் முன்பிருந்தது போலவே எடை கூடாமல் கச்சிதமாய் உடம்பை வைத்திருந்தான். அவன் அளவு கடந்த மகிழ்ச்சியோடு ஓடி வந்து அண்ணனைக் கட்டி அணைத்துக் கொண்டான். தம்பி ஓடி வருவதில் கூட ஒரு தாள லயத்தை, லாவகத்தை ஆனந்த் கவனித்தான். எந்த சூழ்நிலையிலும் ஒரு ஒழுங்கான இயக்கம் அவனிடம் இருக்கும். டிஸ்கவரி சேனலில் பல முறை சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளின் இயக்கத்தைப் பார்க்கிற போதெல்லாம் அவனுக்குத் தன் தம்பி நினைவு வரும். மின்னல் வேகத்தில் இயங்கினால் கூட, அந்த அதிக வேகத்திலும் அவசரமிருக்காது. பதட்டம் இருக்காது....



ஹாய் ஹீரோ எப்படி இருக்கிறாய்?என்று அக்‌ஷய் அன்போடு அண்ணனை விசாரித்தான். தன் அண்ணன் சினிமா கதாநாயகன் போல் மிக அழகானவன் என்பதில் அக்‌ஷய்க்கு என்றுமே ஒரு பெருமிதம் உண்டு. அதனால் பார்க்கும் போதெல்லாம் ஹீரோ என்று அழைப்பான். ஆனந்துக்குத் தான் யார் முன்பாவது அவன் அப்படி அழைப்பது தர்மசங்கடமாக இருக்கும்… ஆனந்த் நலமென்று சொன்னான்.


எதிர்பாராமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்த ஆனந்தை வீட்டின் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் அவன் வரவு ஆச்சரியத்தை அளித்தது. ஏதாவது தகவல் அனுப்புவதாக இருந்தாலும் ஆனந்த் தன் ஆட்கள் யாரையாவது அனுப்புவானே ஒழிய நேரில் வருவதைத் தவிர்ப்பவன்...

அக்‌ஷய் கேட்டான். “அண்ணியும் அஞ்சனாவும் எப்படி இருக்கிறார்கள்?

அஞ்சனா ஆனந்தின் மகள். ஐந்தாம் வகுப்பில் படிக்கிறாள். ஆனந்த் அவர்கள் நலமென்றான். ஆனந்தை சூழ்ந்து அமர்ந்து கொண்டு அனைவரும் அன்பான உபசரிப்புகள் செய்த போது அவனுக்கு நிறைவாக இருந்தது. வந்த காரணத்தைச் சொல்லும் போது அவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள், என்ன சொல்வார்கள் என்று யோசித்தான். அக்‌ஷய் என்ன சொல்வான் என்று தெரியாவிட்டாலும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அன்பான குடும்பம்....! ஆனந்த் சோம்நாத்தை மனதில் சபித்தான்.

குளியல், டிபன் எல்லாம் முடிந்து கௌதமைத் தவிர (அவன் விளையாடப் போய் விட்டிருந்தான்) அனைவரும் சேர்ந்திருக்கையில் ஆனந்த் ஆரம்பித்தான்.

அக்‌ஷய் நீ மைத்ரேய புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?

அக்‌ஷய் ஆர்வத்துடன் சொன்னான். “நமக்கு கல்கி அவதாரம் மாதிரி, பௌத்தர்களுக்கு மைத்ரேய புத்தர். புத்தரின் அவதாரம். தர்மம் முழுவதும் அழிந்து போகும் போது உலகத்தைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்ட வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் திபெத்தில் இருந்த போது இன்னும் சில வருடங்களில் அவர் பிறப்பார் என்று அங்கிருந்த லாமாக்கள் நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.... ஏன் திடீர் என்று மைத்ரேய புத்தரைப் பற்றிக் கேட்கிறாய்?

அவர் பத்து வருடங்களுக்கு முன்பே திபெத்தில் பிறந்திருக்கிறாராம்...

அப்படி பிறந்திருந்தால் உடனே எல்லாருக்கும் தகவல் பரவியிருக்குமே..

அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்து இருந்ததால் லாமாக்கள் ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்கள்....

அக்‌ஷய் ஆனந்த் ஏதோ முக்கிய விஷயமாகத்தான் வந்திருக்கிறான் என்று ஆரம்பத்திலேயே சந்தேகித்திருந்தான். ஆனால் அதைப் பற்றிப் பேசாமல் ஆனந்த், மைத்ரேய புத்தர் விஷயத்தை ஏன் பேசுகிறான் என்று புரியவில்லை....

ஆனந்த் தொடர்ந்தான். “இப்போது அந்த ரகசியம் வெளியாகிவிடப் போகிறது என்று ஏதோ காரணங்களால் பயப்படுகிறார்கள். அதனால் மைத்ரேய புத்தரை திபெத்தில் இருந்து ரகசியமாய் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று லாமாக்கள் நினைக்கிறார்கள். அதற்காக தலாய் லாமா நம் பிரதமரிடம் உதவி கேட்டு வந்திருக்கிறார்....

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் முன்பு வேலை பார்த்திருந்த சஹானா தலாய் லாமாவை ஒருமுறை பேட்டி எடுத்திருக்கிறாள். தலாய் லாமா மீது அவளுக்குத் தனி மரியாதை இருந்தது. அதனால் ஆர்வத்துடன் அவள் ஆனந்தைக் கேட்டாள். “என்ன விதமாய் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்?

திபெத்திற்குப் போய் மைத்ரேய புத்தரை ரகசியமாய் அழைத்து வர அமானுஷ்யன் என்ற நபரின் உதவியை அவர் எதிர்பார்க்கிறார்...

ஆனந்த் முடித்த பின் அங்கு கனத்த மௌனம் நிலவியது. மரகதம், சஹானா, வருண் மூவரும் அக்‌ஷயையே பார்த்தார்கள். அவர்கள் மூவர் பார்வையிலும் பயம் பிரதானமாய் தெரிந்தது. அக்‌ஷய் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

முதலில் வாயைத் திறந்தது வருண் தான். பதிமூன்று வருடத்திற்கு முந்தைய அனுபவங்கள் பேரலைகளாய் அவன் மனதைத் தாக்க, வரப்போகிற அபாயத்தின் அளவு தெளிவாய் தெரிய, அவன் அக்‌ஷயைப் பார்த்து உறுதியாய் சொன்னான். “அப்பா நீங்கள் போகப் போவதில்லை....


  

(தொடரும்)

-என்.கணேசன்



(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)
  

13 comments:

  1. Welcome our favorite hero amanushyan

    ReplyDelete
  2. அமானுஷ்யனின் எண்ட்ரியை சிம்பாலிக்காக பாயும் புலி படத்தோடு போட்டது சூப்பர். அமானுஷ்யனும் மைத்ரேய புத்தரும் இணையப் போகிறார்களா? சீக்கிரம் தொடருங்கள் சார். ஆவலாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. Super..... story going very interesting.....

    ReplyDelete
  4. I am eagerly waiting to see amanushyan in action. Still the memories his mother's and varun's kidnap haunt me. His planning in the chapters is great thrilling experience. I bought amanushyan in erode fair and reading some chapters like that more than once.

    ReplyDelete
  5. Dear Sir, You've explained the happenings of 13 years in a crispy way and beautiful (in your) way. Whenever I read your writings I could feel the breeze crossing me. Thank you for giving us opportunities to read your writings.

    ReplyDelete
  6. it's getting exciting ... like watching a movie...

    ReplyDelete
  7. Amanushyan varugai kaaga ve ivlo naalum kaathuirunthen. Padikum pothum naangalum palaya ninaivugal ellam kadanthu pogirathu. Arumaiyana inoru anubavam ku engalai kondu sella pogireergal GANESH NAIRN
    Valthugal

    ReplyDelete
  8. வருது வருது வேங்கை வெளியே வருது . . .

    ReplyDelete
  9. அமானுஷ்யனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அலட்டிக் கொள்ளாத அதிபுத்திசாலித்தனம் தான். ஒரு வாசகர் சொன்னது போல் அந்த கடத்தல் சம்பவம் மட்டுமல்லாமல் நாவல் முழுக்க பல சம்பவம் சொல்லலாம். லீக்யாங்கை எப்படி சமாளிப்பான் என்று இப்போதே பரபரப்பாக உள்ளது. எங்களால் மறக்க முடியாத கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்ததற்கு நன்றிகள் கதாசிரியர் கணேசனுக்கு.

    ReplyDelete
  10. amanushyan entry super sir
    Akshy oda performance il muzhuga aavalaay ullen

    ReplyDelete
  11. இந்த நாவலின் ஆரம்பத்தில் கற்பனை என கூறியிருந்தாலும் படித்துக் கொண்டே மனதில் காட்சிகளாக ஓட விடும் போது உண்மைச் சம்பவம் போல ஓர் உணர்வு ஏற்படுகிறது.....

    ReplyDelete
  12. I wish the Akshay character to be true ...

    ReplyDelete
  13. ஆர்வம் மேலிடுகிறது.....வேங்கை ஒன்று பாய்வதுபோல் படம் இருந்தபோது
    ஏன் வேங்கையின் படம் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேன். கதையை படிக்கும்போதுதான்
    தெரிந்தது இந்த வார அத்தியாயத்துக்கு பொருத்தமான படம் இதுவென்று

    ReplyDelete