சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 10, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 2



மைத்ரேய புத்தர் பெயரை தலாய் லாமாவும் எதிர்பார்த்திருக்கவில்லை. தானாக அவர் குரலும் தாழ்ந்தது. கவலையுடன் கேட்டார். “அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று?

ஆசான் புன்னகையுடன் சொன்னார். “டென்சின், இப்போது அது குழந்தை இல்லை. பத்து வயது சிறுவன். அவர் நன்றாகவே இருக்கிறார்

தலாய் லாமா ஆர்வமாகக் கேட்டார். “மைத்ரேயனை சமீபத்தில் பார்த்தீர்களா..?.

“போன மாதம் பார்த்தேன்.... அதுவும் தூரத்திலிருந்து...ஆசான் குரலில் லேசாக மனத்தாங்கல் இருந்தது.

தலாய் லாமா மைத்ரேய புத்தரைப் பற்றியே யோசித்தபடி ஆசானைப் பார்த்தார்.

ஆசான் தாழ்ந்த குரலிலேயே தொடர்ந்தார். “இது வரை மூன்றே முறை தான் அவரைப் பார்த்திருக்கிறேன். மூன்று வயதில், ஏழு வயதில், போன மாதம்..... மூன்று முறையும் தூரத்தில் நின்று கொண்டு இரண்டு நிமிடங்களுக்குள் யாருக்கும் சந்தேகம் ஏற்படுத்தாமல் பார்த்தேன். அதை விட அதிகமாயோ நெருக்கத்திலோ பார்த்தால் கூட சீன ஒற்றர்களுக்கு சந்தேகம் வந்து, கண்டுபிடித்து, மைத்ரேயனைக் கொன்று விடும் அபாயம் இருக்கிறது.... மைத்ரேயன் என்று சந்தேகப்பட்டு சீனா இது வரை மூன்று குழந்தைகளைக் கொன்றிருக்கிறது...

தலாய் லாமா மனம் இறந்த குழந்தைகளுக்காக உருகியது. என்ன கொடுமை இது!... மைத்ரேய புத்தரும் நலமாக இருக்கிறார் என்றால் இப்போது அவர் விஷயமாக ஏன் ஆசான் வந்திருக்கிறார் என்ற கேள்வி மனதில் எழ ஆசான் அவர் கேட்காமலேயே காரணம் சொன்னார்.

“அவர் சம்பந்தமாக மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார்” 

அந்தப் பெயரைக் கேட்டதும் தலாய் லாமா இதயத் துடிப்புகள் ஒரு கணம் நின்று தொடர்ந்தன. ஆசான் ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினார். தலாய் லாமா அதைப் படித்துப் பார்த்தார் கவலையின் ரேகைகள் அவர் முகத்தில் படர்ந்தன. தலாய் லாமா ஆயாசத்துடன் எழுந்தார். வெளியே மறுபடியும் பலத்த மழை ஆரம்பித்த சத்தம் கேட்டது. ஜன்னல் அருகே சென்று பெய்யும் பேய் மழையை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்தார்.

மௌன லாமா என்ற திபெத்திய புத்த துறவி தன் பதினாறாம் வயதில் மௌன விரதம் பூண்டவர். அதற்குப் பின் அவர் வாய் திறந்து பேசியதில்லை. திபெத்தின் ஒரு பழங்கால புத்த மடாலயத்தில் வசிக்கும் அவருக்கு தற்போது வயது என்ன என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நூறிலிருந்து நூற்றி இருபது வரை பல எண்களை வயதாகச் சொல்கின்றனர். பெரும்பாலும் தியான நிலையில் இருக்கும் அவர் ஒரு நாளுக்கு ஒரு முறை தான் உணவு உண்பார். சில நாட்களில் ஆழ்நிலை தியானங்களில் மூழ்கிப் போனால் அந்த உணவும் வைத்த இடத்திலேயே இருக்கும். தியான நிலையில் இல்லாத போது புனித நூல்களைப் படித்துக் கொண்டும், மடாலய வேலைகள் ஏதாவது செய்து கொண்டும் இருப்பார்.

அவர் திடீர் என்று எச்சரிக்கைகளை மற்றவர்களுக்கு எழுதிக்காட்டுவதுண்டு. அவை அப்படியே பலிக்கும் என்பது மற்றவர்களின் அனுபவம். ஒரு முறை பல மைல் தொலைவில் உள்ள ஒரு மடாலயத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பிக்குவிடம் இரண்டு நாட்கள் போக வேண்டாம் என்று மௌன லாமா எச்சரித்தார். இரண்டாவது நாள் அந்த மடாலயம் நிலச்சரிவில் நாசமாகிய செய்தி வந்து சேர்ந்தது. இன்னொரு முறை புகழ் பெற்ற பழைய புனித நூல்களைப் பாதுகாத்து வரும் இன்னொரு மடாலயத்தினரை அந்தப் புத்தகங்களை வேறு ஒரு அறைக்கு மாற்றச் சொன்னார். அப்படியே அவர்கள் செய்தனர். அன்று இரவே நூல்கள் முன்பிருந்த அறை தீக்கிரையாகியது. இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

அப்படி ஒரு எச்சரிக்கை 1959 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி தலாய் லாமாவுக்கு மௌன லாமாவால் அனுப்பப்பட்டது. உடனடியாக அதை ஏற்க தலாய் லாமாவால் முடியவில்லை. சீன அரசாங்கத்தை எதிர்த்து அவர் தலைமையில் திபெத்தியர்கள் போராடிக் கொண்டிருந்த காலம் அது. தன் தாய்நாடான திபெத்தை அந்த இக்கட்டான நிலையில் விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை. ஆனால் அவருடன் இருந்த அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனே வெளியேற தலாய் லாமாவை அறிவுறுத்தினார்கள். கடைசியில் அடுத்த நாள் மார்ச் 17 ஆம் தேதி இரவு லாசா அரண்மனையில் இருந்து தலாய் லாமா சாதாரண சிப்பாய் வேடமிட்டு ரகசிய வழியில் வெளியேறினார். மறு நாள் காலை லாசா அரண்மணையை சீன ராணுவம் சுற்றி வளைத்தது.

31 நாட்கள் பயணம் செய்து 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி இந்தியாவை அடைந்த தலாய் லாமாவுக்கு இப்போதும் அந்த நாட்கள் பசுமையாக நினைவில் உள்ளன. அன்று அவர் அந்த எச்சரிக்கையை அலட்சியம் செய்து அங்கேயே இருந்திருந்தால் அவர் உயிரை இழந்திருக்கலாம் அல்லது இன்றும் சீன சிறையில் அடைபட்டுக் கிடந்திருக்கலாம்.

சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் பெற்றிருந்த அவர் இன்று இந்த எச்சரிக்கையை எப்படி அலட்சியம் செய்ய முடியும்!

தலாய் லாமா ஜன்னலருகேயே மழையைப் பார்த்துக் கொண்டே ஆழ்ந்த சிந்தனையில் நிற்பதைக் கண்ட ஆசான் தானும் எழுந்து ஜன்னல் அருகே சென்றார்.

மௌன லாமா ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறார் என்று ஆசான் சொன்னதற்குப் பின் அவர்கள் பேசியது எதுவும் சோடென்னுக்குக் கேட்கவில்லை. மழையின் சத்தம், அவர்கள் அந்த சோபாவிலிருந்து தூர இருந்தது, தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டது எல்லாமாகச் சேர்ந்து அர்த்தமில்லாத முணுமுணுப்புகளாக மட்டுமே கேட்டது. சோடென் பொறுத்து பொறுத்துப் பார்த்தான். அவர்கள் பழையபடி இருக்கைகளுக்குத் திரும்புவதாக இல்லை.

அவன் பொறுமையிழந்தான். அவனை உளவிற்காக ஆயத்தப்படுத்தியவன் ஆரம்பத்திலேயே சொன்னான். “ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் முக்கிய மூன்று தகுதிகள் – பொறுமை, பொறுமை, பொறுமை”.  அதுவே அவன் பொறுமையைச் சோதித்தது. இதற்கு ஒரு நல்ல ஒற்றனுக்குத் தேவையான முதல் தகுதி பொறுமை என்றே சொல்லி விட்டுப் போகலாமே என்று நினைத்தான். போகப் போக பொறுமை எவ்வளவு முக்கியம் என்று புரிந்தாலும் அவனிடம் அது வந்து சேரவில்லை.

மற்ற உளவாளிகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்று அடிக்கடி அவன் யோசித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் அதை நேரில் கண்டு கொள்ளும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் நேரில் பார்த்த ஒரே உளவாளி அவனை ஆயத்தப்படுத்திய பீஜிங் ஆசாமி தான். அவனையும் அவன் இது வரை ஐந்தாறு முறை தான் நேரில் சந்தித்திருக்கிறான். இங்கேயே கூட வேறு உளவாளிகள் இருக்கிறார்கள் என்பதை அவன் அறிவான். அவர்களில் அவனுக்கு அடிக்கடி குறுந்தகவல் அனுப்பும் ஆளும் ஒருவன். ஆனால் அவனும் யார், எப்படி இருப்பான் என்பது சோடென்னுக்குத் தெரியாது. தர்மசாலாவிலேயே இருக்கும் அந்த நபர் ஏதாவது பிக்குவாகவோ, பாதுகாப்பு காவலாளிகளில் ஒருவனாகவோ இருக்கக்கூடும்....

அவன் தான் சற்று முன் கூட "வந்திருக்கும் புதிய ஆளைக் கவனிஎன்று குறுந்தகவல் அனுப்பியிருந்தவன். அவனுக்கு இந்த ஆசான் கிழவனை முன்பே தெரியுமா, இல்லை இந்த கிழவன் ஏதாவது சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் நடந்து கொண்டானா என்று சோடென்னால் யூகிக்க முடியவில்லை. இந்த சேட்டைக் கிழவன் எதாவது செய்திருப்பான். முதல் முறை பார்க்கையிலேயே ஒரு புதிய ஆளைப் பார்த்து கண்ணடிக்கும் கிழவன் என்ன தான் செய்ய மாட்டான்....

நிமிடங்கள் வேகமாகக் கழிந்தன. காத்திருந்தே சோடென்னுக்கு அலுப்பு தட்டியது. திரும்பவும் அவர்கள் இருக்கைகளுக்குத் திரும்பியது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிந்த பின்பு தான். இப்போது தலாய் லாமாவின் குரல் தெளிவாகக் கேட்டது.  

இந்த ஆளை நம்மால் நேரடியாகத் தேட முடியாதா?


சான் சொன்னார். முடிந்த வரை விசாரித்து விட்டோம். கண்டுபிடிக்க முடியவில்லை.

தலாய் லாமா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பின் சொன்னார். “நான் பேசிப் பார்க்கிறேன் ஆசானே!

“சாதகமான பதில் வந்தால் உடனே தெரிவி டென்சின். உன் பதில் கிடைக்கும் வரை நான் சொன்ன இடத்தில் தான் இருப்பேன்.

‘ஒருவேளை பதில் பாதகமாக இருந்தால்?என்று கேட்க நினைத்த தலாய் லாமா வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். அப்படி ஒரு பாதக நிலையே வரக்கூடாது. கருணையே உருவான போதிசத்துவர் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட மாட்டார்.

தலாய் லாமா கேட்டார். “என்ன சாப்பிடுகிறீர்கள் ஆசானே?

“ஒன்றும் வேண்டாம் டென்சின்..... நான் கிளம்புகிறேன்

இந்த மழையிலா?

“மழை, வெயில் - இதெல்லாம் நம் வேலையை பாதிக்க விட்டால் எத்தனையை முடிக்க முடியும் டென்சின்.... நான் சீக்கிரம் போயாக வேண்டும்?

“அவ்வளவு அவசரமாய் போய் என்ன செய்யப் போகிறீர்கள்?

“மூன்று நாள் விரதம் இருக்கப் போகிறேன் டென்சின்

ஆசானின் விரதம் தலாய் லாமா நன்றாக அறிந்த ஒன்று. தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி இருப்பார். ஆசானின் விளையாட்டிற்கு எதிர்மாறான குணாதிசயங்களில் இதுவும் ஒன்று. விரத நாட்களில் முழு நேரமும் இறைவனின் தியானத்திலும், இறைவழிபாட்டிலும் தான் அவர் கழிப்பார்.

“உங்கள் இந்த வயதில் இந்த விரதமெல்லாம் வேண்டுமா ஆசானே. போதிசத்துவர் இதை உங்களிடம் எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறீர்களா?

“அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை டென்சின்... நான் தான் அவரிடம் எதிர்பார்க்கிறேன்.... நீ பேசப்போகும் போது உன்னுடன் என் பிரார்த்தனை கூட வரும்...

ஆசான் கிளம்பி விட்டார். அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிந்த தலாய் லாமா தானும் எழுந்தார். அவர் மடியில் இருந்த சிறு தாள் கீழே விழுந்தது. குனிந்து அதை எடுத்த தலாய் லாமா சற்று முன் ஆசான் அதைத் தந்த போது தோன்றியதை இப்போது வாய் விட்டுச் சொன்னார்.

“வித்தியாசமான பெயர்

ஆசான் புன்னகைத்தார். “பெயர் மட்டுமல்ல ஆளும் அப்படித்தான்

அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் ஆசான் கடைசியாக எச்சரித்தார். “நம்மிடம் காலம் அதிகமில்லை டென்சின்

“உடனடியாகப் பேசுகிறேன் ஆசானே”  

ஆசான் அறையை விட்டு வெளியே வந்தார். சோடென் தன் அறையில் இருந்த ரகசிய ஒலிபரப்புக்கருவியை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக வெளியே வந்தான். இருவரும் வரவேற்பறையில் சந்தித்துக் கொண்டார்கள். சோடென் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் போகும் இடம் எங்கே என்று அறிய விரும்பினான். அதனால் பிடிக்கா விட்டாலும் அவரிடம் திபெத்திய மொழியில் பேசினான்.

“வணக்கம் பெரியவரே. கிளம்பி விட்டீர்களா?

“ஆமாம்என்ற ஆசான் அவனைப் பார்த்துக் கண்ணடித்தார். சோடென்னுக்கு அவர் கழுத்தை நெறிக்க வேண்டும் போல இருந்தது. ஆசான் அவனைக் கேட்டார். “உன் பெயர் என்ன இளைஞனே?

“சோடென்

சோடென் என்றால் பக்தியானவன் என்று அர்த்தம். நீ பக்தி மிகுந்தவனா?

பிரார்த்தனை நேரத்தில் நீயும் வேடிக்கை பார்த்தாய், நானும் வேடிக்கை பார்த்தேன். என்னைப் பார்த்து பக்தி மிகுந்தவனா என்று கேட்கிறாயே கிழவாஎன்று மனதில் கொதித்த சோடென் அதற்குப் பதில் சொல்லாமல் அவரிடம் கேட்டான். “இந்த மழையில் எப்படிப் போவீர்கள்?

ஆசான் புன்னகையுடன் “இப்படித்தான்என்று சொல்லி கண்ணடித்து விட்டு ஒரே ஓட்டமாக தெருவை அடைந்தார். மழையில் நனைந்தபடி தெருவில் வேகமாகச் செல்லும் ஆசானைத் திகைப்புடன் பார்த்து நின்றான் சோடென்.  மனதில் அந்தக் கிழ பிக்குவை சபித்துக் கொண்டே தனதறைக்குத் திரும்பிய சோடென் பதிவு செய்திருந்த சம்பாஷணையை தன் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தான்.

(தொடரும்)
-          என்.கணேசன்


13 comments:

  1. சுவாமிநாதன்July 10, 2014 at 7:04 PM

    ஒரு நிஜ சம்பவத்தை நேரில் பார்க்கும் உணர்வு. அருமை சார்.

    ReplyDelete
  2. Very interesting. you have included dalai lamas real escape from tibet realistically.

    ReplyDelete
  3. உங்கள் கதையை முதல் முறையாக படிகின்றேன். அற்புதமாக எழுதுகிறீர்கள். அந்த அறைக்குள் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது.
    வாழ்த்துகள் ......

    ReplyDelete
  4. தலாய்லாமா அங்கிருந்து தப்பித்தது நீங்கள் சொல்வது போல் தானா? ? அது உண்மையா?
    அடுத்து என்ன......தெரிந்து கொள்ள ஆவல்.....

    ReplyDelete
    Replies
    1. தலாய் லாமா தப்பித்து இந்தியா வந்த நிகழ்ச்சி தேதி உட்பட வரலாற்று உண்மை.

      Delete
  5. Excellent esoteric conversation between DL and Aasaan...very eager to know the details...sometimes need to read few times to understand the depth of conversation. Keep rocking...keep flowing...entertaining...what is the year now during the conversation...is it mentioned in episode 1. Let me check...

    ReplyDelete
    Replies
    1. The story is happening now - present period.

      Delete
  6. Very interesting beginning. Waiting for next part.

    ReplyDelete
  7. xcelent narration brings the character infront of us

    ReplyDelete
  8. அருமையாக விரிகிறது கதை...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  9. அய்யோ , கிழவருக்கு ஏதாவது ஆகக்கூடாது என்று மனம் பிரார்த்தனை செய்ய தூண்டுகிறது, உங்களது வர்ணனை.

    ReplyDelete