மழையில் நனைந்து கொண்டே செல்லும் ஆசானை தலாய் லாமா மாடி ஜன்னல்
வழியாகப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றார்.
சில சின்னச் சின்ன சந்தோஷங்கள் குழந்தைப்
பருவத்திற்கே உரியவை. வளர்ந்த பிறகு அவற்றில் இருந்து நீங்கி விடுகிறோம்.
சொல்லப்போனால் வளர்ந்திருக்கிறோம் என்பதற்கு சமூகம் எடுத்துக் கொள்ளும் அடையாளமே
அந்த சின்னச் சின்ன சந்தோஷ ஈடுபடுதல்களை விட்டு நீங்குவதே. அப்படி ஈடுபட்டால்
“என்ன இன்னும் சின்னக் குழந்தைகள் போல” என்று சமூகம் கேட்டும் விடும். அப்படி
ஈடுபடுபவன் குற்றவுணர்ச்சியோடு பின்வாங்க நேரும். ஆனால் 93 வயதானாலும் அந்த
வகையில் ’வளராதவர்’ ஆசான். அவர் உடலும் அதற்கு ஒத்துழைக்கிறது. தூரத்தில்
சென்று கொண்டிருக்கும் அவருடைய முகத்தைப் பார்க்க முடியா விட்டாலும் அந்த மழையை
சிறு குழந்தையைப் போல் அனுபவித்து நனைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தோஷம் தெரியும்
என்பதில் தலாய் லாமாவுக்கு சந்தேகம் இல்லை.
ஏழெட்டு வயது வரை
அப்படித் தானும் நனைந்தது நினைவுக்கு வர தலாய் லாமா சின்னதாய் புன்னகை பூத்தார். அவர்
பார்வை ஆசான் மறையும் வரை அந்த திக்கிலேயே இருந்தது. இந்த மாளிகைச் சிறையில் தான்
இருக்கையில், நாடோடியாய் சுதந்திரனாய் ஆசான் இருக்கிறார் என்று எண்ணியவராய்
மாடியில் இருந்து இறங்கி தனதறைக்கு வந்தார் தலாய் லாமா.
வந்ததும்
இண்டர்காமில் சோடென்னை அழைத்தார். சோடென் வந்ததும் சொன்னார். ”பிரதமர் அலுவலகத்திற்கு போன் செய் சோடென். எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு ஒரு அப்பாயின்மெண்ட் கேள்”
சோடென் தலையசைத்து விட்டு ஒரு நிமிடம்
அதிகமாக அங்கேயே நின்றான். எதற்காக பிரதமரிடம் அப்பாயின்மெண்ட் என்று அவராக
விவரிப்பாரா என்று சோடென் எதிர்பார்த்தார். ஆனால் தலாய் லாமா விளக்கம் எதுவும்
தராமல் ”அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு சொல்” என்று மேலும் சொல்லி அவனை அனுப்பி விட்டார்.
ஆசான் வந்து
போனதற்கும், இந்தியப் பிரதமரிடம் தலாய் லாமா இந்த அப்பாயின்மெண்ட் கேட்பதற்கும்
ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று சோடென் சந்தேகப்பட்டான்.
**********
சீன உளவுத்துறை MSS (Ministry of State Security of the People's
Republic of China) தலைமையகம், பீஜிங்.
சோடென்னின்
உயர் அதிகாரியான வாங் சாவொ MSSன் உப தலைமை அதிகாரியின் வரவுக்காக அலுவலகத்தில்
காத்திருந்தான்.
நேற்று இரவு அவன்
உறங்கவேயில்லை. காரணம் சோடென் அவனுக்கு அனுப்பி வைத்த அந்த பேச்சுப் பதிவு தான்.
அது இந்தியாவில் இருந்து நேரடியாக அவனிடம் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
இந்தியாவில் இருந்து நேபாள் மெயில்
ஐடிக்கு போய் அங்கிருந்து ஹாங்காங் மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து
சீனாவுக்கு அரை மணி நேரத்தில் வந்தது. அதன் பிறகு அதில் அவனுக்கும் இரண்டு
கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கும் இன்று அதிகாலை ஆறு மணி வரை வேலை இருந்தது.
தலாய் லாமாவும் ஆசானும்
பேசிய பேச்சுகளில் இடையே தெளிவில்லாமல் இருந்த சத்தங்களில் இருந்து பேச்சை பிரித்தெடுத்துக்
கண்டு பிடிக்க நிறையவே அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தார்கள். கடைசியில் ஒருசில
வார்த்தைகளை மட்டுமே அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. மிகத் தாழ்ந்த குரலில் அவர்கள்
பேசியிருந்தபடியால், மழைச்சத்தத்தை மீறி அதற்கு மேல் இவர்களால் கண்டுபிடிக்க
முடியவில்லை. எல்லாவற்றையும் MSS உப தலைமை அதிகாரியான லீ க்யாங்கிடம் காட்ட தான் வாங்
சாவொ அங்கு காத்துக் கொண்டிருக்கிறான்.
அவன் தன் வாழ்நாளில்
லீ க்யாங் போன்ற கூர்மதி படைத்த ஒருவனை சந்தித்ததில்லை. எந்த ஒரு விஷயத்தையும்
மிகக் குறைவான நேரத்தில் அதன் ஆழம் வரை போய் அலசி ஆராயும் திறமை லீ க்யாங்குக்கு
உண்டு. ஆட்களையும் அப்படித்தான்
சீக்கிரமாகவே துல்லியமாக லீ க்யாங் எடை போட்டு விடுவான். ஆனால் எதையும் லீ க்யாங்
முக பாவனையில் இருந்து யாராலும் யூகிக்க முடியாது. உணர்ச்சிகளை அதிகம் காண்பிக்காத
முகம் லீ க்யாங்குடையது. எதுவும் புரியாத மரமண்டை போல் தோற்றமளித்தாலும் லீ க்யாங்
அறிவிற்கு எதுவும் தப்பாது.
சீனாவின் MSS அமைப்பில் தலைமைக்கு அடுத்த உயரதிகாரியாக
இருக்கும் லீ க்யாங்கின் வயது 37. வாங் சாவொவை விட ஐந்து வயது தான் மூத்தவன். ஆனால்
தலைமை அதிகாரி உட்பட எல்லோரும் லீ க்யாங்கை மிகவும் மதித்தார்கள். பலருக்கு
மதிப்பையும் விட பயமே அதிகமாக இருந்தது. காரணம் தங்கள் வேலையில் தவறு செய்தவர்களை
லீ க்யாங் கையாளும் விதம். அவர்களில் எத்தனையோ பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் விசாரணை கூட
இருந்ததில்லை.
உளவுத்துறையில்
இருக்கும் தனிமனிதர்களின் தவறுகள் நாட்டின் தலையெழுத்தையே சில சமயங்களில் மாற்ற
முடிந்தவை. அப்படி இருக்கையில் அதை அனுமதிப்பதே தேசத்துரோகம் என்று நம்புபவன் லீ
க்யாங்.
அதே நேரம் கூடுதல்
திறமையையும், கடும் உழைப்பையும் கவனித்து தகுந்த பதவி உயர்வையும், சன்மானத்தையும்
கொடுப்பதிலும் லீ க்யாங் தாராளமானவன். அவனை முகஸ்துதி செய்து யாரும் எதையும்
அவனிடம் சாதித்துக் கொள்ள முடியாது. அவனைப் பற்றித் தெரியாமல் அப்படி
முயல்பவர்களிடம் வறண்ட குரலில் சொல்வான். “உன் திறமையைப் பேச்சில் காட்டாதே.
செயலில் காட்டு. உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாய் செய்து காட்டு”
வாங் சாவொ துப்புறவு
பணியாளனாக அந்த அமைப்பில் வேலைக்குச் சேர்ந்தவன். அந்த வேலையை அவன் செய்த
விதத்தையும், அவனிடம் கூடுதல் திறமைகள் இருப்பதையும் கவனித்த லீ க்யாங் அவனுக்குத்
தகுந்த பயிற்சிகள் கொடுத்து அவனை ஒரு அதிகாரி நிலைக்கு உயர்த்தி இருக்கிறான். துப்புறவு
தொழிலாளியாகவே இருந்திருக்க வேண்டிய தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய லீ க்யாங் மீது
வாங் சாவொவுக்கு அளவு கடந்த பக்தி உண்டு....
லீ க்யாங் உள்ளே நுழைந்தான். வாங் சாவொ எழுந்து நின்று மரியாதை
செலுத்தினான்.
தலாய் லாமாவும் ஆசானும் மைத்ரேய புத்தர் பற்றி என்ன பேசினார்கள் என்று தெரிந்து
கொள்ளும் ஆவலுடன் வழக்கத்தை விட அரை மணி நேரம் முன்பாகவே வந்த லீ க்யாங் தனக்கும்
முன்பாகவே வந்து காத்திருந்த வாங் சாவொவைப் பார்த்து திருப்தி அடைந்தாலும் அதைத்
தன் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. தான் அமர்ந்து அவனையும் அமரச் சைகை செய்து விட்டு
தலையை அசைத்தான்.
வாங் சாவொ தன் லாப்டாப்பை விரித்து ”இது சோடென் அனுப்பிய மாற்றப்படாத பதிவு” என்று சொல்லி விட்டு அந்தப் பதிவை ஓட விட்டான்.
“சொல்லுங்கள் ஆசானே. என்ன விஷயம்?” என்ற தலாய் லாமாவின் குரலுடன் ஆரம்பித்தது
பதிவு. லீ க்யாங் கண்களை மூடிக் கொண்டு கூர்மையாகக் கேட்டான்.
இடையே பேச்சு மிகவும் தாழ்ந்து போய் மற்ற
சத்தங்கள் பெரிதாகக் கேட்ட போதும் லீ க்யாங் கண்களைத் திறக்கவில்லை. கடைசியில்
“நம்மிடம் காலம் அதிகமில்லை டென்சின்” என்று ஆசான் சொல்லி “உடனடியாகப்
பேசுகிறேன் ஆசானே”
என்று தலாய் லாமா
சொன்னதுடன் அந்த பதிவு முடிவுக்கு வந்த பிறகு தான் கண்களைத் திறந்தான். வழக்கமாகவே
கல் போல் இருக்கும் முகம் மேலும் இறுகிப் போயிருந்தது.
”சோடென் என்ன சொல்கிறான்?”
“தலாய் லாமா தன் தனியறையில் அந்த ஆசானை
அழைத்துக் கொண்டு போய் பேசியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது....”
“அந்த ஆசானைப் பற்றி என்ன சொன்னான்?”
“அந்த ஆளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த
ஆள் மேல் கோபமாய் இருந்த மாதிரி தெரிந்தது... அந்த ஆள் எங்கே போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள மழையில் நீங்கள்
எப்படிப் போவீர்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறான். அந்தக் கிழவர் இப்படித்தான்
ஓடிக் காண்பித்து போயே விட்டாராம்....”
லீ க்யாங்கின் முகத்தில் ஒரு சிறு புன்னகை
வந்து வந்த வேகத்திலேயே மறைந்தது. வாங் சாவொவுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை.
லீ க்யாங் புன்னகை செய்தது போல் இருந்தது உண்மையா இல்லை பிரமையா?
லீ க்யாங் ஆசானை பதினைந்து வருடங்களாக
அறிவான். திபெத்தில் உளவு பார்க்கும் யாரும் ஆசானை அறியாமல் இருக்க முடியாது. பெரிய
லாமாக்களில் இருந்து தெருவில் லூட்டி அடிக்கும் பொடியன்கள் வரை பலதரப்பட்டவர்கள்
நெருக்கமாக இருக்கும் ஆசானுக்குப் பல முகங்கள் உண்டு. அவர் ஒருவரை சமாளிப்பது
ஒன்பது பேரை ஒருசேர சமாளிப்பது போலத் தான்.
திபெத்தில் உளவாளிகளுக்கு பயிற்சி
காலத்தில் ஒரு பரிட்சை வைப்பது போல ஆசானை வேவு பார்க்க லீ க்யாங் சொல்வதுண்டு.
வேவு பார்ப்பவர்கள் ஆசானை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதபடி அவர் செய்து
விடுவார்.
ஒரு உளவாளி அவரை வேவுபார்க்கச் செல்கையில்
ஒரே இடத்தில் தொடர்ந்து 20 மணி 22 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்து விட்டு,
உளவு பார்ப்பவன் அலுத்துப் போய் அசந்திருந்த சமயத்தில், 20 மணி 23வது நிமிடம், திடீரென்று ஓடிமறைந்தவர்
ஆசான். இன்னொரு உளவாளி வேவு பார்க்கச் செல்கையில் பல இடங்களுக்கு நாள் முழுக்க ஓடியும்
நடந்தும் சென்று ஒரே நாளில் 138 பேரை சந்தித்துப் பேசி உளவாளியின் கால்களை வீங்கச்
செய்தவர் அவர். அந்த உளவாளிக்கு மறுநாள் படுக்கையில் இருந்து எழுந்து கால்களை
நிலத்தில் ஊன்ற முடியவில்லை. இது போன்ற விளையாட்டுக்கள் ஆசானுக்கு சர்வ சகஜம்.
அந்த ஆசானிடம் சிறிதும் சளைக்காமல் ஈடுகொடுத்த ஒரே ஆள் லீ க்யாங் தான். சதா
புன்னகைக்கும் ஆசானின் புன்னகை அந்த நேரத்தில் மறைந்து போய் பிரமிப்புடன் ஆசான் அவனைப்
பார்த்த காட்சி இப்போதும் லீ க்யாங் கண்முன் நிற்கிறது ...
லீ க்யாங் கேட்டான். “அவர்கள் மெல்லப்
பேசியது என்ன என்று கண்டுபிடிக்க முடிந்ததா?”
வாங் சாவொ தொழில் நுட்பத்தின் உதவியுடன் மாற்றிய
பதிவை ஓட விட்டான். முதலில் தெளிவாய் கேட்ட பேச்சுக்கள் அப்படியே கேட்டன. சரியாகக்
கேட்காத பகுதி வந்த போது தலாய் லாமா குரலும், ஆசான் குரலும் நீண்ட இடைவெளிகளில் ஓரளவு தெளிவாக, விட்டு
விட்டு கேட்டது.
ஆசான்:
..... பத்து நாளுக்குள்.... வெளியே….
தலாய் லாமா:
.........தெரியாமல் ....... எப்படி….
ஆசான்:
......... எனக்குத் தெரியும்..... ஒரு ஆள்....
தலாய் லாமா:
...இது என்ன காகிதம்.....
ஆசான்:
....... மௌன லாமா சொன்னது.....
தலாய் லாமா:....
யாரிது?...
ஆசான்:
....கண்டம்.... உயிருக்கு.... இந்தியா
தலாய் லாமா:
... எப்படி
ஆசான்:
.... ஒரே வழி...
இந்தப் பகுதியை மட்டும் லீ க்யாங் மூன்று
முறை கண்களை மூடிக் கேட்டான். கடைசியில் மொத்தமாக மறுபடியும் முழு பதிவையும் ஓட
விட்டுக் கேட்டான்.
இந்தப் பதிவில் மூன்று அல்லது நான்கு நபர்கள் பற்றி அவர்கள் பேசி
இருக்கிறார்கள். முதல் நபர் மைத்ரேய புத்தர். அவர் பற்றி பேசினார்கள் என்று நேற்று
முதலில் கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட பேரதிர்ச்சி லீ க்யாங் சமீப காலத்தில் உணர்ந்திராதது.
அவர் பற்றி அவர்கள் பேசியது என்ன என்று சுத்தமாகத் தெரியவில்லை. இரண்டாம் நபர் மௌன
லாமா. ஒரு தனி உலகில் வாழ்வது போல வாழ்ந்து வரும் அந்த நபரின் அபூர்வ சக்திகள்
திபெத்தில் மிகப்பிரபலம். அவற்றில் எத்தனை நிஜம், எத்தனை கற்பனை என்பது
உளவுத்துறையால் இன்னும் கணிக்க முடியவில்லை. அந்த மௌன லாமா எச்சரிக்கை
செய்ததாய் சொன்னது கேட்டதே தவிர அந்த
எச்சரிக்கை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. மூன்றாம் நபர் அவர்களால் தேடிக் கண்டுபிடிக்க
முடியாத நபர். அந்த ஆளை எதற்காக அவசரமாய் தேடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பெயரும்
நபரும் வித்தியாசமாக இருப்பதாகச் சொல்லப்படும் கடைசி நபர் மூன்றாவது நபரே தானா
இல்லை நான்காவதாக வேறொரு நபரா தெரியவில்லை.
லீ க்யாங்கின் மூளை முன்பே அறிந்த
தகவல்களுடன் கிடைத்திருக்கிற இப்போதைய தகவல்களை வைத்து நிலைமையைத் தெளிவாக யூகிக்க
முயன்றது....
பரமன் ரகசியத்தில் ஆனந்தவல்லியின் ரசிகை நான். இதில் ஆசானும் அந்த அளவே கவர்ந்து விடுவார் போல் இருக்கிறது.
ReplyDeleteதொடர்கிறேன்.
ReplyDeleteVery interesting and good characterizations.
ReplyDeleteI am waiting for next week.
ReplyDeleteNo words sir...excellent articulation...
ReplyDeleteAasaan .... Arumaiyana kathapathiram... Butha kovil patri idam perum thakavulum arumai....!
ReplyDeleteInternational story(India, dibet and china ).......very interesting ......
ReplyDeleteHi I am kumar friend can you tell me ?what are the books that u r refering?
ReplyDelete