சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, May 21, 2014

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம்-38

சமூகத்தில் ஆன்மிகம் மலிந்து போகும் போதெல்லாம் மகான்கள் பிறந்து வழி காட்டுகிறார்கள். மனித குலத்தைத் திருத்தி நல்வழிப்பாதைக்குத் திருப்புகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தில் (இன்றைய பாகிஸ்தானில்) லாகூருக்கு அருகே அப்படி அவதரித்தவர் தான் குருநானக் என்ற மகான்.

இளமையிலேயே அறநெறியில் மனிதன் வாழ்வதே அவன் இறை மார்க்கத்தில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கு அடையாளம் என்று நம்பியவர் அவர். மோசடிகளில் எல்லாம் மிகப்பெரிய மோசடி கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடி என்ற ஆணித்தரமான கருத்து குருநானக்கிற்கு உண்டு. இறைவன் பெருமை உணர்ந்தவர்கள் அறநெறியில் வாழவேண்டுமே அல்லாது ஏமாற்றிப் பிழைக்கலாகாது என்பதை எல்லா விதங்களிலும் உபதேசித்து வந்தார் குரு நானக். அவர் அதை உபதேசித்த விதங்கள் வித்தியாசமானவை.


 ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக். அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசை முன் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல் நடித்து வந்தான். அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும் நாணயங்களை மட்டும் கவனமாக எடுத்து வைத்துக் கொள்வான்! காசை எடுத்து வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அவனுடைய போலித் தியானம் கலையும்.

இதைப் பார்த்த குருநானக் ஒருநாள் அந்த போலிச் சாமியார் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே அப்புறப்படுத்தி விட்டார். கண்திறந்த போலிச் சாமியார், ""என் மேசை எங்கே, என் காசு எங்கே?'' என்று அலறினான்.

""புண்ணியம் செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது. எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில் ஆசை இல்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது!'' என்றார் குருநானக். அவன் வெட்கித் தலைகுனிந்தான். "ஆன்மிகம் பணம் சம்பாதிப் பதற்கான வழி அல்ல. அது ஆண்டவனின்  அருள் பெறுவதற்கான மார்க்கம்!'' என்று  அவனுக்கு அறிவுறுத்தி திருத்தினார் குருநானக். 


குருநானக்கின் ஆன்மிகம் உலகியல் நெறிப்பட்டது. எல்லாரும் அவரவர் கடமையைச் செய்வது மிக முக்கியம் என்று சலிக்காமல் கூறுவார். ஒருநாள் அவரது அறவுரைகளைக் கேட்க ஒருவன் வந்தான். அந்த நேரத்தில் அவனது நண்பன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான். "நான் தங்கள் உபதேசத்தைக் கேட்பது நல்லதா? என் நண்பனுக்குப் பணிவிடை செய்வது நல்லதா?''  என்று அவன் கேட்டான் "நோயுற்றிருக்கும் உன் நண்பனுக்குப் பணி விடை செய். அதுவே நீ கடவுளின் அருளைப் பெறச் செய்யும் நல்ல செயல் ' என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் குருநானக். 


""இயன்றவரை எல்லாருக்கும் நல்லதே செய்யுங்கள். எதிரியைக்கூட மன்னியுங்கள். மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் நினையாதீர்கள்! அன்பே எல்லா மதங்களையும்விட உயர்வான மதம்'' என்றெல்லாம் அவர் சொன்ன உயர்ந்த கருத்துகள் மக்களைக் கவர்ந்தன. 

அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்ற போது, அந்த ஊர் கவர்னரான மாக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். குருநானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு என்பவர் வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். பெரிய விருந்தே அளிக்க உத்தேசித்திருந்த தன்னைப் புறக்கணித்து விட்டு ஏழைத் தச்சன் வீட்டில் தந்த எளிய ரொட்டியையே உண்ட குருநானக் மீது செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது.  ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டு நேரில் சென்று அவன் சீறினான். மக்கள் கவர்னரின் சீற்றத்தை குருநானக் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

”உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்! என்றார் குருநானக். உடனே அவன் தன் வீட்டில் இருந்து  ரெட்டித் துண்டை வரவழைத்தான். அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துப் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிருந்து செக்கச்செவேலென ரத்தம் வழிந்தது. நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம்தான் இது! என்றார் நானக். பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது. கவர்னர் மாக்பாகோ திகைப்படைந்தான். எப்படி சம்பாதிக்க்றோம் என்பது தன் இல்லத்தின் உணவில் கூட பிரதிபலிக்கிறதே என்று புரிந்த அவன் மனம் மாறினான்.. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான். அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்து அதன் படியே வாழ ஆரம்பித்தான்.

ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன் வீட்டுக்குத் தன் சீடர்களுடன் சென்று வாசலில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்ட குருநானக் இனிமையான குரலில் பாடலானார். திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளிவிவரத்தோடு விவரிக்கலாயிற்று! முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போக கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடல் விவரித்தபோது, சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.
மகானே! நான் இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழியை நீங்கள் தான்சொல்ல வேண்டும்! என்று அவன் கதறினான். அவன் பாவங்கள் தொலைய குருநானக் ஒரு வழி சொன்னார்.  அது இதுவரை வேறு எந்த ஞானியும் சொல்லாத புதிய வழி.  யாரையெல்லாம் கொன்றானோ யாரிடமிருந்தெல்லாம் திருடினானோ அவர்களின் வீட்டுக்கெல்லாம் மறுபடி சஜ்ஜன் போய்க் குற்றத்தை ஒப்புக்கொண்டு அங்குள்ளவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே நானக் சொன்ன வழி.

சஜ்ஜன் தான் திருடிய வீடுகளையும் கொலைசெய்த வீடுகளையும் தேடிக் கண்டு பிடித்தான். அங்குபோய் அவன் கண்ணீர் விட்டு,  உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்ட போது அவனை நையப் புடைத்தவர்களும் உண்டு. கோபத்தில்  எட்டி உதைத்து அவமானப்படுத்தியவர்களும் உண்டு. அவன் பதிலுக்குத் தாக்காமல் கண்ணீரோடு அடி வாங்கிக் கொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் திகைத்தார்கள். மெல்ல மெல்ல ஆசைகளைக் குறைத்துக் கொண்டு ஒரு துறவிபோல் பின்னர் வாழலானான். குருநானக்கின் பெருமை சஜ்ஜனின் செயல் மூலமாக விறுவிறுவென்று பரவலாயிற்று.

இது போன்ற அவர் வித்தியாசமான அறிவுசார்ந்த அணுகுமுறையால் ஒரு அப்பழுக்கற்ற ஓர் உண்மையான மகான் தங்களிடையே வாழ்கிறார் என்பதை உணர்ந்து மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்

இந்து,  இஸ்லாம்,  பௌத்தம்,  சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் இறைவன் சத்திய கர்த்தர் என்ற நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்கவும், அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் முயன்றார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.


குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார். அவை-

வாண்ட் சாக்கோ – தன்னிடம் இருப்பதை உண்மையான தேவையில் இருப்போருக்கும், நம்மை விடக் குறைவாக இருப்போருக்கும் பகிர்ந்து கொள்தல் வேண்டும்.

கிராத் கரோ – நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்தலும், சம்பாதிப்பதும் வேண்டும்.

நாம் ஜபோ – இறைவனுடைய திருப்பெயரை ஜபிக்க வேண்டும்.


சீக்கியர்களின் முதல் குருவான அவர் பொய், பித்தலாட்ட வாழ்க்கையை எதிர்த்தார். மனிதர்களுக்கு ஒருவன் தீமை செய்து வாழ்ந்து இறைவனுக்கு உகந்தவனாக மாட்டான் என்ற தீர்க்கதரிசன சிந்தனை அவரிடம் உறுதியாக இருந்தது. இதுவல்லவா அறிவார்ந்த ஆன்மிகம்!


-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 26.11.2013



2 comments: