சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 14, 2014

நெகடிவ் எண்ணங்களை எப்படி நீக்குவது?


தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!

பெண்மை.காமில் என் பேட்டி பகுதி 5


ருத்ரா: என்னுடைய சிறு கேள்வி,
உங்களின் பார்வையில் கர்மா என்றால் என்ன?
பிரபஞ்சத்தின் அடிப்படை விதி என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்?


நான்: செயலைச் செய்பவன் அந்த விளைவில் இருந்து என்றுமே தப்ப முடியாது என்பதே கர்மா சித்தாந்தம். அந்த விளைவு உடனடியாகக் கிடைக்கலாம். சில காலம் கழித்தும் கிடைக்கலாம். அடுத்த ஜென்மத்திலும் கூடக் கிடைக்கலாம். ஆனால் விளைவு என்பது செயலுடனேயே பிறந்து விடுகிறது என்கிறது கர்மா.


பிரபஞ்சத்தின் அடிப்படை விதி இன்னதென்று தெளிவாக சில வரிகளில் சொல்லி விடும் அளவுக்கு எளிமையாக இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்து விடவில்லை என்பதே என் கருத்து.


பிரத்யுக்‌ஷா: ஆன்மீகத்தில் ஈடுபட ஆத்திகவாதியாகவோ நாத்திகவாதியாகவோ இருக்க தேவை இல்லை.. இதை பற்றிய உங்கள் கருத்து என்ன??


நான்:
ஆன்மிகத்தில் ஈடுபட ஆத்திகவாதியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. எனக்குத் தெரிந்து கடவுளை வணங்காமலேயே மிக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு கடவுள் மெச்சுகிற மாதிரி வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதே போல் கடவுளை வணங்கிக் கொண்டே கடவுளே சகிக்க முடியாத ஈனத்தனமான செயல்களைப் புரிபவர்களும் இருக்கிறார்கள். கடவுள் யாரை அங்கீகரிப்பார் என்பதை சொல்லத் தேவையில்லை.


கார்த்திகா: உங்களோட பல கட்டுரைகள், கதைகளில் ஆன்மீகத்தைப் பற்றியும் அதையொட்டிய தகவல்களையும் ரொம்ப விரிவாகவும் ஆழமாகவும் எழுதறீங்க… உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு எப்போது வந்தது. சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகமா?? ஆன்மிகம் சம்மந்தமா Articles எழுதணும் ன்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு??


நான்: எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம். புத்தர் மேலும் ஆதிசங்கரர் மேலும் ஒரு தனி ஈடுபாடு சிறு வயதில் இருந்தே இருந்தது. ஆன்மிகத்திலும் மதங்களைக் கடந்த ஈடுபாடு எனக்கு இருந்தது. அதனால் தானோ என்னவோ என் முதல் கதையான “ஊருக்கு மகான் ஆனாலும்” கதாநாயகன் ஒரு துறவி. என் முதல் புத்தகமும் ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பு. தினத்தந்தி போன்ற பிரபல பத்திரிக்கையில் ஒரு நீண்ட தொடர் எழுத வாய்ப்பு கிடைத்ததும் ஆன்மீகத்தில் தான்.


கார்த்திகா: இதுவரைக்கும் நீங்க எழுதினதுல ரொம்ப அமோக வரவேற்பு கிடைச்ச Book/Article எது??


நான்: இதுவரை நான் எழுதினதில் மிக அதிக அமோக வரவேற்பு பெற்ற ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் “ஆழ்மனதின் அற்புத சக்திகளை”ச் சொல்ல வேண்டும். ஒரு வருட காலத்தில் மூன்று பதிப்பு கண்டிருக்கும் நூல் அது. பல தரப்பு மக்களை வசீகரித்திருக்கும் அந்த புத்தகத்தைப் படித்து விட்டு தினமணி ஆசிரியரே ’ஒரு முறை படித்து விட்டேன். மறுபடி படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்’ என்று தினமணியில் எழுதியது பெரியதொரு விருதுக்கு சமமான மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.


கார்த்திகா: நீங்கள் எழுதியதில் அமோக வரவேற்ப்பைப் பெற்ற ஒன்றை மட்டும் சொல்வது கஷ்டம் தான்.. ஆனாலும் நீங்கள் பதில் சொன்னது சந்தோசம் Sir.. ஆழ்மனதின் அற்புத சக்திகள் - ஒரு வருட காலத்தில் மூன்று பதிப்பு கண்டிருக்கும் நூல்.. இது சாதாரண விடயம் இல்லை Sir.. Congrats!! கண்டிப்பா அந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்தவர்கள் மறுமுறை வாசிக்காமல் இருக்க மாட்டார்கள்..

அடுத்த கேள்வி இதோ..

உங்களின் Writing Career -ல் Highlight ஆன விஷயங்கள்ன்னு எதைச் சொல்லுவீங்க..??


நான்:
எனது எழுத்துலகப் பயணத்தில் Highlight ஆன விஷயங்கள் இவை என்று சொல்லலாம்.

90 களில் ஹிந்துவில் Young World பகுதியில் வெளிவந்த எனது ஆங்கிலக் கட்டுரைகள்

2002ல் விகடனில் வெளியான புன்னகைத்தார் பிள்ளையார் என்ற என் சிறுகதை இலக்கிய சிந்தனை அமைப்பால் சிறந்த கதையாகத் தேர்வு செய்தது.

2005ல் நீ நான் தாமிரபரணி என்ற என் முதல் நாவலை நிலாச்சாரலில் எழுத ஆரம்பித்தது. அப்போது கிடைத்த வரவேற்பு என் அடுத்த நாவல்களில் அதிகரிக்க ஆரம்பித்தது என் நாவல்களுக்கு வேர் அந்த ஆரம்பம் தான்.

தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப்போட்டியில் இரு முறை பரிசுகள் வாங்கியது. (அதிலும் ”சுடும் உண்மை சுடாத அன்பு” என்ற சிறுகதைக்கு வந்து குவிந்த ஏராளமான பாராட்டுக் கடிதங்களை ஜெராக்ஸ் எடுத்து தினமலர் எனக்கு அனுப்பித்து வைத்ததை இப்போதும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன்).

பரம(ன்) இரகசியம் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.


கார்த்திகா: Highlights பற்றி பேசிட்டோம்.. உங்களின் Writing Career ல அடுத்த Step என்ன?? இது வரை நீங்க பண்ணாததுல இருந்து, எதாவது வித்தியாசமான முயற்சி எடுக்கணும்ன்னு இருக்கீங்களா..??


நான்: எழுத்தில் இது வரை செய்யாத, ஆனால் இனி செய்ய ஆசைப்படுகிற இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று வரலாற்றுத் தொடர் ஒன்று எழுதுவது. இன்னொன்று ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருக்கும் சூட்சும அழகான அம்சங்களை தமிழில் விளக்குவது. காலம் ஒத்துழைத்தால் ஒரு நாள் முயற்சி செய்யக்கூடும்.


கார்த்திகா:
உங்களோட கண்ணோட்டத்தில் 'கனவு' எப்படி வரையறை செய்வீங்க. கனவுகளுக்கு காரணமாக அமைவது எது?? நாம் காணும் கனவுகளில் உண்மைத்தன்மை எவ்வளவு சதவிகிதம் இருக்கும்?? கனவுகள் நமக்குத் தேவையான தகவல் எதாவதை உணர்த்துமா??


நான்: பொதுவாக கனவுகள் ஆழ்மனதில் குவிந்து இருக்கும் ’data’க்களின் ‘random mixture’ நிகழ்வுகளாக அரங்கேறுவது. தலை கால் இல்லாத சம்பவங்கள் தான் அதிகம். அதில் உண்மைத் தன்மை சில நேரங்களில் இருக்கும் என்றாலும் அது அபூர்வமே. சில நேரங்களில் நாம் ஆழமாக உணர்ந்த, யோசித்த விஷயங்கள் கனவுகளாக வெளிப்படுவதுண்டு. மிக அபூர்வமான நேரங்களில் ஆழ்மனம் நம் தேடல்களுக்குப் பதில் சொல்ல கனவுகளை ஏற்படுத்துவதுண்டு. எத்தனையோ விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சிகளுக்கான பதில்கள் கனவுகளில் கிடைத்திருக்கின்றது.


மனதில் நாம் முன்பே விதைத்திருக்கும் விதைகள் தளிராக, செடியாக, மரமாக எந்தெந்த நிலைகளில் உருவாகி இருக்கின்றன என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. அதில் நல்லதும், கெட்டதும், முட்டாள்தனமானதும், அறிவுபூர்வமானதும் கண்டிப்பாக இருக்கும். அதன் சக்திகளை மட்டும் அவ்வப்போது உணர்கிறோம். சில சமயம் நேர்மறை எண்ணங்களாய், தாக்கங்களாய். சில சமயம் எதிர்மறை எண்ணங்களாய், தாக்கங்களாய்.


நாராயணி: நான் சில motivational புத்தகங்கள் படித்துள்ளேன். அதனை செயல்படுத்த நினைக்கும் போது பாசிட்டிவ் எண்ணங்களை விட நெகடிவ் எண்ணங்களே அதிகமாக வருகிறது. அதனை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

நாம் நேர்மறையாக சிந்திப்பதற்கும் எதிர்மறையாக சிந்திப்பதற்கும் அடிப்படைகாரணமாக அமைவது எது?


நான்:
இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. எல்லோரும் சந்திக்கும் பிரச்னை தான்.

சில தன்னம்பிக்கை நூல்கள், சில பாசிடிவ் நூல்கள், ஆன்மிகப் பொக்கிஷங்கள் எல்லாம் பல நேரங்களில் எல்லாவற்றையும் உணர்த்தி விட்டது போல ஒரு எண்ணத்தை, நம்பிக்கையை நம்மிடம் உருவாக்கி விடுகிறது. இனி மேல் நான் இப்படித் தான் இருப்பேன் என்று சூளுரை செய்யும் அளவுக்கு உறுதியைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் காலப் போக்கில் சூழ்நிலைகள் வேறு விதமாக மாறும் போது அந்த பாசிடிவ் எண்ணங்களின் வலிமை குறைந்து நெகடிவ் எண்ணங்களின் தாக்கம் அதிகரிக்கலாம். எல்லாம் இழந்தது போலவும் சறுக்கி தரைமட்டத்திற்கு வந்தது போலவும் கூட தோன்றலாம். இது எல்லோருக்கும் ஏற்படுவதே. விதைத்த நெகடிவ் மற்றும் முட்டாள்தன விருட்சங்களை வேரோடு பிடுங்கும் வரை இது நடந்து கொண்டே தான் இருக்கும்.


இதில் சலிப்படைவதோ, சுய பச்சாதாபப்படுவதோ கூடாது. ஆழம் வரை எந்த நெகடிவ் எண்ணத்தையும் போய் ஆராய்ந்தால் அந்த எண்ண விதை கருகி விடும். அதற்கு அர்த்தம் இல்லை என்று புரிந்து விடும். அதன் கவர்ச்சி போய் விடும். ஆனால் நாம் ஆழமாகப் போவதில்லை. அரைகுறை வரை போனால் நெகடிவ் சில சமயம் வலிமை கூட அடையலாம். இப்படி ஆழம் வரை போய் ஒன்றுமில்லை என்று கண்டுபிடிக்க எல்லோராலும் முடிவதில்லை.


மற்றவர்களுக்கு ஒரே வழி திரும்பத் திரும்ப பாசிடிவ் மனிதர்கள், புத்தகங்கள் உதவியை நாடுவது தான். பாசிடிவ் அலைகளை நம்முள்ளே செலுத்திக் கொண்டே இருப்பது தான். காலப்போக்கில் நெகடிவ் குறைந்து கொண்டே வரும். நெகடிவ் எண்ணம் தாக்கும் போதெல்லாம் அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் உடனே அதற்கு எதிர்மறையான செயல்களில் ஈடுபட ஆரம்பியுங்கள். அப்போதும் நெகடிவ் எண்ணங்கள் ஆரம்பத்தில் வளைந்து கொடுக்காதது போல் தோன்றும். அதைக் கண்டு கொள்ளாதீர்கள். சிறிது நேரத்தில் பாசிடிவ் சைடிற்கு வந்திருப்பீர்கள். இது அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும். அது இயல்பே. காலப்போக்கில் தான் நீங்கள் நிறைய தூரம் முன்னேறி இருப்பது தெரியும். பொறுமையும், தொடர் முயற்சியும் முக்கியம்.


(தொடரும்)

4 comments:

  1. தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Hi Boss,
    Wish you a happy Tamil New year. After some time me also ask some questions... I hope you will answer.
    G.Ganesh.Saudi Arabia.

    ReplyDelete
    Replies
    1. After penmai.com session is over, I'll try to answer our readers' questions, friend.

      Delete
  3. கணேசன் சார்..., அருமை அருமை...!!!

    “கனவை” பற்றிய கருத்து இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திக்கலாம்...!!

    //கனவை இயக்குவதற்க்கென்றே ஓர் கனவுலகம் உள்ளது.. ஒவ்வொருவருக்கும் ஒன்பது உடல்கள் உள்ளன.., கர்மாக்களை கனவுலகில் ஏற்று அனுபவிப்பது..., கனவுலகில் நாம் வாழும் உலகங்களை பகலில் வானில் கான்பது.. போன்ற நிறைய விஷியங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் கண்டுள்ளேன்..,!!//

    பிறகு INCEPTION என்ற ஆங்கில படம் கனவு சமந்தப்பட்ட ஓரு மிக மிக வித்தியாசமான படம்....!!!

    ReplyDelete