சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, April 11, 2014

தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள்!


பெண்மை.காம் உறுப்பினர்களின் பேட்டியின் மூன்றாம் பகுதி 

கார்த்திகா : எழுத்தாளர்க்கு வாசகர்களிடம் இருந்து கிடைக்கும் விமர்சனங்கள் தான் Big Boost ye… அப்படிப்பட்ட விமர்சனம் எப்படி இருக்கணும்?? ஒரு நல்ல விமர்சனம் ன்னு நீங்க எதை சொல்வீங்க??
ஒரு எழுத்தாளர் அவருடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எதிர் கொள்ளணும்.. (Both Positive & Negative)

நான் : விமர்சனம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. ஆனால் ஒரு நல்ல விமர்சனம் என்பது ஆழமாய் படித்து புரிந்து கொண்ட பின் வருவதாகத் தான் இருக்க முடியும். அப்படி விமர்சிக்கக் கூடிய வாசகர்கள் கிடைப்பது ஒரு எழுத்தாளனுக்கு முக்கியம். அது அவனை கண்டிப்பாக மெருகுபடுத்தும்.
ஒரு எழுத்தாளன் தனக்குக் கிடைக்கும் விமர்சனங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் அலசுவது நல்லது. நல்ல பாசிடிவ் விமர்சனங்கள் மட்டும் எடுத்துக் கொண்டு நெகடிவ் விமர்சனங்களைக் கண்டு கோபப்படுவது ஆரோக்கியமானதல்ல. ’உனக்குத் தெரிந்தது அவ்வளவு தான், உனக்கு அறிவு போதாது’ என்றெல்லாம் பதில் அளிக்கிற எழுத்தாளர்கள் வளர்வதில்லை. பாசிடிவ்வோ, நெகடிவ்வோ அதன் உண்மைத்தன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை ஒதுக்கி விடுவது தான் உத்தமம்.

கார்த்திகா : இந்த கேள்வி நான் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும்... பரபரப்பா எல்லார்கிட்டயும் பரவலாக பேசப்பட்ட ரொம்ப Popular ஆன, நிறைய மக்களை உங்களோட பரம விசிறியாக்கிய பரமன் ரகசியம் கதை பத்தி தான் சார் இப்ப கேட்கப் போறோம்... இப்படி ஒரு கதை எழுதணும்ன்னு உங்களுக்கு எப்படி அந்த ஸ்பார்க் வந்தது... கதைக்கரு ரொம்பவே பிரமிக்க வைத்த ஒன்று எல்லோரையும்... ஆன்மீகம், ஆழ்மனது, அறிவியல், குடும்பம், பாசம், சஸ்பென்ஸ் இப்படி எல்லாமே கலந்த கலவையாக அதை எல்லாரையும் ரொம்பவும் ரசிக்கும் படியாகவும் விறுவிறுப்பு குறையாமலும் அவ்வளவு அழகா படைத்து இருக்கீங்க... 

எப்படி சார் உங்களுக்கு இந்த மாதிரியான சப்ஜெக்ட் எழுதணும்ன்னு எண்ணம் வந்தது?? பரமன் ரகசியம் கதைக்கு அடிகோலாக இருந்த விஷயம் என்ன சார்??

நான்: அமானுஷ்யன் எழுதி முடித்த பிறகு இன்னொரு நாவலை எழுதச் சொல்லி நிறைய வாசகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதை என் ப்ளாகிலேயே எழுத தீர்மானித்தேன். என்ன எழுதுவது என்று யோசித்த போது தோன்றிய கரு தான் சகதி வாய்ந்த சிவலிங்கமும், பசுபதியும், கடத்தலும் சேர்ந்த கரு. ஆழ்மனதின் அற்புத சக்திகளும் மிக பிரபலமாக இருந்த காலம் அது. அப்போது ஆழ்மனசக்தியும், ஆன்மிகமும் கலந்து ஒரு த்ரில்லர் ஏன் படைக்கக் கூடாது என்று தோன்றவே ஆரம்பிக்க முடிவு செய்தேன். மீதி எல்லாம் தானாக சேர்ந்து கொண்டது. பரமேஸ்வரன், ஈஸ்வர், ஆனந்தவல்லி, குருஜி, கணபதி உட்பட மற்ற கேரக்டர்கள் தானாகப் பின் சேர்ந்து கொண்டன.

அமானுஷ்யன் போல் இன்னொரு நாவல் நீங்களே எழுத முடியாது என்று சொன்ன வாசகர்களும் அதைப் படித்தார்கள். அவர்களுக்கு அமானுஷ்யன் மீது ஒரு காதலே உருவாகி இருந்தது என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவர்களும் மிகவும் சிலாகிக்கும்படி பரம(ன்) இரகசியம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அந்தக் கதையின் ஆரம்பக் கரு தான் என்னுடையது. மீதி எல்லாம் இயல்பாக வந்து சேர்ந்து கொண்டது. இந்த அளவு அது வரவேற்பைப் பெறும் என்று நானே ஆரம்பத்தில் நினைத்ததில்லை.

கார்த்திகாபரம(ன்) இரகசியம் - தொடர் கதையா வாசித்துக் கொண்டிருந்தவர்கள், உங்களின் Suspense - thriller தாங்க முடியாம Book ah வே வாங்கி படிச்சுட்டோம் ன்னு சொன்னாங்க Sir.. அதற்காக தான் அந்த கேள்வியே.. இன்னும் பலர் அதன் தாக்கத்தில் இருந்து வெளி வரவில்லை ன்னு சொன்னாங்க 


அடுத்த கேள்வி.. இன்று உலக கவிதைகள் தினம்.. So ஒரு கவிதை சொல்றீங்க Sir…??

நான்:  திடீர் என்று கவிதை கேட்டிருக்கிறீர்கள். புதிதாக எதுவும் வரவில்லை. என் எழுத்துகளில் முதலில் (கல்லூரி நாட்களில், கல்லூரி மலரில்) அச்சான கவிதையை இங்கு தருகிறேன்.

என்னழகுப் பெண்ணரசி!
வானத்துக் கருமுகிலும்
உன் கூந்தல் நிறம் கண்டு
அவமானம் தாளாமல்
அழுதது தான் மழைநீரோ?
வெண்ணிலவுப் பெண்ணரசி
உன்னழகு முகம் கண்டு
பின் காண நாணித் தான்
கண் மறைந்து சென்றாலோ?
பளிச்சிடும் முத்துக்களும்
உன் பற்கள் தான் கண்டு
களிப்படையத் தோன்றாமல்
கடலுக்குள் மறைந்தனவோ?
மணம் வீசும் ரோஜாக்கள்
உன் இதழின் நிறம் கண்டு
மனம் வாடி நிறம் மங்கி
சருகாகச் சாய்ந்தனவோ?

கார்த்திகா: //புதிதாக எதுவும் வரவில்லை// பரவாயில்லை Sir! எங்களுக்காக உங்களின் முதல் அச்சான கவிதையைச் சொல்லிருக்கீங்களே.. Thank you So Much!!என்னழகு பெண்ணரசி - அழகு Sir..  பள்ளி நாட்களிலே கலக்கிருக்கீங்க.. கல்லூரி காலத்தில் கேட்கவா வேணும்…   
லதா : பரம(ன்) இரகசியம் படிச்சதும் அப்படி ஒரு பிரம்மிப்பு மனசுல… எல்லார் மனசிலும் இடம்பிடிச்ச கதையும் கூட. பரம(ன்) இரகசியம் க்கு மக்களிடம் இருந்து கிடைத்த Response a நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்க??

நான்: நான் முன்பே சொன்னது போல இந்த அளவு வரவேற்பு நானே ஆரம்பத்தில் எதிர்பார்க்காதது. 78 வயது பாட்டி முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் வரை, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி முதல் இல்லத்தரசியாக இருக்கும் இளம் பெண் வரை எல்லா தரப்பு மக்களும் பரம(ன்) இரகசியத்தை ஒரு அற்புத நாவலாக என்னை போனில் அழைத்தும், மெயில் அனுப்பியும் சொன்னார்கள். பலர் பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக அவர்கள் தொடர்ந்து ரசித்துப் படித்த நாவல் என்று சொன்னது-இந்த அளவு ரெஸ்பான்ஸ் கிடைத்தது-எனக்கு ஒரு பெரிய விருது கிடைத்த திருப்தியை ஏற்படுத்தியது.

கார்த்திகா: பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக அவர்கள் தொடர்ந்து ரசித்துப் படித்த நாவல் என்று சொன்னது - முற்றிலும் உண்மை Sir.. இப்படியொரு Comment எங்க உறுப்பினர் ஒருவரும் சொன்னார்.. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.. முதலில் படிக்கும் போது ஏற்பட்ட அதே பிரம்மிப்பு மறுபடியும் வந்துட்டே இருக்கு ன்னு சொன்னாங்க.. 

இப்படி பலர் உங்க புத்தகங்களைப் படித்து பிரம்மித்து, அவ்ளோ ஏன் அழவும் செஞ்சுருக்காங்க.. உங்களோட முதல் கதைக்கே வந்த பல கமெண்ட்ஸ் “படிச்சதும் கண்கலங்கிட்டோம்”ன்னு சொன்னாங்க… இப்படி பல பேரோடமனசுல ஆழமா பதியற போலவும், கண்கலங்க வைக்கற போலவும் எழுதுற நீங்க, எதாவது புத்தகமோ கதையோ கட்டுரையோ படிச்சு கண்கலங்கி இருக்கீங்களா..??

உங்களை ரொம்ப பாதிச்ச புத்தகம் அல்லது கதை பத்தி சொல்ல முடியமா.. ??


நான்: 
கல்கியின் பொன்னியின் செல்வன் . தமிழில் அத்தனை பெரிய எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள் இருந்த படைப்பு வேறு இல்லை. அதில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் மனதில் நின்று போனவை. நந்தினி, பெரிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள் கல்லில் எழுதிய சித்திரங்கள் தான். எத்தனை தடவை அந்த நாவலைப் படித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.

படித்துக் கண்கலங்கியதோடு மனதில் வலிமையாக இடம் பிடித்து நின்ற நாவல் என்றால் விக்டர் ஹ்யூகோவின் Les Misérables நாவலைச் சொல்லலாம். தமிழில் ஏழைபடும் பாடு என்று ஒரு திரைப்படம் இந்த நாவலை வைத்து எடுத்துள்ளார்கள். 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிய நாவல் அது. படித்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. அந்த கதாபாத்திரங்கள் இன்று வரை மனதில் நிற்கிறார்கள். 

அதே போல மனதில் நின்ற வேறு சில நாவல்கள் சொல்ல வேண்டும் என்றால் Ayn Rand எழுதிய “The Fountainhead” மற்றும் “Atlas Shrugged”, Maxim Gorky எழுதிய “Mother”, ஜெயகாந்தன் எழுதிய “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” தேவன் எழுதிய “மிஸ்டர் வேதாந்தம்” ஆகியவற்றை சொல்லலாம்.

கார்த்திகா: உங்களோட எல்லா கதாபாத்திரங்களும் மனசுல நிக்குறாங்க.. தினப்படி வாழ்க்கைல நீங்க சந்திக்கிற மனிதர்களோட தாக்கம் அதுல இருக்கா??

நான்: நிச்சயமாக இருக்கிறது. பலர் என்னிடம் மனம் விட்டுப் பேசுவதால் எனக்கு மனிதர்களின் விதவிதமான எண்ண ஓட்டங்களை நேரடியாக அறிய முடிகிறது. அப்படியே ஒரு கதாபாத்திரத்தை வார்க்கா விட்டாலும் சிறிது கற்பனையையும் இயல்பை ஒட்டிக் கலந்து விடும் போது உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள் உருவாகி விடுகின்றன.

ஸ்ரீஜா : உங்க Story ல real life incidents இருக்கா.. i mean அமானுஷ்ய சக்திகள் அந்த மாதிரி.. நீங்களே experience பண்ணிருக்கீங்களா.. ??

நான் : என் கதையில் நிஜ வாழ்க்கை சம்பவங்களின் தாக்கம் இருந்தாலும் அந்த சம்பவங்களையே நான் கதையாக எழுதுவதில்லை. 

அமானுஷ்ய சக்தி, அல்லது ஆழ்மன சக்தி எப்படி பெயர் வைத்துக் கொண்டாலும் அதை நான் எதிர்பாராத சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். தற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள் அவை. இரண்டைச் சொல்ல விரும்புகிறேன்.

பாசாங்குகள், போலித்தனம் இல்லாத குருமார்கள் இன்று மிக அபூர்வம் என்பதால் நான் அதிகமாக குருமார்களைச் சந்திக்கச் செல்வதில்லை. ஏமாற விருப்பமில்லை. ஒருசிலர் உண்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்கும் முன் பல போலிகளிடம் ஏமாற வேண்டி இருக்கிறது. அதனால் எனக்கு புத்தகங்களே குருமார்கள். ஒரு பக்குவ நிலையை எட்டிய பிறகு அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் புத்தகங்கள் தானாக எனக்கு கிடைக்கும். யாரோ எனக்கு எடுத்துத் தருவது போல. 

எனக்கு பால் ப்ரண்டன் அறிமுகமானது அப்படித்தான். கோவை செண்ட்ரல் லைப்ரரியில் பல நூறு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். வழக்கமாக தத்துவம், சைக்காலஜி, வரலாறு, இலக்கியம் தான் அதிகமாகப் படிப்பேன். ஒரு முறை ஏனோ பூகோளம் பகுதிக்குப் போகத் தோன்றியது. போய் புத்தகங்களைப் பார்த்தேன். அப்போது தான் பால் ப்ரண்டனின் A search in secret India என்ற புத்தகம் அந்த பூகோள அலமாரியில் கிடைத்தது. அந்தப் பெயரை வைத்து இந்தியாவின் இடங்கள் என்பது போன்ற புத்தகம் என்று தீர்மானித்து அதை பூகோள புத்தகப் பகுதியில் வைத்திருந்திருக்கிறார்கள். அந்தப் புத்தகம் எனக்கு அமானுஷ்ய சக்திகளின் புதிய பரிமாணத்தைக் காட்டியது. அது என் கைக்கு கிடைத்த விதமே விசித்திரம் அல்லவா?
(அதைத் தொடர்ந்து பால் ப்ரண்டனின் மற்ற புத்தகங்களைத் தேடி வாங்கிப் படித்தேன். அதில் ஒன்று தான் A search in secret Egypt. அதை நான் ப்ளாகில் எழுத விரிவாக எழுத ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு தான் ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிஷர் அவராக என்னைத் தொடர்பு கொண்டு அதை ஒரு புத்தகமாக எழுதித்தர முடியுமா என்று கேட்டார். ஒத்துக் கொண்டேன். அது நல்ல வெற்றி கண்டது. அதைத் தொடர்ந்து ஒரு வருடகாலத்தில் ஐந்து புத்தகங்கள் அந்த பதிப்பகம் மூலம் வெளியாகியது. எல்லாமே பெரிய வெற்றி கண்டன. இத்தனைக்கும் மூல காரணம் ஒரு காலத்தில் என்னையும் அறியாமல் வழக்கத்திற்கு மாறாக லைப்ரரியில் பூகோளப் பகுதிக்குப் போனது தான் என்று சொல்லலாம் அல்லவா?)

அதே போல பரம(ன்) இரகசியம் நாவலின் கடைசி முடிவுக் காட்சி. வேறொரு முடிவை முதலில் எழுதத் தீர்மானித்து கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் எழுத முடியாமல் திண்டாடினேன். எப்படி எழுதினாலும் மனதில் ஏதோ அதிருப்தி. எழுதுவது, அதை அழிப்பது, எழுதுவது அழிப்பது என்றே இருந்தேன். இது வரை எனக்கு எந்த நாவலுக்கும் அப்படி ஆனதில்லை. ஒரு நாள் இரவில் ஒரு காட்சி என் மனத்திரையில் வந்து போனது. அதுவே பரம(ன்) இரகசியம் நாவலின் க்ளைமேக்ஸ் காட்சியாக அமைந்தது.

(தொடரும்)


3 comments: