என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, April 10, 2014

ஒரு நல்ல தீப்பொறி போதும்!


Penmai.com உறுப்பினர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள் - பகுதி 2

கார்த்திகா : கதைகள் எழுதிட்டே எப்படி Motivational & Self Improvement Articles எழுத Start பண்ணீங்க?? இப்படி எழுதணுமென்ற விதை உங்களுக்கு எப்போ விழுந்தது?? நிறைய Youngstersக்கு Direct reach ஆகுற போல இருக்கு அந்த articles-லாம்.. இப்போ இருக்கற Students/ Youngsters க்கு ஒரு Positive Vibe தரணும்ன்னு நினைச்சு இப்படி articles எழுதுறீங்களா??
இல்லை வேறு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா??

நான்:  சிறு வயதில் இருந்தே கதைகளைப் போலவே தன்னம்பிக்கைக் கட்டுரைகள், புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பெரிய சாதனையாளர்கள், தலைவர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பேன். எல்லோரையும் விட அதிகமாய் சிறப்பாய் சாதிக்கும் மனிதர்கள் எப்படி அதை சாதித்தார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக இருந்தது. படிக்கையில் தனிப்பட்ட சில சிறப்புத் தன்மைகள் அவர்களிடம் இருந்ததையும் அதுவே அவர்களை சாதிக்க வைத்த ரகசியம் என்பதையும் உணர முடிந்தது. அதை நான் படித்து ஊக்கம் அடைந்தது போலவே மற்றவர்களும் அடைய வேண்டும், நான் பெற்ற நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் தர வேண்டும் என்ற ஆவலின் வெளிப்பாடு தான் என் தன்னம்பிக்கை கட்டுரைகள்.

நிறைய பேர் ஒரு நல்ல வழி கிடைத்தால் கண்டிப்பாக மாறுவார்கள். ஒரு நல்ல தீப்பொறி இருந்தால் போதும், பற்றிக் கொண்டு ஜூவாலையாக மாற அவர்களால் முடியும். அப்படிப்பட்ட தகுந்த நபர்களில் ஒரு சிலருக்காவது என் எழுத்துக்கள் ‘பற்ற’ வைக்க முடிந்தால் அதுவே பெரிய பாக்கியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நானே அப்படிப்பட்ட எழுத்துக்களைப் படித்து உருவானவன். நான் பெற்றதை திருப்பித் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அதனாலேயே நல்ல விஷயங்களை நிறைய எழுதுகிறேன்.

கார்த்திகா : உங்களோட எழுத்துக்கள் ஆன்மிகம், ஆழ்மனது, தத்துவம், சுய முன்னேற்றம் இப்படின்னு பல வகைகளில் இருக்கு.. இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Field எது..?? எந்த வகை எழுதும் போது ரொம்பவே பிடிச்சு, ரசிச்சு, அனுபவிச்சு எழுதுவீங்க..??

நான்: அவை எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்கள் தான். ஒவ்வொன்றிலும் நான் ஆழமாக ஈடுபட்டிருக்கிறேன். அதனால் எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்து எழுதுவேன். எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்களில் நான் அதிகம் எழுதாமல் விட்டது இலக்கியம். தமிழ் இலக்கியமும், ஆங்கில இலக்கியமும் கூட எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் கம்பனும், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரும் என் மனதைக் கவர்ந்தவர்கள். கம்பன் பற்றியாவது சில கட்டுரைகள் எழுதி உள்ளேன். ஷேக்ஸ்பியர் நான் இன்னமும் எழுத ஆரம்பிக்காதது. அதே போல நான் எழுதும் சப்ஜெக்ட்களிலும் கூட நிறைய சுவாரசியமான, பயனுள்ள விஷயங்கள் நிறைய இருக்கின்றன. காலம் மட்டுமே பற்றாக்குறை!

காத்யாயினி : ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இது பெரும்பாலும் பொதுவாக எல்லா வெற்றியாளர்களும் ஒத்துக் கொள்ளகூடியது தான்.
உங்களின் எழுத்துலகப் பணிக்கு உங்கள் துணைவியின் பங்கு ஏதேனும் உண்டா?
உங்கள் படைப்புகளை அவர்கள் படிப்பதுண்டா? அப்படி படித்து அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் தாக்கம் உங்களுடன் என்ன மாதிரியான உணர்வை உண்டு பண்ணும்?

நான்:  நிச்சயமாக என் வெற்றிக்குப் பின்னும் என் மனைவி இருக்கிறாள். கணவன் எப்போது பார்த்தாலும் எழுதுவது, படிப்பது என்றிருக்கும் போது மனைவி என்பவளின் மானசீக இழப்புகள் இருந்தே தீரும். என்றாலும் ஏற்றுக் கொண்டு என் எழுத்துக்கு தொந்தரவாக இல்லாமல் இருப்பதே பெரிய விஷயம். 
என் மனைவி கர்நாடகத்தில் கன்னடத்தில் படித்தவள். திருமணத்திற்குப் பின் இங்கு வந்த பின் தான் தமிழ் தெரியும். பேச, எழுதக் கற்றுக் கொண்டாலும் நல்ல பாண்டித்தியம் தமிழில் உண்டு என்று சொல்ல முடியாது. அதனால் என் எழுத்துக்களை அவர் அதிகம் படிக்கவோ கருத்துகள் சொல்லவோ முடிவதில்லை.

கார்த்திகா : அதே போல உங்க Friends, Colleagues இப்படி நிறைய பேர் உங்களுக்கு Supportive ah இருப்பாங்க ல.. அப்படி உங்களோட முன்னேற்றத்துக்கு ரொம்பவே உறுதுணையா இருந்தவர்கள் யார்??

நான் : நண்பர்கள் என் வெற்றியில் மிகுந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தார்கள். ஆனால் பள்ளி, கல்லூரி நாட்களில் கிடைத்தது போல நான் எழுதியவுடன் முதலில் படிக்கிறவர்களாக நண்பர்கள் இருக்கிற சூழல் பிற்காலத்தில் இருக்கவில்லை. அதனால் நண்பர்களை விட அதிகமாக என்னை பாராட்டி மேலும் சிறப்பாக எழுத ஊக்குவித்து என் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் என் வாசகர்கள் தான். என் ஆரம்ப கால சிறுகதைகள், கட்டுரைகளில் இருந்து இன்றைய ‘பரம(ன்) இரகசியம்’ நாவல் வரை பின்னூட்டங்களிலும், மின்னஞ்சல்களிலும் பாராட்டிய இதயங்களுக்கு நான் எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. 
இத்தனைக்கும் நான் ஒவ்வொரு பாராட்டுக்கும் பதில் பின்னூட்டம் போடுபவன் அல்ல. அப்படி நன்றி சொல்வது பல நேரங்களில் செயற்கைத் தனமாக எனக்குத் தோன்றும். அப்படி இருந்தும் சலிக்காமல் பாராட்டிய பாராட்டுகள் ஆத்மார்த்தமானவை. அன்றும் இன்றும் என் வாசகர்களே என் முன்னேற்றத்துக்கு உறுதுணை.

கார்த்திகா:  முதல் கதையை பற்றி பேசிட்டோம்… உங்களோட முதல் புத்தகம் எது?? எப்போ வெளி வந்தது??

நான்: என் முதல் புத்தகம் வெளியானது சிறிதும் திட்டமிடாததும் எதிர்பாராததுமான ஒரு நிகழ்வு.

நான் திண்ணையில் எழுதிய “கண்கள்” சிறுகதையைப் படித்து விட்டு எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டார். பின் நல்ல நண்பருமானார். அந்தச் சிறுகதை “உலகத் தமிழர் சிறுகதைகள்” என்ற தலைப்பில் அவர் தொகுத்த சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளியானது. அந்த சிறுகதை நல்ல வரவேற்பையும் பெற்றது. பின் ஒரு நாள் போன் செய்து “என்ன கணேசன் ஆன்மிகக் கட்டுரைகள் தொகுப்பு புத்தகம் ஒன்று போடலாமா?” என்று கேட்டார். சம்மதித்தேன். அவர் மேற்பார்வையில் இருக்கும் ‘இருவாச்சி இலக்கியத் துறைமுகம்’ என்ற பதிப்பகத்தில் 2010ல் ’பிரசாதம்’ என்ற ஆன்மிகக் கட்டுரைகள் தொகுப்பு வெளியானது. 2011ல் “தோல்வி என்பது இடைவேளை” என்ற தன்னம்பிக்கைக் கட்டுரைகள் தொகுப்பு அதே பதிப்பகத்தில் வெளியானது.

கார்த்திகா:  ரொம்ப நேரமா இதை கேட்கணும்ன்னு இருந்தோம்.. உங்களோட Articles/Books க்கு எப்படி Captions/Titles Select பண்றீங்க?? கண்கள் - ஊருக்கு மகான் ஆனாலும் - பிரசாதம் - தோல்வி என்பது இடைவேளை இதெல்லாம் ரொம்ப Interesting /அருமையா இருக்கு..
உங்களோட Captions லாம் உள்ள படிக்காமயே விஷயம் என்னன்னு சொல்லிடும்.. அதே சமயம் இதை பார்க்கணும் படிக்கணும் ன்னு ஆர்வத்தையும் உண்டு பண்ணிடும்... எப்படி இந்த மாதிரியான Titles லாம் பிடிக்கறீங்க ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம் Sir

நான்: பிரசாதம், தோல்வி என்பது இடைவேளை என்ற இரு தலைப்புகளும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன் வைத்தது. மற்றவை எல்லாம் நான் வைத்த பெயர்களே.
எப்படி இந்த மாதிரி டைட்டில்கள் கிடைக்கின்றன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. புத்தகத்தை அல்லது கதைக்குப் பொருத்தமாகத் தோன்றுவதை வைக்கிறேன் அவ்வளவு தான். ஊருக்கு மகான் ஆனாலும் தலைப்பு “ஊருக்கு ராஜாவானாலும்” என்ற பழமொழியின் பாதிப்பு. கண்கள் அந்தக் கதையின் முக்கிய அம்சம். இப்படித் தான் சொல்ல வேண்டும்.

கார்த்திகா : பொதுவா ஒரு கட்டுரை எழுதறதுக்கு எவ்வளவு நேரம் எடுத்துப்பீங்க??

நான்: கட்டுரை அல்லது கதை நமக்குத் தெளிவாக மனதில் இருந்தால் தலைப்பு தானாக வந்து விழும். அதற்கு நான் எப்போதுமே அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. கரு மற்றும் உருவத்திற்கு தான் நேரம் அதிகம் தேவைப்படும். 
கட்டுரையின் அளவுக்கும், ஆழத்திற்கும் ஏற்ப நேரம் தேவைப்படும் என்றாலும் பொதுவாக கரு கிடைத்த பிறகு சுமார் மூன்றிலிருந்து நான்கு மணி நேரங்கள் தேவைப்படும்.

கார்த்திகா: எங்கள் எல்லாரோட Inspiration Star - ஆன உங்களுக்கு Inspiration யாரு??

நான் : தமிழில் inspiration எழுத்துக்கள் என்றால் திருக்குறள் தான். ஈடிணையில்லாத அறிவுப் பொக்கிஷம் அது. சில பிரபலமாகாத குறள்கள் கூட தரும் அறிவுரை எளிமையும் வலிமையும் கலந்த டானிக். தன்னம்பிக்கை எழுத்தாளர்களில் எம்.எஸ்.உதயமூர்த்தியும், அப்துற் றஹீமும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். ஆங்கிலத்தில் Dr.Wayne W.Dyer, Deepak Chopra, Eckhart Tolle ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த தன்னம்பிக்கை எழுத்தாளர்கள். இவர்கள் புத்தகங்களை இப்போதும் பல முறை படிக்கிறேன்.

குணா : "மனம்" என்பதை எப்படி உருவக படுத்துவீர்கள்?

நான் : மனம் சம்பந்தமாக ஒரு அறிவியல் துறையே இருந்தாலும் கூட மனம் உடலில் எங்கே உள்ளது என்பது பற்றி தெளிவான பதிலை யாராலும் கூற முடிந்ததில்லை. அதனால் அதை உருவகப்படுத்துவதும் கஷ்டம்.

கார்த்திகா : உங்ககிட்ட பேசுவதற்கு யாராச்சும் பயந்துருக்கங்களா?? Haiyo இவர் நம்ம நினைக்கறதை - மனசுல உள்ளதெல்லாம் கண்டு பிடிச்சிடுவாரோ அப்படின்னு… இந்த மாதிரி அனுபவம் எதாவது நடந்து இருக்கா…??

நான்: என்னிடம் பேச யாரும் பயந்தது இல்லை. தங்கள் மனதில் இருக்கும் எத்தனையோ ரகசியங்களை மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் சொல்பவர்கள் தான் அதிகம். அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று நான் எக்காரணத்தைக் கொண்டும் அந்த ரகசியங்களை வீட்டார் உட்பட யாரிடமும் கூறுவது இல்லை. அதே போல உண்மையைச் சொல்கிறவர்களை நான் judge செய்வதும் இல்லை.

ப்ரத்யுக்‌ஷா:  உங்களோட Writing Career ல எதற்காது ரொம்ப போராடிருக்கீங்களா..??
அதே போல இத்தனை வருட எழுத்து பணி ல நீங்க கத்துகிட்ட விஷயம் எது?? இனி செய்யவே கூடாதுன்னு முடிவெடுத்த விஷயம் எதாவது இருக்கா??

நான்: எழுத்துலகத்தில் என்று இல்லை நான் எதற்காகவும் பெரிதாய் போராடியதில்லை. எழுதத் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் நான் பிரபலமாக இத்தனை காலங்கள் தேவைப்பட்டதற்கு காரணம் எனது அந்தத் தன்மையாகவும் இருக்கக்கூடும். அதில் எனக்கு வருத்தமும் இல்லை. எனது கடைசி ஆறு புத்தகங்களின் பதிப்பாளரான ப்ளாக்ஹோல் மீடியா யாணன் கூட எனது ப்ளாகை படித்து விட்டு அவராக என்னைத் தொடர்பு கொண்டவர் தான். ’பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்’ புத்தகம் எழுதித் தரும்படி அவர் கேட்டுக் கொண்டார். 2012 இறுதியில் அதன் வெற்றியைத் தொடர்ந்து மற்ற ஐந்து புத்தகங்களும் சுமார் ஒன்றேகால் வருடத்தில் பிரசுரமாகின. அதில் ஆழ்மனதின் அற்புதசக்திகள் மூன்று பதிப்புகளும், பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல் மற்றும் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் இரண்டு பதிப்புகளும் இந்தக் குறுகிய காலத்தில் வந்து விட்டன. இதை ஏன் சொல்கிறேன் என்றால் எதற்கும் போராடித் தான் வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. விடாமுயற்சியும், தரத்தை அதிகப்படுத்தலும் தொடர்ந்து இருந்தால் வெற்றி கண்டிப்பாக கிடைத்தே தீர வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு என்பதற்காகத் தான். 

இத்தனை வருட எழுத்துப்பணியில் நான் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் இது தான். நம் திறமையைக் கூர்மைப்படுத்திக் கொண்டே போக வேண்டும். தொடர்ச்சியாக நாம் களத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கிடைத்ததை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இனி செய்யவே கூடாது என்று முடிவெடுக்கிற அளவுக்கு எதையும் அதிகப்படியாக செய்யவில்லை.

(தொடரும்)

4 comments:

 1. // பெற்றதை திருப்பித் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது... //

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. I thank your parents for having brought you up in tamilnadu...else we might have missed you sir.

  ReplyDelete
 3. அருமையான பேட்டி....
  அழகான கருத்துக்கள்...

  ReplyDelete