சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 16, 2014

பரம(ன்) ரகசியம் – 80

குருஜிக்கு அதற்கு மேல் தியான நிலையில் இருப்பது சாத்தியமாகவில்லை. விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளோடு லயித்துக் கொண்டிருந்த நேரத்தில் தோன்றும் காட்சி வெறும் பிரமையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் உள்ளுணர்வு எச்சரித்தது. அவர் எழுந்து விட்டார்.

அவர் எழுந்தது தென்னரசுவையும், ஜான்சனையும், பாபுஜியையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆராய்ச்சிகளை நேர் ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த அறுவரையும் கூட ஆச்சரியப்படுத்தியது. ஜான்சன் பதற்றத்துடன் என்ன என்று கேட்க நெருங்கிய போது சைகையால் ஒன்றுமில்லை என்று தெரிவித்த குருஜி சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சைகை மூலமாகத் தெரிவித்து விட்டு தனதறைக்கு விரைந்தார்.

இயற்கை உபாதை போல் இருக்கிறது என்று நினைத்தவர்களாய் எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.

ஸ்வர் எழுதி முடித்தவுடன் வெள்ளைக் காகிதத்தில் தெரிந்த அச்சு எழுத்துக்கள் அவன் பார்வையில் இருந்து மறைந்து போய் விட்டன. எழுதி முடித்து விட்டான் என்று அறிந்ததும் அருகில் இருந்து ஒரு ஆள் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு விட்டதைப் போல இருந்தது.  ஓலை எழுத்துக்கள் புரியாத போது அச்சு எழுத்துக்கள் தெரிந்ததும், எழுதி முடித்தபின் மறைந்ததும் ஈஸ்வரைப் புல்லரிக்க வைத்தன. செய்யுள் வரிகளைப் போல் தெரிந்த அந்த வரிகளின் அர்த்தம் அவனுக்குச் சரியாக விளங்கவில்லை. அது விளங்காமல் தியான நிலையைத் தொடர அவனால் முடியவில்லை. மனம் முரண்டு பிடித்தது.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வணங்கி விட்டு எழுந்து வந்தான். அந்த செய்யுள் வரிகளில் புரியாத வார்த்தைகளை அடிக்கோடிட்டு பார்த்தசாரதியிடம் அந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினான். இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?

பார்த்தசாரதி அதைப் படித்தார்.

தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்

அதற்குக் கீழே அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை எழுதினார்.
தூய=தூய்மையான; உளமறிவு=உள்ளம்+அறிவு; துஞ்சாமல்=தூங்காமல்; அன்றேல்=இல்லாவிட்டால்; நஞ்சாகும்=விஷமாகும்.

அந்தக் கோடிட்ட சொற்களுக்குப் பதிலாக அந்த அர்த்தங்களை வைத்துப் படித்த போது ஈஸ்வர் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர்ந்தன. அக்னிநேத்ர சித்தர் தெரிவித்த அதே செய்தி தான்... அதே எச்சரிக்கை தான்....

குருஜி தனதறைக்குப் போய்  பீரோவைத் திறந்து ரகசியமாய் ஒளித்து வைத்திருந்த அந்த ஓலைச்சுவடிகளையும், தமிழாராய்ச்சி நிபுணர் எழுதித் தந்திருந்த விளக்கத் தாள்களையும் பிரித்துப் பார்த்தார். எல்லாமே இருந்தன. எதுவும் விடுபட்டது போலத் தெரியவில்லை. மறுபடி அவற்றை அப்படியே வைத்து விட்டு பீரோவைப் பூட்டியவர் வேகமாக தியான மண்டபத்திற்குத் திரும்பினார். தென்னரசுவை வெளியே சைகையால் வரவழைத்துக் கேட்டார்.

“அந்த தமிழாராய்ச்சிக்காரர் ஓலைச்சுவடிக்கு விளக்கம் எழுதித்தந்த பேப்பர்களை ஜெராக்ஸ் எடுத்து வச்சு வேற யாருக்காவது கொடுத்திருக்க வாய்ப்பிருக்கா?

தென்னரசு ஆணித்தரமாய் சொன்னார். “இல்லை குருஜி. ஏன் சொல்றேன்னா, அந்த ஆள் ரொம்பவே பயந்து போயிருந்தார்.  மூணு தடவை ட்யூப் லைட் ஃப்யூஸ் ஆயிடுச்சு, யாரோ கதவைத் தட்டற மாதிரி சத்தம் அடிக்கடி கேட்குதுங்கறதால அந்த ஆள் அந்த ஓலைச்சுவடிகளைப் பேய் பிசாசு சமாச்சாரம் மாதிரி நினைச்சுட்டு  அது கைய விட்டு போனா போதும்னு நினைச்ச மாதிரி தான் இருந்தது. அதனால் அதை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கவோ, பிறகு யாருக்காவது தந்திருக்கவோ வாய்ப்பே இல்லை... ஏன் கேட்கறீங்க குருஜி   

ஒரு சந்தேகம் வந்துச்சு அதனால தான் கேட்டேன்”  என்ற குருஜி மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் மறுபடி சென்று விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தபடி அமர்ந்தார். அமர்ந்தவர் தியானத்தின் மூலமாக ஆல்ஃபா சிபிஎஸ் அலைகள் 12லிருந்து 11, 10, 9, 8 அலைகளில் வேகமாக பயணித்துக் கொண்டு இருந்தார். விரைவில் தீட்டா அலைகள் சிபிஎஸ் 7ல் நுழைந்த போது, அவருக்கு மறுபடி அந்த அலைகளில் சிவலிங்க சக்தியுடன் லயிக்க முடிந்த போது, ஈஸ்வர் சம்பந்தப்பட்ட ஏதாவது காட்சி தெரிகிறதா என்று பார்த்தார். எதுவும் தெரியவில்லை. மனம் அமைதியடைந்தவராய் மனக்கண்ணில் சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களின் அழிவைக் கொண்டு வந்து நிறுத்த ஆரம்பித்தார். அந்த நேரத்தில் மற்ற மூவரும் அந்த நிலைக்கு வந்திருந்தனர். கணபதியோ சிவன் ருத்ர தாண்டவம் ஆடி அந்த சோமாலியக் கொள்ளைக்காரர்களை அழிப்பது போல் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். பாவப்பட்ட பல பேருக்கு தொந்தரவு கொடுத்துகிட்டா இருக்கீங்க. எங்க சிவன் யார் தெரியுமில்ல?

ஸ்வர் அந்தச் செய்யுள் வரிகளையும், சிவலிங்கத்தோடு சேர்ந்து பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதாய் முன்பு கண்ட காட்சியையும், அக்னி நேத்திர சித்தர் சொன்னதையும் நினைத்துப் பார்த்தான். வாய்ச்சொல்லாகவும், எழுத்தாகவும், காட்சியாகவும் கூட நேரவிருக்கும் ஆபத்து நிலை அவனுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது.  அவன் இனி அதிகம் தாமதிக்க முடியாது.....

பார்த்தசாரதிக்கு அவன் எப்படி அந்த செய்யுள் வரிகளை எழுதினான் என்பதை அறிய ஆவலாக இருந்தாலும் அவன் அதிகமாய் பேசுகிற மனநிலையில் இல்லை என்பதை ஊகிக்க முடிந்ததால் அமைதியாக இருந்தார். முனுசாமி கொண்டு வந்த டிபனை இருவரும் அமைதியாகவே சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ஈஸ்வர் திரும்பவும் கைகால் அலம்பிக் கொண்டு பூஜையறைக்குள் நுழைந்து வணங்கி விட்டு அமர்ந்தான். மறுபடி அவன் மனம் பலவிதமான எண்ணங்களில் பயணித்து சலித்து முக்கால் மணி நேரக் கடைசியில் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தில் ஐக்கியமாகியது. ஓங்கார ஒலி பின்னொலிக்க விசேஷ மானஸ லிங்கம் மறுபடி பிரத்தியட்சமாகத் தெரிந்தது. மெய்சிலிர்த்தது. இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் கூட இதே சிலிர்ப்பு இருக்கும் என்று தோன்றியது.

அதன் கூடவே கணபதியும் தெரிந்தான். அதன் அருகே அமர்ந்திருந்த அவன் ஏதோ சினிமா பார்ப்பது போல் பாவனை தெரிந்தது. கற்பனையில் சிவனிடமும் பேசுகிறானோ? இந்த முறை காட்சி கணபதியையும் தாண்டி நீண்டது. குருஜி தியான நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் முகத்திலும் ஏதோ காட்சி காண்பது போல் ஒரு பாவனை தெரிந்தது. கண்பதியையாவது அப்படிப் பார்க்க முடிந்ததில் ஈஸ்வருக்கு ஆச்சரியம் இல்லை. அவன் சுபாவமே அப்படித்தான். ஆனால் குருஜி?

ஈஸ்வர் அந்தக் காட்சியில் கவனத்தைக் குவித்தான். மேலும் என்ன எல்லாம் தெரிகிறது என்று பார்த்தான்.  சற்று தூரத்தில் மேலும் மூவர் தியான நிலையில் அமர்ந்திருந்தது போல் தெரிந்தது. ஆனால் அவர்கள் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

தன் கவனத்தைக் குருஜியிடம் கொண்டு வந்தான். என்ன பார்க்கிறார் என்று நினைக்க நினைக்க ஒரு பெரிய திரையில் ஒரு வரைபடம் தெரிந்தது. உலக வரைபடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதி போல் தெரிந்தது. கண்களைக் கூராக்கி தெரிந்த பெயர்களைப் பார்த்தான். செங்கடல், ஏடன் வளைகுடா , இந்தியப்பெருங்கடல், சோமாலியா, எதியோப்பியா, யேமன் என்ற பெயர்கள் எல்லாம் தெரிய இது காட்சிப்பிழையாக இருக்க வேண்டும் என்று ஈஸ்வர் நினைத்தான். அதை உறுதிப்படுத்துவது போல ஆயுதம் தாங்கிய சில ஆப்பிரிக்கர்களும் தெரிந்தார்கள். ஒரு பெரிய படகில் இருந்த அவர்கள் கடற்கொள்ளையர்கள் போலத் தெரிந்தார்கள். ஈஸ்வர் மறுபடி விசேஷ மானஸ லிங்கத்தின் மீது தன் கவனத்தைக் கொண்டு வந்தான். ஓரிரு நிமிடங்களில் விசேஷ மானஸ லிங்கம் மறைந்து போய் அந்த வரைபடமும், கடற்கொள்ளையர்களுமே தெரிந்தார்கள்.

ஈஸ்வருக்குக் குழப்பமாக இருந்தது. கவனத்தை கணபதி மீது கொண்டு வந்தான். கணபதி மறைந்து சிவனின் ருத்ர தாண்டவம் தெரிய ஆரம்பித்தது. சிவனின் கை, கால் அசைவில் எல்லாம் அந்தக் கடற்கொள்ளையர்களின் தலைகள் உருள ஆரம்பித்தன. சிவன் அவர்களைப் பந்தாடுவது போலத் தெரிந்தது. தனக்குத் தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஈஸ்வர் சந்தேகப்பட்ட போது எல்லாம் மறைந்து சிலர் டெலிவிஷனில் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஈஸ்வர் குழப்பத்தின் உச்சத்திற்கே போனான். அந்த டெலிவிஷனைக் கூர்ந்து கவனித்தான். பிபிசி நியூஸ் சேனல் நிகழ்ச்சி அது.

அந்த நேரத்தில் குருஜி கண்களைத் திறந்தார். அவர் நேராகப் பார்த்தது ஈஸ்வரை. ஈஸ்வரும் அவரை நேராகப் பார்த்தான். விசேஷ மானச லிங்கத்தின் உபயத்தால் இடையே இருந்த பல மைல்கள் தூரம் இல்லாதது போலவே தோன்றியது. இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டதை இருவருமே விரும்பவில்லை. அந்த விருப்பக் குறைவாலேயே இருவரும் மளமளவென்று பீட்டா அலைகளுக்கு இறங்க காட்சிகள் தானாக மறைந்தன.

ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு பூஜையறையை விட்டு வெளியே வந்தவன் பரபரப்புடன் தன் லாப்டாப்பை எடுத்து இணையத்தில் பிபிசி நியூஸ் சேனலைப் பார்க்க ஆரம்பித்தான். பார்த்தசாரதியும் அவன் பரபரப்பைப் பார்த்து அவனுடன் வந்து சேர்ந்து கொண்டார். அதே நேரத்தில் தியானமண்டபத்திலும் அலெக்ஸி, கியோமி, ஹரிராம் மூவரும் விசேஷ மானஸ லிங்கம் மூலம் ஐக்கியமாகி ஞான திருஷ்டியிலும், மற்றவர்கள் டிவி நிகழ்ச்சியிலுமாக அனைவரும் அதே நிகழ்ச்சியை பரபரப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செங்கடல் பகுதியில் Sand storm  என்று சொல்லப்படும் மணல்/தூசு சூறாவளியை பிபிசி நியூஸ் சேனல் தொலைவில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. இயற்கையின் சீற்றம் வார்த்தைகளுக்கு அடங்காதது. பேய்க்காற்றில் மணல், தூசியோடு சேர்ந்து கடலும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. செய்தியாளர் அந்த சுழல் ஆர்ப்பரிப்பின் நடுவே ஒரு படகும் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன் ஒரு வினாடி நேரம் ஒரு பெரிய படகு மிக உயரத்திற்கு வீசப்பட்டு கீழிறங்கியதைப் பார்த்ததாக பார்வையாளர்கள் சிலர் சொன்னதை இடை இடையே ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். செங்கடலில் இது போன்ற மணல்/தூசு சூறாவளி புதிதல்ல என்று வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்ததும் ஒளிபரப்பாகியது. ஆனால் எந்த வருடத்திலும் இந்த மாத காலத்தில் இப்படி ஒரு சூறாவளி அந்தப் பகுதியில் ஏற்பட்டதில்லை என்றும் ஒரு வானியல் நிபுணர் வியப்பு தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் கடலின் சுழியில் தோன்றிய ஒரு கண் போன்ற தோற்றத்தை தியான மண்டபத்தில் இருந்த அனைவருமே பார்த்தார்கள். அலெக்ஸியின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது. இரண்டாவது முறையாக அல்லவா அவர் அந்தக் கண்ணைப் பார்க்கிறார். சிவனின் மூன்றாவது கண்ணோ அது? மற்றவர்களும் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அந்த எண்ணம் அவர்களுக்குத் தோன்றாமல் இல்லை.

மூன்று மணி நேரம் நீடித்த அந்த சூறாவளி அடங்கிய பின்னர் அருகே இருந்த ஆப்பிரிக்க நாடுகளின் சீரமைப்புப் பணிகள் ஆரம்பமாயின. ஒரு உடைந்த படகின் பாகங்களோடு சில சடலங்களும் வேறு வேறு இடங்களில் கரை சேர்ந்திருந்தன. அந்த சடலங்கள் கொடூரமான சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களுடையது என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட போது ஒரு செய்தியாளர் சொன்னார். “சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்த இந்தக் கொள்ளையர்களால் இறைவனின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை போலும் 

அந்தப் பிணங்களைக் காட்டிய போது தியான மண்டபத்தில் பலத்த கைத்தட்டல் கேட்டது. அவர்கள் ஆராய்ச்சியின் மகத்தான வெற்றி என்று அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள். குருஜி தன்னை பிரம்மாவாக உணர்ந்தார். ஜான்சன், பாபுஜி, தென்னரசு, மகேஷ் நால்வர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஆறு வெளிநாட்டவர்களும் கைதட்டி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கணபதி கண்களில் மட்டும் கண்ணீரைக் கண்ட குருஜி கேட்டார். “என்ன கணபதி அழறே?

கணபதி உடைந்த குரலில் சொன்னான். “அந்த ஆள்களுக்கும் அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருது குருஜி...

ஸ்வருக்கு அங்கு நடந்தது என்னவென்று புரிய அதிக நேரம் ஆகவில்லை. செங்கடல் பகுதியின் வரைபடம், சோமாலியக் கடற்கொள்ளையர்களின் புகைப்படம், சிவனின் ருத்ரதாண்டவம் தோன்றல் எல்லாம் தெரிந்து முடிந்த போது நிஜமாகவே செங்கடலில் அந்த சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மணல் சூறாவளியில் சிக்கி இறந்து போனது அவனுக்குத் திகைப்பாக இருந்தது. விசேஷ மானஸ லிங்கத்தின் சக்தி எந்த அளவு செல்ல முடியும் என்பதை அறிய ஒரு சோதனை நடத்தி இருக்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். விசேஷ மானஸ லிங்கத்தை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்று அறிந்த இவர்கள் இனி என்ன தான் செய்ய மாட்டார்கள்?

தான் கண்டதையும், தன் கவலையையும் அவன் பார்த்தசாரதியிடம் சொன்ன போது அவருக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது.  ஆனால் பிபிசியில் அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பைப் பார்த்த பின் அவரால் எப்படி நம்பாமல் இருக்க முடியும்? எதிரிகள் கையில் அணுகுண்டே இருக்கிறது, சூழ்நிலையும் அவர்களுக்கே சாதகமாக இருக்கிறது.....

பார்த்தசாரதி கவலையுடன் சொன்னார். “ஈஸ்வர் நீங்கள் ஏதாவது செய்தாகணும்!

தியான மண்டபத்தில் வெற்றிக் களிப்பில் அனைவரும் இருந்த போது குருஜி மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து நெருங்கிய ஜான்சன் கேட்டார். “என்ன குருஜி

இங்கே நாம என்ன ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கோம்கிறதை ஈஸ்வர் அங்கே இருந்தே பார்த்துகிட்டு இருக்கான்என்று குருஜி சொன்னார்.

ஜான்சன் திகைப்புடன் கேட்டான். “எப்படி? அவன் என்னை மாதிரி ஆராய்ச்சிகள் நடத்தறவனே ஒழிய அந்த சக்தி படைச்சவன் அல்லவே

விசேஷ மானஸ லிங்கத்தின் உபயம்...

“விசேஷ மானஸ லிங்கம் தான் இங்கே இருக்கே?

அந்த சித்தர் அவனை சந்திச்சிருப்பார்னு நினைக்கிறேன். அவன் அந்த மூணு பேரில் ஒருத்தன்.... அதனால அது எங்கே இருந்தாலும் மனசு வச்சா அதுகூட ட்யூன் ஆகிறது கஷ்டமில்லைன்னு நினைக்கிறேன். அறுபது வருஷங்களுக்கு மேல் இந்த விசேஷ மானஸ லிங்கம் இருந்த இடத்தில் இதோட அலைகளும் நிறைந்திருக்கும்கிறதால அங்கே இருந்து முயற்சித்தால் சீக்கிரமே ட்யூன் ஆக முடியும்....

ஜான்சன் திடுக்கிட்டார். குருஜி சொன்னார். இன்னேரம் அவனுக்கு நாம் என்ன செய்யப் போறோம்கிறது புரிஞ்சிருக்கும். அவனைத் தடுத்து நிறுத்தலைன்னா நம்ம அடுத்த முயற்சி அவ்வளவு சுலபமாய் இருக்க ஈஸ்வர் விடுவான்னு தோணலை ஜான்சன்

(தொடரும்)

என்.கணேசன்

34 comments:

  1. சிவனின் ருத்ர தாண்டவம் , மூன்றாவது கண் , மணற்புயல் என விறுவிறுப்பான பகுதி பிரமிக்கவைத்தது..!

    கணபதியின் வெள்ளை உள்ள நினைவு ரசிக்கவைத்தது..!

    ReplyDelete
  2. விறுவிறுப்புடன் பதைபதைப்புடன் தொடர்கிறேன்....வாழ்த்துகள்

    ReplyDelete
  3. க்ருத்திகாJanuary 16, 2014 at 5:46 PM

    கணேஷன் சார். உங்களுடைய பரமன் இரகசியம் நாவல் இப்போது தான் படித்து முடித்தேன். கடைசி அத்தியாயங்களை மிக வேகமாக முடித்திருப்பது போல தோன்றினாலும் கவனத்தை வேறு எதிலும் திருப்ப முடியாத அளவு விருவிருப்பாக இருந்தது. நாவல் மிகவும் அருமை. ஈஸ்வர், கணபதி, குருஜி, ஆனந்தவல்லி ஆகிய நான்கு கதாபாத்திரங்கள் என் மனதில் நிரந்தரமாய் தங்கி விட்டன. உங்கள் பாணியில் கடைசியில் நல்ல மெசேஜ் கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்குள்ளே விசேஷ மானஸ லிங்கம் பார்த்தோமானால் அதற்கு நீங்களே காரணம் என்று சொல்வேன்.

    ReplyDelete
    Replies
    1. I agree with Krithika. Great characterization with thrilling events. But the book would look better with different color other than this pink. For those who read the novel in your blog the appearance may not be an issue. For new people it will not look attractive. But the picture is good.

      Delete
    2. Its ok... We will Request for upcoming editions ...

      Delete
    3. wow. I can not express my feelings. After long time I read a heart felt novel. congrats Ganesan Sir. keep up.

      Delete
  4. சுந்தர்January 16, 2014 at 5:49 PM

    எங்கே இருந்து சார் இத்தனை பொருத்தமான படத்தை எடுத்தீர்கள். உங்கள் எழுத்திலேயே நேரில் கண்டது போல் உணர்ந்தோம் என்றால் படம் மேலும் தத்ரூபத்தை தந்து விட்டது. மிக சுவாரசியமான அத்தியாயம்

    ReplyDelete
  5. மனித அறிவுக்கு எட்டாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம்... ஆனால் அவை அனைத்தும் இது போல கற்பனை கதைகளாக மட்டுமே உள்ளது...உண்மையில் அப்படி சக்திகள் இருந்து இருந்தால்... நம் முன்னோர்களான பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தோன்றி வளர்ந்து வரும் தமிழ் சித்தர்களின் ஞான வளர்ச்சியில் நாம் கண்டிப்பாக அறிவியல் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருந்து இருப்போம்.... கற்பனை வழிமுறைகள் பல உண்டு ... ஆனால் அதில் முழுமையான வெற்றிகண்டுள்ள தற்காலிக மனித குல ஆதாரம் ஒன்றும் இல்லை... போலிகளே அதிகம்

    ReplyDelete
    Replies
    1. http://enganeshan.blogspot.in/2008/01/blog-post_11.html

      Delete
    2. Please read Vedhathiri Maharishi's "Unified Force" and N.Ganeshan's "aaz manathin arputha sakthigal".

      Delete
    3. சரி தான் ... அதை தான் கதைகள் என்று சொல்கிறேன்... ஆதாரங்கள் இருந்தால் அதனால் உண்மையில் என்ன பயன்? நாம் சித்தர் பரம்பரை வழி வந்த தமிழர்கள் வெளிநாட்டு உதாரண கதைகளை கேட்டு என்ன மாறிவிடும் இப்போது? எவ்வளவு விஷயம் தெரிந்து இருப்பதால் என்ன பயன்? அதன் பலன் என்ன? உலக சரித்திரத்தையோ, இயற்க்கையையோ தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எவரும் தமிழ் நாட்டில் இல்லை (கதைகளில் மட்டுமே உண்டு, கதைகளில் உள்ள அதனை அடைய கற்பனை வழி முறைகள் உண்டு... முழுமை அடைந்தோர் என்று கூறுபவர்கள் இறை நிலை சக்தியை தமிழகத்தில் நிலை நாட்டினோர் யாரும் இலர் ... இருப்பதெல்லாம் வெறும் எழுத்தாளர்களின் கற்பனைகளே அதிகம் )

      Delete
    4. பரம(ன்) ரகசியம் கற்பனையே. ஆனால் சித்தர்கள், யோகிகள் ஆகியோர் இயற்கையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்த சக்தி உட்பட எல்லா சக்திகளையும் பெற்றிருந்தார்கள் என்பது கற்பனையல்ல. அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற அஷ்டமகாசக்திகளில் பிராப்தி என்பது இயற்கையைத் தன் வசப்படுத்த முடிதலே. இந்த அஷ்டமகாசக்திகளைப் பற்றி திருமூலரும், பதஞ்சலியும் கூட எழுதி இருக்கிறார்கள். திருமூலர் உட்பட எத்தனையோ சித்தர்கள் உருவாகிய தமிழகத்தில் இறைநிலை சக்தியை நிலை நாட்டினோர் யாரும் இலர் என்று சொல்வது அறியாமை. இந்த நாவலைப் பொறுத்த வரை என்னவெல்லாம் சாத்தியம் என்பதை கற்பனை சம்பவங்களில் சொல்லி இருக்கிறேன். இது போன்ற கதைகளினால் என்ன பயன் என்பது படிப்பவர்களையும் அவர்களது நோக்கங்களையும் பொறுத்தது. திருமூலரையும், யோக சூத்திரங்களையும் படிக்க முடியா விட்டாலும் ‘யோகியின் சுயசரிதை’ போன்ற நூல்களையாவது படியுங்கள். நிறைய அற்புதங்களை அறிந்து கொள்ளலாம்.

      Delete
    5. #மனித அறிவுக்கு எட்டாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கலாம்... #
      அனைத்து மனிதரின் அறிவின் திறன் ஒரே நிலையில் இருப்பது இல்லை. ஏன் தனிமனிதனின் அறிவு கூட நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது. அப்படி இருக்க எப்படி ஒட்டுமொத்த மனித அறிவின் எல்லையை வரையறுக்க முடியும். நம் அறிவின் வளர்சியை பொறுத்தே எட்டுவதும் எட்டாததும்.

      #ஆனால் அவை அனைத்தும் இது போல கற்பனை கதைகளாக மட்டுமே உள்ளது#
      ஒருவர் ஒன்றை பார்க்காத அல்லது உணராத வரை அவர்களை பொருத்தமட்டும் கற்பனைதான். அதை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவர் காட்டும் ஈடுபாடும் விடாமுயற்சியும் மட்டுமே அவருக்கு கற்பனையா அல்லது உண்மையா என்பதை உணர்த்தும்.

      #உண்மையில் அப்படி சக்திகள் இருந்து இருந்தால்... நம் முன்னோர்களான பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தோன்றி வளர்ந்து வரும் தமிழ் சித்தர்களின் ஞான வளர்ச்சியில் நாம் கண்டிப்பாக அறிவியல் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இருந்து இருப்போம்#

      எப்படி ஓரறிவில் இருந்து ஆறறிவு வரை வந்தோமோ அதுபோல் அடுத்த நிலையும் இருக்கும் அந்த நிலையை அடையவேண்டும் என்ற ஏக்கத்தால் ஈடுபாட்டுடனும் விடாமுயற்சியுடனும் ஞான நிலையை பெற்றவர்கள் சித்தர்களும் ஞானிகளும். அவர்கள் சக்திகள் என்பதை நோக்கி செல்வதில்லை என்றாலும் மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்லும்பொழுது சக்திகள் இயல்பாக அமைகின்றன. அவர்கள் ஞானம் என்பது வெளிபுறத்தில் இல்லை தன்னுள் இருப்பதே என்பதை உணர்ந்தனர். ஆதலால் அறிவியல், பொருளாதாரம் போன்ற வெளிப்புறம் தொடர்பானவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

      #ஆனால் அதில் முழுமையான வெற்றிகண்டுள்ள தற்காலிக மனித குல ஆதாரம் ஒன்றும் இல்லை#

      இப்பொழுது மிகப்பெரிய பதவியில் உள்ளவர்களை ஒருவர் பார்க்கவேண்டும் என்றால் எளிதாக முடிவதில்லை. ஒன்று பணபலத்தின் மூலமாகவோ, அல்லது பெரிய இடத்து சிபாரிசு மூலமாகவோ மட்டும் தான் பார்க்க முடியும்.
      சித்தர்கள் ஞானிகள் என்பவர்கள் உள்நிலையில் உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். அவர்களை பார்க்க வேண்டும் என்றால் நம் உள்நிலை தகுதியை வளர்த்துகொள்ள வேண்டும். ( பார்க்க வேண்டும் என்ற ஏக்கம், நம்பிக்கை,நல்எண்ணங்கள், நல செயல்கள், அனைவருக்கும் உதவும் குணம் etc )
      அவர்களை பொறுத்த வரை வெற்றி தோல்வி எனபது இல்லை. இப்பொழுதும் உதவி கொண்டுள்ளார்கள் அனுமதி தருபவர்களின் உள்ளத்தில் இருந்து.
      இறுதியாக நான் தெரிவிக்க விரும்புது நீங்கள் கேட்பதுபோல் அனைவருக்கும் நிரூபிக்கவோ கண்ணால் காட்டவோ சாத்தியம் இல்லை. இது முழுமையாக உணரக்கூடியது. அந்த உணர்வினை உணர்ந்து, உண்மையை புரிந்து, உள்ளத்தில் தெளிந்து, உள்நிலையில் உயர்ந்து வாழ வாழ்த்துக்கள்.

      "தூய உளமறிவு கூடித் துஞ்சாமல் நாடினால் சேர்ந்திடும் மெய்ஞானம் மூன்றும் காக்க மிஞ்சிடும் பூவுலகம் அன்றேல் நஞ்சாகும் சிவஞானம்"

      Delete
  6. பரமன் ரகசியத்தை சென்னை புத்தக சந்தையில் வாங்கிப் படித்து விட்டேன். நல்ல விஷயங்களை இந்த அளவு சுவாரசிய சம்பவங்களில் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.

    குருஜி-கணபதி கடைசி அத்தியாயங்கள் மனம் நெகிழ வைத்தன. குருஜி கேரக்டரை மிக நேர்த்தியாய் கொண்டு சென்றுள்ளீர்கள். சிவகாமியின் சபதம் நாவலை படித்து முடித்த பின் நாகநந்தி அடிகள் கேரக்டரை மிகவும் ரசித்தேன். இப்போது குருஜி. கண்டிப்பாய் பரமன் ரகசியம் வருங்காலத்தில் பேசப்படும்.

    ReplyDelete
  7. அதிசயங்களின் அறிவியல் ஆரம்பம்
    படிக்க படிக்க பேரின்பம்

    நாங்களும் விசேஷ மானஸ லிங்கத்தில் ஐக்கியமாகி,தீட்டா அலைகளுக்கு சென்று, "சென்னை புத்தகக் கண்காட்சில ஸ்டால் 51,52" ல் மீதமுள்ள பரமன் ரகசிய அத்தியாயங்களை படிக்கப்போகிறோம்.

    ReplyDelete
  8. I'm so excited that I've ordered the book today ... :) Thanks for such a wonderful experience Ganesan Sir !

    ReplyDelete
  9. God, I want this story to never end. Then what is the meaning for our Thursdays?

    ReplyDelete
    Replies
    1. Nice Comment Mr.Arjun. you are asking this like Ganapathy :)

      Delete
  10. கணபதி கண்களில் மட்டும் கண்ணீரைக் கண்ட குருஜி கேட்டார். “என்ன கணபதி அழறே?”

    கணபதி உடைந்த குரலில் சொன்னான். “அந்த ஆள்களுக்கும் அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருது குருஜி...”

    மானச லிங்கமும், மனித மனமும்....

    மனது நிறைவால் தொடர்ந்து சாப்பிட முடியவில்லை.

    ஆனால் பூரணமாய் சாப்பிட்ட திருப்தி

    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இந்த காவியத்தை படிச்சு முடிசவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள். நாங்கல்லாம் புத்தகத்த வாங்கரவரைக்கும் இனிமேல் வரப்போற அத்தியாங்களை பத்தி சொல்லாதீங்க please......
    இப்படிக்கு,
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
    Replies
    1. க்ருத்திகாJanuary 16, 2014 at 7:11 PM

      சாரி. ஆர்வக்கோளாறு காரணமாக சொல்லி விட்டேன். புத்தகம் படிக்காதவர்கள் பற்றி யோசிக்கவில்லை.

      Delete
    2. No issues krithika. Just I want to tell Future comments will not break the suspense that's all. thank you.

      Delete
  12. PARAMAN RAGASIYAM in top gear at full throttle ........ kudos to you N.Ganeshan sir .

    ReplyDelete
  13. நாவலை வாங்கி வாசிக்காதவர்களின் சுவாரசியம் குறையாமல் இருக்க, நாவலைப் படித்து முடித்த வாசகர்கள் தயவுசெய்து இனிவரப் போகும் நிகழ்ச்சிகள் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கடைசி அத்தியாயத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் எல்லோருக்கும் கருத்துகள் பரிமாறிக் கொள்வது மேலும் சுவையாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Sir, Do you have any thoughts regarding making your books available for e-download for people not living in India?

      Delete
  14. For book cover dark blue or lavender color would have suited better than the pink.

    ReplyDelete
    Replies
    1. I too agree...dark blue , lavender with light blue combo depicts thrilling/fictious sensation!
      Pink looks more childish...

      Delete
  15. Sir
    As you rightly said , the book readers pls dont explosure the climax.
    Enkay

    ReplyDelete
  16. I agree with Ganesan sir. Please don't say anything about the future episodes' story since we don't have opportunity to get the novel from India

    ReplyDelete
  17. உங்களை எல்லாம் வல்ல இறை அருள் காக்கட்டும்

    ReplyDelete
  18. வரதராஜன்January 18, 2014 at 6:06 PM

    இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் பல இருக்கின்றன. அவற்றை நான் திரும்ப திரும்ப படித்து மகிழ்கிறேன். மறு வியாழன் வரும் வரை இப்படி படிக்கும் அளவு என்னை கொள்ளை கொண்டு விட்டது பரமன் ரக்சியம். அதனால் சஸ்பென்ஸ் பகுதி மட்டுமே இந்த நாவலின் பலம் அல்ல. கேரக்டர்களும், காட்சி அமைப்புகளுமே பலம்.

    ReplyDelete