சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 4, 2013

இறை வழிபாட்டில் துளசி, வில்வம்

அறிவார்ந்த ஆன்மிகம்-25


நம் முன்னோர்களின் ஆன்மிகச் செய்கைகள் பலவற்றிற்கும் கதைகளைக் கொண்டு காரணம் காட்டப்பட்டாலும் அந்தச் செய்கைகளுக்குப் பின் அறிவார்ந்த காரணங்களும் இருந்தன. பாவ புண்ணியக் கதைகளாலேயே மக்கள் வழி நடத்தப்பட்ட காலக் கட்டத்தில் ஆன்மிக அறிஞர்கள் கதைகளைச் சொல்லி செயல்களைச் சொன்னார்களே ஒழிய, அறிவார்ந்த காரணங்களை அதிகம் விளக்கவில்லை.

அந்த வகையில் வழிபாடுகளில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் துளசி, வில்வம், அருகு, வேம்பு, வன்னி ஆகிய தாவரங்களைச் சொல்லலாம். இந்த  ஐந்தும் பஞ்சபத்ரம் எனப்படும். பத்ரம் என்றால் இலை என்று பொருள். சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை என்று சொல்லி பூஜைக்குப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டன.  இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம் விடப் பயன்படுத்தும் பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 


இந்த ஐந்து மூலிகைகளில் முதல் இரண்டான துளசி மற்றும் வில்வம் இரண்டும் உபயோகிப்பதன் ஆன்மிகம், மற்றும் அறிவியல் காரணங்களைப் பார்ப்போம்.

துளசி  சிறந்த மூலிகைச் செடியாகும். துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவே தான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

எந்த ஒரு பொருளை தானம் செய்யும் போதும் அந்தப் பொருளுடன், ஒன்றிரண்டு துளசி இலைகளையும் சேர்த்து தரும் போது தான் அந்த தானமானது முறையானதாகிறது என்று நம் தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

துளசியின் மகத்துவத்தைச் சொல்லும் ஒரு கிளைக்கதை கிருஷ்ணாவதாரத்தில் உண்டு. கிருஷ்ணரின் மேல் தனக்குத் தான் அளவு கடந்த அன்பு என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு இருந்தது. அந்த அன்பில்  சிறிதளவு கர்வமும் கலந்திருந்தது. கர்வம் கலக்கும் போது அன்பு தன் உயர் இயல்பை இழந்து விடுகிறது என்பதைப் புரிய வைக்க பகவான் கிருஷ்ணர் எண்ணினார்.

தன் மனைவியரான ருக்மணி, சத்தியபாமா இருவரையும் அழைத்த கிருஷ்ணர்  உங்கள் இருவரில் என் மேல் யார் அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிய ஒரு போட்டி வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன் என்றார்

துலாபாரம் வைத்து அன்பை எடைபோடுவது என்று முடிவானது. துலாபாரத்தின் ஒரு தட்டில் கிருஷ்ணர் அமர்ந்து கொண்டார். மறுபுறத்தில் பொன், வைரம்,  வைடூரியம், மாணிக்கம் என விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் சத்தியபாமா அடுக்கிக்கொண்டே இருந்தார். ஆனால் அவருக்கு ஆச்சரியம்தான் மிஞ்சியது. கிருஷ்ணர் இருந்த துலாபாரத் தட்டு சிறிது கூட மேல் எழும்பவில்லை.

அடுத்ததாக ருக்மணியின் முறை வந்தது. இப்போது ருக்மணி பொன், பொருள்களை துலாபாரத்தில் வைக்கவில்லை. அதற்கு மாறாக, கொஞ்சம் துளசி இலையை மட்டும் அன்புடனும் பக்தியுடனும் வைக்க துலாபாரம் சமநிலையை அடைந்து அனைவரையும் பிரமிக்க வைத்தது. சத்தியபாமா தன் தவறைப் புரிந்து கொண்டார். இதில் இருந்து தூய அன்பின் பெருமையையும்  துளசியின் பெருமையையும், சக்தியையும் அறியலாம். 

தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் வணங்கி துளசி மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் குடும்பத்திற்கே அனேக நன்மைகள் கிடைக்கும் என்பது ஆன்மிக வாதிகளின் நம்பிக்கை.

கோவில்களில் செம்புப் பாத்திரத்தில் சுத்தமான நீர் விட்டு, அதில் துளசியை போட்டு வைத்திருப்பார்கள். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியின் மகத்துவத்தால் அந்த நீரும் மருத்துவ குணம் கொண்டதாக மாறும். வைணவ ஆலயங்களில் அந்த துளசி நீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது.

துளசியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். முக்கியமாக துளசி சளி, இருமல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.  அது தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தியையும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் சக்தியையும், வயிற்றுப் பொருமலைத் தணிக்கும் சக்தியையும், ஆண்மையையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்தும் சக்தியையும் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. துளசி சிறந்த கிருமி நாசினியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். 


இனி வில்வத்தின் சிறப்பைப் பார்ப்போம். இந்துக்களின் வழிபாட்டில் துளசியைப் போலவே வில்வ இலைக்கும் முக்கிய பங்குண்டு. பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகக் கருதப்படுகிறது. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை தோற்றத்தில் திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. வில்வ இலை இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. துளசியை வைணவர்கள் பயன்படுத்துவது போல, சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும் என்று சைவர்கள் திடமாக நம்புகிறார்கள். இதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது.

ஒரு முறை ஒரு வேடன் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது  புலி ஒன்று எதிர்ப்பட்டது. அது அவனை விரட்டிக் கொண்டு ஓடி வரவே, வேடன்  அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் புலி மரத்தடியில் படுத்துக் கொண்டு விட்டதே தவிர அது நகர்வதாயில்லை. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக வேடன் மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான்.

விடிந்த பின் வேடன் மரத்தின் கீழ் பார்த்தான். அவன் பறித்துப் போட்ட இலைக் குவியல் தரையை மூடியிருந்தது. அவனுக்கு அதன் அடியில் புலி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் வந்தது. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது.

பிறகு தான் வேடனுக்கு அனைத்தும் விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். புலி எப்போதோ போய் இருந்தது. அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே அந்த சிவராத்திரி முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் கீழே இருந்த சிவலிங்கத்தை அர்ச்சித்திருக்கிறான். அவன் அறியாமலேயே அதைச் செய்த போதும் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி சம்பந்தமாகக் கூறப்படுகிறது.

திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய பல திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு சிறந்த மூலிகையாகும். இதுவும் பல நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இந்த வில்வ இலைகளுக்காக அனேகமாக எல்லா சிவன் கோவில்களில் வில்வ மரம் வளர்க்கப்படுகிறது.  வில்வ இலை மாலை கண் நோய் மற்றும் தோல் வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வில்வ பழம் பித்தத்தை போக்கும். வயிற்றுப் புண்ணால் ஏற்படும் தொல்லைகளுக்கும் வில்வம் மருந்தாக இருக்கிறது. வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது. உடலின் சக்திகளை சேமிக்கவும் வில்வம் உதவுகிறது.
                               
இதையெல்லாம் பார்க்கும் போது ஆன்மிகக் காரணங்கள் கொண்டு துளசியையும், வில்வத்தையும் வழிபாட்டில் உபயோகித்தாலும் எத்தனையோ ஆரோக்கிய நன்மைகளும் பெறுகிறோம் என்பது தெரிகிறதல்லவா?

-          என்.கணேசன்

-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 27-08-2013









6 comments:

  1. Hello,
    Though I register my e mail id , I am not getting your articles for the past 6 months or so. pl look into it and do the needful. -Ganesan

    ReplyDelete
    Replies
    1. Many people have told me that. But earlier also that was done by google only, not by me. So I think the google has some technical issues in this regard.

      Delete
  2. Thanks for sharing the details about thulasi and vilvam !!!

    ReplyDelete
  3. நல்ல ஆன்மீகப் பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. “கர்வம் கலக்கும் போது அன்பு ,தன் உயிர் இயல்பை இழந்து விடுகிறது”

    இந்த வரியை உய்த்து உணர்ந்து எழுதுவதற்கு நிச்சியம் நிறைய பக்குவம் வேண்டும் ..., அருமை அருமை சார்...

    ReplyDelete
  5. The copper/brass vessels also act as a germicide. UK researcher "Rob reed" has proved it. - Rajaram

    ReplyDelete