என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Tuesday, November 12, 2013

பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு!


அறிவார்ந்த ஆன்மிகம்-26


சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் உயர்ந்ததாகக் கருதப்படுவது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும்  திரயோதசி நாளில் வளர்பிறையில் ஒரு பிரதோஷமும், தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக மாதமிருமுறை பிரதோஷம் வரும். சூரியன் மறையும் மாலை வேளையில் சூரியன் மறைவதற்கு முன்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்து பிரதோஷம் என்பது ஏழரை நாழிகை காலம் இருக்கிறது.

ஒரு நாழிகை என்பது 24 நிமிட காலம். ஏழரை நாழிகை என்பது மூன்று மணி நேர காலம் ஆகிறது. ஆனால் பிரதோஷ கால வழிபாட்டிற்கு பெரும்பாலும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள ஒன்றரை மணி நேரத்தையே பயன்படுத்துகிறார்கள்.

தோஷம் என்றால், குற்றமுள்ள என்று பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. குற்றமற்ற அந்த வேளையில் ஈசனைத் தொழ, நம் தோஷங்கள் நீங்கும். சைவ அறிஞர்கள் பிரதோஷ கால வழிபாட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள். முக்கியமாய் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு  விரைவில் திருமணம் நடைபெறும், வறுமை நீங்கி செல்வம் பெருகும், நோய்கள் நீங்கும், எடுத்துக் கொண்ட காரியங்களில் தடங்கல் நீங்கி வெற்றி கிடைக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இனி பிரதோஷ வழிபாடு பிறந்த கதையைப் பார்ப்போம்.

முன் ஒரு காலத்தில் தேவர்கள் மகாவிஷ்ணுவை சந்தித்து இறவாநிலை அடைய வழியைக் கேட்டனர்.  `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்' என்று மகாவிஷ்ணு உபாயம் கூறினார். பாற்கடலைக் கடைவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால் அதற்கான வழியையும் அவரையே கூறும்படி மகாவிஷ்ணுவை தேவர்கள் பணிந்தனர். `மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும் என்று வழியைத் தெரிவித்தார் மகாவிஷ்ணு.

பாற்கடலைத் தாங்கள் மட்டுமே கடைந்து விட முடியாது என்பதைப் புரிந்து கொண்ட தேவர்கள் அசுரர்கள் உதவியையும் நாடினார்கள். தாங்களும் அமிர்தம் உண்டு இறவாநிலை அடைய ஆசைப்பட்ட அசுரர்கள் உதவ ஒப்புக் கொண்டார்கள். வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்துக் கொள்ள பாற்கடலை கடையும் பணி தொடங்கியது.


இந்தப் பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.

தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக சக்தி வாய்ந்ததாக இருந்தும் வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும்காலம்' என்ற நீல நிற கடுமையான விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் ஆலம்என்ற கடுமையான கருப்பு நிற விஷம் பொங்கி வெளியேறியது. இவ்வாறு கடலில் இருந்து பொங்கிய `ஆலம்' என்ற கருப்பு விஷமும், பாம்பினால் கக்கப்பட்ட காலம் என்ற  நீல விஷமும், சேர்ந்து உலகையே அழிக்க வல்ல ஆலகால விஷம் உருவாக தேவர்கள் சிவபெருமானிடம் அந்த ஆலகால விஷத்தில் இருந்து தங்களைக் காக்க வேண்டினர்.

சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே அருந்தினார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த பார்வதி `கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே' என்று கருதி  சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் அந்தக் கருநீல விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்’ (கழுத்தில்) விஷத்தை நிறுத்தியதால் சிவபெருமான் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவைத் தடுத்து ஆலகால நஞ்சை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக் காத்து  நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார் என்று சைவ புராணங்கள் சொல்கின்றன.  ஈசன் அன்று புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்' என்று பெயர். அந்தக் கால வேளையே பிரதோஷ வேளையாக கருதப்படுகிறது.

ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று தான். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் (சனிப்பிரதோஷம்) மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு நடத்தும் ஒவ்வொரு கிழமைகளின் பலன்கள் இவையென்று சைவ அறிஞர்கள் கூறுகிறார்கள்:

ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல்எண்ணம், நல்அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்கியம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்


அதே போல பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் இவையென்று சைவ அறிஞர்கள் கருதுகிறார்கள்:

 எண்ணெய்- சுகவாழ்வு
 சந்தனம் -சிறப்பான சக்திகள் பெறலாம்
மலர்கள் -தெய்வ தரிசனம் கிட்டும்
 பால்- நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர்- பல வளமும் உண்டாகும்
தேன்- இனிய குரல் கிட்டும்
பழங்கள்- விளைச்சல் பெருகும்
பஞ்சாமிர்தம்- செல்வம் பெருகும்
இளநீர்- நல்ல மக்கட்பேறு கிட்டும்
சர்க்கரை- எதிர்ப்புகள் மறையும்
நெய்- முக்தி பேறு கிட்டும்


பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறார்கள். அதையும் பார்ப்போம்.

வழக்கப்படி நாம் வலம் வரும் முறையை விடுத்து,  நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக, சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். அதன்பின்  வழக்கப்படி வலம் வராமல், எதிர்வலமாக வந்து, அபிஷேகத் தீர்த்தம் வரும் வழி அல்லது சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை சென்று, வந்த வழியே திரும்ப வேண்டும். இவ்வாறு திரும்பி வந்து, நாம் வழக்கப்படி வலம் வரும் வழியில் சென்று, அந்தப் பக்கமாக சண்டிகேஸ்வரர் சன்னிதி வரை வந்து அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் நந்தியருகே வந்து சிவபெருமானைத் தரிசிக்க வேண்டும்.  இந்தப் பிரதட்சிணச் சுற்று முறையில் வழக்கமான முழு சுற்று இல்லை. இந்த முறைப்படி, மூன்று முறை வலம் வரவேண்டும். இவ்வாறு வலம் வருவது, 'சோம சூக்தப் பிரதட்சிணம்' எனப்படும். பிரதோஷ நாளில் இப்படி சுற்று வருவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

கர்னாடக மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் பிரதோஷ காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் இப்படித் தான் வலம் வருகிறார்கள். பல சிவன் கோயில்களில் பிரகாரங்களில் வலம் வரும் விதத்தை தரையில் குறியீடுகளால் வரைந்து இருக்கிறார்கள்.

தேவர்களையும், மூவுலகையும் கொடுந்துன்பத்தில் இருந்து காப்பாற்றிய உத்தமமான பிரதோஷ வேளையில் சிவபெருமானை ஆலயம் சென்று பக்தியுடன் வணங்கினால் நம்முடைய அனைத்து கஷ்டங்களையும் ஈசன் களைந்து காத்தருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவ உண்மையும் கூட!

-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 03-09-2013
6 comments:

 1. உங்கள் கட்டுரை அறியாத புதிய தகவல்களைத் தருகிறது. நன்றி.

  ReplyDelete
 2. very good information about prathosam !!!

  ReplyDelete
 3. உண்மை உண்மை சார்....., திரயோதசி... சிரியாக மாலை முடிந்துவிட்டால் . அதாவது.. முதல் நாள் மாலைக்கு பிறகு திரயோதசி ஆரம்பித்து அடுத்த நாள் மாலைக்குல் முடிந்து விட்டால் அதற்கு பாரிஜாத பிரதோசம் என்றும் .. அதற்க்கான சில விஷேச முறையையும் .. உள்ளதாகவும் ஒரு முறை படித்த்தேன்...
  நல்ல பதிவு சார்...,

  ReplyDelete
 4. Can you also provide me info about how to fast on Prathosam? Thank you.

  ReplyDelete
 5. A small correction. There is no proof that Devi Parvathi had pressed Shiva's neck so that the poison stays there itself. one of the explanation given by Sri Bhagavathpatha Acharya is that the power of Devi's thadanga (ear ring) and the ray reflected from it stopped the poison.

  ReplyDelete
 6. 1.நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார்.
  2.நந்தியின் பின்னால் நின்று அதன் இரு கொம்புகளின் வழியாக,சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
  3.சோம சூக்தப் பிரதட்சிணம்....kooda ...naam sutri varuvathu kombu...vadivam...pola irukkum
  .
  Intha Moontrilume... Ulla otrumai...arumai ....

  ReplyDelete