சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 25, 2013

அனைத்திலும் ஆண்டவன்!


கீதை காட்டும் பாதை 28


கவத் கீதையை சில அறிஞர்கள் நீயே அதுவாக இருக்கிறாய்என்ற மகா வாக்கியத்தின் சாரமாகவே கருதுகிறார்கள். அந்த மூன்று சொற்களின் “நீ சம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் பகவத் கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும், “அதுசம்பந்தப்பட்ட தத்துவ விளக்கங்கள் இரண்டாம் ஆறு அத்தியாயங்களும், இரண்டிற்கும் இடையே இருக்கிறதொடர்பான தத்துவ விளக்கங்கள் கடைசி ஆறு அத்தியாயங்களும் விளக்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

அதன்படி பகவத் கீதையின் முதல் பகுதி முடிந்து இரண்டாம் பகுதி, அதன் ஏழாம் அத்தியாயமான ஞான விஞ்ஞான யோகத்தில்,. ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருசேர அர்ஜுனனிற்கு ஸ்ரீகிருஷ்ணர் விளக்குவதில்  ஆரம்பமாகிறது.

 “ஞானம், விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுவதுமாக நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது வேறு ஒன்றுமில்லை.

பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் சித்தி பெற முயல்கிறான். அப்படி முயற்சி செய்யும் பலரில் எவனோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்

ஞானம் மூலம் மட்டுமே இறைவனை அறியலாம் என்பதில்லை. விஞ்ஞானம் ஞானத்திற்கு எதிரானதும் அல்ல. இரண்டும் ஒரு உண்மையின் இரண்டு கோணங்கள்,  இரண்டு பக்கங்கள். குழப்பம் இல்லாமல், தவறான கண்ணோட்டம் இல்லாமல் எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் உண்மை விளங்கவே செய்யும். ஒன்றின் மூலமாக மட்டுமே அணுகியவனுக்கு மற்ற கோணத்தில் பார்த்தால் வேறு விதமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். அந்த சந்தேகம் உறுதியான ஒரு நிலைப்பாடிற்கு வர முடியாதபடி ஒருவனைத் தடுக்கலாம். அதனால் தான் ஸ்ரீகிருஷ்ணர் இரண்டைப் பற்றியும் சொல்ல முனைகிறார். இரண்டிலுமே தெளிவைப் பெற்று விட்டால் சந்தேகம் வர வாய்ப்பில்லை. அதனால் மேலும் தெரிந்து கொள்ளவும் எதுவும் மீதமில்லை.

பல்லாயிரம் மனிதர்களில் ஒருவன் மட்டுமே உண்மையாக இறைவனையும், உண்மையையும் நாடுபவனாக இருக்கிறான். அந்த உண்மையான முயற்சி அந்த அளவு அபூர்வமே. அப்படி முயற்சி எடுப்பவர்களிலும் எண்ணிலடங்கா மனிதர்களில் ஒருவனே இறைவனை, அந்தப் பேருண்மையை, உள்ளதை உள்ளபடி அறிகிறான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஆன்மிகப் பயணத்தில் பல கோடி பேர் பயணிப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அது ஆசைப் பயணமாகவும், அஞ்ஞானப் பயணமாகவுமே பெரும்பாலும் இருக்கின்றது. கேட்டதெல்லாம் தரும் இறைவனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ அதை எல்லாம் கேட்டு, அது கிடைத்து முடிந்த பின் அடுத்த ஒரு பட்டியலைக் கேட்டு, இந்த கேட்டுப் பெறலின் போது வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வைக் கேட்டு, பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கை ஆசை நோக்கியதாகவே இருக்கிறது.

இவர்களில் இருந்து வேறுபட்டு உண்மையை அறியவோ, இறைவனை அறியவோ முற்படும் அபூர்வ முயற்சியை சில நூறு பேர் மட்டுமே மேற்கொள்கிறார்கள். அவர்களிலும் “உள்ளதை உள்ளபடிஅறிய முடிவது ஓரிருவருக்கு மட்டுமே சித்திக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஏனென்றால் அறிய முற்படுபவர்களில் கூட, பலரும் உண்மையை தங்கள் முந்தைய அபிப்பிராயங்களுக்கு ஏற்ப அதை வளைத்துப் பார்க்கவோ, தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றிப் பார்க்கவோ முற்படுகிறார்கள். அதனால் அவர்கள் அறியும் ஆண்டவனும், உண்மையும் அவர்களின் தன்மைகளுக்கேற்ப தெரியும் பிரமையே ஒழிய உண்மை அல்ல. உள்ளதை உள்ளபடி அறிய முடிவது பல கோடிகளில் ஒருவருக்கே சித்திக்கின்றது.

புத்தரின் தம்மபதமும் இதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறது. “மனிதனாகப் பிறப்பது கடினம். மனிதனாய் வாழ்வது மிக மிக கடினம். தர்ம நெறியைக் கேட்பது கடினம். ஆனால் புத்தராய் பிறப்பதும், புத்தரின் நிலையை அடைவதும் மிக அபூர்வமாகும்

அடுத்ததாக விஞ்ஞானக் கோணத்தில். தன் இயற்கையின் இரு வகைகளின் வெளிப்பாடாகவே இந்த உலகம் இருக்கின்றது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்:

பூமி, நீர், நெருப்பு, காற்று, வான், மனம், அறிவு, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை (பிரகிருதி) பிரிந்து தோன்றுகிறது. 

இது என் கீழ் இயற்கை. இதைக் காட்டிலும் உயர்ந்ததாகிய என் மேலான இயற்கையை அறி.  அதுவே உயிராவது.  பெருந்தோளாய், அதனாலேயே இவ்வுலகு காக்கப்படுகிறது.

எல்லா உயிர்களுக்கும் அந்த இரண்டுமே காரணம் என்று உணர்ந்து கொள். . அதனால் உலகம் முழுமைக்கும் நானே ஆக்கமும் அழிவும் ஆவேன்.

இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கீழான இயற்கை மேலான இயற்கை என்று சொல்வது குறைத்தோ, மேம்படுத்தியோ ஒப்பிட்டு சொல்லப்படுவது அல்ல. ஏனென்றால் இயற்கையில் கீழ், மேல் என்றெல்லாம் இல்லை. நமக்குப் புலப்படும் அளவில், புரிந்து கொள்ளும் நிலையில் இலகுவாக இருப்பது கீழ்நிலை. புலப்படாத அளவில், சூட்சும நிலையில் இருப்பது மேல்நிலை. இப்படி எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

பஞ்ச பூதங்களுடன் நம் மனம், புத்தி, நான் என்ற பிரித்துணரும் தன்மை எல்லாம் சேர்வது தான் உலக சிருஷ்டிக்கு அடித்தளமாக இருக்கின்றன. நாம் காணும் உலகத்தின் தோற்றம் எல்லாமே இந்த எட்டின் கூட்டணிக்குள்ளேயே அடங்குகிறது. ஆனால் அது ஜட உலகம் மட்டுமே. அதன் உயிராக, சாராம்சமாக இறைவனின் சூட்சும சக்தி உள்புகும் போது தான் அது இயங்கும் உலகமாக ஆகிறது. அந்த சூட்சும சக்தி இல்லாமல் உலகம் இல்லை, அதன் இயக்கமும் இல்லை.

ஜட உலகமும் இறைவனே, அதன் உயிர்ப் பொருளும் இறைவனே என்றாலும் உயிர்ச் சாரமாய் இருக்கும் இறைவனின் மேலான தன்மையே பொதுவாக நம்மால் இறைவனாக கருதப்படுகிறது. அந்த சூட்சும சக்தியே படைப்பிற்கு மட்டுமல்லாமல் அழிவிற்கும் காரணமாக அமைந்திருந்திருக்கிறது.

பகவத் கீதையில் ஏழாம் அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் இந்த விஞ்ஞான உண்மையைத் தான் சமீப காலங்களில் விஞ்ஞானிகள் கடவுள் துகள் என்ற கண்டுபிடிப்பில் எட்டி இருப்பதாகத் தோன்றுகிறது.

சிறு கல் முதல் பெரிய  நட்சத்திரங்கள் வரை அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் துகள்களைக் கண்டுபிடித்திருந்த விஞ்ஞானிகளுக்கு அந்த்த் துகள்கள் மட்டுமே உலகம் இயங்கப் போதுமானதாக இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்திருந்தது. இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போகிறது என்றும் அவர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள் இருந்தால் மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி. அதை சமீபத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன் என்ற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

ஹிக்ஸ் போஸன் என்ற அந்த நிறைமிகு துகளின் இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப்  பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.  ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) துகள் அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளைக் கடவுள் துகள் என்று அழைக்கின்றனர்.

ஒரு விஞ்ஞானப் பத்திரிக்கை இப்படி எழுதியது:
As it turns out, scientists think each one of those fundamental forces has a corresponding carrier particle, or Higgs- boson, that acts upon matter. That's a hard concept to grasp. We tend to think of forces as mysterious, ethereal things that straddle the line between existence and nothingness, but in reality, they're as real as matter itself.

கடவுள் துகள் ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடைந்து விடவில்லை. பல ஆராய்ச்சிகளுக்கு வித்திடும் திருப்புமுனையாக கடவுள் துகள் இருக்கின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இது வரை இவர்கள் எட்டி உள்ள புரிதல் நிலையும், பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லி இருப்பதும் ஒரே தொனியில் இருப்பது சுவாரசியமாக உள்ளதல்லவா?


பாதை நீளும்....

-          என்.கணேசன்

6 comments:

  1. Nice explanation. Thank you.

    ReplyDelete
  2. கீதையை இன்னொரு பரிமாணத்தில் பார்க்க வைத்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம்
    கீதை பற்றி அருமையான விளக்கம் தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. There is something beyond our imaginations that is what moving us, my view is that what gave the scientist to analyze the particles in first place...why it should strike only to that person not all. What we are finding is which is already in existence...not finding anything new...it is revealed even then I feel it is not even 1%...

    First time when I read the article it was dry I could not get it, Re-read it with focus on each word, seems like getting it...

    Good going

    ReplyDelete
  5. அருமை அருமை.. சார்..., தாங்கள் கூறியது ., முற்றிலும் மிகச் சரியே .., லௌகீக ஈட்ச்சை அற்று அடுத்த கட்டத்தில் இறைவனை நோக்கி பயணிக்கும் போது தாம் . பல பல ஜீரணீக்க முடியாத உண்மைகளை ஏற்க்க கடைபிடிக்க வேண்டியுள்ளது.,.., பலரும் அந்த நிலைகளில் அவர்கள் அவர்களின் தன்மைகளுக்கேற்ப ஒரு கற்பனை பிரமையில் தாம் உழலுகிறார்கள்....

    தங்களின் ஆன்மீக முதிற்ச்சி அதை விட நயத்தகு நாகரிகத்தோடு அழுத்தமில்லாமல் விளக்க வைக்கும் விதம் வியக்க வைக்கிறது...., தொடருங்கள்.. சார்... வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  6. கடவுளின் துகள் பற்றிய விளக்கும்... பகவத் கீதையின் வசனமும்.. ஒருமித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது.. இரண்டு இயற்க்கை பற்றிய கருத்தும்..என்னை சிந்திக்க வைத்து விட்டது.

    ReplyDelete