சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, November 2, 2013

பரம(ன்) ரகசியம் – 69

(இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி போனஸாக பரம(ன்) ரகசியத்தின் அடுத்த அத்தியாயம்) 

ஸ்வருக்கு அக்னி நேத்ர சித்தர் திடீரென்று போய் விட்டது ஏமாற்றமாக இருந்தது.  அவர் திடீரென்று வந்து அவன் எதிர்பார்க்காததை எல்லாம் சொல்லி, பெரிய பொறுப்பை அவன் மீது சுமத்தி, தத்துவம் பேசி, வந்தபடியே திடீரென்று மறைந்தும் போனது அவனுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விசேஷ மானஸ லிங்கத்துடன் அவன் இப்படி சம்பந்தப்பட்டிருப்பதும், சித்தரைச் சந்திக்க முடிவதும் முன்பே தெரிந்திருந்தால் என்னென்ன கேள்விகள் எல்லாம் அவரிடம் கேட்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொண்டு கேட்டிருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் தன்னம்பிக்கை இல்லாதவன் அல்ல. ஆனாலும் கூட குருஜியிடம் போய் மாட்டிக் கொண்ட விசேஷ மானஸ லிங்கத்தை மீட்டு, இந்த உலகம் சந்திக்க இருக்கும் அழிவிலிருந்து காப்பாற்றுகிற அளவு தனக்கு சக்தி இருக்கிறதாக அவனால் நம்ப முடியவில்லை....
  
அம்மாவின் போன் கால் வந்தது. ஈஸ்வர் செல் போனை எடுத்துப் பேசினான். “ஹலோ சொல்லும்மா?

“என்னடா குரல் என்னவோ மாதிரி இருக்கு. உடம்பு சரியில்லையாடா?

அவன் குரலை வைத்தே அவன் மனநிலையை அம்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது அவனுக்கு ஆச்சரியமாய் இல்லை. அவன், அப்பா, அம்மா மூன்று பேரும் எப்போதும் மனதளவில் மிகவும் இணைந்தவர்கள். ஒருவரை ஒருவர் எப்போதும் படிக்க முடிந்தவர்கள். ஒருவரிடம் ஏற்படும் சின்ன மாற்றங்கள் கூட மற்ற இருவருக்கும் நிறைய தகவல்கள் தந்து விடும். அப்பா தான் இப்போது இல்லை.... அவர் இருந்திருந்தால் இப்போது நன்றாக இருந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது...

“ஈஸ்வர்?அம்மா குரல் கவலையுடன் கேட்டது.

“சொல்லும்மா. எனக்கு உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லை. நல்லாத் தான் இருக்கேன்ம்மா.

“நான் இந்தியாவுக்கு வந்துகிட்டிருக்கேண்டா

ஈஸ்வர் திகைத்தான். “என்னம்மா திடீர்னு

கனகதுர்கா ஆனந்தவல்லி போன் செய்து பேசியதைச் சொன்னாள். ஆனந்தவல்லி ஈஸ்வர் ஒரு பெண்ணைக் காதலிப்பதாய் சொன்னதை மட்டும் தவிர்த்து மற்றதெல்லாம் சொன்னாள். ”....வயசானவங்க. அவ்வளவு தூரம் சொன்னதுக்கப்புறம் அங்கே வராமல் இருக்க மனசு கேட்கலைடா. நான் என் சவுகரியத்துக்கு வந்தால் ஒருவேளை அவங்களைப் பார்க்க முடியாமல் போயிட்டா அப்புறம் மனசுல அதுவே உறுத்திகிட்டிருக்கும். உன் தாத்தாவையும் பார்க்கணும்னு தோணுது. அதனால வேற எதையும் யோசிக்காமல் கிளம்பிட்டேன்....

அம்மா வருவது ஈஸ்வருக்கு சந்தோஷமாய் இருந்தாலும் ஆனந்தவல்லி அவன் மனதில் சந்தேகத்தைக் கிளப்பினாள். பாட்டிய கொஞ்ச நேரத்துக்கு முன்னே தானே பார்த்தேன். நல்லா தானே இருந்தாங்க

கனகதுர்கா எந்த விமானத்தில் வருகிறாள் என்பதை மகனிடம் தெரிவித்து நேரில் பார்க்கலாம் என்று சொல்லிப் பேச்சை முடித்துக் கொண்டாள். அவளுக்கு மகன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்பதையும், அவர்கள் வீட்டிலேயே அந்தப் பெண் இருக்கிறாள் என்பதையும் கேட்டது கூட இந்தியாவுக்கு உடனடியாகக் கிளம்ப முக்கியமான காரணமாய் இருந்தது.

ஓரிரு நாட்கள் மகன் குரலில் தெரிந்த அளவில்லாத சந்தோஷத்தை உணர்ந்த போதே மகன் காதல் வயப்பட்டிருப்பானோ என்கிற சந்தேகம் அவளுக்கு வந்திருந்தது. பின் அந்த சந்தோஷம் அவன் குரலில் காணாமல் போன போது அவளுக்கும் ஏமாற்றமாய் இருந்தது. அவனாக எதையும் சொல்லவில்லை. அவளாக மேற்கொண்டு விசாரிக்கவுமில்லை. ஆனந்தவல்லி சொன்னதைக் கேட்ட போது அவளுக்குப் பரபரப்பாக இருந்தது. ஆனந்தவல்லியையும் மாமனாரையும் பார்த்த மாதிரியும் ஆயிற்று, மகன் காதலியைப் பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று உடனடியாகக் கிளம்பி விட்டிருந்தாள்.

ஈஸ்வரும் வீட்டுக்குக் கிளம்பினான். கிளம்புவதற்கு முன் பரமேஸ்வரனுக்குப் போன் செய்தான். “தாத்தா, பாட்டிக்கு என்ன ஆச்சு?

பரமேஸ்வரன் தன் எதிரில் அமர்ந்திருந்த தாயை முறைத்தார். செல் போனைக் கையால் மறைத்துக் கொண்டு தாயிடம் கேட்டார். “ஈஸ்வர் உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்கறான்..... துர்கா அவனுக்குப் போன் செய்திருப்பா போல இருக்கு. என்ன சொல்றது?

எனக்கு குளிர் காய்ச்சல்னு சொல்லுடா

அவளை முறைத்துக் கொண்டே பரமேஸ்வரன் பேரனிடம் சொன்னார். “அம்மாவுக்கு குளிர் காய்ச்சல் மாதிரி இருக்கு. ஆனா பயப்பட ஒன்னும் இல்லை ஈஸ்வர்

“அம்மா கிட்ட பாட்டி பேசி இருக்காங்க. உடம்புக்கு முடியலைன்னும் சொல்லி இருக்காங்க போல இருக்கு. அவங்களையும் உங்களையும் பார்க்கணும்னு தோணி அம்மா உடனே இங்கே வரக் கிளம்பியிருக்காங்க தாத்தா

“ரொம்ப சந்தோஷம் ஈஸ்வர். எப்ப உங்கம்மா இங்கே வந்து சேர்வா? என்று கேட்டுக் கொண்ட பரமேஸ்வரன் பிறகு தாயிடம் அதைத் தெரிவித்தார்.

“எனக்குத் தெரியும்டா ஒரு தாயோட மனசு. என்னைப் பார்க்க இல்லாட்டி கூட விஷாலியைப் பார்க்க அவள் கிளம்புவாள்னு நினைச்சேன்... அதே மாதிரி கிளம்பிட்டா பார்த்தியா?

“உன் நடிப்பு தெரிஞ்சா ஈஸ்வர் கோவிச்சுக்குவான் பார்

அந்தப் பயம் ஆனந்தவல்லிக்குத் துளியும் இருக்கவில்லை. “தெரிஞ்சா தானே. அதை விடுடா, ஈஸ்வர் கல்யாணத்தை எந்த மண்டபத்துல வச்சிக்கலாம்?என்று யோசனையோடு மகனைக் கேட்டாள்.

பரமேஸ்வரன் பெருமூச்சு விட்டார். ஈஸ்வர் வரும் வரை அவன் கல்யாண ஏற்பாடுகளை எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் மகனிடம் சொல்லிக் கொண்டு வந்த ஆனந்தவல்லி ஈஸ்வர் கார் போர்ட்டிகோவில் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வேகமாக எழுந்து தன் அறைக்கு ஓட்டமும் நடையுமாய் போனாள்.

ஈஸ்வர் வந்து பார்த்த போது ஆனந்தவல்லி தன் அறையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். அவன் அருகில் வந்து நின்ற போது கஷ்டப்பட்டு கண்களைத் திறப்பது போல் நடித்தாள். “யாரு?

“நான் ஈஸ்வர் பாட்டி. உடம்புக்கு என்ன ஆச்சு?

பலவீனமான குரலில் பதிலை மெல்ல சொன்னாள். “திடீர்னு குளிர் காய்ச்சல் ஆரம்பிச்சுடுச்சுடா....

“டாக்டருக்கு போன் செய்தாச்சா. இல்லை இனி மேல் தான் செய்யணுமா?

ஆனந்தவல்லி அசரவில்லை. விரக்தி தொனிக்க சொன்னாள். “வேண்டாம்டா... இனி எனக்கு ஒரே டாக்டர் சாவு தான்.... அவர் கிட்ட நாம போக வேண்டியதில்லை.... அவராவே வந்துடுவாரு

ஆனந்தவல்லி என்றுமே இப்படி விரக்தியாகப் பேசியவள் அல்ல என்பதால் அவளுக்கு நிஜமாகவே உடல்நிலை சரியில்லை என்ற முடிவுக்கு வந்த ஈஸ்வர் அவளை சிறிது நேரத்திற்கு முன்னால் சந்தேகப்பட்டதற்காகத் தன்னையே திட்டிக் கொண்டன். கனிவாக அவளிடம் சொன்னான். “பாட்டி அப்படி எல்லாம் பேசக் கூடாது. காய்ச்சல் தானேன்னு அலட்சியமா இருந்துடக் கூடாது. டாக்டருக்குப் போன் செய்றேன்...

அவசரமாக ஆனந்தவல்லி சொன்னாள். “எனக்கு இங்க்லீஷ் மருந்தெல்லாம் கேட்காதுடா. உன் அத்தை கிட்ட கஷாயம் செய்யச்சொல்லு. அது குடிச்சா சரியாயிடும்...

ஈஸ்வர் ஆனந்தவல்லியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் இருப்பதாய் தெரியவில்லை... உள் காய்ச்சலாக இருக்கும் போல் தெரிகிறது... எதற்கும் அவள் சொன்னது போல் கஷாயம் கொடுத்துப் பார்க்கலாம். அதிலும் குணமாகா விட்டால் டாக்டரை அழைக்கலாம் என்று நினைத்தவனாய் சொன்னான். “இப்பவே அத்தை கிட்ட சொல்றேன் பாட்டி. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க

விலகி இருந்த பாட்டியின் போர்வையைச் சரி செய்து விட்டு பாசமாய் தட்டிக் கொடுத்து விட்டு மீனாட்சியைத் தேடி அவன் போன பிறகு பரமேஸ்வரன் உள்ளே நுழைந்தார்.

“இவ்வளவு பாசம் வச்சிருக்கான் அவனைப் போய் ஏமாத்தறியே.... உன்னை இந்தப் பாவம் எல்லாம் சும்மா விடாது பார்என்று தாயிடம் சொன்னார்.

ஆனந்தவல்லி சொன்னாள். “இது பாவம்னா குழந்தை கிட்ட “நீ சாப்பிடலைன்னா அம்மா அழுதுடுவேன்னு நடிக்கிற அம்மாவும், குறும்பு செஞ்சா பூச்சாண்டி கிட்ட பிடிச்சு குடுத்துடுவேன்னு பயமுறுத்தற அம்மாவும் கூட பாவம் செய்யறவங்க தான். நான் இத்தனையும் அவனுக்காக தாண்டா செய்யறேன்... இனி உன் மகள் கொண்டு வர்ற கஷாயத்தை வேற நான் அவனுக்காகக் குடிச்சுத் தொலையணும். இந்த தியாகத்தை எல்லாம் நீ உன் பாவ புண்ணியக் கணக்குல எடுத்துக்க மாட்டேன்கிறியே..

தியான மண்டபத்தில் விசேஷ மானஸ லிங்கத்தை, அதன் சக்தியை, பரிச்சயப்படுத்திக் கொள்ள அமர்ந்திருந்த மூன்று பேரும் விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக அணுகிய விதம் வேறு வேறாக இருந்தது.

இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்திருந்த ஹரிராம் அந்த  சிவலிங்கத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டு குருஜி குறிப்பிட்டிருந்த தொலைவிலேயே அமர்ந்து விசேஷ மானஸ லிங்கத்தில் தன் பார்வையையும் மனதையும் லயிக்க விட்டார். தனிப்பட்ட கடவுளையும், அதன் நிச்சயிக்கப்பட்ட தோற்றத்தையும் அவர் என்றுமே நம்பியதில்லை. இறைவன் ஒரு மகாசக்தி என்கிற அளவிலேயே அவர் நம்பிக்கை இருந்தது. உருவமும், அருவமும் அற்ற அருவுருமாய் இருந்த சிவலிங்கத்தில் அவர் கவனம் குவிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவர் தனியானதொரு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்.

சமுத்திரமாய், ஆகாயமாய், அக்னியாய், மலையாய், சமவெளியாய், வயலாய் காட்சிகள் மனக்கண்ணில் தெரிய ஆரம்பித்தன. அவர் உருவமில்லாமல் அந்த பிரம்மாண்ட இடங்களில் காற்றில் மிதந்து கொண்டு பார்ப்பது போல் ஒரு பிரமை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்தக் காட்சிகள் எல்லாம் மறைய ஆரம்பித்தன. ஒரு வெட்ட வெளியில் அந்த விசேஷ மானஸ லிங்கம் தெரிந்தது. அதை அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அது வளர ஆரம்பித்தது. பெரிதாகி, பெரிதாகி, பெரிதாகிக் கொண்டே போய் அது ஆகாயத்தையும் கிழித்துக் கொண்டு இன்னும் உயர்வதாய் தோன்றியது. அவர் பிரமித்துப் போய் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே ஏதோ ஒரு சக்தி அவரை இழுக்க ஆரம்பிப்பது போலத் தோன்றியது. இது ஆபத்தான கணம் என்று புலப்படவே அவர் உடனடியாக சர்வ சக்தியையும் திரட்டி பழைய நிலைக்கு வந்தார். மீண்டும் அதை வணங்கி விட்டு அவர் தியான மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

கியோமியைப் பொறுத்த வரை விசேஷ மானஸ லிங்கம் புத்தர் பிறந்த மண்ணில் வணங்கப்படும் தெய்வம். அதில் பிரம்மாண்டமான சக்திகள் இருப்பதாய் ஜான்சன் சொல்லி இருக்கிறார். எனவே வணக்கத்திற்கும், மரியாதைக்கும் அது உரியது என்று அவள் நினைத்தாள். தங்கள் நாட்டு வழக்கப்படி அதை வணங்கி அதில் தன் கவனத்தைக் குவித்து  தியான நிலைக்குச் சென்றாள். அவள் மானசீகமாக உணர்ந்த காட்சி ஹரிராம் கண்ட காட்சியாக இருக்கவில்லை. விசேஷ மானஸ லிங்கம் சிறிது நேரத்தில்  மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தது. அவள் ஆச்சரியத்துடன் அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

விசேஷ மானஸ லிங்கம் ஆகாயத்தில் சஞ்சரிப்பது போல் தோன்றியது. சிறிது நேரத்தில் விசேஷ மானஸ லிங்கம் பனி மூடிய ஒரு மலையின் முகட்டில் தங்கியது. அது மவுண்ட் ஃப்யூஜி என்ற ஜப்பானியப் புனித மலை என்பதில் கியோமிக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அவள் அங்கே ஒரு முறை போயிருக்கிறாள். மிகத் தத்ரூபமாய் கியோமி அந்தப் புனித மலையை நேரில் பார்ப்பது போல இப்போதும் பார்த்தாள். இப்போது பார்ப்பதில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. இப்போது அவள் வானத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது. அதைச் சுற்றிலும் உள்ள ஐந்து பெரிய ஏரிகளையும் அவளால் பார்க்க முடிந்தது. கவாகுச்சி, யமனாகா, சாய், மொடொசு, ஷோஜி என்ற அந்த ஐந்து ஏரிகளிலும் விசேஷ மானஸ லிங்கம் அழகாய் பிரதிபலிப்பதை வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

அந்த ஃப்யூஜி மலையின் உச்சியில் இருந்த விசேஷ மானஸ லிங்கத்தை புத்தரைப் போன்ற ஒரு உருவம் வணங்குவதை அவள் தெளிவாகப் பார்த்தாள். சிறிது நேரத்தில் புத்தர் அந்த சிவலிங்கத்திற்குள்ளே போய் மறைந்தார். திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அவளையும் அந்த சிவலிங்கம் இழுப்பது போல உணர்வு தோன்றவே கியோமியும் ஜான்சன் எச்சரித்த ஆபத்தான கணம் அது என்று உடனடியாகப் புரிந்து கொண்டு கவனத்தை சிவலிங்கத்தில் இருந்து கஷ்டப்பட்டுத் திருப்பினாள். முழுவதுமாகத் தன் பழைய நிலைக்குத் திரும்பிய அவள் விசேஷ மானஸ லிங்கத்தை ஒரு முறை வணங்கி விட்டு அந்தத் தியான மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.

அலெக்ஸி பிறந்ததில் இருந்தே இறைவன் இருப்பதை நம்பாதவர். ஆழ்மன சக்தியையும் கூட அவர் நம்பாதவராகத் தான் இருந்தார் என்றாலும் பிற்கால அனுபவங்களும், கற்றுக் கொண்ட வித்தைகளும் அவரை ஆழ்மன சக்தியை நம்ப வைத்திருந்தன. ஆனால் இறைவனைப் பற்றிய அவநம்பிக்கை மட்டும் இன்னமும் மாறாமலேயே இருந்தது. அதனால் அவர் மற்ற இருவரைப் போல் வணங்கி விட்டு தியான நிலைக்குப் போகும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை.

அவர் ஆல்ஃபா அலைகளுக்குச் சென்று தன் கவனத்தை விசேஷ மானஸ லிங்கம் மீது திருப்பினார். சிறிது நேரம் அந்த சிவலிங்கத்தில் இருந்து அவருக்கு எதுவும் பிடிபடவில்லை. சிவலிங்கம் சாதாரணமாகவே தோன்றியது.

ஜான்சனின் எச்சரிக்கை அவசியம் இல்லாதது போல அலெக்ஸிக்குத் தோன்றியது. இந்தியர்கள் தான் சாமி, பூதம் என்று பயப்படுகிறார்கள் என்றால் இந்த ஜான்சனும் சேர்ந்து ஏன் பயப்படுகிறார் என்று தோன்றியது. ஏதாவது சக்தி கண்டிப்பாக அந்த சிவலிங்கத்தில் இருக்கக்கூடும், ஆனாலும் இவர்கள் பயப்படுவது போல எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று அவர் நினைத்தார்.

ஜான்சன் அந்த குருஜியை எங்கள் மூன்று பேரை விடப் பெரிய ஆள் போல நினைத்து விட்டார். நாங்கள் செய்கிற வேலையை அந்த ஆள் செய்ய முடியுமா? பிரசங்கங்கள் செய்வது வேறு, சக்திகளைப் பெற்றிருப்பது வேறு. உலக அளவில் பிரபலம் அடைந்து விட்டால் யாருக்கும் அறிவுரை சொல்லலாம் என்று அந்த குருஜி நினைத்து விட்டார். இதில் கடல் உவமானம் வேறு!....

அலெக்ஸிக்கு வேடிக்கையாக இருந்தது. இந்த எண்ண ஓட்டங்கள் ஆல்ஃபா அலைகளில் இருந்து பீட்டா அலைகளுக்கு அலெக்ஸியைக் கொண்டு வந்து விட்டது புரிய அவர் தன் எண்ணங்களை ஒதுக்கி விட்டு மீண்டும் ஆல்ஃபா அலைகளுக்குப் போனார். அலெக்ஸி மீண்டும் அந்த சிவலிங்கத்தில் தன் கவனத்தை  குவித்தார். சிவலிங்கம் மெல்ல ஒளிர்ந்தது. பின் சிவலிங்கம் திடீரென்று காணாமல் போனது.... சிவலிங்கம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது போல அலெக்ஸிக்குத் தோன்றியது.

அலெக்ஸி மேலும் தன் கவனத்தை ஆழப்படுத்தினார். சிவலிங்கம் இருந்த இடத்தில் ஒரு மகாசமுத்திரம் தெரிந்தது. இது குருஜியின் உவமானத்தால் வந்த வினை என்று நினைத்த அலெக்ஸி சமுத்திரத்தைப் புறக்கணித்து விட்டு சிவலிங்கத்தைத் தேடினார். சமுத்திரத்தைப் புறக்கணிக்க முடியவில்லை. பேரலைகள் வேகமாய் நெருங்கி வருவது போல் அவருக்குத் தோன்றியது. அதைப் பொருட்படுத்தாமல் அலெக்ஸி மானசீகமாக முன்னேறினார். சிவலிங்கம் தென்படவில்லை. காணும் இடமெல்லாம் சமுத்திரத்தின் நீர்ப்பரப்பு... திடீரென்று அலைகளும் நின்று விட்டன.... வினோதமாக இருக்கிறதே என்று திரும்பிப்பார்த்த போது தூரத்தில் அலைகள் தெரிந்தன.... அப்போது தான் அவருக்கு சமுத்திரத்தின் அலைப்பகுதியையும் தாண்டி நிறையவே முன்னேறி வந்திருக்கிறோம் என்று புரிந்தது....

‘உண்மையான சமுத்திரம் என்றால் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது.... மனக்காட்சியானதால் சுலபமாக வந்திருக்கிறோம்.... எங்கே சிவலிங்கம்.....?

திடீரென்று பிரம்மாண்டமாய் சிவலிங்கம் அவர் முன்னால் சமுத்திரத்தில் இருந்து மேல் எழுந்தது. இது அவர் தியான மண்டபத்தில் பார்த்த சாதாரண அளவைக் கொண்ட சிவலிங்கம் அல்ல. அதனைக் காட்டிலும் பலநூறு மடங்கு பெரியது. அலெக்ஸி வெலவெலத்துப் போனார். சிவலிங்கத்திடம் இருந்து விலகிப் பின்னுக்குப் போகப் பார்த்தார். சிவலிங்கம் அவரை நோக்கி முன்னேறியது. அலெக்ஸி பின்னால் திரும்பி ஓடப்பார்த்தார். சமுத்திரம் நிஜமானது போல் ஒரு பிரமை. அவர் சமுத்திரத்தில் மூழ்க ஆரம்பித்தார்.... மூழ்கும் போது சமுத்திரத்தின் அடியிலும் சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மாண்டமாய் தெரிந்தது. சமுத்திரம் அவரை மேல் மட்டத்திற்கு மறுபடி இழுத்தது. மேல்மட்டம் வந்த போது அலெக்ஸி அண்ணாந்து பார்த்தார். சிவலிங்கத்தின் அடிப்பகுதியே கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்தது. அதுவே வானைத் தொட்டு நின்றது.... மீதி எங்கே?

அலெக்ஸியின் இதயம் வாய் வழியாக வந்து விடும் போலத் தோன்றியது. பெரும் பீதியுடன் அலறினார்....

அந்த நேரத்தில் தியான மண்டபத்தின் மிக அருகில் இருந்தவன் மகேஷ் தான். அவன் காரில் வைத்திருந்த தன் லாப்டாப்பை எடுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்று கொண்டிருந்தான். அலறல் சத்தம் கேட்டு தியான மண்டப ஜன்னல் வழியே உள்ளே பார்த்தான்.

அலெக்ஸி குருஜி குறித்திருந்த எல்லையைத் தாண்டி சில அடிகள் சிவலிங்கத்தை நோக்கி முன்னேறி இருந்தார். அலெக்ஸியின் பார்வை விட்டத்தில் இருந்தது. அலெக்ஸியின் கண்கள் பெரிதாய் விரிந்திருந்தன. அந்தக் கண்களில் தெரிந்த பயம் மகேஷிற்கு பசுபதியைக் கொன்றவன் முகத்தில் தெரிந்த பயத்தை நினைவுபடுத்தியது....

மகேஷ் குருஜி அறையை நோக்கி ஓட்டம் எடுத்தான்...

(தொடரும்)
                           
என்.கணேசன்



23 comments:

  1. தீபாவளி போனசுக்கு ஜே!

    ReplyDelete
  2. மிக மிக நல்ல பதிவு; உங்களுக்கு பிளஸ் +1 வோட்டு போடலாம் என்றால் ஒட்டுப்பட்டையே இல்லை!

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!*

    எதிர்பாராத ஆச்சரியம் ...!

    ReplyDelete
  4. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்து அசத்தி உள்ளீர்கள். அருமையான திகிலான அத்தியாயம். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  6. நன்றி, உங்களுடைய இந்த பதிவு தீபாவளியை மேலும் சிறப்புள்ளதாக்கியது.
    https://www.facebook.com/groups/nganeshanfans/

    ReplyDelete
  7. உங்களுடைய தீபாவளி போனஸ் உண்மையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சிதான். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. படிக்க படிக்க சிலிர்த்தது சார். நேரில் பார்ப்பது போல் திகிலாக இருந்தது. உண்மையிலேயே ஏதோ சித்தர் உங்களுக்கு அருள் புரிந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் இந்த மாதிரி அனுபவங்களை இப்படி தத்ரூபமாக எழுத முடியாது. இரண்டே நாளில் இன்னொரு அத்தியாயம் தந்து இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  9. Thx for the real Deepavali Bonus...

    Wish you a happy Deepavali.

    Krishnan

    ReplyDelete
  10. தீபாவளி வாழ்த்துக்கள் . தங்களது எழுத்துகளை காண்பதற்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று எண்ணி இருக்கும்போது பரம ரகசியமாக தாங்கள் தீபாவளி விருந்து படைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  11. Really is episode Matches ^ coincidence Diwali .., This is really great …,

    அருமையோ .., அருமை சார் ., தங்களது bonus பதிவில் .., மானஸ லிங்கமும் தன்னை [bonusஸாக] கொஞ்சம் EXtraaவாக வெளிக்காட்டியுள்ளது...., உண்மையில் ஒரு மரத்தின் ஒரு இலை அசைவிற்கும் கூட காரணங்கள் உண்டு ..., ஆய்ந்து தான் பார்க்கும்போதே., தாங்கும் மனப் பக்குவம் கர்ம பரிபாலனம் சீராகும் போது அனனத்தும் பட்டவர்த்தனமாக உணர்த்த பெறும் .. அதுபோலவே மானஸ லிங்கம் தொடர்பான அனைத்தும் விஷியங்களும்,,,,,,,,....... பதிவிடும் நாள் நேரம் ........................................................ (gaps to be filled will be filled @ right time)

    ReplyDelete
  12. Thanks sir. My hearty diwali wishes to you and your family.

    ReplyDelete
  13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. Thank you for your Diwali surprise sir. Diwali surprise is really great. We also wish you a happy Diwali for you and your family.

    ReplyDelete
  15. It is a sweet surprise sir. Deepavaliku ethavathu puthasa sitela irukumnu vanthu partha paraman ragasiyam.. Really a surprise. Great sweet ! and Thanks a bunch.

    ReplyDelete
  16. what a great surprise!..mmhh..wish to have diwali daily!!!
    super episode...again..

    ReplyDelete
  17. Thanks so much for the unexpected gift!

    ReplyDelete
  18. Wish you a (of course belated) happy deepavali. Thanks for the bonus.

    ReplyDelete
  19. Surprise bonus for everyone.... Keep rocking Ganeshan Sir !!!

    ReplyDelete
  20. ஹை! போனஸ்! அதுவும் எப்பேர்ப்பட்ட போனஸ்! மிக்க நன்றி.

    ReplyDelete