என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, June 20, 2013

பரம(ன்) ரகசியம் – 49
தயன் குருஜியைக் கேட்டார். “உங்கள் ஆராய்ச்சிகளை எங்கே நடத்தப் போவதாக உத்தேசம்

“அதற்காகத் தனியிடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். அங்கே எல்லா நவீன விஞ்ஞான உபகரணங்களும் பொருத்தி இருக்கிறோம். சிவலிங்கத்தை வைக்கும் அறையில் தகுந்த ஆட்கள் மூலம் பூஜைகள், ஹோமங்கள், ஜபங்கள், பாராயணம் எல்லாம் செய்து தெய்வீக அலைகள் நிறைந்திருக்கும்படி செய்திருக்கிறோம். சிவலிங்கத்தை அங்கே கொண்டு போய் வைக்க ஒரு நல்ல முகூர்த்தம் பார்த்து வைத்திருக்கிறேன்....

உதயன் சொன்னார். “அந்த சிவலிங்கத்தை அங்கே வைப்பதற்கு முன் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நாலா பக்கத்தில் இருந்தும் சிறிது சிறிது மண்ணை எடுத்து அனுப்பு. நம் குருவோ, அவர் சக்தியோ அந்த எல்லைகளைக் கடந்து உள்ளே போய் விடாதபடி நான் அரண் ஒன்றை அமைத்துத் தருகிறேன். ஆனால் அந்த அரண் 21 நாட்கள் தான் வலிமையோடு இருக்கும். அதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய முடியாது….”

குருஜி நிம்மதிப் பெருமூச்சு விட்டு நன்றியுடன் சொன்னார். “அது போதும் உதயா.

உதயன் எப்போதுமே முடிந்ததை மட்டும் தான் செய்ய ஒத்துக் கொள்வார். சிவலிங்க ஆராய்ச்சியில் நேரடியாகப் பங்கு கொள்ள முடியாது என்று ஆரம்பத்திலேயே மறுத்து விட்டதைப் போல, செய்ய முடியாததை முடியாதுஎன்று வாய் விட்டுச் சொல்லி ஒதுங்கி விடும் நல்ல பழக்கம் உதயனிடம் இருந்தது.  அதனால் உதயன் ஒன்றைச் செய்ய ஒத்துக் கொண்டால் அது பற்றி யாரும் மேற்கொண்டு கவலைப்பட அவசியமில்லை. குருஜிக்கு பாதி ஜெயித்து விட்டது போல் ஒரு பிரமை...!

“அந்த சிவலிங்கத்திற்கு நித்திய பூஜை செய்ய கணபதியையே இப்போதைக்கு வைத்துக் கொள்கிறாயா என்ன?குருஜியின் தலைக்கு மேல் வெற்றிடத்தைப் பார்த்தபடியே உதயன் கேட்டார். கேட்டவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“ஆமாம்என்ற குருஜி ஏன் சிரிக்கிறாய்என்று நண்பனைக் கேட்டார்.

சீடை மேல் இருக்கும் ஆசை, சிவலிங்கத்தின் மேல் இருக்கும் பக்தியை முந்திக் கொண்டதற்கு அவன் வருத்தப்படுவதைப் பார்த்தேன். இன்னமும் இந்த உலகத்தில் இப்படி பரிசுத்தமாய் ஒருவனால் இருக்க முடிகிறது என்பதே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது

இன்னமும் ரகசியக் காமிரா சீடை சமாச்சாரத்தைப் பிடித்த படத்தை பார்த்திராத குருஜி நண்பனிடம் அந்தக் காட்சியை விளக்கச் சொல்லிக் கேட்டுப் புன்னகைத்தார். குருஜிக்கு முதலில் கணபதியை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் எண்ணம் பெரிதாக இருக்கவில்லை. ஆனால் இப்போது அவனையும் பயன்படுத்தினால் என்ன என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அவனுக்கும் அந்தச் சிவலிங்கத்திற்கும் நல்ல இணக்கம் இருக்கிறது....

குருஜி நண்பனிடம் கேட்டார். “உதயா எங்கள் ஆராய்ச்சிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?

வெற்றி பெறும் அல்லது வெற்றி பெறாது என்பதைச் சொல்லாமல் உதயன் சொன்னார். “சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

உதயன் சுவாரசியத்தோடு நிறுத்திக் கொண்டது குருஜிக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது. குருஜி சொன்னார். ஜான்சன் இது போன்ற ஆராய்ச்சிகளில் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர்.... உலகப் புகழ் பெற்றவர்.. அனுபவம் உள்ளவர்....

உதயன் இடைமறித்தார். அவருக்கு அறிவும் அனுபவமும் இருக்கலாம். ஆனால் அவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் இல்லை. சித்தர்களையோ, சிவலிங்கத்தையோ மானசீகமாய் உணரக் கூடிய சக்தி இருக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்... ஜான்சனுக்குப் பதிலாக ஈஸ்வர் ஆராய்ச்சியில் இறங்குவதாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஜான்சனுக்கு இருக்கும் அறிவு, அனுபவம் இவனுக்கும் இருக்கிறது. அதோடு சேர்ந்து அவன் உடம்பில் இந்த தேசத்தின் ரத்தம் ஓடுகிறது.... பிறந்து வளர்ந்தது அன்னிய தேசம் ஆனாலும்  குணத்தில் இவன் இந்தியன் தான். அதனால் தான் சிவலிங்கத்தை இவனிடம் ஒப்படைக்க பசுபதி சொல்லி இருக்கிறார்...

குருஜிக்கு அவன் வேதபாடசாலை மண்ணைத் தொட்டு வணங்கியது நினைவுக்கு வந்தது. ஈஸ்வர் எதிரணியில் இருப்பதை அவராலும் ரசிக்க முடியவில்லை தான். ஆனால் என்ன செய்வது....!

குருஜி பெருமூச்சு விட்டார். உதயன் நண்பனைக் கேட்டார். “ராமா, நீ இதில் ஈடுபடுவதென்று முழு மனதோடு தானே தீர்மானித்திருக்கிறாய். மாற்றம் எதுவும் இல்லையே

இனி மாற்ற முடியாது உதயா. புலி மீது சவாரியை நான் ஆரம்பித்து விட்டேன். இனி இடையில் இறங்க முடியாது.....குருஜி தன் நிலையை வெளிப்படையாகச் சொன்னார்.

உதயன் நண்பனை மிகுந்த அன்புடன் பார்த்துச் சொன்னார். நான் வாக்குறுதி தந்தது போல் நம் குரு உன் ஆராய்ச்சிகளையோ, சிவலிங்கத்தையோ நெருங்காமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதோடு பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று நினைத்து விடாதே. நீ ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் ராமா. புலி மேல் சவாரி சௌகரியமாக இருக்காது...

அது தெரிந்தே தான் நான் இதில் இறங்கி இருக்கிறேன் ராமா.. சுலபமானதில் ஜெயிப்பதில் என்ன பெருமை இருக்கிறது?

தன் நண்பன் பாபுஜி, மற்றும் மற்ற ஆறு வெளிநாட்டு ஆட்கள் பற்றித் தானாகச் சொல்வாரா என்று பொறுத்திருந்து பார்த்த உதயன் இனி அது அவர் வாயிலிருந்து வரப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டார். என்ன தான் நண்பனானாலும் தேவைக்கு மேல் ஏன் தெரிவிக்க வேண்டும் என்று குருஜி நினைத்தது அவருக்கு வருத்தம் ஏற்படுத்தவில்லை. அந்தக் காலத்தில் இருந்தே சில விஷயங்களில் ரகசியமாக இருப்பது குருஜிக்கு இயல்பாக இருந்திருக்கிறது....

ஆனாலும் உதயன் தன் நண்பனை மிகவும் நேசித்தார். இந்த இமயமலையில் ஒன்றாகச் சேர்ந்து சுற்றிய நாட்கள், தேடிய தேடல்கள் எல்லாம் சுலபத்தில் மறக்கக் கூடியவை அல்ல. அவர் நேசித்த ஆட்கள் வேறு யாரும் இப்போது உயிரோடு இல்லை. நண்பன் செய்வது சரியா தப்பா என்று அவர் கவலைப் படவில்லை. அவர் நீதிபதி அல்ல, நண்பர்.... ஒரு நண்பனால் நேசிக்க மட்டுமே முடியும்....

உதயன் குருஜியிடம் ஆராய்ச்சி நடத்த இருக்கும் இடம், சிவலிங்கம் கொண்டு போய் பிரதிஷ்டை செய்யும் நாள், நேரம், ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப் போகும் நாள், நேரம் பற்றிய விவரம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  என்ன செய்ய வேண்டும், எப்படி எப்போது செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்து முடிவு செய்து கொண்டு விட்டு கடைசியில் உதயன் எழுந்து தன் நண்பனை அணைத்துக் கொண்டார். “ராமா, இனியொரு தடவை நாம் இருவரும் சந்திப்போமா என்பது நிச்சயமில்லை.... இது நம் கடைசி சந்திப்பாகக் கூட இருக்கலாம்.  இன்றாவது உன்னைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி...

குருஜிக்கு கண்கள் லேசாகக் கலங்கின. கடைசி சந்திப்பாகக் கூட இருக்கலாம் என்று நண்பன் சொன்னது அவர் மனதை என்னவோ செய்தது. அணைத்துக் கொண்ட நண்பனிடம் எத்தனையோ சொல்ல நினைத்தாலும் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை....

சில நிமிடங்கள் கழித்து நண்பர்கள் பிரிந்தார்கள்.


பார்த்தசாரதி தென்னரசு வீட்டை சொன்ன நேரத்திற்குக் கால் மணி நேரம் முன்னதாகவே போய் சேர்ந்தார். விஷாலியை ஏதோ ஒரு வேலை கொடுத்து முன்பே அனுப்பி விட்டிருந்ததால் வீட்டில் தென்னரசு தனியாகத் தான் இருந்தார். பார்த்தசாரதியை மிகுந்த மரியாதையோடு தென்னரசு வரவேற்றார். தென்னரசுவின் உத்தியோகம் மற்றும் குடும்பம் பற்றி முதலில் விசாரித்துத் தெரிந்து கொண்ட பார்த்தசாரதி பரமேஸ்வரனின் குடும்பத்திற்கும், தென்னரசுவிற்கும் இடையே எப்படி தொடர்பு என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார்.

தென்னரசு சொன்னார். “பரமேஸ்வரனோட மகன் சங்கரும் நானும் சின்ன வயதில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். நெருங்கிய நண்பர்கள். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். பரமேஸ்வரன் மகள் மீனாட்சி கணவன் விஸ்வநாதனும் கல்லூரியில் எங்களுடன் படித்த நண்பன்...

சின்ன வயதில் பரமேஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி போவீர்களா?

போவேன். சங்கரும் என் வீட்டுக்கு வருவான். ஆனால் நான் அவர்கள் வீட்டுக்குப் போனது தான் அதிகம். காரணம் அவன் வீடு பெரிசு. விளையாட நிறைய இடம் இருக்கும்....

சங்கரைப் பற்றி சொல்லுங்களேன்...

“ரொம்ப நல்லவன்... பணமும், அறிவும் எக்கச்சக்கமாய் இருந்தும் அடக்கமாகவும், நல்லவனாகவும் இருக்க முடிவது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அவன் இருந்தான். ஒரு தடவை கூட அவன் வேறு மாதிரியாக இருந்ததை நான் பார்க்கலை...

அந்த வீட்டில் மற்றவர்கள் உங்களிடம் எப்படி இருப்பார்கள்?

சங்கர் இங்கே இருந்த வரை பரமேஸ்வரன் என்னிடமும் பிரியமாய் இருப்பார். சங்கரோட பாட்டி ஆனந்தவல்லி அப்படி இருக்க மாட்டாங்க. நான் ஒரு சாதாரண குடும்பத்துப் பையன்கிறது தான் அதற்கு காரணம்னு நினைக்கிறேன்... அவங்க பார்க்கிறதே நாலு அடி தள்ளி நிற்க வைக்கும்.....

பார்த்தசாரதிக்கு அவர் சொல்ல வந்தது புரிந்தது. கிழவி அந்தக் காலத்தில் இருந்தே அப்படித்தானா?

பார்த்தசாரதி கேட்டார். “மீனாட்சி?

மீனாட்சியும் நல்ல மாதிரி... கர்வம் சுத்தமாய் கிடையாது

சங்கர் இருந்த வரை பரமேஸ்வரன் உங்க கிட்ட பிரியமாய் இருந்தார்னு சொன்னீங்க. சங்கர் போனதுக்கப்புறம்?

என் கிட்ட பேசறதையும், பழகறதையும் அவர் கூடுமான வரை தவிர்த்தார். என்னைப் பார்க்கறப்ப எல்லாம் அவருக்கு மகன் ஞாபகம் வந்திருக்கலாம்... அதனால நானும் அவர் வீட்டுக்குப் போகிறதை அதிகமாய் தவிர்த்து விட்டேன். மீனாட்சி கணவன் விஸ்வநாதன் கூட என் நண்பன் தான்னாலும் கூட நான் அங்கே போகிறது இப்பவெல்லாம் அபூர்வமே...

சங்கர் அமெரிக்கா போனதுக்கப்புறமும் உங்க கூட தொடர்பில் இருந்தாரா?

ஆமாம்.. மாசத்துல ஒரு தடவையாவது பேசிக்காமல் இருக்க மாட்டோம்...

அவர் மகன் ஈஸ்வர் கிட்டயும் பேசுவீங்களா?

“அதிகமாய் இல்லை. ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுவோம்....

“இந்தியா வந்ததற்குப் பிறகு ஈஸ்வரைச் சந்திச்சீங்களா?

“ஆமா. ஈஸ்வர் ஒரு தடவை இங்கே வீட்டுக்கு வந்திருந்தான்....

“சங்கரோட பெரியப்பா பசுபதியை நீங்கள் சந்திச்சிருக்கீங்களா....?

தென்னரசு கூடுமான வரை அமைதியாய் பதில் சொல்ல முயன்று அதில் வெற்றியும் கண்டார். சின்னவனாய் இருக்கிறப்ப அவர் இருக்கிற தோட்ட வீட்டுக்கு சங்கரோட சேர்ந்து போயிருக்கேன்.... அப்ப பார்த்தது....

உங்க கிட்ட அவர் பேசி இருக்காரா?

“அவர் சங்கர் கிட்டயே அதிகமாய் பேசி நான் பார்த்ததில்லை... எப்பவுமே அவர் ஒரு தனி உலகத்தில் இருக்கிற மாதிரி இருக்கும்....

“சங்கரும், நீங்களும் தோட்ட வீட்டுக்குப் போய் என்ன செய்வீங்க?

“தோட்டத்தில் விளையாடுவோம். மாமரம், நெல்லிக்காய் மரமெல்லாம் அங்கே இருக்கு. மாங்காய், நெல்லிக்காய் எல்லாம் பறிச்சு சாப்பிடுவோம்..

“தோட்டத்தில் மட்டும் விளையாடுவீங்களா. இல்லை வீட்டுக்குள்ளேயும் போய் விளையாடுவீங்களா?

சிறு தயக்கத்திற்குப் பின் தென்னரசு சொன்னார். “வீட்டுக்குள்ளேயும் போய் விளையாடுவோம்....

பசுபதி எதுவும் சொல்ல மாட்டாரா?

“அவர் தியானத்தில் உட்கார்ந்து விட்டால் அங்கே என்ன நடந்தாலும் அவர் தியானத்தில் இருந்து கலைய மாட்டார். தியானத்தில் இல்லாமல் இருந்தாலும் அவர் எங்களை வேடிக்கை பார்ப்பாரே ஒழிய திட்டியதோ, வெளியே போய் விளையாடுங்கள் என்று சொன்னதோ கிடையாது...

“விளையாடும் போது அந்த சிவலிங்கம் இருந்த பூஜை அறைக்குள்ளேயும் போவீங்களா?

அதுக்குள்ளே மட்டும் நுழைய மாட்டோம்....

“ஏன்?

“சங்கர் அங்கே மட்டும் போக வேண்டாம்டா. எங்கப்பாவே போக மாட்டார்.னு  ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறான். அதனால் அந்த பூஜை அறை தவிர மற்ற இடங்களில் விளையாடுவோம்....

எதையுமே ஏன் எதற்குன்னு கேட்காமல் ஏத்துக்கறது பொதுவாய் அந்த வயசுல இல்லாத பழக்கம் தானே. நீங்கள் ஏன் எதற்குன்னு சங்கர் கிட்ட கேட்டதில்லையா?
                            
அந்தக் காலத்துல பெரியவங்க காரணம் பெரும்பாலும் சொல்ல மாட்டாங்க. கேள்வி கேட்டா அதிகப்பிரசங்கித் தனம், எதிர்த்துப் பேசறதுன்னு அர்த்தம் எடுத்துகிட்டுத் திட்டுவாங்க. அதனால சங்கரும் கேட்டதில்லை. புரிஞ்சுகிட்டு சங்கர் கிட்ட நானும் கேட்டதில்லை...

சங்கரும் நீங்களும் ஒரு தடவை சிவலிங்கம் ஜொலிக்கிறதைப் பார்த்ததாய் கேள்விப்பட்டேன். அதைப் பத்தி சொல்லுங்களேன்....

“ஒரு நாள் மதிய நேரம் தோட்டத்தில் விளையாடிக் களைச்சுப் போய் தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே நானும் சங்கரும் நுழைஞ்சோம். திடீர்னு மின்னல் வெளிச்சம் அந்த சிவலிங்கத்து மேலே விழுந்தது மாதிரி இருந்தது. ரெண்டு பேருக்கும் எங்கள் கண்ணையே நம்ப முடியலை. நான் அவன் கிட்ட கேட்டேன்.  டேய் நீ அந்த வெளிச்சத்தைப் பார்த்தியா?அவன் சொன்னான். “ஆமாடா. நீயும் பார்த்தியா?”  சங்கரோட பெரியப்பா சிவலிங்கம் முன்னால் தியானத்துல உட்கார்ந்திருந்தார். அவர் கிட்டே பிறகு நாங்கள் பார்த்ததைச் சொன்னோம். அவர் ஒன்னும் சொல்லலை... ஆனால் அதையே சங்கர் பரமேஸ்வரன் கிட்ட சொல்லி திட்டு வாங்கிகிட்டான்.... எல்லாம் எங்கள் கற்பனைன்னு அவர் நினைச்சுகிட்டார்.

அதற்குப் பிறகு எப்பவாவது சிவலிங்கம் ஜொலிக்கிறதை நீங்கள் பார்த்தது உண்டா?

“இல்லைசற்று வேகமாகவே தென்னரசு சொன்னது போல் பார்த்தசாரதிக்குத் தோன்றியது.

“உங்களுக்குப் பொழுது போக்கு என்ன?

“நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

“அதிகம் என்ன மாதிரி புத்தகம் படிப்பீங்க?

தமிழ் இலக்கியம் படிப்பேன். கம்பன், பாரதி, புறநானூறு எல்லாம் படிப்பேன்

ஆன்மிக புத்தகம் படிக்கிறதுண்டா?

“இல்லை...

“புத்தகம் வாங்கிப் படிப்பீங்களா?

“இல்லை. ரெண்டு நூலகங்கள்ல இருந்து புத்தகம் எடுத்துப் படிப்பேன். ஒன்று எங்கள் கல்லூரி நூலகம். இன்னொன்று தனியார் நூலகம்....

பார்த்தசாரதி நூலகத்தின் விலாசம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் போன அதே நூலகம் தான். இதில் தென்னரசு எதையும் மறைக்கவில்லை. 

“சிவலிங்கம் திருட்டுப் போகக் காரணம் அது ஜொலிக்கறதாக இருக்குமோ. ஜொலிப்பதைப் பார்த்து விட்டு ஏதோ அதில் வித்தியாசமாய் இருக்கிறது என்று நினைச்சு செய்ததாய் இருக்குமோ?

தெரியலை

“நீங்கள் அந்த சிவலிங்கம் ஜொலிக்கிறதைப் பத்தி வேற யார் கிட்டேயாவது சொல்லி இருக்கீங்களா?

“சின்ன வயதில் ரெண்டு மூணு நண்பர்கள் கிட்ட நானும் சங்கரும் சேர்ந்தே சொல்லி இருக்கிறோம். அவங்க நம்பலை. அதற்குப் பிறகு நாங்கள் அதுபத்தி யார் கிட்டேயும் சொன்னதில்லை....

அதுபத்தி நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி பேசிகிட்டது உண்டா?

“சில நேரங்களில் பேசி இருக்கிறோம்.

சமீப காலமாக யார் கிட்டயாவது இதைப் பத்தி சொல்லி இருக்கீங்களா?

“இல்லை

“அந்தத் தோட்ட வீட்டுக்குப் பிறகு எப்போதாவது போய் இருக்கிறீர்களா?

“இல்லை

“நீலகண்ட சாஸ்திரி எழுதின ஆன்மிக பாரதம்கிற புத்தகம் படிச்சிருக்கீங்களா?

“இல்லைவேகமாய் வந்தது பதில்.

பார்த்தசாரதிக்குப் பதில் கிடைத்து விட்டது. நன்றி சொல்லி விட்டு அவர் கிளம்பி விட்டார்.

தென்னரசு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். பார்த்தசாரதி எவ்வளவு தூரம் அவர் சொன்னதை நம்பினார் என்பது தெரியவில்லை.... பார்த்தசாரதி சந்தேகப்பட்டால் கூட தென்னரசுவை எதிலும் சம்பந்தப்படுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை தென்னரசு நன்றாக அறிவார்.
  
அமைதியாக அமர்ந்திருக்கையில் பார்த்தசாரதியின் ஒரு கேள்வி மீண்டும் நினைவில் வந்தது. அதற்குப் பிறகு எப்பவாவது சிவலிங்கம் ஜொலிக்கிறதை நீங்கள் பார்த்தது உண்டா?

வேறு யாருமே கண்டிராத அந்த இரண்டாவது காட்சி, சங்கரிடம் கூட பகிர்ந்திராத அந்தக் காட்சி அவர் மனத்திரையில் மீண்டும் ஒரு முறை வந்து போனது. இப்போது நினைத்தாலும் அவருக்கு மயிர்க்கூச்செறிகிறது.....

அந்தக் காட்சியைக் கண்ட பிறகு அவரால் என்றுமே அந்த சிவலிங்கத்தை மறக்க முடிந்ததில்லை!...

(தொடரும்)
-          என்.கணேசன்5 comments:

 1. உங்கள மாதிரி சஸ்பெஸ் வைக்க யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன்......நல்ல வேகமாக கதை நகர்கிரது.......


  வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அர்ஜுன்June 20, 2013 at 6:42 PM

  குருஜி உதயன் நட்பின் நுணுக்கங்களையும் குறை நிறையோடு சொல்லி இருக்கிறீர்கள். உதயன் நண்பனால் நேசிக்க மட்டுமே முடியும் என்று எண்ணுவது மனதை தொடுகிறது, தென்னரசு என்ன காட்சி கண்டார் என்று சஸ்பென்ஸோடு நிறுத்தி இருக்கிறீர்கள். ரீசண்டாக இத்தனை விருவிருப்பு மிக்க நாவல் வேறு படிக்கவில்லை. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. பார்த்தசாரதிக்குப் பதில் கிடைத்து விட்டது.//

  ”அதற்குப் பிறகு எப்பவாவது சிவலிங்கம் ஜொலிக்கிறதை நீங்கள் பார்த்தது உண்டா?”//

  ஜொலிக்கும் சஸ்பென்ஸ்..!

  ReplyDelete
 4. இரண்டாவது காட்சியை அறிய ஆவல்...

  ReplyDelete