என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, June 24, 2013

சத்சங்கம் ஏன் முக்கியம்?அறிவார்ந்த ஆன்மிகம் - 9


மஸ்கிருதத்தில் சத்என்றால் உண்மை என்று பொருள். ‘சங்கம்என்றால்  கூடும் இடம் என்று பொருள்.  சத்சங்கம் என்றால் உண்மை இணையும் இடம் என்று பொருள் ஆகிறது. நம் முன்னோர்கள் பொதுவாக குருவுடன் இருத்தல், ஒழுக்கத்திலும் ஞானத்திலும் மேன்மையானவர்களுடன் இருத்தல் ஆகியவற்றை சத்சங்கம் என்று சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்கள் பேச்சைக் கேட்பது எல்லாம் சத்சங்கமாகக் கருதப்படுகிறது.

ஆதிசங்கரர் தன் பஜகோவிந்தத்தில் கூறுகிறார்.
சத்சங்கத்வே நிர்சங்கத்வம்
நிர்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சலத்துவம்
நிச்சலத்வே ஜீவன் முக்தி.

இதன் பொருள்: மேலான ஞானமுடைய பெரியோர்களிடம் இணைந்தால் இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் சிந்தித்திருக்கும் போது பந்த பாசங்கள் என்னும் பற்றுகள் விலகும். பற்றுகள் விலகினால் தூய்மையானவன் ஆவாய். தூய்மையானவனாகிய பின்னர் ஜீவன் முக்தி ஏற்படும்.

ஜீவன் முக்தி அடைய முதல் படியாக இருப்பது சத்சங்கம் என்று ஆதிசங்கரர் சொல்கிறார். மேலான ஞானமுள்ள பெரியோரிடம் பழகும் போது சிந்திக்க நல்ல உயர்வான விஷயங்கள் நிறைய கிடைக்கும். அவை விதைகளைப் போன்றவை. அவை வேர் விட வேர் விட சிந்தித்துத் தெளிவடைய நிறைய இருக்கும். இதயத்தின் ஆழத்தில் இருந்து எழும் கேள்விகளுக்குப் பதிலை மனிதன் தனிமையிலேயே தேடிப் பெற வேண்டி இருக்கிறது. காரணம், பெரியோர்களிடத்திலே இருந்து கிடைக்கும் தகவல்களே ஆனாலும் கூட, கிடைக்கும் தகவல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் ஒன்றுக்கு ஒன்று முரண் போலக் கூடத் தோன்றலாம். அவற்றில் உண்மை எது என அறிய மனிதன் தனிமையில் தனக்குள்ளேயே சென்று விடையைத் தேட வேண்டி இருக்கும். அப்படி கிடைக்கும் பதில் உண்மையை அவனுக்குப் பல பரிமாணங்களில் விளக்கும். அப்படி விளங்கிய பின் அவன் அடையும் தெளிவு, தானாக பற்றுக்களை அகற்றி அவன் அகத்தைத் தூய்மைப் படுத்தும். அகம் எல்லா மாசுகளையும் களைந்து பரிசுத்தமானால் ஜீவன் முக்தி உடனடியாகக் கிடைத்து விடும். இப்படி சத்சங்கம் ஒரு சங்கிலித் தொடர் போல (சத்சங்கம்-தனிமை, சிந்தனை-பற்று விலகல்-தூய்மை-ஜீவன் முக்தி) ஜீவன் முக்தி வரை ஒருவரை அழைத்துச் செல்ல வல்லது என்கிறார் ஆதிசங்கரர்.

பகவத் கீதைக்கு இணையானதாகச் சொல்லப்படும் யோக வாசிஷ்டம் கூட சத்சங்கம் குறித்து மேன்மையாகச் சொல்கிறது. அதில் இராமனுக்கு வசிஷ்டர் உபதேசம் செய்கிறார்.

நல்லோர் சேர்க்கையால் நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறியும் ஞானம் ஏற்படும். இதனால் எல்லா செல்வத்தையும் அடைய முடியும்.

சத்சங்கம் எல்லா ஆபத்துக்களையும் விலக்க வல்லது. நமது ஆன்ம வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் அறியாமையை விலக்கும் வலிமை சத்சங்கத்திற்கு மட்டுமே உண்டு.

அறியாமையை அழிப்பதும், உலகைப் புரிந்து கொள்ள உதவுவதும், மனதின் வியாதிகளைப் போக்க உதவுவதும் இந்த சத்சங்கமே.

மழைக்குப் பின் எப்படி பூக்கள் மாசுகள் நீங்கி தங்கள் இயற்கை அழகுடன் பிரகாசிக்குமோ அப்படியே சத்சங்கத்தினால் நமது அறிவு பிரகாசிக்கும்.

எப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்பட்டாலும், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட ஒருவன் சத்சங்கத்தைக் கைவிடுதல் கூடாது.

சத்சங்கம் நல்ல வழியைக் காட்டும். நமக்கு உள்ளே உள்ள இருட்டை சூரிய ஒளி போல நீக்கும். எனவே நல்ல அறிவுடையவன் சத்சங்கத்தை விட்டு நீங்க மாட்டான்.

மன அமைதி, எதையும் ஆய்ந்து அறிதல், சத்சங்கம் இம்மூன்றுமே ஒருவனுக்கு மகிழ்ச்சி தருவன. இவற்றின் துணை இருந்தால் பிறவிப் பெருங்கடலைத் துன்பமின்றிக் கடத்தல் எளிதாகும்

இப்படி வசிஷ்டரும் நல்லது-கெட்டது பகுத்தறியும் சக்தி, அறியாமையை விலக்கும் சக்தி, அக இருட்டைப் போக்கும் சக்தி, பிறவிப் பெருங்கடலைத் துன்பமின்றிக் கடக்கும் சக்தி போன்ற முக்கிய சக்திகள் சத்சங்கத்தால் ஒருவனுக்குக் கிடைக்கும் என்கிறார்.

ஆன்மிக உன்னதங்களை அடைய மட்டுமல்ல லௌகீக மேன்மைகளையும், வெற்றிகளையும் அடைவதில் கூட சத்சங்கத்திற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. 

நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு என்கிறார் திருவள்ளுவர்.

(பொருள்: நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறி அந்த நிலத்தின் தன்மையை நீர் பெற்று விடும். அது போல மனிதனுக்கு அறிவானது தாம் சேர்ந்திருப்பவர்களின் தன்மைக்கேற்ப மாறி விடும்).

இதற்கான எத்தனையோ உதாரணங்களை நம்மைச் சுற்றிலும் நாம் பார்க்கலாம். யாரிடம் நெருங்கிப் பழகுகிறோமோ அவர்களின் தன்மைகளில் சிலதாவது நம்மைத் தொற்றிக் கொள்ளவே செய்கின்றன. அப்படித் தொற்றிக் கொள்பவை சிறிது சிறிதாக நம்முள் வேரூன்றவே செய்கின்றன. பின் அவையும் நம்மில் ஒரு பகுதியாகவே விடுகிறது.

இந்த உண்மை மற்றவர்களை விட அதிகமாக இளைஞர்களுக்குப் பொருந்தும். இளமையைக் கற்பூரப் பருவமாக உவமை சொல்வார் கவியரசு கன்ணதாசன். எதுவும் சீக்கிரம் பற்றிக் கொள்ளும் பருவம் அது.  எத்தனையோ இளைஞர்கள் வழிமாறி சீரழிவதற்கு அவர்களுடைய சேர்க்கைகளே காரணம் என்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். சிந்திக்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளும் பருவம் அது என்பதால் இளமைப் பருவத்தில் சத்சங்கத்தின் பங்கு மிக வலிமையானது.   

அதனால் தான் அக்காலத்தில் குருகுலவாசம் என்ற வழக்கம் இருந்தது. கல்வி பயிலும் காலம் முடியும் வரை குருகுலத்திலேயே குழந்தைகள் இருக்கும் முறை இருந்தது. குருவின் கண்பார்வையிலேயே முழு நேரமும் இருப்பதால் தடம் மாறும் வாய்ப்புகள் கிடையாது. சூழ்நிலை முழுவதும் கல்வி, மேன்மையான விஷயங்கள் என்னும் வகையிலேயே இருக்கும். இது சத்சங்கத்தின் முக்கியவத்தை நம் முன்னோர் நன்றாக அறிந்திருந்ததால் கடைபிடிக்கப்பட்ட முறையாகவே தோன்றுகிறது.

இளமைக்கு சத்சங்கம் மிக முக்கியம் என்றாலும் மற்ற வயதினர்க்கும் அதன் பயனைக் குறைத்து எண்ணி விட முடியாது. மேலோருடன் பழகும் போது உயர்ந்த சிந்தனைகளில் நம் மனப்போக்கு இருப்பதையும், கீழோருடன் பழகும் போது அதற்கு எதிர்மாறான விதத்தில் நம் மனப் போக்கு இருப்பதையும் நாம் எப்போதும் காண முடியும். சிலர் சேர்க்கை நமக்கு ஊக்கம் தருவதாக இருக்கும். சிலர் சேர்க்கையோ மனக்கிலேசத்தைத் தருவதாகவே இருக்கும்.

உறவுகள் இறைவன் தந்தவை. அவற்றை நாம் மாற்ற முடியாது. ஆனால் யாருடன் அதிகம் பழகுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அந்த சுதந்திரம் நமக்கு இருக்கிறது. எனவே சத்சங்கம் நல்ல முறையில் ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம்.  

சென்று காணவும், பழகவும் தகுந்த மேலோர் இல்லை என்றால் நல்ல உயவான கருத்துக்களைச் சொல்லும் புத்தகங்களைப் படிக்கலாம். அதுவும் ஒருவகை சத்சங்கமே. அவையும் மேலான மனநிலைக்கு அழைத்துச் செல்லவும், சிந்திக்கத் தூண்டவும் வல்லமை படைத்தவை.  எனவே லௌகீகம், ஆன்மிகம் என்ற இருவேறு பாதைகளிலும் முன்னேறிச் செல்ல நல்ல சத்சங்கத்தை நாடுவோமாக!

-என்.கணேசன்   


நன்றி: தினத்தந்தி ஆன்மிகம் 7-5-2013 

8 comments:

 1. குறளோடு நல்ல விளக்கம்... நன்றி...

  ReplyDelete
 2. //எத்தனையோ இளைஞர்கள் வழிமாறி சீரழிவதற்கு அவர்களுடைய சேர்க்கைகளே காரணம் என்பதைப் பல இடங்களில் பார்க்கிறோம். சிந்திக்காமல் எதையும் ஏற்றுக் கொள்ளும் பருவம் அது என்பதால் இளமைப் பருவத்தில் சத்சங்கத்தின் பங்கு மிக வலிமையானது. //

  // உறவுகள் இறைவன் தந்தவை. அவற்றை நாம் மாற்ற முடியாது. ஆனால் யாருடன் அதிகம் பழகுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அந்த சுதந்திரம் நமக்கு இருக்கிறது. எனவே சத்சங்கம் நல்ல முறையில் ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியம். //

  மிகவும் அருமையான கருத்துக்கள்! மிக்க நன்றி.

  ReplyDelete
 3. 100% true, I still remember the days I had spent with my Aunty and Uncle who had thought good behaviors, even after so many years I am following the good discipline learnt from them.

  ReplyDelete
 4. Reading your blogs regularly is itself means we are in "Good Satsangam". Continue your work as usual. Thanks for your great service. Wish you all the very best in life.

  ReplyDelete
 5. இது நடக்குமா வாய்ப்பு உள்ளதா?

  http://globeisafamily.blogspot.in/2013/06/is-nostradamus-predicted-tamil-leader.html

  ReplyDelete
 6. முன்னோர்கள் பொதுவாக குருவுடன் இருத்தல், ஒழுக்கத்திலும் ஞானத்திலும் மேன்மையானவர்களுடன் இருத்தல் ஆகியவற்றை சத்சங்கம் என்று சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பது, அவர்களுடன் பேசுவது, அவர்கள் பேச்சைக் கேட்பது எல்லாம் சத்சங்கமாகக் கருதப்படுகிறது...

  நல்ல குரு கிடைத்து விட்டால் நல்லது நம் தேடலுக்கு ஏற்ப குரு கிடைப்பார் என்பார்கள்.
  அருமையான் பகிர்வு.
  நன்றி.

  ReplyDelete
 7. இறைவன் அருளால், இன்று குவைத் நாட்டில் தமிழில் ஒரு சத்சங்கம் தொடங்குகிறோம். தங்களுடைய இந்த வலைத்தளம் பெரும் கருவூலமாக பயன்படும் என்று நம்புகிறேன். நன்றி ஐயா.
  ராஜராஜன்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள். நன்மைகள் பெருகட்டும்.

   Delete