சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 18, 2013

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?




ல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.

அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.

மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.

அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?

முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது?  என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்

அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்

பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?

அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை

அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்

பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?

முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..

அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை

இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....

முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.

-          பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.

சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

-      -    என்.கணேசன்
   

10 comments:

  1. மிக அருமையான தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி நன்பரே..

    ReplyDelete
  2. ஆம். உணர்ந்திருக்கிறேன். உங்கள் பதிவால் மறுபடி உறுதிப் படுத்திக் கொள்கிறேன். இறைகருணைக்கு நன்றி. உங்களுக்கும்.

    ReplyDelete
  3. பலமுறை...

    மற்றவர்களுக்கும்-எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதையும்-சந்தோசமாக-மனநிறைவோடு...

    ReplyDelete
  4. Mikka nandri Thiru Ganesan avargale.

    ReplyDelete
  5. நம்முடன் எவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளன .நம் வாழ்க்கையை நேர் மறையாக அணுகும் முறை குறித்த விளக்க பதிவு நன்றி கணேசன் சார் .

    ReplyDelete
  6. புத்துணர்ச்சியூட்டும் பதிவு. மிகப் பல வருடங்களாக மறந்திருந்த பழக்கத்தை மீண்டும் தங்களால் இன்று ஆரம்பித்தேன்.அருமையான பதிவுக்கு, பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. Hi Boss,
    After long gap I came to your site......
    Once again as usual Thalai va-nin- அருமையான பதிவு....
    Thanks with regards,
    G.Ganesh,
    Saudi Arabia.

    ReplyDelete
  8. அருமையான பகிர்விற்கு நன்றி! இந்த உண்மையை உணர்ந்தால் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை... எனக்குப் பிடித்த, இந்தப் பதிவை ஒட்டிய இரண்டு வாசகங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன் -

    For your heart to remain happy keep it always filled with gratefulness.
    Gratefulness is the secret way to the Divine.
    - The Mother [p-98, White Roses, Sixth Edition, 1999]

    There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle. - Albert Einstein


    ReplyDelete
  9. Well Sir. I have a concern Sir; if this article also covers the other side of the this topic like how the people should feel/take/think when they really have problems like divorced, attacked by diseases, etc ? would be complete. In the fact, they are really burdening because of any one of these minus (as mentioned in this article "இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம்") OR is this article written for the befit of the people who has no such issues but not taking the life positive ? If so, it's well said in this.

    Thanks!
    Thangavel

    ReplyDelete
  10. thank you from BENZROMA. MALAYSIA.

    ReplyDelete