சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 20, 2012

பரம(ன்) ரகசியம் – 23



ஸ்வர் வீட்டில் இருந்து ஒவ்வொரு காராக வெளியே செல்வதை ஜன்னல் வழியே பார்த்தான். பரமேஸ்வரன், விஸ்வநாதன், மகேஷ் எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்று விட்டார்கள். மகேஷ் மட்டும் போகும் முன் சாயங்காலம் பார்க்கலாம்என்று சொல்லி விட்டுப் போனான். அவன் வந்து போன வேகம் அவன் மீனாட்சி அனுப்பி தான் வந்து சொல்லி விட்டுப் போகிறான் என்பதை ஈஸ்வருக்கு தெளிவாகவே விளக்கியது. மீனாட்சி சமையலறையில் வேலையாக இருந்தாள். ஈஸ்வர் வந்ததால் அதிகாலையில் படிக்காமல் விட்ட தினப்பத்திரிக்கையை ஆனந்தவல்லி தனதறையில் படித்துக் கொண்டிருந்தாள்.

எனவே ஈஸ்வருக்கு தேவையான தனிமை கிடைத்தது. சிவலிங்கம் விஷயமாக இனி என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு விளங்கவில்லை. அது அவனை இந்தியா வரத்தூண்டியது. வந்தான். இங்கு வந்த பின்னும் அது அந்தரத்தில் நிற்பது போல ஒரு காட்சி தெரிந்தது, குடும்ப உணர்ச்சிப் போராட்டங்களில் என்னை மறந்து விடாதே என்று சொல்வது போல இருந்தது. அதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு அந்த சிவலிங்கம் பற்றி தெரிந்ததெல்லாம் அவன் அப்பா சொன்னது தான். அவர் சொன்ன விஷயங்களும் அவன் பிறப்பதற்கு முந்தையவை. பசுபதி பற்றியும், சிவலிங்கம் பற்றியும் முழுவதும் தெரிந்து கொள்ள மீனாட்சி, பரமேஸ்வரன், ஆனந்தவல்லியுடன் அது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்து அதை ஒரு தாளில் குறித்துக் கொண்டான். அமெரிக்கா திரும்பும் முன் அவன் தந்தையின் மிக நெருங்கிய நண்பர் தென்னரசையும் சந்திக்க வேண்டும் என்று வரும் முன்பே நினைத்திருந்தான். அதையும் குறித்துக் கொண்டான்.

இந்தப் பழக்கம் அப்பாவிடம் இருந்து அவனுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தாளில் சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இருந்தது. அந்தத் துண்டுக் காகிதம் இரவு தூங்குவதற்கு முன் தான் குப்பைக் கூடைக்குப் போகும்... அப்பா நினைவு வந்ததும் மறுபடியும் அவன் பார்வை அவர் பரமேஸ்வரனுடனும், மீனாட்சியுடனும் இருந்த புகைப்படத்திற்குச் சென்றது... அந்தப் படத்தின் வழியாக அந்தக் காலத்திற்கே சென்று அவர்கள் மனநிலையை அறிய ஆசைப்பட்டான்....

மீனாட்சி தன் சமையலறை வேலைகளை அவசர அவசரமாக முடித்து விட்டு அவன் அறைக்குள் நுழைந்த போதும் அவன் அந்தப் புகைப்படத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அந்த ஃபோட்டோ ரொம்ப நல்லா வந்திருக்கு இல்லைமீனாட்சி மருமகனைக் கேட்டாள்.

“ஆமா. எப்ப எடுத்தது?

“நானும் அண்ணாவும் காலேஜ் படிக்கறப்ப எடுத்தது. அன்னைக்கு எங்கப்பா பிறந்த நாள்....

ஈஸ்வர் ஒன்றும் சொல்லவில்லை. ‘எங்கப்பாஎன்ற வார்த்தையை அத்தையும் அவனுடைய அப்பாவைப் போலத் தான் உச்சரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. சொல்லும் போதே ஒரு அன்பான அழுத்தம் அதில் இருந்தது. வயதான பின்னும் இந்த அளவு நேசிக்கிற குழந்தைகளைப் பெற மனிதர் கொடுத்து வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான்....

“என்னவோ எழுதிகிட்டிருக்கிற மாதிரி இருக்கு?மீனாட்சி கேட்டாள்.

“எனக்கு உங்க பெரியப்பா பத்தியும் அந்த சிவலிங்கம் பத்தியும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அதுக்கு யார் கிட்ட எல்லாம் பேசணும்னு குறிச்சு வச்சுகிட்டிருந்தேன்....அதுல உங்க பேரும் இருக்கு. நீங்க அவரைப் பார்க்க அடிக்கடி போவீங்களா?....

“நான் ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை தான் போவேன்....

“ஏன்?

பெரியப்பா பெரும்பாலும் தியானத்திலையோ, பூஜையிலையோ இருப்பார். அவர் கிட்ட பேச அதிகம் இருக்காது. சில சமயம் அவர் வாயையே திறக்க மாட்டார். லேசா புன்சிரிப்பு மட்டும் தான் அவர் கிட்ட இருந்து வரும். அதனால எப்பவாவது தான் போவேன்....

அவர் உங்க கல்யாணத்துக்கு எல்லாம் வந்திருக்காரா?

“இல்லை. அவங்கப்பா இறந்ததுக்கு வந்துட்டு போனவர் வேற எதுக்கும் வந்ததில்லை.. எங்கம்மா இறந்ததுக்கு கூட அவர் வரலையாம்

“ஏன்?

“அவர் மனசளவுல துறவி மாதிரி தான். காவி உடுத்திக்கலை. அவ்வளவு தான்... அவரை மாசா மாசம் போய் பார்த்துகிட்டிருந்தது அப்பா ஒருத்தர் தான்....

“உங்கப்பா கிட்ட அவர் நல்லா பேசுவாரா?

பெரும்பாலும் இவர் தான் பேசுவார். அவர் கேட்டுகிட்டிருப்பார். ஆனா எங்கப்பாவுக்கு அண்ணான்னா ரொம்ப பாசம்... மரியாதை...

மனைவி இறந்த போது கூட வராத, அதிகம் பேசாத, அண்ணனை கடைசி வரை மாதா மாதம் சென்று பார்த்த பரமேஸ்வரனின் பாசம் மிகவும் ஆழமானது தான் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது. அது மட்டுமல்ல அண்ணன் சொன்னார் என்பதற்காக பேரன் முகத்தில் அடித்தது போல் பேசிய பிறகும் அவர் மீண்டும் போன் செய்து பேசியதையும் அவன் நினைத்துப் பார்த்தான்....

எங்க அப்பா இங்கே இருந்த வரைக்கும் உங்க பாட்டி அங்கே போவதில்லைன்னு சொல்லிகிட்டிருந்தார்... அப்புறமா அவங்க போக ஆரம்பிச்சாங்களா?

இல்லை... சாகறதுக்கு ஒரு மாசம் முன்னால் அதிசயமா பெரியப்பாவே அவங்களைப் பார்க்கணும்னு அப்பா கிட்ட சொல்லி அனுப்பிச்சார். அதனால பாட்டி ஒரு தடவை போய் மகனைப் பார்த்துட்டு வந்தாங்க....

பெற்ற மகன் மீது கோபித்துக் கொண்டு கிட்டத்தட்ட 58 வருஷங்கள் போய் பார்க்காமலேயே இருந்த ஆனந்தவல்லி அவனை ஆச்சரியப்படுத்தினாள். இந்தக் கோபம், வீம்பு, வறட்டு கௌரவம் தான் பரமேஸ்வரனுக்கும் வந்திருக்கிறது. என்ன மனுசங்க!...

மாமா மகேஷ் எல்லாம் போவாங்களா?

இவர் மொத்தமா போனதே மூணு தடவை தான் இருக்கும். மகேஷ் சின்ன வயசுல அதிகம் போனதில்லை. பெரியவனான பிறகு எங்கப்பா கட்டாயத்துக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது போவான். ஏதாவது குடுத்துட்டு வரச்சொன்னா குடுத்துட்டு வருவான்... தோட்டத்துல இருந்து எதாவது கொண்டு வரச் சொன்னா கொண்டு வருவான். சந்தோஷமா போக மாட்டான். சலிச்சுகிட்டே போவான். அவனுக்கு அவர் பார்த்தாலும் பேசறது இல்லைன்னு குறை…  அவர் பேசறதே கம்மிடா ஆனா அவசியமா இருந்தா கண்டிப்பா பேசுவார்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்கிறான்...

அவசியம் இருந்தான்னு சொன்னா?

“மகேஷ் என் வயித்துல இருக்கறப்ப டாக்டர் பிரசவத்துல பிரச்சினை இருந்தாலும் இருக்கலாம்னு சொல்லி இருந்தார். அந்த சமயத்துல ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். நான் ஒன்னும் சொல்லாமலேயே அவர் சொன்னார். கவலைப்படாதே, சுகப்பிரசவம் ஆகும்னார். அவர் சொன்ன மாதிரியே சுகப்பிரசவம் தான் ஆச்சு. டாக்டரே ஆச்சரியப்பட்டார். பெரியப்பாவுக்கு சில அபூர்வ சக்திகள் எல்லாம் இருந்துச்சு. மனசுல இருக்கறதை சொல்லாமலேயே புரிஞ்சுகிட்டு அதுக்கு பதிலும் அவராவே சொல்வார். ஆனால் முக்கியமான விஷயமா அவர் மனசுக்கு தோணணும்...

அந்த சிவலிங்கம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அத்தை? அப்பா ஒரு தடவை சின்னதா இருக்கறப்ப அவர் ஃப்ரண்ட் தென்னரசோட அந்த தோட்ட வீட்டுக்கு விளையாடப் போனதாகவும் விளையாடிட்டு தண்ணீர் குடிக்க வீட்டுக்குள்ளே போனப்ப அந்த சிவலிங்கம் ஜொலிச்சுகிட்டு இருந்துச்சுன்னும் என் கிட்ட சொல்லி இருக்கார்... உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் இருக்கா?

மீனாட்சி சொன்னாள். “எனக்கு அந்த மாதிரி எந்த அனுபவமும் இல்லை ஈஸ்வர்.... அண்ணா வந்து சொன்னப்ப எங்கப்பாவும், பாட்டியும் வேறெதோ பார்த்துட்டு வந்து பசங்க பேசறாங்கன்னு நினைச்சாங்க. எனக்கும் அப்படி பார்க்க ஆசையாய் இருந்து நான் போறப்ப எல்லாம் அதிக நேரம் அதைக் கவனிச்சிருக்கேன்... அதுல எந்த மாற்றமும் என் கண்ணுக்குத் தெரியல...

அப்பாவும் அதற்குப் பின்னால் பல முறை தொடர்ந்து போய் சிவலிங்கத்தைப் பார்த்தும் அந்த ஜொலிப்பு பின் தென்படவேயில்லை என்று ஒரு சிறிய ஏமாற்றத்துடன் சொன்னதை ஈஸ்வர் நினைவு கூர்ந்தான். அந்த சிவலிங்கம் ஜொலித்த போதே அவர் தன் பெரியப்பாவிடம் போய் பரபரப்புடன் சொன்னாராம்... பெரியப்பா சிவலிங்கம் ஜொலிச்சதை நானும் தென்னரசுவும் பார்த்தோம். பசுபதி ஒன்றுமே சொல்லாமல் புன்னகைத்தாராம்.. பின் எப்போதும் அது ஜொலிப்பதைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தை அவரிடம் தெரிவித்த போதும் பசுபதி வெறுமனே புன்னகைத்தாராம்.. இரண்டு சமயங்களிலும் ‘அது ஒரு பெரிய விஷயமில்லைஎன்பது போல் அவர் புன்னகை இருந்த்தாக சங்கர் மகனிடம் சொல்லி இருந்தார்....

ஆனால் பசுபதி நினைத்தது போல மற்றவர்கள் நினைக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் அவரைக் கொன்று அந்த சிவலிங்கத்தைத் திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று ஈஸ்வருக்குத் தோன்றியது...

ஞ்சாவூர், தேனி பயணம் முடித்து விட்டு வந்த அந்த மனிதன் தமிழ் ஆராய்ச்சியாளர் எழுதித் தந்ததையும் ஓலைச்சுவடியையும் குருஜி கையில் ஒப்படைத்தான். குருஜி அவன் எதிர்பார்த்தது போல அந்த ஓலைச்சுவடியில் உள்ளதை விளக்கும் உரையைப் படிக்க அவசரப்படவில்லை.  மாறாக இரண்டு இடங்களிலும் நடந்ததை ஒன்று விடாமல் சொல்லச் சொல்லி கேட்டார். தமிழாராய்ச்சி வல்லுனர் ட்யூப் லைட் விவகாரத்தையும், கதவு தட்டல் விவகாரத்தையும் சொன்னதைச் சொன்ன போது அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஆனால் அது பற்றி அவர் கருத்து எதுவும் சொல்லப் போகவில்லை.

ஆனால் ஜோதிடர் தம்பி சொன்னதைக் கேட்கும் போது மட்டும் குருஜி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சில இடங்களில் சொன்னதை மறுபடி சொல்லச் சொல்லி கேட்டார். எல்லாம் கேட்டு முடித்த பின் அவர் சிந்தனை மேலும் பலப்பட்டது.

என்ன குருஜி யோசிக்கிறீங்க?

இந்த ஓலைச்சுவடியை மற்ற ஓலைச்சுவடிகளோடு அந்த ஜோதிடர் கொடுத்தது எனக்கு இயல்பாய் படலை. அதுவும் அந்த சிவலிங்கம் பத்தின அத்தனை விவரங்கள் தெரிஞ்சு, தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி உன் கிட்ட மூச்சு கூட விடாத அந்த ஜோதிடர் மத்த ஓலைச்சுவடிகளோடு இந்த ஓலைச்சுவடியையும் அப்படியே எடுத்துக் கொடுத்துட்டார்ங்கறதை நம்ப கஷ்டமாய் இருக்கு...

அதான் அந்த குருநாதர் கிட்ட அந்த ஜோதிடர் இந்த ஓலைச்சுவடிய என்ன பண்றதுன்னு கேட்டப்ப அவர் மத்த ஓலைச்சுவடிகளை என்ன செய்யறியோ அதே மாதிரி இதையும் செஞ்சுடுன்னு சொன்னதா அவர் தம்பி சொன்னானே.. இந்த ஓலைச்சுவடியைப் படிச்சா சாதாரணமானவனுக்கு என்ன புரியப் போகுதுன்னு கூட அவங்க நினைச்சிருக்கலாம்....

இருக்கலாம் என்பது போல குருஜி லேசாய் தலையசைத்தாலும் அவர் மனதில் இருந்த நெருடல் குறையவில்லை. மூவர் குழு, மாயன் கேலண்டர், பழையதெல்லாம் அழிஞ்சு போய் புதிதாய் நிறைய மாற்றம் வரும்.. அதை உலகம் சந்திக்கும், சிவலிங்கமும் மாற்றத்தை சந்திக்கும் போன்ற தகவல்கள் அவர் மூளைக்கு நிறைய வேலைகளைத் தந்தன. ஆனால் அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அவசரமாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசினார்.

“நீ உடனடியா அந்த சரவணனுக்குப் போன் செய். நீ கிளம்பி வந்த பிறகு அந்த ஜோதிடர் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா, யாராவது அவரை வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரான்னு கேளு...

அந்த மனிதன் யோசித்தபடியே உடனடியாகப் போன் செய்தான்.

“ஹலோ சரவணன். நான் தான் பேசறேன். உங்கண்ணா நான் வந்ததுக்கப்புறம் யார் கிட்டயாவது போன்ல பேசினாரா?

“நான் உங்க கிட்ட பேசிகிட்டிருந்தப்ப அவர் பேசியிருந்தால் எனக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனா நான் வந்ததுக்கப்பறம் அவர் பேசலை சார்... ஆனா என்னவோ நாள் முழுக்க ரொம்ப யோசனையா இருந்தாரு

அவரை வேற யாராவது வந்து பார்த்தாங்களா, இல்லை அவர் யாரையாவது போய் பார்த்தாரா?

அவரை யாரும் வந்து பார்க்கலை. ஆனா அவர் தான் திடீர்னு இன்னைக்கு காலைல எழுந்திருச்சு வெளியூர் போயிருக்காருங்க சார்...

எங்கே போயிருக்கார்?

மகளைப் பார்க்க கும்பகோணம் போறதா சொல்லிட்டு போனார் சார்

முதல்லயே போகிறதா சொல்லிகிட்டிருந்தாரா?

“இல்லைங்க சார். திடீர்னு தான் போயிருக்கார்

“சரவணன் எதுக்கும் அவர் அங்கே தான் போயிருக்காரான்னு கேட்டு சொல்ல முடியுமா?...”.

“ரெண்டே நிமிஷத்துல கேட்டு சொல்றேன் சார்என்று சொன்ன சரவணன் இரண்டாவது நிமிடத்தில் போன் செய்தார். “சார்...நான் அவர் பொண்ணுக்கு போன் செஞ்சு கேட்டேன்... அவர் அங்கே போகலையாம்

வேற எங்கே போயிருப்பார் சரவணன்?

தெரியலையே சார். அவர் வேறெங்கயும் போகக் கூடிய ஆளில்லை சார். எனக்கு ஒன்னும் புரியலை....

சரவணன், முடிஞ்சா அவர் எங்கே போனார்னு கண்டுபிடிச்சு சொல்றீங்களா? சொன்னீங்கன்னா நேத்து கொடுத்ததை விட ரெண்டு மடங்கு பணத்தை உங்க அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். ஆனா அவருக்கு சந்தேகம் வராத மாதிரி அதைச் செய்யுங்க

போனை வைத்து விட்டு அந்த மனிதன் குருஜியைப் பார்த்தான்.
குருஜி சொன்னார். “அந்த ஜோதிடர் யாரைப் போய் பார்க்கிறார்னு தெரிஞ்சா அது மூலமா நாம நிறைய விஷயம் புரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்

(தொடரும்)
என்.கணேசன்

  

6 comments:

  1. அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  2. Very very interesting. You have mixed suspense with family emotions well. Can't wait till next week

    ReplyDelete
  3. விறு விறுப்பாக நிகழ்வுகள் தொடர்கின்றன ...

    ReplyDelete
  4. sir, adutha vaaram varai kaathirukka mudivadhillai. Indha thodarai vaaram irumurai eludhinal nanraga irukkum.

    anbudan
    Sakthi tiruppur

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை வளம் உங்களுக்குஃஅடுத்த பதிவுக்கு வாழ்த்துக்கள் :) :-)

    ReplyDelete