என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, December 10, 2012

பிரம்மானந்தம் யாருக்கு வாய்க்கும்?கீதை காட்டும் பாதை 21

பிரம்மானந்தம் யாருக்கு வாய்க்கும்?

வ்வொரு மனிதனும் ஆனந்தத்தைத் தேடுகிறான். அது அவனுடைய மிக இயல்பான தேடலாகவே இருக்கிறது. பிரச்சினை அவன் ஆனந்தத்தைத் தேடுவதில் இல்லை. அவன் தேடும் இடத்தில் தான் இருக்கிறது. அவன் ஆனந்தத்தை வெளியே தேடுகிறான். இடம் மாறித் தேடுவதால் தான் ஆனந்தம் அவனுக்கு சிக்குவதில்லை.

இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் அடுத்தபடியாகச் சொல்கிறார்.


புறப்பொருள்களில் உள்ள பற்றுதலை விட்டவன் ஆன்மாவில் பேரானந்தத்தைக் காண்கிறான். அவன் பிரம்மத்துடன் கலந்து பேரானந்தத்தை அடைகிறான்.

புலன்களினால் ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும் துக்ககரமானவை.
ஆரம்பமும், முடிவும் அவற்றிற்கு உண்டு. எனவே விவேகமுள்ளவன் அவற்றில் நாட்டம் கொள்ள மாட்டான்.

யார் உடலில் இருந்து விடுபடுவதற்கு முன்பே இந்தப் பிறவியிலேயே விருப்பு வெறுப்புகளால் உண்டாகும் வேகத்தைத் தடுக்கிறானோ அவனே யோகி, அவனே சுகம் பெற்ற மனிதன்.

புறப்பொருள்களுக்கு என்று சில அடிப்படைத் தன்மைகள் உண்டு. அவை மனிதனின் ஆனந்தத் தேடலுக்கு எதிரானவை. உதாரணத்திற்கு உங்களுக்கு மிகப் பிடித்த தின்பண்டம் எதையாவது எடுத்துக் கொள்வோம். முதலாவதை சாப்பிடும் போது ஏற்படும் சுவையே அலாதி தான். ஆனால் அதையே தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது அது தரும் ஆனந்தம் குறைந்து கொண்டே வருகிறது. இதை பொருளாதாரத்தில் Law of diminishing marginal utility என்கிறார்கள். இப்படி இது விதியாகவே இருக்கிறது.

தின்பண்டம் மட்டுமல்ல எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. மனிதனுக்கு சலிப்பே ஏற்படுத்தாததாய் நாம் நினைக்கும் பணத்தையே எடுத்துக் கொள்வோம். ஒரு காலத்தில் பெரும் திருப்தியைத் தரும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் இன்னொரு காலத்தில் அதிருப்தியையே தருகிறது. பல மடங்கு வந்தால் தான் ஆனந்தம் வருகிறது. பின் அந்தப் பல மடங்கும் மேலும் பலப்பலவாக வந்தால் தான் சந்தோஷம் என்று ஆகிறது. ஆயிரம், லட்சம், கோடி, பல கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி என்று அவரவர் நிலைகளுக்கேற்ப தேவைகளை மனிதர்கள் அதிகமாக உணர ஆரம்பிக்கிறார்கள்.

பரம தரித்திரனாக இருக்கும் போது ஆயிரக்கணக்கில் திருப்தியைத் தரும் பணம், அரசியல்வாதியாக மாறிய பின் ஆயிரம் கோடிகளிலும் திருப்தி தராமல் ஆட்டி வைப்பதை இன்று சர்வசாதாரணமாக நாம் காண்கிறோம். ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல ஆனந்தம், துக்கம் என்ற இரட்டை அலைகளில் நம்மை அலைக்கழிப்பதாகவே புறப்பொருள்களும், புலன் வழி சாதனங்களும் இருக்கின்றன. மேலும், வரும் போது மகிழ்ச்சி தருவதை நிறுத்தினாலும் கூட நம்மை விட்டு விலகும் போது துக்கம் தருவதை இவை நிறுத்துவதில்லை.  முடிவுள்ள விஷயங்கள் ஒரு நாள் முடிந்து தானே போகும். அந்த இயற்கையான தன்மைக்கே துக்கப்படுவது என்றால் மனிதனின் துக்கத்திற்கு முடிவு இருக்க முடியுமா?

மரணத்தின் போது எல்லாத் திரைகளும் விலகி மனிதன் பேருண்மைகளை தரிசிக்கிறான். அப்போது விருப்பு, வெறுப்புகளின் அர்த்தமின்மையை உணர்கிறான். ஆனால் காலம் கடந்து அறியும் உண்மைகளால் என்ன பயன்? உயிருடன் இருக்கும் போதே அவன் உண்மையை உணர்ந்து பக்குவம் அடைந்து தன்னை சரிப்படுத்திக் கொண்டால் உயிரோடிருக்கும் போதே சுகமாக இருக்கலாமே என்று தான் ஸ்ரீகிருஷ்ணர் கேட்கிறார்.

இவ்வுலகத்தில் வாழும் போதே சுகமாக இருப்பது மட்டுமல்ல, கூடுதலாக ஆனந்தமாக இருப்பது மட்டுமல்ல, மேன்மையான பிரம்மானந்தத்தையே பெறவும் முடியும் என்று ஊக்கப்படுப்படுத்துகிற ஸ்ரீகிருஷ்ணர் அதற்கான வழிகளையும் சொல்கிறார்.

எவனொருவன் ஆத்மாவிலேயே சுகத்தை அடைகிறானோ, ஆத்மாவிடமே விருப்பம் கொள்கிறானோ, ஆத்மாவிடமே ஒளிபெறுகிறானோ அந்த யோகி தானே பிரம்மமாகி பிரம்மானந்ததை அடைகிறான்.

மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகங்களை அறவே ஒழித்தவர்களும் மனத்தைக் கட்டுப்படுத்தியவர்களும், அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதிலேயே நாட்டம் கொண்டவர்களும் பிரம்மானந்தத்தை அடைகிறார்கள்.

விருப்பு வெறுப்புகளை விட்டவர்களும், மனத்தை அடக்கியவர்களும், ஆத்மாவை அறிந்தவர்களுமான துறவிகளுக்கு வாழும் போதும் மரணத்திற்குப் பின்னும் பிரம்மானந்தம் இருக்கும்.

விருப்பு இல்லை, வெறுப்பு இல்லை என்றால் கல்லைப் போல் இரு என்று அர்த்தமல்ல. எந்திரம் போல் வாழ் என்ற அறிவுரையும் அல்ல. உண்மையில் ஆனந்தமாக இருக்கவே ஸ்ரீகிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். யாருமே ஆனந்தத்தைப் பொய்யின் மூலமாகப் பெற முடியாது. பொய் சொற்ப காலத்துக்கு மாயையான சந்தோஷத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் அஸ்திவாரம் இல்லாத கட்டிடங்கள் போல் பொய்யான சந்தோஷங்கள் விரைவிலேயே தரைமட்டமாகிப் போய் துக்கமே மிஞ்சும்.

உண்மையாகவே ஞானம் பெற்று தெளிந்தால் ஒழிய நிலையான நிம்மதியும், பேரானந்தமும் வாய்க்க வாய்ப்பேயில்லை. பிரச்சினைகள் வராத வரை அமைதி இருக்கவே செய்யும். பிரச்சினைகள் வந்த போதும் அமைதியைத் தக்க வைத்துக் கொள்வது தான் கஷ்டம்.  

வினோபா மிக அழகாகக் கூறுவார். “தண்ணீர் மேலே பார்ப்பதற்குச் சுத்தமாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு கல்லைப் போடுங்கள்; உடனே அதன் அடியில் உள்ள சகதி மேலே எழும்பி வரும். நம் மனத்தின் நிலையும் இத்தகையதே. மனத்தின் அடித்தளத்தில் முழங்காலளவு சகதி சேர்ந்திருக்கிறது. புறத்தில் உள்ள பொருளொன்று அதைப் போய்த் தொட்டவுடன் அது புலனாகத் தொடங்குகிறது. நான் ஒருவனுக்குக் கோபம் வந்து விட்டது என்கிறோம். அக்கோபம் வெளியில் இருந்தா வந்தது? அது உள்ளே இருந்ததே; மனத்தில் இல்லா விட்டால் வெளியில் தென்படவே தென்படாது 

எனவே உள்ளே என்ன இருக்கிறது என்பது மிக முக்கியம். உள்ளே மாசுகள் இருந்தால் நீக்கிக் கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் நிவர்த்தி செய்து தெளிந்து கொள்ள வேண்டும். அலை பாயும் கட்டுக்கடங்கா மனம் இருந்தால் அதைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்புகள் எந்த அளவு பலமாக உள்ளதோ அந்த அளவு மனிதன் பிரச்சினைகளை தருவித்துக் கொள்கிறான். சந்தோஷமின்றி தவிக்கிறான். எனவே இதையெல்லாம் சரி செய்து கொண்டால் சாதாரணமான ஆனந்தம் அல்ல பிரம்மானந்தமே கிடைக்கும் என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகச் சொல்கிறார்.

மாறிக் கொண்டே இருக்கிற புறப்பொருள்களில் நாட்டம் கொள்ளாமல் மாறாமல் இருக்கிற நித்தியமான ஆத்மாவில் நாட்டம் கொண்டால், அறியாமை இருளை அகற்ற ஆத்மாவின் ஞான ஒளியை பயன்படுத்திக் கொண்டால் அவன் யோகி ஆகிறான். அவனே பிரம்மமாகி பிரம்மானந்தத்தை அடைகிறான் என்றும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். உள்ளே ஆத்மஞானம் ஒளிராத வரை வெளியே இருக்கின்றவை எல்லாவற்றிலும் ஏதோ ஒரு குறையை மனிதன் கண்டுபிடிக்கவே செய்வான். உள்ளிருக்கும் இருட்டு புறத்தில் படரவே செய்யும். அதனால் உள்ளதை உள்ளது போல் அறிய முடியாது. இருட்டில் கயிறு பாம்பாவதைப் போல் எத்தனையோ கற்பனை பயங்கள், கற்பனை துக்கங்கள், கற்பனை பிரச்சினைகள் ஏற்படவே செய்யும். ஆத்மஞான ஒளியைப் பெற்று விட்டாலோ கற்பனைகள் உயிர்பெற முடியாது. அதன் தீய விளைவுகள் கிடையாது.

உள்ளே சரியாகாத வரை வெளி உலகத்தில் எதுவுமே சரியாகாது. உள்ளே சரியான, தெளிவான ஞானம் இருந்தாலோ உலக வாழ்வில் எதிலுமே குறை இருக்காது என்று சொல்லும் இந்த சிந்தனையோடு கீதையின் ஐந்தாவது அத்தியாயம் இத்துடன் நிறைவுகிறது.

பாதை நீளும்....


-          என்.கணேசன்

10 comments:

 1. மிகவும் அருமையான பதிவு

  ReplyDelete
 2. உங்கள் சொற்களில் வலிமை இருக்கிறது. அதே போல் எளிமை இருக்கிறது. கீதையை உங்கள் பார்வையில் படிப்பது தெளிவாகவும் இருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா!

  -செல்வரத்தினம்

  ReplyDelete
 3. அருமை கணேசன்...
  நன்றி.

  ReplyDelete
 4. arumaiyaana vilakkam, etai nanum yen vaalkaiku payan paduta pokiren.tq

  ReplyDelete
 5. நல்ல பதிவு சார். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. எப்படி ஒரு ஆன்மிக குருவை தேர்ந்து எடுப்பது? மானசீகமாக தேர்ந்து எடுக்கலாமா?

  ReplyDelete
  Replies
  1. சில வரிகளில் இதற்குப் பதில் சொல்வது கஷ்டம். ஆராய்ந்து பார்த்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவருடைய வார்த்தைகளை மட்டும் பார்க்காமல் அவர் வாழும் முறையையும் கூர்மையாக கவனித்துத் தேர்ந்தெடுத்தால் ஏமாற வேண்டி இருக்காது. மானசீகமாகவும் அப்படியே தேர்ந்தெடுக்கலாம்.

   Delete
 6. Hi Sir,

  I am one of your fan of Geethai Kattum Pathai. It gave me a really different view of Geethai and my own self.Your presentation is really good.

  I am waiting for the next part. Please publish it. Its been more than a month Part 21 is published.

  Thankyou.

  ReplyDelete
  Replies
  1. Because of busy schedules I couldn't update earlier. I'll update it on 21st Jan. Thank you.

   Delete