சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 2, 2012

பரம(ன்) ரகசியம்! - 3




மிக நேசித்த மனிதர்களின் மரணத்தைக் காண்பது பரமேஸ்வரனுக்கு அறுபத்தி எட்டாண்டு கால வாழ்க்கையில் புதியதொன்றும் அல்ல. பதினேழு வயதில் தந்தை, முப்பத்தெட்டு வயதில் மனைவி, அறுபத்தி ஏழு வயதில் மகன் என மூவர் மரணத்தை சந்தித்திருக்கிறார். மூன்றுமே அகால மரணங்கள் தான். அதற்கெல்லாம் யாரையும் அவரால் குற்றப்படுத்த முடியவில்லை. விதி என்று தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் அண்ணன் பசுபதியின் மரணம் கொலையாக இருந்ததால் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தகவல் கிடைத்ததும் தளர்ந்து போய் அப்படியே இரண்டு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார். மருமகனையும் பேரனையும் அழைத்து அங்கு நடக்க வேண்டியதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பிய அவருக்கு அண்ணனின் மரணத்தைத் தாயிடம் எப்படி சொல்வது என்ற கவலை மலை போல் மனதை அழுத்தியது.

ஆனந்தவல்லிக்கு எண்பத்தி எட்டு வயது ஆகியிருந்த போதும் உடல் ஆரோக்கியமோ, மன உறுதியோ குறைந்திருக்கவில்லை. என்றாலும் மூத்த மகன் மரணத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று அவர் பயப்பட்டார்.  கடிகாரத்தைப் பார்த்தார். மணி காலை ஏழு. அம்மா ஐந்தரை மணிக்கே எழும் வழக்கம் உடையவள். இன்னேரம் குளித்து விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தினசரிப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம்பித்திருப்பாள்... கனத்த இதயத்துடன் தாயின் அறைக்குள் நுழைந்தார்.

அவர் கணித்த படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்த ஆனந்தவல்லி மகனைப் பார்த்ததும் புன்னகை பூத்தாள்.
அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளைப் பட்டுப்புடவை அல்லாமல் வேறெந்த புடவை அணிந்தும் அவர் பார்த்ததில்லை. அவள் உடலில் சுமார் முப்பது பவுன்களுக்கு குறைந்து நகைகள் இல்லாமல் இருந்ததில்லை. ஒரு நாள் பார்த்த நகையை பதினைந்து நாட்களாவது கழியாமல் மறு முறை அவள் உடலில் பார்க்க முடியாது. அதே போல் ஒரு நாள் அணிந்த பட்டுப்புடவை சில மாதங்கள் கழியாமல் அவள் அணிவதில்லை....

“என்னடா வாக்கிங் போகலையா?”  அவள் கேட்டாள்.

“இல்லம்மா

“ஏண்டா உடம்பு சரியில்லையா. என்னவோ மாதிரி இருக்கே?

பரமேஸ்வரன் சொல்ல வாய் வராமல் தவித்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் தயக்கமில்லாமல் செய்ய வேண்டியதைச் செய்ய முடிந்த அவளுடைய இளைய மகனின் தயக்கம் ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்த அவள் செய்தித்தாளை கீழே வைத்தாள்.

“யாருக்கு என்ன ஆச்சு

எந்தத் தாயும் கேட்க விரும்பாத செய்தியை அவர் அவளுக்கு எப்படிச் சொல்வார்? மெல்ல வந்து அவள் அருகே அமர்ந்து அவள் கைகளைத் தன் கைகளால் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க பரமேஸ்வரன் சொன்னார். “அண்ணா காலமாயிட்டான்மா

ஆனந்தவல்லி இடி விழுந்தது போல் உணர்ந்தாள். நம்ப முடியாதவளாய் சில வினாடிகள் இருந்து விட்டு கேட்டாள். “என்ன ஆச்சு?அவள் குரல் உடைந்திருந்தது.

அவர் சுருக்கமாக அண்ணன் கொலை செய்யப்பட்டார் என்பதைச் சொன்னார். அவரையே வெறித்துப் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்த அவள் கண்களில் நீர் நிறைந்தது.

அவளுக்கு இன்னமும் கேட்டதை நம்ப முடியவில்லை. யாருக்குமே எந்த தீங்கையும் மனசால கூட அவன் நினைச்சதில்லையேடா. நமக்கெல்லாமாவது ஆகாத ஆள் இருப்பாங்க. அவனுக்கு அப்படி யாரும் இருக்க முடியாதேடா... பின்ன எப்படிடா? அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.

அவள் சொன்னது போல பசுபதி புழு பூச்சிக்குக் கூட தீங்கு எண்ணத் தெரியாதவர். கோடிக்கணக்கான சொத்துக்களை தன் தம்பிக்கே எழுதிக் கொடுத்து விட்டு “எனக்கு இது போதும்என்று ஒரு சிவலிங்கத்தோடு தோட்ட வீட்டில் ஒதுங்கியவர். ஒரு துறவியைப் போல வாழ்ந்தவர். எதையும் யாரிடமும் எதிர்பாராதவர். அன்பைத் தவிர வேறு ஒரு தன்மை அறியாதவர். அவரைக் கொலை செய்ய யாருக்கு எப்படி மனம் வந்தது? அந்தக் கேள்விக்குப் பதில் அந்த காணாமல் போன சிவலிங்கத்தில் இருப்பதாகத் தான் அவருக்குத் தோன்றியது. அதைத் தாயிடம் அவர் வாய் விட்டுச் சொன்னார். அவள் அதிர்ச்சியும் துக்கமும் மனதை மலையாய் அழுத்த சிலையாய் சமைந்தாள்....

ந்த சிவலிங்கம் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் அவர்கள் குடும்பத்திடம் வந்து சேர்ந்தது. பரமேஸ்வரனின் மூதாதையர்கள் சிவனின் பரம பக்தர்கள். பெரும் பணக்காரரான பரமேஸ்வரனின் தந்தையும் சிவபக்தர்கள், சிவன் கோயில்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவரிடம் பல சைவ அடியார்கள் வந்து செல்வது வழக்கம். இரண்டரை ஏக்கர் தோட்ட வீட்டை பரமேஸ்வரனின் தந்தை அவர்கள் வந்து தங்கிச் செல்வதற்காகவே ஒதுக்கி வைத்திருந்தார். அப்படித்தான் ஒரு நடுத்தர வயது சித்தர் அறுபது வருடங்களுக்கு முன் அந்தத் தோட்ட வீட்டிற்கு வந்தார். அந்த சித்தர் தன்னுடன் ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்திருந்தார். அப்போது பசுபதிக்கு வயது பத்து. பரமேஸ்வரனுக்கு வயது எட்டு. பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் தந்தை அந்த சித்தரை தரிசிக்கச் சென்றார்.

அந்த சித்தர் தோற்றத்தில் கருத்து மெலிந்து இருந்தாலும் அவர் கண்களில் இருந்த ஜொலிப்பு இப்போதும் பரமேஸ்வரனுக்கு நினைவிருக்கிறது. நேராக அவர் கண்களை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருப்பது முடியாத காரியம் தான். ஆனால் சிறுவன் பசுபதி அந்த சித்தரைப் பார்த்தபடியே வசீகரப்பட்டபடி நிறைய நேரம் நின்றிருந்தான். அவர்கள் தந்தை கிளம்பிய போது பசுபதி திரும்ப வீட்டுக்கு வர மறுத்தான். அன்று அங்கேயே தங்க விருப்பம் தெரிவித்தான். அந்த சித்தரும் அவர்கள் தந்தையிடம் அவன் இருக்கட்டுமே என்று சொல்ல, அவருக்கு மகன் நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் சம்மதித்து இளைய மகனை மட்டும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.

அன்று அவருக்கு மனைவி ஆனந்தவல்லியிடம் இருந்து கிடைத்த அர்ச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆன்மிக விஷயங்களில் அவரளவு ஈடுபாடு இல்லாத ஆனந்தவல்லி மூத்த மகன் நடவடிக்கையில் ஏதோ ஒரு ஆபத்தை உணர்ந்தாள். அவள் உணர்ந்ததை உறுதிப்படுத்துகிற மாதிரி மறு நாள் வீடு திரும்பிய பசுபதி நிறைய மாறியிருந்தான். விளையாட்டிலும், சாப்பிடுவதிலும், மற்றவர்களுடன் பழகுவதிலும் ஆர்வம் அவனுக்குப் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அந்த சித்தர் இரண்டு நாளில் தோட்ட வீட்டை விட்டுப் போயிருந்தாலும் சிவலிங்கத்தை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றிருந்தார்.

பசுபதி அடிக்கடி தோட்ட வீட்டுக்குச் சென்று அந்த சிவலிங்கத்துடன் அதிகப் பொழுதைக் கழிக்க ஆரம்பித்தான். ஆனந்தவல்லி தன் மகனை மாற்ற தன்னால் ஆன அத்தனையும் செய்து பார்த்தாள். ஆனால் பசுபதி மாறியவன் மாறியவன் தான். ஒரு நாள் அங்கு போனவன் வீடு திரும்பவே இல்லை. இனி தனக்கு அது தான் வீடு என்றான். கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கையில் அதற்குப் பாத்தியப்பட்டவன் இப்படி மாறுவதில் சிறிதும் விருப்பமில்லாத ஆனந்தவல்லி ஒரு நாள் தோட்ட வீட்டில் மகன் முன்னிலையில் உண்ணா விரதம் கூட இருந்து பார்த்தாள். தற்கொலை செய்து கொள்வதாக பயமுறுத்தியும் பார்த்தாள். தானிறந்தால் கொள்ளி போடக் கூட அவன் வரக்கூடாது என்று சொன்னாள். தாயை இரக்கத்துடன் பசுபதி பார்த்தானே ஒழிய அசைந்து கொடுக்கவில்லை.

ஆனந்தவல்லி தோற்றுப் போய் வீடு திரும்பினாள். பசுபதி அடுத்ததாக அவர்கள் வீட்டுக்குத் திரும்பியது தந்தையின் மரணத்தின் போது தான். தந்தையின் அந்திமக் கிரியைகள் முடிந்த பின் மறுபடி தோட்ட வீட்டுக்குச் சென்ற பசுபதி பின் கடைசி வரை அங்கிருந்து வேறங்கும் சென்றதில்லை. அவர் வாழ்க்கை ஒரு துறவியினுடையதாக இருந்தது. எல்லா சொத்துக்களையும் தம்பியின் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். அதற்குப் பின் வீட்டின் எந்த சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கெடுத்தது இல்லை.

ஆனால் அண்ணன் மீது அதீத பாசம் கொண்டிருந்த பரமேஸ்வரன் மட்டும் மாதமொரு முறையாவது அண்ணனைப் போய் சந்திப்பார். சில முறை தன் மனைவியையும், குழந்தைகளையும் உடன் அழைத்துப் போயிருக்கிறார் என்றாலும் அதிகம் அவர் போனது தனியாகத் தான். அப்போதெல்லாம் பசுபதி பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் சகோதரனைச் சென்று சந்தித்து விட்டுத் திரும்பும் போதெல்லாம் மன அமைதியை பரமேஸ்வரன் உணர்ந்தார். ஏதாவது பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அண்ணனிடம் மனம் விட்டு பரமேஸ்வரன் சொல்வார். பசுபதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயங்களில் ஓரிரு சொற்கள் பதிலாக வரும். பல சமயங்களில் மௌனமே பதிலாக அமையும். ஆனாலும் வீடு திரும்பும் போது பரமேஸ்வரன் தெளிவடைந்து இருப்பார்.

ஆரம்பத்தில் இளைய மகன் போய் விட்டு வரும் போதெல்லாம் தன்னைப் பற்றி மூத்த மகன் விசாரித்தானா என்றறிய ஆனந்தவல்லி ஆர்வம் காட்டினாள். இல்லை என்பதை அறிந்த போது அவள் முகத்தில் பரவிய சோகம் பரமேஸ்வரனுக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. இயல்பிலேயே சுயமரியாதை, கௌரவம், தன்மானம் ஆகியவை அதிகம் உள்ள அவள் மூத்த மகனின் பாராமுகத்தில் மனமுடைந்து போனாலும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. பின் மூத்த மகனைப் பற்றி விசாரித்ததும் இல்லை, பேசியதும் இல்லை. எத்தனையோ முறை அண்ணனைப் பார்க்கச் செல்லும் போது தாயையும் உடன் வர பரமேஸ்வரன் அழைத்திருக்கிறார். ஆனால் அவள் போனதில்லை. மகனே ஆனாலும் சுய கௌரவத்தை விட்டுப் போய் பார்ப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன் பரமேஸ்வரன் சென்றிருந்த போது முதல் முறையாக பசுபதி கேட்டார். “அம்மா எப்படி இருக்கா?

பரமேஸ்வரனிற்கு ஆச்சரியமாக இருந்தது. “நல்லா இருக்கா

“ஒரு தடவை கூட்டிட்டு வா. பார்க்கணும் போல இருக்கு

வீட்டுக்கு வந்த பின் பரமேஸ்வரன் தாயிடம் சொன்ன போது அவள் அப்படியே உறைந்து போனது போல் இருந்தது. கனவா நனவா என்பது போல கண்களை கசக்கி விழித்துப் பார்த்தாள். நிஜம் தான் என்றானவுடன் அவள் கண்களில் அவளையும் மீறி நீர் கோர்த்தது. அவன் கூப்பிட்டவுடனே போய்த்தான் ஆக வேண்டுமா என்று அவள் யோசித்தது போல இருந்தது. ஆனாலும் மறு நாளே பரமேஸ்வரனுடன் தோட்ட வீட்டுக்குச் சென்றாள்.

மூத்த மகனைப் பார்த்தவுடன் அத்தனை ஆண்டுகள் சுமந்து கொண்டு இருந்த உள்ளக் குமுறலை எல்லாம் ஆனந்தவல்லி கொட்டித் தீர்த்தாள். அம்மா என்று ஒருத்தி இருப்பது உனக்கு இப்போது தானா ஞாபகம் வந்தது என்று ஆரம்பித்தவள் அரை மணி நேரம் அழுகையுடனும் ஆத்திரத்துடனும் மகனை வாயிற்கு வந்தபடி திட்டித் தீர்த்தாள். ஒரு குழந்தையின் புலம்பலைக் கேட்டுக் கொள்வது போல புன்னகையுடன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்த பசுபதி அவள் ஓய்ந்த பிறகு ஒரு அன்பான மகனாய் இயல்பாய் பேசினார். தாயின் உடல்நலம் விசாரித்தார். அவள் தன் உடல் உபாதைகளைச் சொன்ன போது சாப்பிட வேண்டிய காய்கறிகள், உணவுகளையும், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் உணவுகளையும் சொன்னார். ஆனந்தவல்லி சொன்ன குடும்ப விஷயங்களைப் பொறுமையோடு கேட்டார். இரண்டு மணி நேரம் அங்கு இருந்து விட்டுக் கிளம்பிய போது ஆனந்தவல்லி மூத்த மகனிடம் கறாராகச் சொன்னாள். “இனிமே நான் வர மாட்டேன். அம்மா வேணும்னா நீ தான் என்னைப் பார்க்க வரணும்

பதிலாக பசுபதி புன்னகைக்க மட்டுமே செய்தார். ஆனால் அதுவே தாயிற்கும் மகனிற்கும் இடையேயான கடைசி சந்திப்பாக அமைந்து விட்டது.....

ரமேஸ்வரன் எழுந்தார். அம்மா அண்ணா பிணத்தை இங்கே கொண்டு வரணுமா?

“வேண்டாம். யோசிக்காமல் வந்தது பதில்.

அண்ணாவை கடைசியா ஒரு தடவை அங்கே வந்து பார்க்கறியா? அவர் தயக்கத்துடன் கேட்டார்.

அவனை அந்தக் கோலத்துல பார்க்கற சக்திய கடவுள் தரலைடா. நீ போ.... போய் ஆக வேண்டியதைப் பார்...என்று கரகரத்த குரலில் சொன்ன ஆனந்தவல்லி இளைய மகன் அறையிலிருந்து வெளியேறிய பிறகு வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்...


அண்ணனின் கடைசி காரியங்களைக் கவனிக்க விரைந்த பரமேஸ்வரன் மனதில் அந்த சிவலிங்கத்தைக் குறித்து சிறு வயதிலிருந்து கேள்விப்பட்ட சில விஷயங்கள் நினைவுக்கு வர ஆரம்பித்தன. எல்லாம் நிஜமாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.


“சேச்சே... இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இதெல்லாம் என்ன முட்டாள் தனம்” என்று 
அறிவு சொன்னது. 


அப்படியென்றால் ஏன் இந்தக் கொலை? ஏன் அந்த சிவலிங்கம் களவாடப்பட்டது? என்று மனம் கேட்டது.


அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.


(தொடரும்)

- என்.கணேசன்

13 comments:

  1. Super sir Nice seriel.........

    ReplyDelete
  2. Sir, Intha vaaram viruviruppu illaye . kathaiyakla puthusa oru twist konduvanthitinga

    ReplyDelete
  3. எப்ப்ப்ப்பா! என்னா ஸ்பீடு!

    ReplyDelete
  4. பொதுவாக த்ரில்லர் கதைகளில் மனித உணர்வுகள் அழகாக சொல்லப்படுவதில்லை. ஆனால் வித்தியாசமாய் நீங்கள் அதிலும் அழகாய் உங்கள் முத்திரையை பதித்து உள்ளீர்கள். சூப்பராய் போகிறது. அடுத்த வியாழன் எப்போது வரும் என்று காக்க வைத்து விட்டீர்கள். பாராட்டுகள். -சுந்தரராமன்

    ReplyDelete
    Replies
    1. பசுபதியின் துறவு வாழ்வு சிறப்பாக படம்
      பிடித்துக் காட்டிய விதம் அருமை !

      Delete
  5. மிகவும் அருமை.உங்கள் எழுத்துகள் சிந்த்திக்க வைக்கின்றன.

    ReplyDelete
  6. அருமையான கதை.
    அடுத்த பகுதிக்காக காத்திருக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.////////

    பதில் எப்போது,எப்படி,எங்கே கிடைக்கும் என்று காக்க வைத்துள்ளீர்........!!

    ReplyDelete
  8. ”அவனை அந்தக் கோலத்துல பார்க்கற சக்திய கடவுள் தரலைடா. நீ போ.... போய் ஆக வேண்டியதைப் பார்...” இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மூத்த மகனை பெற்ற தாய் இப்படி சொல்லி தட்டிகழிப்பாளா ? அதுவும் இல்லாமல் அவர்களுக்கிடையே பெரிய சச்சரவோ அல்ல புரம்தள்ள சரியான காரணங்கள் எனக்கு பிடிபடவில்லை. இந்த இடத்தில் முறண்பாடு.

    ReplyDelete
  9. பணம் அதிகம் படைத்த மனிதர்கள் துறவு ஏற்பது என்பது கண்டிப்பாக இயலாத காரியம். ஆனால் இங்கே பரமேஸ்வரனின் தந்தை சிறுவயதில் தன் இரண்டு மகன்களை சித்தரைக்காண அழைத்து சென்றபோது அங்கே சித்தரின் பார்வை தீட்சண்யத்தில் வசீகரிக்கப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட பிள்ளை பின் எல்லாவற்றிலிருந்து தன் பற்றை நீக்கிக்கொண்டு இறைவனிடம் முழுமையாய் பற்றுக்கொண்டு தோட்டவீட்டில் சித்தர் கொடுத்துவிட்டு சென்ற சிவலிங்கத்துடன் இருந்து.... கொலைக்காரன் ஒருவனால் இறக்கவும் செய்து ஜோதி மயமாகி சிவலிங்கத்துடன் இணைந்துவிட்ட பசுபதிக்கு தான் எத்தனை பாக்கியம்? அம்மா என்றாலும் சுயகௌரவமும் தன்மானமும் பிள்ளையை சென்று பார்க்கவிடாமல் செய்துவிட்டதே. ஆனாலும் ஒரே ஒரு முறை பசுபதி அம்மாவை அழைத்து பார்த்து பேசியதே இறுதியாகிவிட்டது. சிவலிங்கத்தில் தான் இருக்கிறது ஏதோ என்பது உணரமுடிகிறது. பசுபதியின் இறப்பு என்பது அவர் உடலுக்கு மட்டுமே அன்றி ஆன்மாவுக்கு அல்ல என்பதையும் உணரமுடிகிறது... பசுபதி என்ற இந்த உடல் எப்போது சித்தரை சென்று கண்டதோ அப்போதே தன் உடலை துறந்துவிட்டது... தன் உடல் மேல் இருந்த பற்றை விட்டுவிட்டது.. இப்போது இறந்தது பசுபதியின் ஆன்மாவை சுமந்திருந்த உடல் மட்டுமே.. அழிவே இல்லாத ஆன்மா ஜோதிமயமாகி சிவலிங்கத்துடன் இணைந்து ஐக்கியமாகிவிட்டது. அற்புதம்பா கணேசன்.

    ReplyDelete